மதிப்பிற்கு உரியவர்களே, வணக்கம்!
பூடான் பிரதமர் எனது சகோதரர் டாஷோ ஷெரிங் டோப்கே அவர்களே, சோல் நிறுவன வாரியத் தலைவர் சுதிர் மேத்தா அவர்களே, துணைத் தலைவர் ஹன்ஸ்முக் ஆதியா அவர்களே, தொழில்துறை உலகின் ஜாம்பவான்களே, தங்கள் வாழ்க்கையில், தத்தமது துறைகளில் தலைமைப் பண்பை வழங்குவதில் வெற்றி கண்டவர்களே, இதுபோன்ற பல மகத்தான மனிதர்களை நான் இங்கு காண்கிறேன். இங்கே எனது இளம் சகாக்களையும் காண்கிறேன். அவர்களுக்கெல்லாம் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.
நண்பர்களே,
இதயத்திற்கு மிகவும் நெருக்கமான சில நிகழ்வுகள் உள்ளன. இன்றைய நிகழ்வு அத்தகைய ஒரு நிகழ்வு. தேச நிர்மாணத்திற்கு, சிறந்த குடிமக்களை உருவாக்குவது அவசியம். தேச நிர்மாணம் என்பது தனிநபர் வளர்ச்சியிலிருந்தும், மக்களிடமிருந்தும் தொடங்குகிறது. ஒருவர் ஏதேனும் ஒரு உயரத்தை அடைய அல்லது மகத்தான நிலையை அடைய விரும்பினால், அதற்கான ஆரம்பம் மக்களிடமிருந்துதான் தொடங்குகிறது. ஒவ்வொரு துறையிலும் சிறந்த தலைவர்களின் வளர்ச்சி இன்றியமையாதது, காலத்தின் தேவை. எனவே, தலைமைப் பள்ளியை நிறுவுவது வளர்ந்த இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமான, மிகப் பெரிய படியாகும். இந்த நிறுவனத்தின் பெயரில் ‘சோல்’ எனப்படும் ஆன்மா உள்ளது. இது இந்தியாவின் சமூக வாழ்க்கையின் ஆன்மாவாக மாறப் போகிறது. இந்த ஆன்மாவை அந்த அர்த்தத்தில் பார்த்தால், அது நமது ஆன்மாவை உணர வைக்கிறது. இதனுடன் தொடர்புடைய அனைத்து சக ஊழியர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து பெரிய மனிதர்களும். மிக விரைவில் தி ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப்-பின் (சோல்) ஒரு பெரிய வளாகம் கிஃப்ட் சிட்டிக்கு அருகில் உருவாக உள்ளது. இப்போது நான் உங்களிடையே வரும்போது, அதன் முழுமையான மாதிரி எனக்குக் காட்டப்பட்டது. கட்டடக்கலையின் கண்ணோட்டத்திலும் இது மிகச் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
நண்பர்களே,
இன்று, அல்டிமேட் லீடர்ஷிப் பள்ளி – சோல் அதன் பயணத்தின் முதல் பெரிய படியை எடுக்கும்போது, உங்கள் திசை என்ன, உங்கள் இலக்கு என்ன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுவாமி விவேகானந்தர், “எனக்கு நூறு ஆற்றல் மிக்க இளைஞர்களையும் பெண்களையும் கொடுங்கள், நான் இந்தியாவை மாற்றியமைக்கிறேன்” என்றார். சுவாமி விவேகானந்தர் அடிமைத்தனத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க விரும்பினார். தனக்கு 100 தலைவர்கள் இருந்தால், இந்தியாவை சுதந்திரமாக்குவது மட்டுமல்லாமல், அதை உலகின் முதன்மை நாடாக மாற்ற முடியும் என்று அவர் நம்பினார். இந்த மன உறுதியுடன், இந்த மந்திரத்துடன், நாம் அனைவரும், குறிப்பாக நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். இன்று ஒவ்வொரு இந்தியரும் 21-ம் நூற்றாண்டின் வளர்ந்த இந்தியாவுக்காக இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், 140 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு பிரிவிலும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நமக்கு சிறந்த தலைமை தேவை. அரசியல் தலைமைத்துவம் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் 21-ம் நூற்றாண்டின் தலைமைத்துவத்தை தயார் செய்ய அல்டிமேட் லீடர்ஷிப் பள்ளி ஒரு பெரிய வாய்ப்பைக் கொண்டுள்ளது. இங்கிருந்து பயிற்சி பெற்று வெளியே வரும் இளைஞர்கள் அரசியலில் புதிய இடத்தை அடைய வாய்ப்புள்ளது.
நண்பர்களே,
ஒரு நாடு முன்னேறும்போது, இயற்கை வளங்கள் ஒரு பங்கை வகிக்கின்றன. ஆனால் மனித வளங்கள் இன்னும் பெரிய பங்கை வகிக்கின்றன. மகாராஷ்டிராவையும் குஜராத்தையும் பிரிப்பதற்கான இயக்கம் நடந்து கொண்டிருந்தபோது, நாங்கள் குழந்தைகளாக இருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் குஜராத் பிரிந்து என்ன செய்யும் என்று ஒரு விவாதம் இருந்தது. அங்கு இயற்கை வளங்கள் இல்லை, சுரங்கங்கள் இல்லை, நிலக்கரி இல்லை, எதுவும் இல்லை, அது என்ன செய்யும்? தண்ணீர் இல்லை, அது ஒரு பாலைவனம், மறுபுறம் பாகிஸ்தான் உள்ளது, அவர்கள் என்ன செய்வார்கள்? அதிகபட்சம் இந்த குஜராத்திகளிடம் உப்பு இருக்கிறது, அவர்களிடம் வேறு என்ன இருக்கிறது? ஆனால் அதன் சக்தியைப் பாருங்கள், இன்று குஜராத் தான் எல்லாம். அங்குள்ள சாமானிய மக்களுக்கு இந்த சக்தி இருந்தது. அவர்கள் இது இல்லை, அது இல்லை என்று அழவில்லை. குஜராத்தில் ஒரு வைரச் சுரங்கம் கூட இல்லை. ஆனால் உலகில் உள்ள 10 வைரங்களில் ஒன்பது வைரங்கள் குஜராத்திகளால் தொடப்பட்டவை. நான் சொல்ல வருவது என்னவென்றால், வளங்கள் மட்டுமல்ல, மிகப்பெரிய சக்தி என்பது மனித வளம். மனித திறன், மனிதவளம் என்பது உங்கள் மொழியில் தலைமைப் பண்பு என்று அழைக்கப்படுபவற்றில் உள்ளது.
21-ம் நூற்றாண்டில், புதுமைகளை வழிநடத்தக்கூடிய மற்றும் திறன்களை நெறிப்படுத்தக்கூடிய வளங்கள் நமக்குத் தேவை. ஒவ்வொரு துறையிலும் திறன்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இன்று நாம் காண்கிறோம். எனவே, தலைமைத்துவ மேம்பாட்டுத் துறைக்குப் புதிய திறன்கள் தேவை. தலைமைத்துவத்தை வளர்க்கும் இந்தப் பணியை மிகவும் விஞ்ஞான ரீதியில் மிக விரைவான வேகத்தில் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த திசையில் உங்கள் நிறுவனமான சோல் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. நீங்களும் இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். முறைப்படி இன்று இது உங்கள் முதல் நிகழ்வாகத் தோன்றினாலும், தேசியக் கல்விக் கொள்கையை திறம்பட செயல்படுத்துவதற்காக, மாநிலக் கல்விச் செயலாளர்கள், மாநிலத் திட்ட இயக்குநர்கள், பிற அதிகாரிகளுக்கு பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளன என்று என்னிடம் கூறப்பட்டது. குஜராத் முதலமைச்சர் அலுவலக ஊழியர்களிடையே தலைமைத்துவ வளர்ச்சிக்காக சிந்தனை அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு ஆரம்பம் தான் என்று என்னால் சொல்ல முடியும். சோல் உலகின் சிறந்த தலைமைத்துவ மேம்பாட்டு நிறுவனமாக மாறுவதை நாம் காண வேண்டும். இதற்காக நாமும் கடுமையாக உழைக்க வேண்டும்.
நண்பர்களே,
இன்று இந்தியா உலகளாவிய அதிகார மையமாக உருவெடுத்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் இந்த வேகம் அதிகரிக்க நமக்கு உலகத்தரம் வாய்ந்த தலைவர்கள், சர்வதேச தலைமை தேவை. சோல் போன்ற தலைமைத்துவ நிறுவனங்கள் இதில் சிறப்பாக செயல்பட முடியும். இத்தகைய சர்வதேச நிறுவனங்கள் நமது தேர்வு மட்டுமல்ல, நமது தேவையும் கூட. உலகளாவிய சிக்கல்கள், உலகளாவிய தேவைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒவ்வொரு துறையிலும் இந்தியாவுக்கு ஆற்றல் மிக்க தலைவர்கள் இன்று தேவைப்படுகிறார்கள். பிரச்சினைகளைத் தீர்க்கும் அதேவேளையில், உலக அரங்கில் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் தேவை. யாருடைய அணுகுமுறை உலகளாவியதாக இருந்தாலும், அவர்களின் சிந்தனையின் முக்கிய பகுதி உள்ளூர் சார்ந்தது. சர்வதேச மனநிலையைப் புரிந்துகொண்டு, இந்திய மனநிலையுடன் முன்னேறிச் செல்பவர்களை நாம் தயார்படுத்த வேண்டும.
நண்பர்களே,
ஒரு விஷயம் உங்கள் அனைவருக்கும் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். வரவிருக்கும் காலங்களில், தலைமை என்பது அதிகாரத்துடன் மட்டுப்படுத்தப்படாது. புதுமை, தாக்கத்தை ஏற்படுத்தும் திறன்களைக் கொண்டவர்கள் மட்டுமே தலைமைப் பொறுப்புகளில் இருப்பார்கள். வரவிருக்கும் காலங்களில் மாற்றங்களுக்கு மத்தியில் பணியாற்றத் தயாராக இருக்கும் அத்தகைய தலைவர்கள் இந்த நிறுவனத்திலிருந்து உருவாவார்கள்.
நண்பர்களே,
வரும் காலங்களில், ராஜதந்திரம் முதல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு வரை புதிய தலைமையை நாம் ஊக்குவிக்கும்போது, இந்தத் துறைகள் அனைத்திலும் இந்தியாவின் செல்வாக்கும் தாக்கமும் பன்மடங்கு அதிகரிக்கும். ஒரு வகையில் பார்த்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த தொலைநோக்குப் பார்வையும், ஒட்டுமொத்த எதிர்காலமும் வலுவான தலைமை தலைமுறையைச் சார்ந்தே இருக்கும். அதனால்தான் நாம் உலகளாவிய சிந்தனையுடனும் உள்ளூர் வளர்ப்புடனும் முன்னேற வேண்டும். நமது நிர்வாகத்தை, நமது கொள்கைகளை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும். நமது கொள்கை வகுப்பாளர்கள், அதிகாரிகள், தொழில்முனைவோர், தங்களது கொள்கைகளை உலக அளவில் உள்ள சிறந்த நடைமுறைகளுடன் இணைத்து வடிவமைக்க முடிந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். சோல் போன்ற அமைப்புகள் இதில் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருக்கும்.
நண்பர்களே,
இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக நாம் மாற்ற விரும்பினால், ஒவ்வொரு துறையிலும் நாம் வேகமாக முன்னேற வேண்டும் என்று நான் முன்பே கூறியுள்ளேன். ஒரு பெரிய மனிதர் எப்படி நடந்து கொள்கிறாரோ அதைத்தான் சாதாரண மக்களும் பின்பற்றுகிறார்கள். எனவே, இந்தியாவின் தேசிய பார்வையை ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கும் தலைமை அவசியம். எதிர்காலத் தலைமைத்துவத்தில், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குத் தேவையான உறுதி, உத்வேகம் இரண்டும் வேண்டும்.
நண்பர்களே,
பல வளர்ந்து வரும் துறைகளுக்கு நாம் தலைமையை தயார் செய்ய வேண்டும். விளையாட்டு, விவசாயம், உற்பத்தி, சமூக சேவை போன்ற பாரம்பரியத் துறைகளிலும் நாம் தலைமையை உருவாக்க வேண்டும். நாம் ஆசைப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க வேண்டும். எனவே, உலகச் சிறப்பான புதிய நிறுவனங்களை உருவாக்கும் அத்தகைய தலைவர்கள் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறார்கள். நமது வரலாறு அத்தகைய நிறுவனங்களின் புகழ்பெற்ற கதைகளால் நிரம்பியுள்ளது. அந்த உணர்வை நாம் புதுப்பிக்க வேண்டும், இதுவும் கடினம் அல்ல. இதைச் செய்த பல நாடுகளின் உதாரணங்கள் உலகில் உள்ளன. இதுபோன்ற லட்சக்கணக்கான நண்பர்கள் இந்த மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதையும், நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள், வெளியே எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் திறமைசாலிகள் என்பதையும் நான் அறிவேன்.
நண்பர்களே,
ஒரு நிறுவனம் என்ற முறையில், கோடிக்கணக்கான இந்தியர்களின் தீர்மானமும், கனவுகளும் உங்களுக்குத் தெளிவாக இருக்க வேண்டும். எங்களுக்கு சவாலாகவும் வாய்ப்பாகவும் இருக்கும் துறைகள், காரணிகளும் உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். நாம் ஒரு பொதுவான இலக்குடன் முன்னோக்கி செல்லும்போது, ஒன்றிணைந்து செயல்படும்போது, முடிவுகள் ஆச்சரியமாக இருக்கும். பகிரப்பட்ட நோக்கத்தால் உருவாக்கப்பட்ட பிணைப்பு வலிமையானது. இது மனங்களை ஒன்றிணைக்கிறது. இது பேரார்வத்தைத் தூண்டுகிறது.
நண்பர்களே,
பகிரப்பட்ட நோக்கம் இருக்கும்போது, முன்னெப்போதும் இல்லாத குழு உணர்வு நம்மை வழிநடத்துகிறது. பகிரப்பட்ட நோக்கத்தின் சக பயணிகளாக அனைத்து மக்களும் ஒன்றாக நடக்கும்போது, ஒரு பிணைப்பு உருவாகிறது. குழு உருவாக்கத்தின் இந்த செயல்முறை தலைமைத்துவத்தையும் பெற்றெடுக்கிறது. பகிரப்பட்ட நோக்கத்திற்கு நமது சுதந்திரப் போராட்டத்தை விட சிறந்த உதாரணம் என்ன இருக்க முடியும்? நமது சுதந்திரப் போராட்டம் அரசியலில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் தலைவர்களை உருவாக்கியது. இன்று நாம் சுதந்திரப் போராட்டத்தின் அதே உணர்வை மீண்டும் பெற வேண்டும். அதிலிருந்து உத்வேகம் பெற்று, நாம் முன்னேற வேண்டும்.
நண்பர்களே,
திறமையற்றவர்கள் என்று யாரும் இல்லை. ஆனால் அனைவருக்கும் அவற்றை சரியான இடத்தில் பயன்படுத்தக்கூடிய, சரியான திசையை வழங்கக்கூடிய ஒரு திட்டமிடுபவர் தேவை. சோல் நிறுவனத்தின் பாத்திரமும் திட்டமிடுபவரின் பாத்திரமே. நீங்கள் தலைவர்களை உருவாக்கினால், உங்கள் நிறுவனம் பெரிய வளர்ச்சியை அடைய முடியும்.
நண்பர்களே,
இன்று, நாட்டில் ஒரு புதிய சமூக அமைப்பு உருவாக்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் பிறந்த 21-ம் நூற்றாண்டில் பிறந்த இளம் தலைமுறையினரால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே வளர்ச்சியடைந்த இந்தியாவின் முதல் தலைமுறையாக, அமிர்த தலைமுறையாக இருக்கப் போகிறது. இந்த அமிர்தத் தலைமுறையினரின் தலைமையை உருவாக்குவதில் இந்த புதிய நிறுவனம் மிக முக்கியமான பங்காற்றும் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பூட்டான் மன்னரின் பிறந்த நாள் என்பதும், இந்த நிகழ்வு இங்கு நடைபெறுகிறது என்பதும் மிகவும் மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். இதுபோன்ற ஒரு முக்கியமான நாளில் பூடான் பிரதமர் இங்கு வந்துள்ளார். பூட்டான் மன்னர், பூடான் பிரதமரை இங்கு அனுப்புவதில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். எனவே அவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
வெற்றியாளர்கள் விதைகளை விதைக்கும்போது, அந்த ஆலமரம் வெற்றியின் புதிய உயரங்களை அடையும் தலைவர்களையும் உருவாக்கும். அனைவருக்கும் முழு நம்பிக்கையுடன் மீண்டும் ஒரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இளைஞர்கள் குறித்து எனக்கு பல கனவுகள் எதிர்பார்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு கணமும் எனது நாட்டின் இளைஞர்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு எப்போதும் உள்ளது. நான் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்கிறேன். இன்று மீண்டும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகள்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் நிகழ்த்தி இருந்தார்.
****
PLM/DL
Addressing the SOUL Leadership Conclave in New Delhi. It is a wonderful forum to nurture future leaders. @LeadWithSoul
— Narendra Modi (@narendramodi) February 21, 2025
https://t.co/QI5RePeZnV
The School of Ultimate Leadership (SOUL) will shape leaders who excel nationally and globally. pic.twitter.com/x8RWGSZsFl
— PMO India (@PMOIndia) February 21, 2025
Today, India is emerging as a global powerhouse. pic.twitter.com/RQWJIW1pRz
— PMO India (@PMOIndia) February 21, 2025
Leaders must set trends. pic.twitter.com/6mWAwNAWKX
— PMO India (@PMOIndia) February 21, 2025
Instilling steel and spirit in every sector. pic.twitter.com/EkOVPGc9MI
— PMO India (@PMOIndia) February 21, 2025
I commend SOUL for their endeavours to nurture a spirit of leadership among youngsters. pic.twitter.com/otSrbQ2Pdp
— Narendra Modi (@narendramodi) February 21, 2025
We in India must train our coming generations to become global trendsetters. pic.twitter.com/5L4AFfY3wF
— Narendra Modi (@narendramodi) February 21, 2025
With determined endeavours and collective efforts, the results of our quest for development will surely be fruitful. pic.twitter.com/s1lmEIGUMq
— Narendra Modi (@narendramodi) February 21, 2025