பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் நான் மனதார வரவேற்கிறேன். கடந்த இரண்டு நாட்களில், இந்தத் துறை தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து நீங்கள் விவாதித்தீர்கள். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சில பிரகாசமான எண்ணங்கள் நம்மிடம் உள்ளன என்று நான் நம்புகிறேன், இது நமது கூட்டு உறுதிப்பாட்டையும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் திறனையும் பிரதிபலிக்கிறது. இந்த அமைப்பு 80 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, நமது அமைச்சர் திரு நாயுடுவின் வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ், ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று மூலம் 80,000 மரங்களை நடவு செய்யும் ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், மற்றொரு விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நம் நாட்டில், ஒருவர் 80 வயதை எட்டும் போது, அது ஒரு சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர்களின் கூற்றுப்படி, 80 வயதை எட்டுவது என்றால் ஆயிரம் பௌர்ணமிகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வகையில், எங்கள் துறை நிறுவனமும் ஆயிரம் பௌர்ணமிகளைக் கண்டுள்ளது மற்றும் அதை நெருக்கமாகப் பார்த்த அனுபவம் உள்ளது.
நண்பர்களே,
தற்போதைய வளர்ச்சியின் பின்னணியில் சிவில் விமானப் போக்குவரத்து குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. பாரதத்தின் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில், விமானப் போக்குவரத்து அவற்றில் ஒன்றாகும். இந்தத் துறையின் மூலம் நமது மக்கள், கலாச்சாரம் மற்றும் வளத்தை இணைக்கிறோம். 4 பில்லியன் மக்கள், வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் அதன் விளைவாக தேவை அதிகரிப்பு, இது துறையின் வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க உந்து சக்தியாகும். இந்த பிராந்தியத்தில் வாய்ப்புகளின் வலைப்பின்னலை உருவாக்கும் இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம் – இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், புதுமையை ஊக்குவிக்கும், அமைதி மற்றும் செழிப்பை வலுப்படுத்தும். விமானப் போக்குவரத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது என்பது நமது பகிரப்பட்ட உறுதிப்பாடு ஆகும். சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான வாய்ப்புகள் குறித்து நீங்கள் அனைவரும் தீவிரமாக விவாதித்துள்ளீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நன்றி, தில்லி பிரகடனம் இப்போது நம் முன் உள்ளது. இந்தப் பிரகடனம் பிராந்திய இணைப்பு, புத்தாக்கம் மற்றும் விமானப் போக்குவரத்தில் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்கான நமது உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும். ஒவ்வொரு விஷயத்திலும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் பிரகடனத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தி, கூட்டு வலிமையுடன் புதிய உயரங்களை எட்டுவோம். விமானப் போக்குவரத்துத் தொடர்பை அதிகரிப்பதிலும், அறிவு, நிபுணத்துவம் மற்றும் வளங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்வதிலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஒத்துழைப்பு நமது வலிமையை மேலும் அதிகரிக்கும். உள்கட்டமைப்பில் நமக்கு அதிக முதலீடு தேவைப்படும். மேலும், இது அனைத்து தொடர்புடைய நாடுகளுக்கும் இயற்கையான முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஆனால், உள்கட்டமைப்பு மட்டும் போதாது, திறமையான மனிதவளம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான செயல்முறை வளர்ச்சிக்கு முக்கியமானது, மேலும் இது நமக்குத் தேவையான மற்றொரு வகை முதலீடு என்று நான் நம்புகிறேன். விமானப் பயணத்தை சாமானிய குடிமகனுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள். விமானப் பயணத்தை பாதுகாப்பானதாகவும், குறைந்த கட்டணமுடையதாகவும், அனைவருக்கும் அணுகக் கூடியதாகவும் மாற்ற வேண்டும். இந்தப் பிரகடனம், நமது கூட்டு முயற்சிகள், நமது விரிவான அனுபவம் ஆகியவை மிகவும் பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
பாரதத்தின் அனுபவத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று உலகின் தலைசிறந்த சிவில் விமானப் போக்குவரத்து சூழலில், பாரதம் ஒரு வலுவான அமைப்பாக மாறியுள்ளது. நமது சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. பத்தாண்டுகளில் பாரதம் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது. இக்காலங்களில், பாரதம் விமானப் போக்குவரத்துக்கு பிரத்யேகமான நாடு என்ற நிலையிலிருந்து விமானப் போக்குவரத்தை உள்ளடக்கிய நாடாக உருவெடுத்துள்ளது. பாரதத்தில் விமானப் பயணம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஒரு சில முக்கிய நகரங்கள் மட்டுமே நல்ல விமானப் போக்குவரத்து இணைப்பைப் பெற்றன. மேலும், ஒரு சில வளமான மக்கள் தொடர்ந்து விமானப் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். நலிந்த மற்றும் மத்தியதர வர்க்கத்தினர் எப்போதாவது மட்டுமே பயணம் செய்தனர், பெரும்பாலும் தேவை காரணமாக, ஆனால் அது அவர்களின் வாழ்க்கையின் பொதுவான பகுதியாக இருக்கவில்லை. ஆனால் இன்று பாரதத்தில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. இப்போது, எங்கள் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களைச் சேர்ந்த குடிமக்களும் விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக, இதை அடைவதற்கு நாங்கள் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளோம், கொள்கை மாற்றங்களைச் செய்துள்ளோம். அமைப்புகளை உருவாக்கியுள்ளோம். விமானப் போக்குவரத்தை பாரதத்துடன் உள்ளடக்கியதாக மாற்றியுள்ள பாரத்தின் உதான் திட்டத்தை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள சிறு நகரங்களுக்கும், நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ள தனிநபர்களுக்கும், விமானப் பயண வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 14 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர், அவர்களில் பலர் முதல் முறையாக உள்ளே இருந்து ஒரு விமானத்தைப் பார்த்துள்ளனர். உதான் திட்டத்தால் உருவாக்கப்பட்ட தேவை, பல சிறிய நகரங்களில் புதிய விமான நிலையங்களையும் நூற்றுக்கணக்கான புதிய வழித்தடங்களையும் நிறுவ வழிவகுத்தது. நாயுடு அவர்கள் குறிப்பிட்டதைப் போல, கடந்த 10 ஆண்டுகளில் பாரதத்தில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மற்ற துறைகளிலும் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். ஒருபுறம் சிறிய நகரங்களில் விமான நிலையங்களை உருவாக்கி வருகிறோம், மறுபுறம், பெரிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை நவீனப்படுத்த விரைவாக பணியாற்றி வருகிறோம்.
விமானப் போக்குவரத்து இணைப்பைப் பொறுத்தவரை உலகில் மிகவும் இணைக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக பாரத் மாற உள்ளது. நமது விமான நிறுவனங்களும் இதை அறிந்திருக்கின்றன. அதனால்தான் நமது இந்திய விமான நிறுவனங்கள் 1,200 புதிய விமானங்களை கொள்முதல் உள்ளன. சிவில் விமானப் போக்குவரத்தின் வளர்ச்சி விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. விமானப் போக்குவரத்துத் துறையும் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை துரிதப்படுத்தி வருகிறது. திறமையான விமானிகள், குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள் மற்றும் பல வேலைகள் உருவாக்கப்படுகின்றன. பராமரிப்பு, பழுது சேவைகளை வலுப்படுத்தவும் நாங்கள் முடிவுகளை எடுத்து வருகிறோம்.
மல்டிபோர்ட் போன்ற புதுமைகளை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். நகரங்களில் எளிதான பயணத்தை மேம்படுத்தும் விமானப் போக்குவரத்தின் மாதிரி இதுவாகும். மேம்பட்ட விமான போக்குவரத்துக்கு இந்தியாவை நாங்கள் தயார்படுத்தி வருகிறோம். ஏர் டாக்ஸிகள் ஒரு யதார்த்தமாகவும், பொதுவான போக்குவரத்து முறையாகவும் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது நமது உறுதிப்பாடு, ஜி20 உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க முடிவு பெண்கள் தலைமையிலான வளர்ச்சி தொடர்பானது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது எங்களது இயக்கத்திற்கு விமானப் போக்குவரத்துத் துறை பெரும் ஆதரவை அளித்து வருகிறது. உலக சராசரியான 5% உடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் கிட்டத்தட்ட 15% விமானிகள் பெண்கள் ஆவர்.
கிராமப்புறங்களில், குறிப்பாக வேளாண் துறையில் மிகவும் லட்சிய ட்ரோன் திட்டத்தை பாரத் தொடங்கியுள்ளது. கிராமத்திலிருந்து கிராமத்திற்கு ‘மகளிர் இயக்கத்தின் மூலம் பயிற்சி பெற்ற ட்ரோன் விமானிகளின் தொகுப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பாரதத்தின் விமானப் போக்குவரத்துத் துறையின் புதிய மற்றும் தனித்துவமான அம்சம் டிஜி யாத்ரா முன்முயற்சி, இது மென்மையான மற்றும் தடையற்ற விமானப் பயணத்திற்கான டிஜிட்டல் தீர்வாகும். இது விமான நிலையத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் இருந்து பயணிகளை விடுவிக்க முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, நேரத்தை மிச்சப்படுத்துகிறது. டிஜி யாத்ரா திறமையானது மற்றும் வசதியானது மட்டுமல்ல. இது பயணத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
ஒவ்வொரு நபரின் பறக்கும் கனவு நிறைவேறும் எதிர்காலத்தை நோக்கி நாம் பாடுபட வேண்டும். அனைத்து விருந்தினர்களையும் நான் மீண்டும் வரவேற்கிறேன். இந்த முக்கியமான உச்சிமாநாட்டில் நீங்கள் பங்கேற்றதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
***
(Release Id: 2054361
IR/KPG/KR
India's aviation sector is witnessing a remarkable transformation. It is enhancing ease of travel for citizens as well as boosting connectivity. Speaking at the 2nd Asia Pacific Civil Aviation Ministers Conference. https://t.co/DyOtT4Ww4B
— Narendra Modi (@narendramodi) September 12, 2024