Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐ.இ.சி.சி) வளாகத்தை திறந்து வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐ.இ.சி.சி) வளாகத்தை திறந்து வைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்


வணக்கம்,

எனக்கு முன்னால் ஒரு அற்புதமான காட்சி தெரிகிறது. இது மகத்தானது, கம்பீரமானது, உன்னதமானது. இன்றைய சந்தர்ப்பத்தில் நமது கனவு நம் கண்முன்னே நிறைவேறுவதைக் காணும்போது, ஒரு புகழ்பெற்ற கவிதையின் வரிகளை முணுமுணுக்க நான் விரும்புகிறேன்:

இது ஒரு புதிய காலை, ஒரு புதிய விஷயம், ஒரு புதிய கதிர், ஒரு புதிய ஒளி.

புதிய ஆசைகள், புதிய அலைகள், புதிய நம்பிக்கை, புதிய சுவாசம்.

மண்ணின் மைந்தர்களே, எழுந்திருங்கள், புதிதாகக் கட்டமைப்பு செய்யுங்கள்.

அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலை, புதிய வாழ்க்கையை ஊட்டுங்கள்.

இன்று, ஒவ்வொரு இந்தியரும் இந்த தெய்வீக மற்றும் பிரமாண்டமான ‘பாரத மண்டபத்தை’ பார்க்கும்போது மகிழ்ச்சி, மற்றும் பெருமித உணர்வு கொள்கிறார்கள். ‘பாரத் மண்டபம்’ என்பது இந்தியாவின் ஆற்றலையும் புதிய சக்தியையும் காண்பதற்கான அழைப்பாகும். ‘பாரத மண்டபம்’ என்பது இந்தியாவின் பெருமையையும், மன உறுதியையும் பறைசாற்றும் ஒரு பார்வை. கொவிட் காலங்களில் எல்லா இடங்களிலும் பணிகள் நிறுத்தப்பட்டபோது, இதன் கட்டுமானத்தில் தொழிலாளர்கள் இரவும் பகலும் உழைத்தனர்.

பாரத மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளர், சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று காலை, இந்த தொழிலாளர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களை கௌரவிப்பது எனது பாக்கியம். அவர்களின் கடின உழைப்பைக் கண்டு இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் வியக்கிறது.

புதிய சர்வதேச மாநாட்டு மையமான ‘பாரத் மண்டபத்தை’ திறந்து வைப்பதற்காக தலைநகர் தில்லி மக்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் அன்புடன் வரவேற்கிறேன். தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் எங்களுடன் இணைந்த கோடிக்கணக்கான மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று கார்கில் வெற்றி தினம் என்ற வகையில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். எதிரிகளின் சதி, பாரத அன்னையின் மகன்கள் மற்றும் மகள்களின் வீரத்தால் முறியடிக்கப்பட்டது. கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் தேசத்தின் சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன்.

நண்பர்களே,

‘பாரத் மண்டபம்’ பகவான் பசவேஸ்வராவின் ‘அனுபவ மண்டபத்தை அடிப்படையாகக் கொண்டது என்று பியூஷ் அவர்கள் நமக்குத் தெரிவித்திருக்கிறார். ‘அனுபவ மண்டபம்’ (பெரும்பாலும் உலகின் முதல் நாடாளுமன்றம் என்று குறிப்பிடப்படுகிறது) விவாதங்கள், மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை இன்று உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள் முதல் வைசாலி போன்ற இடங்கள் வரை, இந்தியாவின் துடிப்பான ஜனநாயகம் பல நூற்றாண்டுகளாக நமது பெருமையாக இருந்து வருகிறது.

நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் இந்த நேரத்தில், ‘பாரத் மண்டபம்’ நமது ஜனநாயகத்திற்கு இந்தியர்களாகிய நாம் அளிக்கும் அழகான பரிசாக நிற்கிறது. இன்னும் சில வாரங்களில், உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும், ஜி -20 தொடர்பான நிகழ்வுகளை இதே இடம் நடத்தவுள்ளது. இந்தியாவின் எழுச்சியையும், அதன் வளர்ந்து வரும் நிலையையும் இந்த பிரமாண்டமான ‘பாரத மண்டபம்’ மூலம் உலகமே பார்க்கும்.

நண்பர்களே,

ஒன்றுக்கொன்று தொடர்புடைய மற்றும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் இன்றைய உலகில், உலக அளவில், சில நேரங்களில் ஒரு நாட்டிலும், சில நேரங்களில் மற்றொரு நாட்டிலும் தொடர்ச்சியான திட்டங்கள் மற்றும் உச்சிமாநாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. எனவே, இந்தியா சர்வதேச அளவிலான மாநாட்டு மையத்தை, குறிப்பாக அதன் தலைநகரான தில்லியில் வைத்திருப்பது அவசியம். கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்ட அரங்குகள் 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஏற்ப 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வசதிகளை நாம் உருவாக்க வேண்டும்.

அதனால்தான் இந்த அற்புதமான கட்டடமான, ‘பாரத் மண்டபம்’ இப்போது நாட்டு மக்கள் முன்பு உள்ளது. ‘பாரத் மண்டபம்’ இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரிய கண்காட்சியாளர்களுக்கு உதவும்.

தற்சார்பு இந்தியா (தற்சார்பு இந்தியா) மற்றும் உள்ளூர் இயக்கங்களுக்கு பங்களிக்கும் நமது கைவினைஞர்களின் கடின உழைப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக ‘பாரத் மண்டபம்’ செயல்படும். ஒருவகையில் பொருளாதாரம் முதல் சுற்றுச்சூழல் வரை, வர்த்தகம் முதல் தொழில்நுட்பம் வரை பலதரப்பட்ட முயற்சிகளுக்கு ‘பாரத மண்டபம்’ ஒரு மகத்தான மேடையாக மாறும்.

நண்பர்களே

‘பாரத் மண்டபம்’ போன்ற வசதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும். ஒரு நாடு ஒலிம்பிக் அல்லது ஒரு பெரிய நிகழ்வை நடத்தும் போதெல்லாம், உலக அரங்கில் அதன் மரியாதை கணிசமாக மாறுவதை நாம் கவனிக்கிறோம். உலகில் இதுபோன்ற நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் ஒரு நாட்டின் சுய அடையாளம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வகையான அம்சங்கள் ஏதாவது ஒரு வகையில் மதிப்பைச் சேர்க்கின்றன.

ஆனால் நம் நாட்டில் வித்தியாசமான மனநிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள். எதிர்மறை சிந்தனை கொண்டவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களால் நாம் பின்தங்கி நின்றுவிடக் கூடாது. இந்த திட்டத்தின் கட்டுமானத்தை தடுக்க அவநம்பிக்கை கொண்டவர்களால் முயற்சிகள் நடந்துள்ளன. பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அவர்கள் தொடர் சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், எங்கே உண்மை இருக்கிறதோ, அங்கே கடவுளின் அருளும் இருக்கிறது. அதனால் இப்போது, இந்த அழகான இடம் உங்கள் கண்முன்னே உள்ளது.

உண்மையில், சிலர் ஒவ்வொரு நல்ல செயலையும் தடுக்கவும் விமர்சிக்கவும் செய்கிறார்கள். ‘கர்தவ்ய பாதை’ (கடமையின் பாதை) பணிகள் நடந்து கொண்டிருந்தபோது தொலைக்காட்சிகளில் என்ன வகையான செய்திகள் வலம் வந்தன, மற்றும் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் என்ன மாதிரியான செய்திகள் வலம் வந்தன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்! நீதிமன்றங்களிலும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் இப்போது ‘கர்தவ்ய பாதை’ நிறுவப்பட்டு விட்டதால், அந்த நபர்கள் கூட இது ஒரு நேர்மறையான வளர்ச்சி, நாட்டின் கண்ணியத்தை உயர்த்துகிறது என்பதை தயக்கத்துடன் ஒப்புக்கொள்கிறார்கள். ‘பாரத் மண்டபத்தை’ எதிர்த்தவர்கள் கூட இன்னும் சிறிது காலத்தில் அதை  வெளிப்படையாக ஆதரித்துப் பேசாமல், அதன் முக்கியத்துவத்தை தங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் இங்கே சொற்பொழிவுகளை வழங்கவோ அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ கூட அவர்கள் இங்கு வரலாம்.

நண்பர்களே,

எந்த ஒரு நாடும், சமூகமும் தனித்தனியாகச் சிந்தித்து செயல்படுவதன் மூலம் முன்னேற முடியாது. இன்று, இந்த மாநாட்டு மையமான, ‘பாரத் மண்டபம்’ நமது அரசு எவ்வாறு முழுமையான முறையில் செயல்படுகிறது என்பதற்கு ஒரு சாட்சியாகும். இன்று இந்தியா 160 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இ-கான்ஃபரன்ஸ் விசாக்களை வழங்குகிறது. இதனால் மக்கள் அத்தகைய மையங்களுக்கு வருவதை எளிதாகிறது மற்றும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெரிய நிறுவனங்களை இந்தியா வரவேற்கிறது.

2014 ஆம் ஆண்டில், தில்லி விமான நிலையத்தின் திறன் ஆண்டுக்கு சுமார் 5 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருந்தது. இன்று, இது ஆண்டுக்கு 7.5 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இண்டாவது முனையமும் நான்காவது ஓடுபாதையும் செயல்பட்டு வருகிறது. கிரேட்டர் நொய்டாவின் ஜெவாரில் சர்வதேச விமான நிலையம் தொடங்குவதன் மூலம், மேலும் ஊக்கம் ஏற்படும். கடந்த ஆண்டுகளில், தில்லியில் ஹோட்டல் தொழில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. மாநாட்டுச் சுற்றுலாவுக்கான ஒரு முழுமையான சூழல் அமைப்பை திட்டமிட்ட முறையில் உருவாக்க நாம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

நண்பர்களே,

இந்த முன்னேற்றங்கள் தவிர, கடந்த ஆண்டுகளில் தலைநகர் தில்லியில் நடந்த கட்டுமானத் திட்டங்களும் நாட்டின் பெருமைக்கு பங்களிக்கின்றன. நாட்டின் புதிய நாடாளுமன்றத்தைக் கண்ட பிறகு தலைநிமிர்ந்து நிற்காத இந்தியர்களே இருக்க மாட்டார்கள். இன்று, தில்லியில் தேசிய போர் நினைவுச்சின்னம், போலீஸ் நினைவகம் மற்றும் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவகம் ஆகியவை உள்ளன. கார்தவ்ய பாதையைச் சுற்றியுள்ள பகுதி நவீன அரசு அலுவலகங்கள் மற்றும் வசதிகளுடன் விரைவான முன்னேற்றத்தைக் காண்கிறது. நமது பணிக் கலாச்சாரத்தையும், பணிச் சூழலையும் மாற்ற வேண்டும்.

பிரதமர் அருங்காட்சியகம் புதிய தலைமுறையினருக்கு நாட்டின் அனைத்து முன்னாள் பிரதமர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

நண்பர்களே,

இன்று உலகமே இந்தியாவையே உற்று நோக்குகிறது. ஒரு காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை, யாருடைய எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை இன்று இந்தியா சாதித்து வருகிறது. முன்னேறவும், வளர்ச்சியடையவும், நாம் பெரிதாக சிந்தித்து, மகத்தான இலக்குகளை அடைய வேண்டும். எனவே, ‘பெரியதாக சிந்தியுங்கள், பெரியதாக கனவு காணுங்கள், பெரியதாக செயல்படுங்கள்’ என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது. ‘வானம் போல உயரமாக எழுந்திரு’ என்பது பழமொழி. நாம் முன்பை விட பெரியதாகவும், சிறப்பாகவும், வேகமாகவும் கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியாவின் உள்கட்டமைப்பு பெரிய அளவில் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மேம்படுத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சோலார் காற்றாலை பூங்கா இந்தியாவில் கட்டப்பட்டு வருகிறது. இன்று உலகின் மிக உயரமான ரயில் பாலம் உள்ள நாடு பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 10,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை இந்தியாவில் உள்ளது. உலகின் மிக உயரமான மோட்டார் வாகன சாலை இந்தியாவில் உள்ளது. உலக அளவில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் உள்ளது. உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில் உள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய ரயில்-சாலை பாலத்தை இந்தியா கொண்டுள்ளது. பசுமை ஹைட்ரஜனில் பெரிய அளவில் தீவிரமாக செயல்பட்டு வரும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

நண்பர்களே

இந்த அரசாங்கத்தின் சாதனைகளை இன்று முழு தேசமும் காண்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் நின்றுவிடாது என்ற நம்பிக்கை இப்போது உறுதியாகியுள்ளது. எங்கள் முதல் பதவிக்காலத்தின் தொடக்கத்தில், உலக பொருளாதாரத்தில் இந்தியா 10 வது இடத்தில் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். முதல் பதவிக்காலத்தில் மக்கள் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது, நாம் பத்தாவது இடத்தில் இருந்தோம். இரண்டாவது முறையாக, பொறுப்பில் உள்ள இப்போது, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதை வெறும் வார்த்தைகளின் அடிப்படையில் சொல்லாமல் செயல்பாட்டுச் சாதனை அடிப்படையில் சொல்கிறேன்.

மூன்றாவது முறையின்போது, உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்று நான் இன்று தேசத்திற்கு உறுதியளிக்கிறேன். இது எனது உத்தரவாதம். 2024 தேர்தலுக்குப் பிறகு, எங்கள் மூன்றாவது பதவிக் காலம் நாட்டின் வளர்ச்சியை இன்னும் வேகமானதாக மாற்றும் என்று நான் மக்களுக்கு உறுதியளிக்கிறேன். எனது மூன்றாவது பதவிக்காலத்தில், உங்கள் கனவுகள் உங்கள் கண்முன்னே நனவாவதை நீங்கள் காண்பீர்கள்.

நண்பர்களே,

இன்று, இந்தியா வளர்ச்சியில் ஒரு புதிய புரட்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்க சுமார் 34 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் மூலதன செலவினங்களுக்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், பாலங்கள், மருத்துவமனைகள் என இந்தியா முன்னேறும் அளவு மற்றும் வேகம் உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாதவை ஆகும்.

நான் யாரையும் விமர்சிப்பதற்காக இதைச் சொல்லவில்லை, ஆனால் தெரிந்து கொள்வதற்காக, சில குறிப்புகள் அவசியம். எனவே, அந்தக் குறிப்பின் அடிப்படையிலேயே நான் பேசுகிறேன். நாடு விடுதலை அடைந்து முதல் 70 ஆண்டுகளில், நாட்டில் சுமார் 20,000 கிலோமீட்டர் ரயில் பாதைகளை மட்டுமே மின்மயமாக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்தியாவில் சுமார் 40,000 கிலோமீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை, நம் நாடு ஒவ்வொரு மாதமும் சுமார் 600 மீட்டர் புதிய மெட்ரோ பாதைகளை மட்டுமே அமைத்து வந்தது. இன்று, இந்தியா ஒவ்வொரு மாதமும் 6 கிலோ மீட்டர் புதிய மெட்ரோ பாதைகளை அமைக்கிறது.

கடந்த, 2014-க்கு முன், நாட்டில், 4 லட்சம் கிலோ மீட்டருக்கும் குறைவான கிராமப்புற சாலைகள் இருந்தன. இன்று, நாட்டில் 7.25 லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான கிராமப்புற சாலைகள் உள்ளன. 2014-க்கு முன், நாட்டில், 70 விமான நிலையங்கள் இருந்தன. இன்று, இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 150 ஆக உயர்ந்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை 60 நகரங்களில் மட்டுமே நகர எரிவாயு விநியோக அமைப்புகள் இருந்தன. இப்போது, நகர எரிவாயு விநியோக அமைப்புகள் நாட்டின் 600 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ளன.

நண்பர்களே,

சவால்களை எதிர்கொண்டு, நிரந்தரத் தீர்வுகளைத் தேடி இந்தியா முன்னேறி வருகிறது. பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த அணுகுமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டம் ஆகும். தொழில்துறை நண்பர்கள் இங்கே அமர்ந்துள்ளனர். நீங்கள் இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ரயில்வே, சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு, பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டம் ஒரு நல்ல திட்டம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது 1600 க்கும் மேற்பட்ட வெவ்வேறு அடுக்குகளிலிருந்து தரவுகளை டிஜிட்டல் தளங்களில் ஒருங்கிணைக்கிறது. இது நாட்டின் நேரத்தையும் பணத்தையும் திறம்பட பயன்படுத்துவதையும் வீணடிக்காமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.

நண்பர்களே,

இன்று, இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, முந்தைய நூற்றாண்டின் மூன்றாவது பத்தாம் ஆண்டில் இந்தியா சுதந்திரத்திற்காக தீவிரமாகப் போராடியது.  கடந்த நூற்றாண்டின் மூன்றாவது பத்தாம் ஆண்டான 1923-1930 காலகட்டம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதேபோல், 21-ம் நூற்றாண்டின் இந்த மூன்றாவது பத்தாம் ஆண்டும் முக்கியமானது.

சென்ற நூற்றாண்டின் மூன்றாவது பத்தாம் ஆண்டில், ஒரு ஏக்கம் இருந்தது; அதன் நோக்கம் ‘சுயராஜ்யம்’ (சுயாட்சி) என்பதாகும். வளமான இந்தியாவை, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே இப்போது நமது குறிக்கோள். அந்த மூன்றாவது பத்தாம் ஆண்டில், நாடு சுதந்திரத்தை நோக்கிப் பயணித்தது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் சுதந்திரத்திற்கான குரல்களின் எதிரொலிகள் கேட்டன. சுயராஜ்ய இயக்கத்தின் அனைத்து நீரோட்டங்களும், அது புரட்சிப் பாதையாக இருந்தாலும் சரி, ஒத்துழையாமைப் பாதையாக இருந்தாலும் சரி, முழுமையான ஆற்றலுடன் இருந்தன. இதன் விளைவாக, நாடு சுதந்திரம் அடைந்தது. நமது சுதந்திரக் கனவு நனவானது. இப்போது, இந்த நூற்றாண்டின் இந்த மூன்றாவது பத்தாம் ஆண்டில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒரு புதிய இலக்கை நாம் கொண்டுள்ளோம். வளமான இந்தியா, வளர்ந்த இந்தியா என்ற கனவோடு இந்தப் பயணத்தை தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரும் கனவு கண்ட வெற்றியை அடைய, இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்த தீர்மானத்தை அடைய, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், 140 கோடி இந்தியர்களும், இரவு பகலாக பங்களிக்க வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிகளைக் கண்டிருக்கிறோம் என்பதை என் அனுபவத்திலிருந்து உங்களுக்குச் சொல்கிறேன். நான் நாட்டின் வலிமையைப் புரிந்து கொண்டுள்ளேன்.  அதன் அடிப்படையில், ‘பாரத் மண்டபத்தில்’ நின்று, இந்த திறமையான மக்கள் முன் இந்தியா வளர்ச்சியடையும் என்றும் அது நிச்சயமாக நடக்கும் என்றும் நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடியும். நிச்சயம் செய்ய முடியும். என்னுடைய இந்த நம்பிக்கையின் பின்னணியில் உள்ள அடிப்படையை இன்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

இந்தியாவில் வெறும் 5 ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து வெளியேறியுள்ளதாக நித்தி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் நிலவும் வறுமை ஒழியும் தருவாயில் இருப்பதாக சர்வதேச அமைப்புகளும் கூறி வருகின்றன. அதாவது கடந்த 9 ஆண்டுகளில் நாடு எடுத்த கொள்கைகளும் முடிவுகளும் நாட்டைச் சரியான திசையில் இட்டுச் செல்கின்றன.

நண்பர்களே,

நோக்கம் தெளிவாக இருந்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகும். நமது நோக்கத்தில் தெளிவும், நாட்டில் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான பொருத்தமான உத்திகளும் உள்ளன. இந்தியா ஜி 20 தலைமைப் பொறுப்பை வகிக்கும்போது நாடு முழுவதும் நடைபெறும் ஜி-20 நிகழ்வுகள் இதற்கு ஒரு உத்வேகமான எடுத்துக்காட்டு. ஜி-20 மாநாடு தொடர்பான நிகழ்ச்சிகளை ஒரு நகரம் அல்லது இடத்தில் மட்டும் நாம் நடத்தவில்லை. இந்த கூட்டங்களை நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்துகிறோம். இதன் மூலம், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார செழுமையை வெளிப்படுத்துகிறோம் இந்தியாவின் கலாச்சார வலிமை மற்றும் பாரம்பரியம், பன்முகத்தன்மைகளுக்கு மத்தியில் இந்தியா எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதை நாம் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.

இந்த ஜி-20 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் இந்தியாவுக்கு வருகின்றனர். பல்வேறு நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நடத்தியதன் மூலம் புதிய வசதிகளை உருவாக்குவதற்கும், ஏற்கனவே உள்ளவற்றை நவீனமயமாக்குவதற்கும் வழிவகுத்தது. இது நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் பயனளித்தது. இது நல்லாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

நண்பர்களே

இந்த முக்கியமான தருணத்தில் நீங்கள் அனைவரும் இங்கு வருவது இந்தியாவுக்காக நீங்கள் வைத்திருக்கும் கனவுகளை உங்கள் இதயங்களில் ஆழமாக வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். ‘பாரத் மண்டபம்’ போன்ற இந்த அற்புதமான வசதிக்காக தில்லி மக்களுக்கும், நம் நாட்டு மக்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன், மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

******

ANU/PLM/KPG