Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதிய இந்தியா சந்தையின் தேவைகளில் நம்பிக்கை கொண்டிருக்கிறது, முதலீட்டுக்கு மிகவும் உகந்த நாடாக இருக்கும்: பிரதமர்


1. மார்ச் மாதம் முதலாவது முடக்கநிலையை அமல் செய்ததில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் தொடங்கி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. உங்களுடைய மதிப்பீடு என்ன, எந்த அளவுக்கு நாம் சிறப்பாகச் செய்திருக்கிறோம்?

கடந்த காலத்தில் முன் எப்போதும் நிகழ்ந்திராத, அறியப்படாத ஒன்றாக இந்த வைரஸ் இருக்கிறது என்பதை நிச்சயமாக நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம் என்று நம்புகிறேன். எனவே, அறியப்படாத இந்த எதிரியை சமாளிக்கும் போது, நமது எதிர்வினைகளும் மேம்படுகின்றன.
நான் சுகாதார நிபுணர் கிடையாது. ஆனால் என் மதிப்பீடுகள், எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. எவ்வளவு உயிர்களை நம்மால் காப்பாற்ற முடிந்தது என்ற எண்ணிக்கையை வைத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நமது செயல்பாடுகளை மதிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

இந்த வைரஸ் நிலையற்ற தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒரு சமயத்தில் குஜராத்தில் பாதிப்பு அதிகமாக இருந்து ஹாட்ஸ்பாட்களாக இருந்தது, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கட்டுக்குள் இருப்பதாகத் தோன்றியது. சில மாதங்கள் கழித்து குஜராத்தில் நிலைமை மேம்பட்டது, ஆனால் கேரளாவில் மோசமாகிவிட்டது.

அதனால் தான் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அக்டோபர் 20 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும்கூட இதை நான் வலியுறுத்தினேன். முகக்கவச உறை அணிவது, கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி பராமரித்தல் ஆகியவை தான் இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கைகள் என்று அப்போது நான் கூறினேன்.

2. ஆனால் அது நீங்கள் எதிர்பார்த்தது போல குறைந்துவிட்டதா அல்லது தொடர்ச்சியாக புதிய திட்டங்களை அமல் செய்து, மாற்றங்கள் செய்ய வேண்டிய இருந்ததா?

ஆக்கபூர்வமாக இருந்து, நாடு முழுக்க உரிய காலத்தில் முடக்கநிலையை அமல் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். முடக்கநிலையை நாங்கள் அமல் செய்தபோது, மொத்த பாதிப்பு சில நூறுகளாகத்தான் இருந்தது. சில நாடுகளில் பாதிப்புகள் ஆயிரக்கணக்கில் உயர்ந்த போது தான் முடக்கநிலை அமல் செய்யப்பட்டது. பெருந்தொற்று நோய் பாதிப்பில், மிகவும் முக்கியமான, சரியான சமயத்தில் நாம் முடக்கநிலையை அமல் செய்தோம்.

முடக்கநிலை அமலில் பல்வேறு கட்டங்களை மேற்கொண்டது மட்டுமின்றி, முடக்கநிலை நீக்கத்திலும் சரியான அணுகுமுறையை கடைபிடித்ததால், நமது பொருளாதாரம் மீண்டும் இயல்புநிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத புள்ளிவிவரங்கள் இதைக் காட்டுகின்றன.
கோவிட்-19 நோய் பாதிப்புக்கு எதிராக, தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறைகளை இந்தியா மேற்கொண்டது. அதற்குப் பலன் கிடைத்தது.

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அளவில், தீவிரமாக நோய் பரவாமல் தடுப்பதில் இந்த நடவடிக்கைகள் உதவிகரமாக இருந்தன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உரிய நேரத்தில் முடக்கநிலை அமல் செய்யப்பட்டதுடன், முகக்கவச உறை அணிதலைக் கட்டாயமாக்கியது, தடமறிதல் ஆப் பயன்படுத்தியது, துரித ஆண்டிஜென் பரிசோதனை முறையை கையாண்டது ஆகியவற்றை முதலில் செய்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.

இந்த அளவுக்குப் பெரிய பெருந்தொற்று பாதிப்பில், நாட்டு மக்கள் ஒன்றுபட்டு செயல்படாமல், இதைக் கையாண்டிருக்க முடியாது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த நாடும் ஒன்றாக நின்றது. சுகாதாரத் துறை அலுவலர்கள், தங்கள் உயிருக்கான ஆபத்து இருப்பதை அறிந்தும் இந்த நாட்டுக்காக சேவை செய்து கோவிட் போராளிகளாக உருவானார்கள்.

3. கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம் என்ன?

இறுதிநிலை பயனாளிக்குப் பயன்கள் போய் சேருவதற்கான நல்ல நடைமுறை கடந்த சில மாதங்களில் உருவாகி இருப்பது, குறிப்பிடத்தக்க ஒரு நல்ல பாடமாக உள்ளது. அரசின் முதலாவது ஆட்சிக் காலத்தில் இதன் பெரும்பாலான நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் பெருந்தொற்று காலத்தில், மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

நான் இரண்டு உதாரணங்களைக் கூறுகிறேன். முதலில், நேரடி மானிய திட்டத்தின் மூலம், ஏறத்தாழ உடனடியாக பல மில்லியன் மக்களின் வங்கிக் கணக்குகளில் எங்களால் நேரடியாக பணம் செலுத்த முடிந்தது. இதற்கான முழு கட்டமைப்பும் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டது. முன்னதாக, சிறிய இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும்கூட, ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் சென்று சேராமல் இருந்தது, நிறைய ஊழல்கள் இருந்தன.

ஆனால் மிகவும் குறுகிய காலத்தில், எந்தவிதமான ஊழல் புகாரும் இல்லாமல் பெருமளவில் நிவாரண உதவிகளை எங்களால் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. இதுதான் நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் கிடைத்த சக்தியாகும். ஒரு ஒப்பீடாகக் காட்ட வேண்டுமானால், 1970-களில் பெரியம்மை பரவியபோது இந்தியாவில் எப்படி இருந்தது என்பதை உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் எடுத்துக் கூறலாம்.

இரண்டாவதாக, குறுகிய காலகட்டத்தில், ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் பழக்க வழக்கம் மாறியது என்பதாகும். முகக்கவச உறை அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் என மக்கள் மாறிக் கொண்டனர். எந்தவொரு தீவிர அமலாக்க நடவடிக்கையும் இல்லாமல் மக்களே பங்கேற்கும் நடைமுறைக்கு உலகிற்கே இது உதாரணமாக அமைந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் ஒரே அணியாக இருந்து, ஓய்வின்றி உழைத்து வருகின்றன, மக்களும், தனியார் துறையினரும் கை கொடுக்கின்றனர், மாறுபட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள எல்லா அமைச்சகங்களும் முன்வந்தன, மக்களின் ஈடுபாடும் இருந்ததால் ஒன்றுபட்ட, சிறப்பான தடுப்பு நடவடிக்கைகள் சாத்தியமாயின.

4. இந்தியாவில் கோவிட்-19 பரவலின் நிலை பற்றி உங்களின் மதிப்பீடு என்ன?

ஆரம்ப கட்டத்திலேயே நாங்கள் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால், பெருந்தொற்றுக்கு எதிரான தற்காப்பை உருவாக்க உதவியாக இருந்தது. ஒருவருடைய அசாதாரண மரணம் கூட வலிமிகுந்ததாக இருக்கும் என்றாலும், நம்முடையதைப் போன்ற பெரிய நாட்டில், திறந்தநிலை செயல்பாடுகள், போக்குவரத்துத் தொடர்பு வசதிகள் உள்ள நிலையிலும், உலக அளவில் இந்தியாவில் தான் கோவிட் மரணங்கள் குறைந்தபட்சமாக உள்ளது. குணம் பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.

செப்டம்பர் மாத மத்தியில் தினமும் ஏறத்தாழ 97.894 அளவுக்கு பாதிப்பு இருந்த நிலையில், அக்டோபர் கடைசியில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் 50 ஆயிரம் பேர் என்ற நிலைக்குக் குறைந்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் ஒன்றுபட்டு, ஓர் அணியாக செயல்பட்ட காரணத்தால் மட்டுமே இது சாத்தியமானது.

5. சிகிச்சையில் இருப்போர் மற்றும் மரண விகிதங்களைக் காட்டும் கோடு வரைபடத்தில் திரும்புவதாக சமீபத்திய போக்கு காட்டுகிறது. இதனால் மோசமான காலக்கட்டத்தைக் கடந்துவிட்டோம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. அரசிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தக் கருத்தை ஏற்கிறீர்களா?

இது புதியதொரு வைரஸ். ஆரம்பத்தில் இதைக் கட்டுப்படுத்திய நாடுகளில், மீண்டும் தாக்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்தியாவின் பூகோள ரீதியிலான பரப்பளவு, மக்கள் நெருக்கம், அடிக்கடி சமூக கூடுதல்கள் நிகழ்வது ஆகியவற்றை மனதில் கொண்டு தான், இந்த எண்களை நாம் பார்க்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டும். நம்முடைய பல மாநிலங்கள், வேறு சில நாடுகளைவிட பெரியவையாக உள்ளன.

நமது நாட்டுக்குள் பார்த்தால், இதன் தாக்கம் பல மாதிரியாக உள்ளது. சில இடங்களில் இதன் தாக்கம் மிகக் குறைவாக உள்ளது. சில இடங்களில் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும், 700 மாவட்டங்களுக்கும் மேல் உள்ள ஒரு நாட்டில், சில மாநிலங்களின் சில மாவட்டங்களில் உள்ள தாக்கத்தை வைத்து மட்டுமே பார்க்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

புதிய பாதிப்புகள், மரண விகிதம், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை பற்றிய தகவல்களைப் பார்த்தால், சில காலம் முன்பு இருந்ததைவிட, பாதிப்பு குறைந்திருப்பது தெரிகிறது. இருந்தாலும் நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. இன்னும் இந்த வைரஸ் இருக்கிறது. நாம் மெத்தனமாக இருந்தால் அதன் தாக்கம் அதிகரிக்கும்.

சூழ்நிலையைக் கையாள்வதற்கான திறன்களை அதிகரிப்பது, மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கூடுதல் வசதிகளை உருவாக்குவது ஆகியவற்றில் நமது திறன்களை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன். “நல்லதே நடக்கும் என நம்புவோம், ஆனால் மோசமான நிலை வந்தாலும் சமாளிக்கத் தயாராவோம்” என்ற வாசகத்தை மனதில் கொண்டு இதைச் செய்ய வேண்டும்.

6. கோவிட்-19 நோய் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. உயிர்கள் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு இடையே சரியான சமன்பாடு இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள். இந்த விஷயத்தில் உங்கள் அரசாங்கம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்கள்?

நாம் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், மக்களும் அரசுகளும் இரண்டு வெவ்வேறு பிரிவுகள் என்ற காலனி ஆதிக்க காலத்து எண்ணத்திலேயே சிலர் இன்னும் இருக்கிறார்கள். அரசின் மீது பேரழிவு காலம் ஏற்படுத்திய தாக்கம், இந்த மனநிலையில் இருந்து உருவாகியுள்ளது. இந்தப் பெருந்தொற்று நோய் 130 கோடி மக்களைப் பாதித்துள்ளது. அதை எதிர்த்துப் போராட அரசும் மக்களும் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகின்றனர்.

கோவிட்-19 தாக்குதல் தொடங்கியதில் இருந்து, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் நிறைய பேர் மரணிப்பதைப் பார்த்து அச்சம் ஏற்படுகிறது. நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்த போது, அவர்களுடைய சுகாதார நடைமுறைகள் சிக்கலுக்கு உட்பட்டன. இளைஞர்களும், முதியவர்களும் அதிகமாக உயிரிழந்தனர். அந்த சமயத்தில், அதுபோன்ற நிலைமை இந்தியாவில் நடக்காமல் தடுத்து, உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் நமது நோக்கமாக இருந்தது. இந்த வைரஸ், அறியப்படாத எதிரியைப் போன்றது. முன் எப்போதும் சந்தித்திராதது.

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் ஒருவர் போரிடும்போது, அதைப் புரிந்து கொண்டு, செயல்திறன்மிக்க உத்தியை உருவாக்க அவகாசம் தேவைப்படுகிறது. நாம் 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்தாக வேண்டும். இந்த வைரஸ் தாக்குதலால் எதிர்கொள்ளும் ஆபத்துகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம்மையும், நம் குடும்பத்தினரையும் எப்படி காப்பாற்றிக் கொள்ளலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அது மிகப் பெரிய சவாலான பணியாக இருந்தது. மனசாட்சியை விழிப்புறச் செய்ய வேண்டியது முக்கியமானதாக இருந்தது. மக்களின் ஈடுபாடு இல்லாமல் அதைச் செய்ய முடியாது. தாங்களாக முன்வந்து முடக்கநிலை கடைபிடித்ததன் மூலம், தட்டுகளை தட்டியது அல்லது விளக்குகள் ஏற்றியதன் மூலம் கூட்டான உறுதிப்பாட்டை உருவாக்கி, அனைவரையும் ஒரே தளத்திற்கு நம்மால் கொண்டு வர முடிந்தது. குறுகிய காலத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, வியக்கத்தக்க உதாரணமாக இது உள்ளது.

7. பொருளாதார வியூகம் எப்படிப்பட்டதாக இருந்தது?

உயிர்களைக் காப்பாற்றுவது என்பது, கோவிட்-19 பாதிப்பில் இருந்து காப்பாற்றுவது என்பதாக மட்டும் இருக்கவில்லை. ஏழைகளுக்குப் போதிய உணவும், அவசியமான பொருட்களையும் அளிக்க வேண்டியிருந்தது. கார்ப்பரேட் துறையினருக்கு பொருளாதார ஊக்கத் திட்டம் அறிவிக்க வேண்டும் என்று பெரும்பாலான நிபுணர்களும், பத்திரிகைகளும் கூறியபோதிலும், அதிக பாதிப்புக்கு ஆளாகும் மக்களின் வாழ்வைக் காப்பாற்றுவதில் தான் எங்கள் கவனம் இருந்தது. ஏழைகள், குடிபெயர்ந்தோர், விவசாயிகளை துன்பங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக முதலில் நாங்கள் பிரதமரின் கரீப் கல்யாண் திட்ட தொகுப்பை அறிவித்தோம்.

விவசாயத் துறையில் தான் உற்பத்தி பாதிக்காமலே இயல்பாகவே சமூக இடைவெளி பராமரிக்கப்படும் என்பதை ஆரம்பத்தில் புரிந்து கொண்டது, ஒரு முக்கியமான விஷயம். எனவே ஏறத்தாழ ஆரம்பத்தில் இருந்தே வேளாண் பணிகளை நாங்கள் அனுமதித்தோம். பல மாதங்கள் தடங்கல்கள் இருந்தாலும், இந்தத் துறை அபாரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை இன்றைக்கு நாம் அனைவரும் பார்க்க முடிகிறது.

உணவு தானியங்கள் விநியோகம், ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கம், தன்முனைப்புடன் கூடிய கொள்முதல் ஆகியவை உடனடியாகவும், நடுத்தர கால தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும் செய்யப்பட்டன.

கஷ்டங்களை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு உதவிட நாங்கள் தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தை முன்னெடுத்தோம். சமூகத்தில் மற்றும் பொருளாதாரத்தில் அனைத்து தரப்பினரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிப்பதாக அது உள்ளது.

பல தசாப்தங்களாக காத்திருப்பில் இருந்த சீர்திருத்தங்களை அமல் செய்வதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்தது. இதுநாள் வரை இதற்கு யாரும் முன்முயற்சி எடுக்காமல் இருந்தனர். நிலக்கரி, வேளாண்மை, தொழிலாளர் நலன், பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. நெருக்கடிக்கு முன்பு நாம் இருந்த உயர் வளர்ச்சிப் பாதைக்கு நாம் மீண்டும் திரும்பும் வகையில் இவை உதவியாக இருந்தன.

எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமாக இந்தியப் பொருளாதாரம் மீட்சி பெறுவதால், நமது முயற்சிகளுக்குப் பலன் கிடைத்து வருகிறது.

8. உங்கள் அரசு இரண்டு முக்கியமான இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. வேளாண்மை மற்றும் தொழிலாளர் நலன் சீர்திருத்தங்கள். விருப்பத்துக்கு ஏற்ற பொருளாதாரப் பயன்களை இவை தரும் என்று எந்த அளவுக்கு உங்களுக்கு நம்பிக்கை உள்ளது? குறிப்பாக ஒட்டுமொத்த பொருளாதார தேக்கம் மற்றும் அரசியல் எதிர்ப்பு சூழலில் உங்கள் நம்பிக்கை எப்படி உள்ளது?

இந்த சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாகவே நிபுணர்கள் கூறி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் கூட இந்த சீர்திருத்தங்களை முன்வைத்து தேர்தல்களில் வாக்கு கேட்டனர். இந்த சீர்திருத்தங்கள் நடைபெற வேண்டும் என்று எல்லோரும் விரும்பினர். இதற்கான நற்பெயர் எங்களுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது.

எங்களுக்கும் இதற்கான நற்பெயர் வேண்டாம். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை மனதில் கொண்டு மட்டுமே இந்த சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வந்தோம். எங்களுடைய பழைய நடத்தைகளின் அடிப்படையில், அவர்கள் இதைப் புரிந்து கொண்டு, எங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளில் படிப்படியாக வேளாண்மைத் துறையில் நாங்கள் சீர்திருத்தங்கள் செய்து வருகிறோம். எனவே, 2014ல் நாங்கள் தொடங்கிய செயல்பாடுகளின் ஓர் அம்சம் தான் இப்போது செய்திருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலையை நாங்கள் பன்மடங்கு உயர்த்தி இருக்கிறோம். உண்மையில், முன்பைவிட அதிகமாக இப்போது விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்திருக்கிறோம். நீர்ப்பாசனம் மற்றும் காப்பீட்டு வசதிகள் பெரிய அளவுக்கு அதிகரித்துள்ளன. விவசாயிகளுக்கு நேரடி வருவாய் ஆதரவுக்கு உத்தரவாதம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
விவசாயிகள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்ததற்கு ஈடாக வருமானம் கிடைக்காமல் இருந்தது. இந்த சீர்திருத்தங்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள புதிய அமைப்பின் மூலம் நமது விவசாயிகளின் லாபம் அதிகரிக்கும். மற்ற தொழில் துறைகளைப் போல, லாபம் கிடைத்தால், அது கூடுதல் உற்பத்திக்காக அதே துறையில் மறுமுதலீடு செய்யப்படுகிறது. லாபம் மற்றும் மறுமுதலீடு என்ற சுழற்சி ஏற்படும். வேளாண்மைத் துறையிலும், இந்த சுழற்சியால் நிறைய முதலீட்டுக்கும், புதுமை சிந்தனை மற்றும் புதிய தொழில்நுட்பத்துக்கும் வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில், வேளாண்மைத் துறையை மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிராமப்புற பொருளாதாரத்தையே மாற்றும் சக்தி கொண்டதாக இருக்கிற காரணத்தால் இந்த சீர்திருத்தங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பொருத்த வரையில், ரபி கொள்முதல் பருவத்தை இப்போது முடித்திருக்கிறோம். மத்திய அரசு 389.9 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்திருக்கிறது. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக விவசாயிகளுக்கு ரூ.75,055 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் கரீப் பருவ கொள்முதலில் 159.5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 134.5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இது 18.62 சதவீதம் அதிகமாகும். மூன்று அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்த பிறகு இவை நடந்துள்ளன. இப்போது அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2 (2009-10 முதல் 2013-14 வரையிலான காலம்) காலத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில்

விவசாயிகளுக்கு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பது 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. கோதுமைக்கான பணம் பட்டுவாடா 1.3 மடங்கும், பருப்பு வகைகளுக்கு 75 மடங்கும், எண்ணெய் வித்துகளுக்கு 10 மடங்கும் அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எதிராக சிலர் கூறிவரும் பொய்கள், நேர்மையற்ற கருத்துகளை பொய் என இது நிரூபித்துள்ளது.

9. தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்கள் எப்படி உள்ளன?

இந்தச் சீர்திருத்தங்கள் அதிகளவுக்கு தொழிலாளர் நலன் சார்ந்தவை. குறிப்பிட்ட காலத்துக்கு பணி அமர்த்தப்பட்டாலும், அவர்களுக்கு அனைத்து பயன்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு கிடைக்க இது வகை செய்யும். குறைந்தபட்ச ஊதிய சீர்திருத்தங்கள், அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புக்கான வசதி, அரசின் தலையீடுகளை குறைந்தபட்ச அளவுக்குக் குறைத்தல் ஆகியவற்றுடன், கணிசமாக வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கும் இந்த சீர்திருத்தங்கள் உதவும். உரிய காலத்தில் ஊதியத்தை வழங்குவது, தொழிலாளர்களுக்கு பணியிட சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதை இது உறுதி செய்கிறது. இதன் மூலம் நல்ல பணி சூழல் ஏற்படுத்தப்படும்.

கடந்த சில வாரங்களில், எங்கள் எண்ணத்தின்படியான பணிகளை முடித்திருக்கிறோம். 1,200க்கும் மேற்பட்ட பிரிவுகளைக் கொண்ட 44 மத்திய தொழிலாளர் நல சட்டங்கள், ஒன்று சேர்க்கப்பட்டு 4 விதிமுறைகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது ஒரே பதிவு, ஒரே மதிப்பீடு, ஒரே ரிட்டர்ன் தாக்கல் என்று மட்டுமே உள்ளது. எளிதாக ஒத்திசைவு காட்டுவதுடன், முதலீடு செய்தலுக்கு ஸ்திரமான சூழலை உருவாக்குவதாகவும் இருக்கும். எனவே தொழிலாளி, முதலாளி ஆகிய இருவருக்குமே சம அளவு முக்கியத்துவம் இருக்கும்.

உற்பத்தித் துறையைப் பொருத்த வரையில், கடந்த ஆறு ஆண்டுகளில், நாங்கள் பல சீர்திருத்தங்கள் செய்திருக்கிறோம். புதிய உற்பத்தி ஆலைகளுக்கு கார்ப்பரேட் வரியை 15 சதவீதம் அளவுக்குக் குறைத்துள்ளோம். நேரடி வெளிநாட்டு முதலீட்டு வரம்பை உயர்த்தியுள்ளோம். விண்வெளி, பாதுகாப்பு போன்ற முக்கியத்துவமான துறைகளில் தனியார் முதலீட்டை அனுமதித்திருக்கிறோம். உண்மையில், தொழிலாளர் நல சீர்திருத்தங்கள் என்ற ஒரு விஷயத்தைத் தவிர, உற்பத்தித் துறையில் சீர்திருத்தங்கள் ஏற்கெனவே செய்யப்பட்டிருந்தன. தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் உதவிகரமாக இருந்தன. இந்தியாவின் தொழிலாளர்களுக்கான பயன்களை முறைப்படுத்தி அவர்கள் பயன்பெறாத வரையில், ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமாகாது.

கடந்த சில மாதங்களில் செய்யப்பட்ட இந்தச் சீர்திருத்தங்கள், வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் செய்து, உற்பத்தி மற்றும் வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சொல்லப்போனால், சந்தைகள் மற்றும் சந்தைகளின் போக்கை இயக்கும் சக்திகளில் நம்பிக்கை கொண்ட புதிய இந்தியா என்ற ஒரு அறிகுறியை உலகிற்குக் காட்டுவதாகவும் இது இருக்கும்.

10. தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்கான வரம்பு, 300 பேர் வரை வேலைபார்க்கும் தொழிற்சாலை என மாற்றப்பட்டிருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் எலெக்ட்ரானிகஸ், ஆயத்த ஆடை தயாரிப்பு மற்றும் பிற பெரிய தொழிற்சாலைகளில் இன்னும் அதிகமானவர்கள் வேலை பார்க்கிறார்கள். வேலைநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டை பெருமளவு அதிகரித்து, இந்தத் தளர்வை ஏன் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் வழங்கக் கூடாது? வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை தடுக்கும் முயற்சி என்ற விமர்சனங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்தியா இரண்டு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தது: பெரும்பாலான தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு இல்லாத வகையில் நமது தொழிலாளர் நலச் சட்டங்கள் இருந்தன. தொழிலாளர் நல சட்டங்களுக்குப் பயந்து, அதிகம் பேரை வேலைக்கு வைத்துக் கொள்ள நிறுவனங்கள் விரும்பவில்லை. இதனால் அதிக தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை ஊக்குவிப்பதாக இல்லை. இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் போன்ற நடைமுறை, சிக்கலான தொழிலாளர் நலச் சட்டங்கள் ஆகியவை தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவையாக இருந்தன.

தொழிலாளர்களும், தொழில் துறையும் எப்போதும் முரண்பட்ட நிலையே கொண்டிருப்பார்கள் என்ற மனநிலை நம்மிடம் ஏற்பட்டுள்ளது. இருவருமே சம அளவில் பயன் பெறக் கூடிய ஒரு நடைமுறை இருந்தால் என்ன? தொழிலாளர் நலன் என்பது பொதுப் பட்டியலில் இருப்பதால், தங்கள் சூழ்நிலைகள் மற்றும் தேவைக்கு ஏற்ப மாநிலங்கள் இதை மேலும் மாற்றிக் கொள்ளவும் முடியும்.

வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை நீக்கப்படவில்லை. சொல்லப்போனால், தொழிற்சங்கங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெறக் கூடிய புதிய உரிமை கிடைத்திருக்கிறது.

தொழிலாளி – முதலாளி உறவை அதிக இசைவு கொண்டதாக நாங்கள் மாற்றி இருக்கிறோம். முதலாளி மற்றும் தொழிலாளிக்கு இடையில் ஏதும் முரண்பாடு ஏற்பட்டால், சமுகத் தீர்வு காண்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், நோட்டீஸ் அளிக்கும் காலம் என்ற அம்சம் அமைந்துள்ளது.

11. ஜிஎஸ்டி நடைமுறை கோவிட்-19 தொற்றால் ஏற்படுத்தியுள்ள கணிசமான அழுத்தத்திற்குள் வந்துள்ளது. மத்திய அரசு தற்போது கடன் பெற்று அதை மாநிலங்களுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இதன் மூலம் மாநில அரசுகளின் நிலையை எவ்வாறு காண்கிறீர்கள்?

கடந்த ஆறு ஆண்டுகளில், எங்களது அனைத்து நடவடிக்கைகளிலும் கூட்டுறவு கூட்டாட்சியின் தன்மை வெளிப்பட்டுள்ளது. நமது நாட்டைப் போன்ற பெரிய நாட்டில், மத்தியில் உள்ள ஒரு தூணின் மீது மட்டும் நின்று வளர்ச்சியடைய முடியாது. அதற்கு இரண்டாவது தூண்களாக மாநிலங்கள் தேவை. இந்த அணுகுமுறை காரணமாகவே கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது. முடிவுகள் கூட்டாகவே எடுக்கப்பட்டன. மாநில முதலமைச்சர்களுடன் பல முறை காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளேன். அதில், அவர்களது கருத்துக்கள், யோசனைகளைக் கேட்டுள்ளேன். வரலாற்றில் இதற்கு முன்பு இவ்வாறு நடந்ததில்லை.

ஜிஎஸ்டியைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு எல்லா விதத்திலும் அசாதாரணமான ஆண்டாகும். நூற்றாண்டில் காணாத பெருந்தொற்று, பெரும்பாலான யூகங்கள், கணக்கீடுகள் ஆகியவற்றை புறந்தள்ளி விட்டது. இருப்பினும், முன்னேறிச் செல்வதற்கான உத்தேச வாய்ப்புகள் பரிசீலிக்கப்படுகின்றன. பல மாநிலங்கள் இதில் நல்ல நிலையில் உள்ளன. இதுபற்றிய கருத்தொற்றுமை உருவாகி வருகிறது.

12. நீங்கள் முதலமைச்சராக பல ஆண்டுகள் இருந்துள்ளீர்கள். தற்போதைய சூழலில், பொருளாதார விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த விதமான ஒத்துழைப்பை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?

மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் ஜிஎஸ்டி என்ற அளவில் மட்டுமே உள்ளதல்ல என்பதை நினைவில் கொள்வது முக்கியம். பெருந்தொற்று மற்றும் ஒட்டுமொத்த வரிவருவாய் சரிவுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு அதிக பயன்களை வழங்கியுள்ளோம். ஏப்ரல், ஜூலை மாதங்களுக்கு இடையே, மத்திய அரசின் நிதியுடன் கூடிய திட்டங்கள் உட்பட வரி வருவாய் மற்றும் மானியங்கள் வழங்குவது மொத்தம் 19 % அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வழங்கப்பட்ட 3.42 லட்சம் கோடி என்ற அளவு இவ்வாண்டு 4.06 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறினால், நமது வருவாய் குறைந்த போதிலும், மாநிலங்களுக்கு நிதி அளிப்பதில் குறை ஏதுமில்லை.

கோவிட்-19 தொற்றைக் கருத்தில் கொண்டு, 2020-21-ம் ஆண்டுக்கு மாநிலங்களின் ஜிடிபியில் 2% அளவுக்கு கூடுதல் கடன் பெறுவதற்கான வரம்பை உயர்த்தி அனுமதித்துள்ளோம். 4.27 லட்சம் கோடி அளவிலான இத்தொகை மாநிலங்களுக்கு கிடைக்கும். மாநிலங்கள் முதல் 0.5%_ஐ 2020 ஜூன் மாதத்தில் பெறுவதற்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. இது மாநிலங்களுக்கு கூடுதலாக 1,06,830 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்துள்ளது. மாநிலங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மாநில பேரிடர் மீட்பு நிதியின் பயன்பாட்டு அளவு 35 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கொரோனாவை எதிர்த்துப் போராட மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

13. மத்திய அரசு தான் எதிர்கொள்ளும் சவால்களை மாநிலங்களிடம் தள்ளி விட்டுள்ளதாக பலர் வாதிடுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

முன்பு என்ன நடந்தது என்பதை விளக்க ஒரு உதாரணம் கூறுகிறேன். யுபிஏ ஆட்சி காலத்தில் , சிஎஸ்டிக்குப் பதிலாக வாட் வரி கொண்டு வரப்பட்டது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதாக மாநிலங்களுக்கு அப்போது உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த அரசு என்ன செய்தது என்பது உங்களுக்கு தெரியுமா? அவர்கள் உறுதி அளித்திருந்தும், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்தனர். ஒரு ஆண்டு அல்ல, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இது நடந்தது. யுபிஏ ஆட்சியின் போது, ஜிஎஸ்டியை மாநிலங்கள் எதிர்த்ததற்கு இதுவும் ஒரு காரணம். வேறு அரசு அளித்த உறுதிமொழியை, 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, எங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு அந்த நிலுவைத் தொகையை வழங்கினோம். கூட்டாட்சி தத்துவத்தின்மீது எங்களது அணுகுமுறையை இது காட்டுகிறது.

14. தொற்று எண்ணிக்கை, பொருளாதார சரிவு விஷயத்தில் அரசு சரியான தகவலை அளிக்கவில்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர்.இதற்கு உங்களது பதில் என்ன?

நம் நாட்டில் ஏற்பட்டுள்ள துல்லியமான தொற்று எண்ணிக்கையை, நமது மாநிலங்களின் மக்கள் தொகையை விடக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிற நாடுகளுடன், அறிவு ஜீவிகளாக தங்களைக் கருதும் சிலர் ஒப்பிடுகின்றனர்.

இருப்பினும், அந்த வாதங்கள் பற்றி, எக்கனாமிக் டைம்ஸ் சிறந்த ஆராய்ச்சி நடத்த வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். நமது தற்போதைய எண்ணிக்கையை நோக்கும் போது, மார்ச் மாதம் நிபுணர்கள் எத்தகைய பெரும் எண்ணிக்கையை கணித்தனர் என்பதைப் பார்க்க வேண்டும்.

15. பொருளாதாரம் மீண்டெழுவதற்கான தெளிவான குறியீடுகளாக நீங்கள் குறிப்பிடும் ஐந்து பொருளாதார அளவுகோல்கள் என்ன? குறிப்பாக அடுத்த ஆண்டு எந்தவித மீட்டுருவாக்கத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

பொருளாதார மீட்பு பாதையில் நாம் உள்ளோம். குறியீடுகளும் அதையே காட்டுகின்றன. முதலாவதாக, வேளாண்மையில், நான் முன்பு கூறியதைப் போல, நமது உழவர்கள் விளைச்சலில், அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளனர். முன்பு எப்போதும் இல்லாத குறைந்த பட்ச ஆதரவு விலையில் சாதனை அளவாக கொள்முதல் செய்துள்ளோம். சாதனை விளைச்சல், சாதனை கொள்முதல் என்ற இந்த இரண்டு அம்சங்கள், தேவை உற்பத்தி சுற்றைக் கொண்டுள்ள கிராமப்புற பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெருக்கவுள்ளது. இரண்டாவதாக, எப்டிஐ வரத்து சாதனை அளவாக அதிகரித்துள்ளது, முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது என்ற நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு, பெருந்தொற்றுக்கு இடையிலும், இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 35.73 பில்லியன் டாலர் எப்டிஐ-யை நாம் பெற்றுள்ளோம். இந்த விஷயத்தில் சாதனை அளவாக கருதப்பட்ட கடந்த ஆண்டு இதே காலத்தில் பெற்றதை விட 13% இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மூன்றாவதாக, டிராக்டர் விற்பனை உள்ளிட்ட வாகன விற்பனை கடந்த ஆண்டின் அளவைத் தாண்டியுள்ளது. தேவை தரப்பில் மீட்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது. நான்காவதாக, உற்பத்தி துறையில் படிப்படியான முன்னேற்றம் காணப்படுகிறது. சீனா, பிரேசில் ஆகிய உருவெடுத்து வரும் சந்தைகளுக்கு அடுத்தபடியாக செப்டம்பரில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்க இது உதவியுள்ளது. உற்பத்தி வளர்ச்சி முதல் ஆண்டிலேயே ஏழு மாதங்களில் ஏற்றுமதி வளர்ச்சி மூலம் பிரதிபலித்துள்ளது. இ-வே பில், ஜிஎஸ்டி வசூல் வளர்ச்சியும் நன்றாக உள்ளன.

கடைசியாக, வருங்கால வைப்பு நிதி டிரஸ்ட் (இபிஎப்ஓ) புதிய சந்தாதாரர்களின் பதிவு எண்ணிக்கை, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் 34% உயர்ந்துள்ளது. பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இதில் புதிதாக இணைந்துள்ளனர். இது வேலை வாய்ப்பு சந்தை எழுச்சி பெற்று வருவதைக் காட்டுகிறது.

இது தவிர, அந்நியச் செலாவணி கையிருப்பு சாதனை அளவாக அதிகரித்துள்ளது. பொருளாதார மீட்சியின் முக்கிய குறியீடுகளான, ரயில்வே சரக்குப் போக்குவரத்து 15விழுக்காடுக்கும் அதிகமாகவும், மின்சாரத் தேவை கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதே மாதத்தில் 4 சதவீதமும் உயர்ந்துள்ளது. இது மீட்சி என்பது விரிவான அளவுக்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும், தற்சார்பு இந்தியா அறிவிப்புகள், குறிப்பாக சிறு தொழில்கள் மற்றும் அமைப்பு சாரா துறையில், பெரும் பொருளாதார ஊக்குவிப்பாக அமைந்துள்ளன.

16. மேலும் ஊக்குவிப்புக்கு உங்கள் திட்டம் என்ன?

ஒட்டுமொத்த நுண் –பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்து, பொருளாதாரத்தை படிப்படியாக ஊக்குவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம். நாம் இன்னும் பெருந்தொற்று பரவலில் இருந்து விடுபடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், நமது பொருளாதாரம் மீண்டெழுவதற்கான குறிப்பிடத்தக்க திறனை வெளிப்படுத்தியுள்ளது. நமது மக்களின் விரிதிறனால் இது சாத்தியமாகிறது. கடை உரிமையாளர், வர்த்தகர், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நடத்துபவர், தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர், தொழில் முனைவோர் ஆகிய இவர்கள் அனைவரும் பொருளாதார மீட்சிக்கும், வலுவான சந்தை உணர்வுக்கும் பொறுப்பான நாயகர்கள் ஆவர்.

17. உற்பத்தித் துறையில் உலக விநியோக சங்கிலியின் ஒரு பகுதியாக, இந்தியா உலக மையமாக உருவெடுக்கும் என நீங்கள் இன்னும் நம்புவதாகத் தெரிகிறது. சீனா மீது நிறுவனங்கள் ஒருவித தயக்கம் கொண்டுள்ள நிலையில் இதில் முன்னேற்றம் எத்தகையது? இதில், சீனாவுக்கு நம்பிக்கையான மாற்றாக இந்தியாவால் உருவெடுக்க இயலுமா?

இந்தியா, உற்பத்தி பற்றி பெருந்தொற்றுக்கு பின்னர் மட்டும் பேசவில்லை. சில காலத்துக்கு முன்பாகவே, உற்பத்தியை அதிகரிப்பது குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்தியா, திறன் வாய்ந்த தொழிலாளர்களைக் கொண்ட ஒரு இளம் நாடு. ஆனால், அடுத்தவர்களது இழப்பில் ஆதாயம் அடைவதில் இந்தியாவுக்கு நம்பிக்கை இல்லை. இந்தியா தனது சொந்த வலிமை மூலம் உலக உற்பத்தி மையமாக மாறும். நம்முடைய முயற்சி மற்றொரு நாட்டுக்கு மாற்றாக மாறுவதல்ல. ஆனால், தனித்துவமான வாய்ப்புகளை வழங்கும் நாடாக மாறுவதுதான் நமது நோக்கம். அனைவரது முன்னேற்றத்தையும் காண நாம் விரும்புகிறோம். இந்தியா முன்னேறினால், ஆறில் ஒரு பங்கு மனிதநேயம் முன்னேறும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எவ்வாறு அமைக்கப்பட்டது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். கோவிட்-19க்குப் பின்பும் அதே போன்ற நிலை ஏற்படும். இம்முறை, உலக விநியோக சங்கிலி முறையை ஒருங்கிணைத்து, இந்தியா உற்பத்தித் துறையில் சவாரி செய்யும். ஜனநாயகம், மக்கள் தொகை, தேவை ஆகியவற்றின் மூலம் குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்கள் நமக்கு உள்ளன.

18. இந்தியா இந்த பிரம்மாண்டமான இடைவெளியை நிரப்ப நீங்கள் உத்தேசித்துள்ள கொள்கை நடவடிக்கைகள் என்ன?

கடந்த சில மாதங்களில் இந்தியாவின் மருந்துத் துறை, ஏற்கனவே முன்னோடியாக திகழ்ந்துள்ளது. உலக மருந்து விநியோக சங்கிலியில் இந்தியா முக்கிய பங்காற்றும் வகையில் உருவெடுத்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் பிபிஇ உபகரணங்கள் தயாரிப்பில் இரண்டாவது பெரிய உற்பத்தி நாடாக நாம் மாறியுள்ளோம். தொழில்நுட்ப ரீதியாக நவீனமான வென்டிலேட்டர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் நாம் முத்திரை பதித்துள்ளோம். முன்பு இந்த தயாரிப்பு இல்லாத நிலையில் இருந்து தற்போது குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கான வென்டிலேட்டர்களை நாம் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றுள்ளோம்.

சுதந்திரம் பெற்றதில் இருந்து தொற்று ஆரம்பிக்கும் வரை, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில், சுமார் 15-16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மட்டுமே இயங்குகின்ற நிலையில் இருந்தன. இப்போது, இந்த மருத்துவமனைகளில் மேலும் 50000 வென்டிலேட்டர்களை வழங்கும் அளவுக்கு நாம் வேகமாக முன்னேறியுள்ளோம்.

இப்போது, நாம் இந்த மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். நாம் இதனை மற்ற துறைகளிலும் பின்பற்ற முடியும். கைபேசி தயாரிப்பு, மருந்து மற்றும் மருத்துவ உபகரண தயாரிப்புக்கென அண்மையில் தொடங்கப்பட்ட நமது உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு நடவடிக்கை, இந்த வகையில் நல்ல எடுத்துக்காட்டாகும். உலக அளவில் போட்டியிடும் அளவுக்கு இந்தியாவை ஏற்றுமதி மையமாக உருவாக்க, சர்வதேச அளவில் பிரபலமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் அணுகுமுறையில் கவனம் செலுத்தப்படும். கைபேசி பிரிவில் மட்டும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கோடிக்கும் அதிகமான தயாரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 60% ஏற்றுமதி செய்யப்படும்.

அமெரிக்காவில் இருந்து 154 பசுமைக்கள திட்டங்கள் 2020-ல் இந்தியா வந்துள்ளதாக மூடி தர நிர்ணய அமைப்பு கூறுகிறது. இது சீனாவுடன் ஒப்பிடுகையில் 84 ஆகவும், வியட்நாமுடன் ஒப்பிடுகையில் 12 ஆகவும், மலேசியாவுடன் ஒப்பிடுகையில் 15 ஆகவும் உள்ளது. இந்தியாவின் முன்னேற்றமான வளர்ச்சியில், உலகின் நம்பிக்கைக்கு இது தெளிவான அறிகுறியாகும். இந்தியாவை உலகின் முன்னணி உற்பத்தி மையமாக மாற்ற நாம் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம்.

கார்பரேட் வரி ரத்து, நிலக்கரித் துறையில் வணிக சுரங்கங்களை அனுமதித்தல், விண்வெளித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி, சிவில் விமானப் போக்குவரத்து பயன்பாட்டுக்கான பாதைகள் மீது பாதுகாப்பு கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவை நீண்டகால வளர்ச்சியை ஊக்குவிக்கும் சில நடவடிக்கைகள் ஆகும்.

ஆனால், நமது மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்தால் மட்டுமே இந்தியாவும் அதே வேகத்தில் வளர்ச்சியடைய முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இதற்கு தேவையாகும். தொழில் நடத்த உகந்த இடங்கள் தர வரிசையில் மாநிலங்களும் போட்டியிட வேண்டும். முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஊக்கத்தொகைகள் மட்டும் போதுமானதல்ல. இதற்கு மாநிலங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, சிறந்த வளர்ச்சி சார்ந்த அரசியலை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

19. தற்சார்பு முயற்சி, தன்னிறைவு காலத்திற்கு திரும்பும் அடையாளம் என சில தரப்பினர் அஞ்சுகின்றனர். இறக்குமதியை கட்டுப்படுத்திக் கொண்டு, உலக விநியோக சங்கிலியின் ஒரு பகுதியாக இந்தியா மாற நினைப்பதில் முரண்பாடு உள்ளதாக சிலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து?

இந்தியா அல்லது இந்தியர்களின் இயல்பு என்பது, உள்நோக்கி பார்ப்பதோ அல்லது சுயநலம் சார்ந்ததோ அல்ல. நாம் முற்போக்கான நாகரிகம், எழுச்சி மிகு ஜனநாயகத்தைக் கொண்டவர்கள். சிறந்த உலகத்தை உருவாக்க மற்ற நாடுகளுடன் கலந்துரையாடுவது நமது இயல்பு. தற்சார்பு இந்தியா வெறும் போட்டி தொடர்பானது அல்ல. அதேசமயம், போட்டித்திறன் சார்ந்தது. இது ஆதிக்கம் சார்ந்தது அல்ல. சார்ந்திருப்பது. உள்ளாக பார்ப்பது அல்ல. உலகத்துக்காக வெளியே பார்ப்பது.

எனவே, தற்சார்பு இந்தியா என நாம் கூறும்போது, இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும் என்பது அர்த்தம். தன்னிறைவு பெற்ற இந்தியா, உலகிற்கு நம்பகமான நண்பனாக இருக்கும். தன்னிறைவு இந்தியா என்பது சுயநலம் சார்ந்தது அல்ல. ஒரு குழந்தை 18 வயதை அடைகின்ற போது, தற்சார்புள்ளவனாக மாற வேண்டும் என பெற்றோர் கூறுவதுண்டு அல்லவா? அதுபோல இதுவும் இயல்புதான்.

இன்று, மருத்துவத் துறையில் உலகுக்கு உதவுவதற்காக, நாம் நமது தற்சார்பு இந்தியாவைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக, நாம் விலையை உயர்த்தாமல், கட்டுப்பாடு விதிக்காமல் மருந்துகளையும், தடுப்பூசிகளையும் தயாரித்து வருகிறோம். இன்று மனித குலத்துக்கு உதவ, உலகம் முழுவதும் பரந்துள்ள இந்திய மருத்துவர்களை அதிக தொகை செலவழித்து நாம் உருவாக்கியுள்ளோம். இதற்கு, நம்மைப்போன்ற ஏழை நாடு மிகப்பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது. இருந்தாலும் அவர்கள் இடம்பெயருவதை நாம் ஒருபோதும் தடுக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட துறையில், இந்தியா தற்சார்பு பெறும்போது, அது எப்போதும் உலகுக்கு உதவுகிறது. இந்தியாவின் விழுமியங்கள் பற்றி, புரிந்து கொள்ள முடியாத சிலருக்கு இந்த கருத்தியலும் புரியாது.

20. அப்படியென்றால் முரண்பாடு இல்லையா?

நிபுணர்களிடம் உள்ள குழப்பத்துக்கு நமது அணுகுமுறை காரணமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. வேளாண்மை, தொழிலாளர், நிலக்கரி துறைகளில் சீர்திருத்தங்கள் மூலம் எப்டிஐ-க்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளோம். சர்வதேச வர்த்தகம் மற்றும் வணிகத்தின் ஆற்றல் பற்றி நம்புகின்ற நாடு மட்டுமே, உலகத்துடன் சேர்ந்து பாடுபட மேலும் மேலும் வழிகளைத் திறந்து விடும். அதே நேரம், உள்ளார்ந்த சாதகங்கள் கொண்ட துறைகளில் நிறைந்துள்ள வளங்கள் பற்றி இந்தியா உணர இயலாமல் இருந்திருக்கிறது என்பதும் உண்மையே. நிலக்கரியை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்கள். உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி வளம் இருந்த போதிலும், 2019-20-ல் இந்தியா சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது. இறக்குமதியை நம்பியுள்ள மற்றொரு துறை பாதுகாப்பு துறை. எப்டிஐ வரம்பை 49-லிருந்து 74% ஆக உயர்த்துவது பற்றி அறிவித்துள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான 101 பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில், நமது சந்தைகளைத் திறந்து விட்ட போது, நாம் 10 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், 6 முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம். அந்த ஒப்பந்தங்களின் மதிப்பீடு, அவை இந்தியாவுக்கு எந்த அளவில் பயன் அளிக்கின்றன என்பதைப் பொறுத்து இருக்க வேண்டுமே அல்லாமல், சித்தாந்த அடிப்படையில் அல்ல.

உலக மதிப்பு சங்கிலியில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால், அவை நியாயமானதாகவும், பாகுபாடின்றியும் இருக்க வேண்டும்.

மேலும், இந்தியா மிகப்பெரிய சந்தை அணுக்கத்தை வழங்குவதால், அந்த ஒப்பந்தங்கள் பரஸ்பர பலன் அளிப்பதாகவும், சமன்பாடு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

நமது தடையற்ற ஒப்பந்தங்களின் கீழ், நமது பெரிய சந்தையை அணுகுவதற்கு முன்னுரிமை அணுக்கத்தை நாம் வழங்குகிறோம். ஆனால், நமது வர்த்தக கூட்டாளிகள் அதே முறையில் எப்போதும் நடந்து கொள்வதில்லை. நமது ஏற்றுமதியாளர்கள் அடிக்கடி தீய நோக்கத்துடனான கட்டணத் தடங்கல்களை சந்தித்துள்ளனர். உதாரணமாக, நமது வர்த்தக கூட்டாளிகள் இந்தியாவுக்கு இரும்பை ஏற்றுமதி செய்யும் போது, சில வர்த்தக கூட்டாளிகள் இந்திய இரும்பை இறக்குமதி செய்ய அனுமதிப்பதில்லை. அதேபோல, இந்திய டயர் உற்பத்தியாளர்கள் தொழில்நுட்ப முட்டுக்கட்டைகளால் அவற்றை ஏற்றுமதி செய்ய இயலவில்லை. இந்தியா தாராள திறப்பு நிலை, வர்த்தகத்தில் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றில் உறுதியாக இருக்கும் நிலையில், அதன் ஏற்றுமதியாளர்களுக்கு தடையற்ற நியாயமான அணுக்கத்தை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை அது பயன்படுத்தும்

விரிவான பிராந்திய பொருளாதார கூட்டாண்மை ஆர்சிஇபி விஷயத்தில், இந்தியா சிறப்பான இறுதி முடிவுக்கான முயற்சிகளை எடுத்துள்ளது. நியாயமான வர்த்தக நடைமுறைகள் மற்றும் வெளிப்படைத் தன்மை அடிப்படையில், சமமான களத்தை நாம் விரும்பினோம். சில ஆர்சிஇபி நாடுகளில் காணப்படும் கட்டண இடையூறுகள், தடங்கல் ஏற்படுத்தும் மானிய நடைமுறைகள் குறித்து கடும் ஆட்சேபனைகளை நாம் வெளிப்படுத்தினோம். தற்போதைய ஆர்சிஇபி கட்டமைப்பு அதன் வழிகாட்டு கொள்கைகளை பிரதிபலிக்கவில்லை என்றும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டி, இந்தியா அதில் சேர்வதில்லை என்ற முடிவை பரிசீலித்தது.

21.அரசின் மதிப்பீடுகளில் இருந்து எப்டிஏ ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை என்ற தோற்றம் ஏற்படுகிறது. ஆர்சிஇபி குறித்தும் நாம் பரிசீலித்து வருகிறோம். இந்த விஷயத்தில் உங்களது சிந்தனை எவ்வாறு உருவாகிறது? எப்டிஏக்களை நாம் தொடர வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் வெற்றிகரமான தீர்வுகளை அதன் வழிகாட்டு கொள்கை வழங்க வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்கள் உலக வர்த்தக அமைப்பு மூலம், பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் என்னிடம் கூறியுள்ளனர். இந்தியா எப்போதும் உலக வர்த்தக விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து வருகிறது. உலக வர்த்தக அமைப்பு வரையறுத்துள்ள, வளரும் நாடுகளின் வளர்ச்சி நோக்கங்கள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், நியாயமான, தடையற்ற, சமன்பாடான, வெளிப்படையான விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச வர்த்தக முறைகள் இருக்க வேண்டும் என்பதில் அது உறுதியாக உள்ளது.

22. பிபிஇ மற்றும் முகக்கவசங்களை மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மருந்து துறையிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதனை முன்னெடுத்துச் செல்ல, இந்த சாதகமான விஷயங்களை நீங்கள் எவ்வாறு வலுப்படுத்துவீர்கள்?

பெருந்தொற்று பரவத் துவங்கிய நிலையில், நாம் பிபிஇ இறக்குமதியை நம்பியுள்ளோம் என்பதை உணர்ந்து கொண்டோம். நாடுகள் பொது முடக்கம் விதித்த போது, இந்தப் பிரச்சினை பூதாகரமானது. உற்பத்தி பாதித்து, உலக விநியோக சங்கிலி தடைபட்டது. இத்தகைய அவசியத் தேவையானது, நெருக்கடியான நேரத்தில் தன்னிறைவு பெறுவதற்கான வழிமுறைகளை உடனடியாக சிந்திக்க வைத்தது.

இதற்குத் தேவையான ஒவ்வொரு மூலப்பொருளையும் கண்டறிந்து, அதைப் பயன்படுத்தும் நோக்கம் கொண்ட அணுகுமுறையை நாம் பின்பற்றினோம். அவசியத் தேவைகளாக இருந்த பிபிஇ உபகரணங்கள், முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள், பரிசோதனைக் கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யவும், கொள்முதல் செய்யவும், தொழில்துறை, மாநில அரசுகளுடன் 24 மணி நேரமும் நாங்கள் உழைத்தோம். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட போது, உள்நாட்டு உற்பத்தி தொடங்கியது. கொள்முதலுக்காக உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் ஆர்டர்கள் குவிந்ததன. இப்போது இந்தியா தனது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ததுடன் மட்டுமல்லாமல், பிற நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனைப் பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களில், இந்தியா உலகின் மருந்து மையம் என்ற பெயருடன் பெருமிதத்துடன் திகழ்கிறது. சுமார் 150 நாடுகளுக்கு மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் இந்தியா விநியோகித்து வருகிறது. இந்திய மருந்து துறை 38 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. இந்த சாதகமான நிலையை வலுப்படுத்த, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட்பொருட்கள் உற்பத்திக்காக 1,40,000 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலக அளவில் முன்னணி நிலையை அடைய, மருந்து பூங்காக்கள், மருத்துவ உபகரண பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

23. தடுப்பூசி அடுத்த ஆண்டில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. யாருக்கு முதலில் தடுப்பூசி போடுவது என்பதில் முன்னுரிமை பற்றிய எண்ணம் ஏதேனும் உள்ளதா?

முதலாவதும், முக்கியமானதுமாக நான் நாட்டு மக்களுக்கு உறுதியாக கூற விரும்புவது என்னவெனில், தடுப்பூசி கிடைக்கும் போது, அனைவருக்கும் அது போடப்படும் என்பதுதான். யாரும் விடுபட மாட்டார்கள். அதே நேரம், தொற்று பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளவர்கள், முன்களப் பணியாளர்களைப் பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்தலாம். தடுப்பூசி போடுவதை முன்னெடுக்க, கோவிட்-19 தடுப்பூசி வழங்குவது குறித்த வழிமுறைகளை வகுக்க ஒரு தேசிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி கண்டு பிடிக்கும் பணிகள் இன்னும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்த தடுப்பூசி, ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அளவு என்ன, முன்னுரிமை யாருக்கு, அதை எவ்வாறு கொடுப்பது போன்றவை பற்றி நிபுணர்களால் இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. இவற்றையெல்லாம் நிபுணர்கள் இறுதி செய்யும் போது, மக்களுக்கு தடுப்பூசி வழங்குவது பற்றிய வழிகாட்டுதல்களை அவர்கள் நமக்கு வழங்குவார்கள்.

மருந்து கொண்டு செல்வதற்கு வசதியாக , 28,000-க்கும் அதிகமான குளிர்பதன இடங்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றில் கோவிட்-19 தடுப்பூசிகளை சேமித்து, கடைசி முனை வரை விநியோகிப்பது உறுதி செய்யப்படும். மாநில, மாவட்ட, உள்ளூர் அளவில் அர்ப்பணிக்கப்பட்ட குழுக்கள் இதனைப் பார்த்துக் கொள்ளும். தடுப்பூசி முறையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் விநியோகிக்கப்படும். பயனாளிகளைப் பதிவு செய்து, கண்டறிய, டிஜிடல் தளம் ஒன்றும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

24. தற்போதைய கோவிட்-19 பின்னடைவு நிலையில், 2024-ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் இலக்கில் நாம் எந்த இடத்தில் உள்ளோம்?

அவநம்பிக்கை கொண்டுள்ள பலர் சந்தேகத்துடன் உள்ளனர். அவர்களுடன் நீங்கள் அமர்ந்தால், விரக்தியான விஷயங்களையே கேட்க முடியும்.
அதேசமயம், நம்பிக்கையுடன் உள்ளவர்களிடம் நீங்கள் விவாதித்தால், எவ்வாறு முன்னேறுவது என்பது பற்றிய யோசனைகளையும், எண்ணங்களையும் தெரிந்து கொள்ள முடியும். இன்று, நமது நாடு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடன் உள்ளது. 5 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டுவதில் அது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நேர்மறையான எண்ணம் நம்மிடம் நம்பிக்கையைக் கொடுக்கிறது. இன்று, நமது கொரோனா முன்களப்பணியாளர்கள் நோயாளிகளைக் காப்பாற்ற 18 முதல் 20 மணி நேரம் உழைக்கின்றனர். இதுவும், நாம் மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது.

இந்த ஆண்டு பெருந்தொற்று பரவலால் உரிய வேகத்தில் பயணிக்க முடியவில்லை. அதனால் என்ன கெட்டு விட்டது? இந்த இழப்பை ஈடுகட்ட அடுத்த ஆண்டு அதிவேகத்தில் ஓட முயற்சி செய்வோம். நம் பாதையில் உள்ள தடங்கல்களால் நாம் சோர்வடைந்தால், பெரிய சாதனைகளைப் படைக்க முடியாது. துணிவு கொள்ளாவிட்டால், தோல்வி உறுதி. வாங்கும் சக்தி விஷயத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. தற்போதைய அமெரிக்க டாலர் விலை விஷயத்திலும், இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவாக வேண்டும் என நாம் விரும்புகிறோம். இதை அடைய 5 டிரில்லியன் டாலர் இலக்கு நமக்கு உதவும்.

நமது இலக்குகளை அடையும் வல்லமை அரசுக்கு உள்ளது என்பதற்கு, நமது முந்தைய சாதனைகள் சாட்சி. ஊரக தூய்மை இலக்கை உரிய காலத்துக்கு முன்பாகவே நாம் எட்டி விட்டோம். அதேபோல, 8 கோடி உஜ்வாலா இணைப்பு இலக்கையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாகவே எட்டினோம். எனவே, இந்த சாதனைகளின் பட்டியல்படி பார்த்தோமானால், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் மூலம், இலக்கை அடைய முடியும் என்ற நமது திறமை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு நாம் நியாயமான வாய்ப்பை வழங்கியுள்ளோம். அவர்களது திறனை விரிவுபடுத்தி, உலக அளவில் போட்டியிடும் அளவுக்கு, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். தற்சார்பு இந்தியா முன்முயற்சி, இந்தியாவின் அடைபட்டுக்கிடக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதாகும். இதன் மூலம் நமது நிறுவனங்கள் உள்நாட்டு சந்தைகளில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் சேவை வழங்க முடியும்.