Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“புதிய இந்தியா – குழு விவாதங்கள்” என்ற கருத்துரு தொடர்பாக நாடு முழுவதையும் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் உரையாற்றினார்


      “புதிய இந்தியா – குழு விவாதங்கள்” (New India – Manthan) என்ற கருத்துரு தொடர்பாக, நாடு முழுவதையும் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலம், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். முதல் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடத்தப்பட்டது. “புதிய இந்தியா – குழு விவாதங்களை” அடிமட்ட அளவில் நடத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 ஆகஸ்ட் 9 என்பது, உறுதியேற்போம் சாதிப்போம் (Sankalp se Siddhi) என்ற மந்திரத்துடன் தொடர்புடையது என்று பிரதமர் விளக்கினார். இந்த நாள், இளைஞர்களின் சக்தியையும், இலக்கையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தொடக்கத்தில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, நாடு முழுவதையும் சேர்ந்த இளைஞர்கள், எவ்வாறு வெற்றிகரமாக இந்த இயக்கத்தை முன்னோக்கி எடுத்துச் சென்றார்கள் என்று பிரதமர் நினைவுகூர்ந்தார்.

 தலைமைப் பொறுப்பை இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளும்போது, இலக்குகளை நிச்சயமாக அடைய முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் என்பவர்கள், அந்தந்த மாவட்டங்களின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், அந்தப் பிராந்தியத்தின் இளைஞர்கள் என்று அவர் விவரித்தார். மாவட்ட ஆட்சியர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில், நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

 2022-ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுமாறு ஒவ்வொரு தனிநபர், ஒவ்வொரு குடும்பம் மற்றும் ஒவ்வொரு அமைப்பையும் அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். தங்களது மாவட்டங்களின் பிரதிநிதிகள் என்ற முறையில், 2022-ஆம் ஆண்டில் தங்களது மாவட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தற்போது முடிவுசெய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இதில், எந்தெந்த குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். எந்தெந்த சேவைகள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

சில மாவட்டங்கள், மின்சாரம், குடிநீர், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளில் கூட பின்தங்கியிருப்பதை பிரதமர் குறிப்பிட்டார். மிகவும் பின்தங்கிய 100 மாவட்டங்களில் சமூக-பொருளாதார நிலை மேம்படும்போது, இவை நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அளவீடுகளுக்கு மிகப்பெரும் ஊக்குவிப்பை அளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இதற்காக இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மிகவும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட துறை அல்லது திட்டத்தில் சிறந்த பலன்கள் கிடைக்கும்போது, அந்த சிறந்த நடைமுறைகளை மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் ஊக்குவித்தார்.

 தங்களது மாவட்டத்துக்கான தொலைநோக்கு திட்டம் அல்லது தீர்மானங்களை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு  முன்னதாக தயார் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களை அவர் அறிவுறுத்தினார். இதற்காக உடன் பணியாற்றுபவர்கள், மாவட்டத்தில் உள்ள அறிவுசார் நிபுணர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் ஆகியோரின் உதவியை நாடுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்த தீர்மான ஆவணத்தில், 2022-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கருதும் 10 அல்லது 15 இலக்குகள் இருக்கலாம் என்று பிரதமர் தெரிவித்தார்.

 “உறுதியேற்போம் சாதிப்போம்” (Sankalp Se Sidhhi) இயக்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவை www.newindia.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றிருப்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பிரதமர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தான் நடத்தும் இந்த குழு விவாதத்தைப் போன்று, மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

 புதிய இந்தியா இணையதளத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களை பிரதமர் குறிப்பிட்டார். அதாவது, சுதந்திரப் போராட்டம் குறித்த ஆன்லைன் விநாடி வினா, உறுதியேற்போம் சாதிப்போம் இயக்கத்தின் ஒரு அங்கமாக நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்ட விரிவான அட்டவணை உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதை பிரதமர் குறிப்பிட்டார்.

 மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை, தொடர் ஓட்டம் போன்றது என்று பிரதமர் தொடர்புபடுத்திக் கூறினார். தொடர் ஓட்டத்தில், போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே இலக்குடன், ஒரு தடகள வீரனிடமிருந்து மற்றொரு வீரனுக்கு குச்சி வழங்கப்படுகிறது என்றும், அதேபோல, வளர்ச்சி என்ற குச்சி, ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து மற்றவருக்கு வெற்றிகரமாக வழங்கப்படுவதாகவும் பிரதமர் விவரித்தார்.

பல்வேறு நேரங்களில், திட்டங்கள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் தோல்வியடைகின்றன. இதற்கு, அந்தத் திட்டங்களைப் பற்றி மக்கள் அறியாமல் இருப்பதே காரணம் என்று பிரதமர் கூறினார். எல்.இ.டி. விளக்குகள், பீம் செயலி போன்ற திட்டங்களின் பலன்களை மக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறியச் செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார். இதேபோல, தூய்மை இந்தியா திட்டமானது, நிர்வாகத்தின் செயல்பாடு மற்றும் மக்களிடையே உள்ள விழிப்புணர்வு ஆகியவற்றை சார்ந்து இருப்பதாக பிரதமர் கூறினார். இந்த விவகாரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு மூலம் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று அவர் கூறினார்.

 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கோப்புகளை பார்ப்பது மட்டுமல்லாமல், களத்துக்கு நேரடியாக சென்று, மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள சுகாதார சேவைகளின் நிலை போன்றவை குறித்த உண்மை நிலையை புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர், களத்திற்கு அதிக அளவில் செல்லும்போது, கோப்புகளைப் பார்ப்பதில் தீவிரமாக செயல்படுவார் என்று அவர் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி. விவகாரத்தில், தங்களது மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்களிடம் ஜி.எஸ்.டி. குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விளக்க வேண்டும். இது எவ்வாறு சிறப்பான மற்றும் எளிமையான வரி (Good and Simple Tax) என்பதை எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு வர்த்தகரும் ஜி.எஸ்.டி.-யின் கீழ் பதிவுசெய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும், தங்களது மாவட்டத்தில் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொள்முதல் செய்வதற்காக அரசின் மின்னணு சந்தைப் பகுதியை ஏற்படுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதே, ஆளுமையின் முக்கியமான இலக்காக இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கருத்துகளை பிரதமர் நினைவுகூர்ந்தார். ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர ஏதாவது செய்தோமா என்பதை ஒவ்வொரு நாளும், தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பிரதமர் அறிவுரை கூறினார். தங்களது குறைகளைத் தீர்க்குமாறு அணுகும் ஏழைகளின் கோரிக்கையை மிகவும் கவனமாக கேட்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

 இறுதியாக, இளமையான மற்றும் திறமை வாய்ந்தவர்களாக உள்ள  மாவட்ட ஆட்சித் தலைவர்களால், தங்களது மாவட்டங்களுக்கான 2022-ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானங்களை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார். இந்தத் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் மூலம், இந்திய நாடும் சாதனையின் புதிய உச்சத்தைத் தொடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.