Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புஜ் பகுதியில் ரூ. 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்

புஜ் பகுதியில் ரூ. 4,400  கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்


புஜ் பகுதியில் ரூ. 4,400  கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். முன்னதாக புஜ்  மாவட்டத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

 

அங்கு திரண்டிருந்தோரிடையே  உரையாற்றிய பிரதமர் புஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவகம், அஞ்ஜாரில் வீர் பால் சமாரக்  ஆகியவை குஜராத்தும் ஒட்டுமொத்த தேசமும் கட்ச் பகுதியின் வலியைப்  பகிர்ந்து கொள்வதற்கான அடையாளங்களாகும்  என்றார்.  அஞ்ஜார் நினைவகம் என்பது பற்றிய கருத்து வந்தபோது கர சேவை எனும் தன்னார்வத் தொண்டின் மூலம் இந்த நினைவகத்தை முடிப்பதற்குத்  தீர்மானிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.  இந்த நினைவிடங்கள் நிலநடுக்கத்தின் பேரழிவில் உயிரிழந்தோர்  நினைவாக கனத்த இதயத்தோடு அர்ப்பணிக்கப்படுவதாக அவர் கூறினார். மக்களின் அன்பான வரவேற்புக்கும் இன்று அவர் நன்றி தெரிவித்தார்.

 

தமது இதயத்தில் இன்று ஏராளமான உணர்ச்சி அலைகள் எழுவதை அவர் நினைவு கூர்ந்தார். 9/11 நினைவிடம்,  ஹிரோஷிமா நினைவிடம் ஆகியவற்றுக்கு இணையாக ஸ்மிருதி வன நினைவிடம் உயிரிழந்தோரை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதை  அவர் நினைவுகூர்ந்தார். இந்த நினைவிடத்திற்கு வருகை தருமாறு பொதுமக்களையும் பள்ளி மாணவர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.  இதன் மூலம் அனைவருக்கும் இயற்கையோடு எவ்வாறு சமச்சீராக நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியவரும் என்றார்.

 

நிலநடுக்கத்தின் பேரழிவு சம்பவத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். நிலநடுக்கம் ஏற்பட்டதை நான் நினைத்துப் பார்க்கிறேன். இரண்டாவது நாளிலேயே நான் இங்கு வந்து சேர்ந்துவிட்டேன்.  அப்போது நான் முதலமைச்சராக இருக்கவில்லை.  நான் சாதாரணமான கட்சித்  தொண்டனாகவே இருந்தேன்.   எவ்வளவு பேருக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால்  இந்த சோகமான தருணத்தில் உங்கள் அனைவரோடும் இருக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன். நான் முதலமைச்சராக வந்த போது  இந்த சேவையின் அனுபவம் எனக்குப் பெரிதும் உதவிசெய்தது.  இந்தப்  பகுதியோடு தமக்கிருந்த ஆழமான நெடிய தொடர்பை அவர் நினைவு கூர்ந்தார்.  அந்த நெருக்கடியான காலகட்டத்தில் தம்மோடு பணி செய்தவர்களை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டினார்.

 

தொடர்ந்து பேசிய பிரதமர்,  “கட்ச் பகுதி எப்போதும் சிறப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இதை நான் அவ்வப்போது பேசியிருக்கிறேன்.  ஒரு நபர் தாம் நடந்து செல்லும் வழியில் ஒரு கனவை விதைத்தால் ஒட்டுமொத்த கட்ச் மக்களும் அதில் ஈடுபட்டு ஆலமரமாக அதனை மாற்றி விடுவார்கள். ஒவ்வொரு சமயத்திலும் இதனை கட்ச் நிரூபித்துள்ளது. கட்ச் பகுதி இனிமேல்  சொந்தக் காலில் எழுந்து நிற்க முடியாது என்று பலரும் கூறினார்கள்.  ஆனால் இன்று கட்ச் பகுதியின் தோற்றத்தை மக்கள் முற்றிலுமாக மாற்றியிருக்கிறார்கள்”  என்றார். நிலநடுக்கத்திற்குப்பின் முதலாவது தீபாவளியைத்  தாமும் தமது  அமைச்சரவை சகாக்களும் மக்களுடன் ஒருங்கிணைந்து இந்தப் பகுதியில் செலவிட்டதை அவர் நினைவு கூர்ந்தார். நாம் பேரழிவை வாய்ப்பாக மாற்றுவோம் என்று அவர் அறிவித்தார். “2047 வாக்கில் இந்தியா வளர்ச்சியடைந்த  நாடாகும் என்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நான் கூறினேன்.  மரணத்திற்கும் பேரழிவுக்கும் இடையே நாம் சிலவற்றைத் தீர்மானம்  செய்து அவற்றை இன்று நிறைவேற்றி இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அதேபோல் இன்று நாம் தீர்மானிப்பதை நிச்சயமாக 2047ல் நிறைவேற்றுவோம்  என்று அவர் கூறினார்.

 

2001ன் முழுமையான அழிவுக்குப்பின் கட்ச் பகுதியின் வியத்தகு பணிகளை எடுத்துரைத்த பிரதமர், 2003ல் கட்ச் நகரில் ஷியாமாஜி கிருஷ்ணவர்மா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதையும் 35 க்கும் அதிகமான புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத மாவட்ட மருத்துவமனைகள், 200க்கும் அதிகமான சிறு மருத்துவமனைகள்  இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டது பற்றியும் ஒரு காலத்தில் இருந்த தண்ணீர் தட்டுப்பாடு என்ற அழுகுரல்   மறைந்து புனித நர்மதை ஆற்றின்  தூய்மையான குடிநீரை ஒவ்வொரு வீடும் பெற்றிருப்பது பற்றியும் அவர் பேசினார்.  இந்தப் பகுதியில் குடிநீர்  பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் விவரித்தார். கட்ச் மக்களின் வாழ்த்துக்கள் காரணமாக அனைத்து முக்கிய பகுதிகளும் நர்மதா நீருடன் இணைக்கப்பட்டுள்ளன. கட்ச் – புஜ் கால்வாய் இப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன் தரும் என்று அவர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த குஜராத்தில் பழங்கள் உற்பத்தியில்  முதன்மையான மாவட்டமாக மாறி இருப்பதற்காக கட்ச் மாவட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.  கால்நடை வளர்ப்பு,  பால் உற்பத்தி ஆகியவற்றில் முன்னெப்போதும் இல்லாத சாதனைகள் படைத்திருக்கும் மக்களையும் அவர் பாராட்டினார். கட்ச் தான் மட்டும் வளரவில்லை ஒட்டுமொத்த குஜராத்தையும் புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

 

குஜராத்  அடுத்தடுத்து  நெருக்கடிக்கு ஆளான காலத்தைப்  பிரதமர் நினைவு கூர்ந்தார்.  இயற்கையின் சீற்றத்தை குஜராத் எதிர்கொண்டபோது சதிகளின் காலம் தொடங்கியதாக அவர் கூறினார்.  இந்த நாட்டிலும் உலகத்திலும் குஜராத்தின் புகழைக்  கெடுப்பதற்காக இங்கு முதலீடுகள் வருவதை தடுப்பதற்காக

அடுத்தடுத்து சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன.  இத்தகைய நிலைமை இருந்த போதும் பேரழிவு மேலாண்மை சட்டத்தை இயற்றிய  நாட்டின் முதலாவது மாநிலமாக குஜராத் மாறியதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.  இந்த சட்டத்தின் உந்துதல் காரணமாக இதே போன்ற சட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் இயற்றப்பட்டது. பெருந்தொற்று காலத்தில் நாட்டில் உள்ள ஒவ்வொரு அரசுக்கும் இந்த சட்டம்  உதவி செய்தது என்று அவர் தெரிவித்தார்.  குஜராத்தின் புகழை சீரழிக்கும் முயற்சிகளை எல்லாம் புறந்தள்ளி சதித் திட்டங்களை நிராகரித்து குஜராத் புதிய தொழில்துறை பாதையை வகுத்தது. இதில் கட்ச் பெரும் பயனடைந்ததிலா ஒன்றாக மாறியது என்று பிரதமர் கூறினார்.

 

இன்று உலகிலேயே மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலைகளைக்  கட்ச் கொண்டிருக்கிறது.  பற்றவைப்பு செய்யப்பட்ட குழாய்கள் உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தைக்  கட்ச் பெற்றுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஜவுளி தொழிற்சாலை கட்ச்சில் உள்ளது.  ஆசியாவின் முதலாவது சிறப்பு பொருளாதார மண்டலம் கட்ச்சில்  வந்தது. கண்ட்லா, முந்ரா துறைமுகங்கள் இந்தியாவின் சரக்கு போக்குவரத்தில் 30 சதவீதத்தைக்  கையாள்கின்றன.நாட்டிற்கு முப்பது சதவீத உப்பினை இது உற்பத்திசெய்கிறது. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் கட்ச் 2500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மிகப்பெரிய சூரிய  மின்சக்தி பூங்கா கட்ச் நகருக்கு வரவிருக்கிறது.  நாட்டில் இன்று செயல்படுத்தப்படும் பசுமைக் குடில் இயக்கத்தில் குஜராத் மிகப்பெரிய பங்களிப்பை செய்கிறது என்று அவர்   மேலும் தெரிவித்தார்.  அதேபோல் உலகின் பசுமைக் குடில்  தலைநகரமாக குஜராத் மாறிவரும்  நிலையில் இதற்குக் கட்ச் பெருமளவு பங்களிப்பு செய்யும் என்று பிரதமர் கூறினார்.

 

அனைவரின் முயற்சி என்பதற்கு  அர்த்தமுள்ள மாற்றத்தின் சரியான உதாரணமாக கட்ச்சின்  வளர்ச்சி இருப்பதைப்  பிரதமர் எடுத்துரைத்தார். கட்ச் என்பது ஓர்  இடமல்ல, அது உணர்வாகும். உயிர்ப்புடனான உணர்வாகும். சுதந்திரத்தின் அமிர்த காலத்திற்கான தீர்மானங்களை நிறைவுசெய்ய இந்த உணர்வு நமக்கு வழிகாட்டுகிறது என்று பிரதமர் கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி ஆர் பாட்டில், குஜராத் சட்டப்பேரவைத்  தலைவர் திரு வினோத் எல் சவ்தா, டாக்டர் நிமாபென் ஆச்சார்யா, மாநில அமைச்சர்கள் கிரித்சிங் வகேலா ஜித்துபாய் சௌத்ரி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

***************