Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகார் மாநிலம் பாகல்பூரில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


பாரத் மாதா கீ ஜே!

மேஹி மகரிஷி தவம் செய்த இடமாகவும், உலகப் புகழ்பெற்ற விக்ரமசீலா மகாவிகார் அமைந்துள்ள வசுபூஜ்ய பூமியிலிருந்தும், பாபா புத்தநாதரின் புனித பூமியிலிருந்தும் வந்துள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள்!

மேடையில்  மாண்புமிகு ஆளுநர் ஆரிப் முகமது கான் அவர்களும், பீகாரின் வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்புக்காக பரவலாகப் போற்றப்படும் நமது அன்புக்குரிய முதலமைச்சர் நிதீஷ் குமார் அவர்களும் உள்ளனர்.  எனது அமைச்சரவை சகாக்களான சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, லாலன் சிங் அவர்களே, கிரிராஜ் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களேமத்திய இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் அவர்களே, பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி அவர்களேவிஜய் சின்ஹா அவர்களே, ஏனைய அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, மதிப்புமிக்க பிரமுகர்களே, பீகாரின் எனதருமை சகோதர, சகோதரிகளே.

இன்று, நாடு முழுவதிலும் இருந்து எண்ணற்ற முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் கோடிக்கணக்கான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

புனிதமான மஹா கும்பமேளாவின் போது இந்த புனித மந்திராஞ்சல் பூமிக்கு வருகை தருவது மகத்தான பாக்கியமாகும். பாபா அஜ்ஜைபிநாத் அவர்களின் இந்தப் புண்ணிய பூமியில் மஹாசிவராத்திரிக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அத்தகைய ஒரு நல்ல நேரத்தில், பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின்  மற்றொரு தவணைத் தொகையை நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கும் மரியாதை எனக்குக் கிடைத்துள்ளது. ஒரே கிளிக்கில், சுமார் ரூ.22,000 கோடி தொகையானது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நான் பொத்தானை அழுத்தியபோது, பல்வேறு மாநிலங்களிலிருந்து நேரடி காட்சிகளைக் காண முடிந்தது. இங்கே கூட, பணப் பரிமாற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்ள மக்கள் தங்கள் மொபைல் போன்களை ஆவலுடன் சரிபார்ப்பதை என் கண்கள் கண்டன. அவர்களின் கண்களில் உடனடியாகத் தோன்றிய பிரகாசம் அவர்களின் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது.

நண்பர்களே,

 பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் இன்றைய தவணையில், பீகாரின் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பீகார் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,600 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. நான் பீகாரின் அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும், நாடு முழுவதும்  உள்ள விவசாயக் குடும்பங்களுக்கும், என் மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இல்லாவிட்டால், உரங்களைப் பெறும் நெருக்கடியில் காவல்துறையின் தடியடிக்கு நமது விவசாயிகள் ஆளாகியிருப்பார்கள். பராவுனி உரத் தொழிற்சாலை இன்னும் செயல்படாமல் இருந்திருக்கும். பல நாடுகளில், ஒரு மூட்டை உரத்தின் விலை ரூ.3,000, ஆனால் நாங்கள் எங்கள் விவசாயிகளுக்கு ரூ.300-க்கும் குறைவான விலையில் வழங்குகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இல்லாமல் இருந்திருந்தால் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியாவுக்கு ரூ.3,000 செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருந்திருக்கும். எங்கள் அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் நலனுக்காகவே செயல்படுகிறது, அதனால்தான் யூரியா மற்றும் டிஏபியின் நிதிச் சுமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், ஏறக்குறைய ரூ.12 லட்சம் கோடி வழங்கப்பட்டு இருக்கவில்லையெனில் உரங்களுக்காக விவசாயிகளின் சட்டைப்பைகளில் இருந்துதான் தொகை செலவிடப்பட்டிருக்கும். இந்தத் தொகை – மத்திய பட்ஜெட் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் கைகளில் ரூ.12 லட்சம் கோடி நேரடியாகச் சேமிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிலமற்ற மற்றும் சிறு அளவிலான விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க கால்நடை வளர்ப்பை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. கிராமங்களில் உள்ள நமது சகோதரிகளை லட்சாதிபதி சகோதரிகள்ஆக மாற்றுவதில் இந்தத் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. பீகாரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான  சகோதரிகள் உட்பட இதுவரை நாடு முழுவதும் சுமார் 1.25 கோடி பெண்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் பால் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது – 14 கோடி டன்னிலிருந்து 24 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. வெறும் பத்து ஆண்டுகளில், பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக பாரதத்தின் நிலையை வலுப்படுத்துகிறது. இந்தச் சாதனைக்கு பீகார் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இன்று, பீகாரின் கூட்டுறவு பால் சங்கங்கள் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கின்றன. இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் பீகாரின் கால்நடை விவசாயிகளின், குறிப்பாக நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கணக்குகளுக்கு ரூ.3,000 கோடிக்கு மேல் தொகை நேரடியாக மாற்றப்படுகிறது.

நண்பர்களே,

சமீபத்திய ஆண்டுகளில், அரசின் முன்முயற்சிகள் பாரதத்தின் விவசாய ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்துள்ளன. இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல விவசாய பொருட்கள் இப்போது முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன, அவற்றில் பீகாரின் மக்கானாவும் ஒன்றாகும். நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற வீடுகளில் மக்கானா காலை உணவின் இன்றியமையாத பகுதியாக மாறியுள்ளது. தனிப்பட்ட முறையில், நான் வருடத்தில் குறைந்தது 300 நாட்களுக்கு மக்கானாவை உட்கொள்கிறேன். இது ஒரு சூப்பர்ஃபுட். இது இப்போது உலகளாவிய சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மக்கானா விவசாயிகளுக்கு ஆதரவளிக்க, இந்த ஆண்டு பட்ஜெட்டில்  மக்கானா வாரியம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வாரியம் பீகாரின் விவசாயிகளுக்கு உற்பத்தி, செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய ஒவ்வொரு அம்சத்திலும் உதவும் – உலக அரங்கில் மக்கானா அதன் முழுமையான திறனை அடைவதை வாரியம் உறுதி செய்யும்.

நண்பர்களே,

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு முனைகளில் செயல்பட்டு வருகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவை அடைவது, உணவு பதப்படுத்தும் தொழில்களை விரிவுபடுத்துவது மற்றும் இந்திய விவசாயிகளின் தயாரிப்புகள் உலகளாவிய சந்தைகளை அடைவதை உறுதி செய்வது போன்ற அடுத்தடுத்த முயற்சிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. உலகில் உள்ள ஒவ்வொரு சமையலறையிலும் இந்திய விவசாயிகளால் பயிரிடப்பட்ட குறைந்தபட்சம் ஒரு தயாரிப்பு இருக்க வேண்டும் என்பதே எனது பார்வை. பருப்பு வகைகளில் தன்னிறைவை அடைய இலக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும், பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில்  கொள்முதலை அதிகரிக்கும் போது விவசாயிகள் அதிக வளர்ச்சி அடைவார்கள்.

நண்பர்களே,

பாகல்பூர் மகத்தான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. விக்ரம்ஷீலா பல்கலைக்கழகத்தின் சகாப்தத்தில், இது உலகளாவிய கற்றல் மையமாக இருந்தது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் பண்டைய பெருமையை மீட்டெடுத்து, அதை நவீன பாரதத்துடன் இணைக்கும் பணியை நாங்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளோம். இப்போது, நாளந்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, விக்ரம்ஷீலாவில் ஒரு மத்திய பல்கலைக்கழகமும் நிறுவப்படுகிறது. இந்த லட்சிய திட்டத்திற்கான பணிகளை மத்திய அரசு விரைவில் தொடங்கும்.

பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் அதே வேளையில், இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் பாதுகாக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது.

பீகாரை வளமான ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாட்டின் விவசாயிகளுக்கும், பீகார் மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் –

பாரத் மாதா கீ ஜே!

பாரத் மாதா கீ ஜே!

மிக்க நன்றி!

 

***

TS/SMB/KV/KR