Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகாரின் மோத்திஹரியில் 2018 ஏப்ரல் 10 அன்று நடைபெற்ற சம்பரான் சத்தியாகிரக நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரை


நான் மகாத்மா காந்தி என்று சொல்வேன்

நீங்கள் நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க என்று  சொல்ல வேண்டும்.

மகாத்மா காந்தி…. நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க

மகாத்மா காந்தி…. நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க

மகாத்மா காந்தி…. நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சாம்பரான் எனும் இந்த புனித பூமிக்கு வருகை தந்துள்ள தூய்மை இயக்க சகோதரர்களே, சகோதரிகளே, மதிப்புக்குரிய, அன்புக்குரிய அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன். பாபு தமது ஒத்துழையாமை இயக்கத்தை இந்த சாம்பரான் புனித பூமியிலிருந்து தொடங்கினார் என்பதை அனைவரும் அறிவீர்கள். பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவதற்கு ஒத்துழையாமை இயக்கம் என்ற வடிவில் நாம் சக்தி மிக்க ஆயுதத்தை பெற்றோம். சத்தியாகிரக இயக்கம் 100 ஆண்டுகளை கடந்த பிறகும் இன்னமும் பயனுள்ளதாகவே இருக்கிறது. இன்னும் எத்தனை காலம் இது பயனுள்ளதாக இருக்கும்? சத்தியாகிரகத்திலிருந்து ஸ்வச்சா கிரகத்திற்கு (தூய்மை இயக்கத்திற்கு) மாற வேண்டியது நவீன காலத்தின் தேவையாக உள்ளது.

சாம்பரான் இயக்க காலத்தில் இங்குள்ள பத்வா லக்கன்சனிலிருந்து தூய்மையான இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். இன்று சத்தியாகிரகத்திலிருந்து ஸ்வச்சாகிரகத்திற்கு (தூய்மை இயக்கத்திற்கு) மாறுவதன் மூலம் பாபுவின் தூய்மை இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். RauaSamankeSojhaBani.

பீகார் ஆளுநர் திரு. சத்பால் மாலிக் அவர்கள் மேடையில் வீற்றிருக்கிறார். மாநிலத்தின் மக்கள் முதலமைச்சர் திரு.நிதிஷ்குமார் அவர்களும், மத்திய அமைச்சரவையில் என்னுடன் பணியாற்றும் ரவிசங்கர் பிரசாத் அவர்கள், ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள், செல்வி. உமா பாரதி அவர்கள், ராதா மோகன்சிங் அவர்கள், கிரிராஜ் சிங் அவர்கள், திரு. ராம் கிருபால் யாதவ் அவர்கள், திரு. எஸ்.எஸ். அலுவாலியா அவர்கள், திரு.அஸ்வினி குமார் சவ்பே அவர்கள் பீகார் துணை முதலமைச்சர் திரு.சுஷில்குமார்மோடி அவர்கள், மாநில அமைச்சர்கள் திரு.ஷ்ரவன் குமார் அவர்கள், திரு.வினோத் நாராயண் ஜா அவர்கள், திரு.பிரமோத் குமார் அவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சத்தியாகிரகிகள் இங்கே இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியோடு தொடர்புடைய அனைத்து மக்களும் காணொளி காட்சி மூலம் பங்கேற்றுள்ளனர்.

பெரியோர்களே, தாய்மார்களே

வரலாறு திரும்புவதில்லை என்று சொல்பவர்கள் நூறாண்டு கால வரலாறு இன்னமும் நமக்கு முன்னால் எவ்வாறு நிலைத்திருக்கிறது என்பதை அவர்களே இங்கு வந்து காணலாம். எனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் ஸ்வச்சாகிரகிகள் காந்தியின் சிந்தனைகளின் பகுதியாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் காந்தியின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மகாத்மா காந்தியின் பகுதியாக இங்குப் பங்கேற்றுள்ள அனைத்து ஸ்வச்சாகிரகிகளுக்கும் நான் தலை வணங்குகிறேன். சாம்பரான் என்ற இந்தப் புனித பூமியில் நூறாண்டுகளுக்கு முன் இதே போன்ற மக்கள் இயக்கக் காட்சியை உலகம் கண்டது.  இன்று மீண்டும் இந்தக் காட்சியை காண்பதன் மூலம் புனித பாபுவை உலகம் நினைவு கூர்கிறது.

நூறாண்டுகளுக்கு முன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் சாம்பரானுக்கு வந்தனர். அவர்கள் காந்தி தலைமையில் சந்து சந்தாக சென்று பணிபுரிந்தார்கள். நூறாண்டுகளுக்கு பின் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் மக்களும், தூய்மை இயக்க இளைஞர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். தோளோடு தோள் நின்று ஆர்வத்துடன் இரவு பகலாக பணிபுரிகிறார்கள். இன்றைய மாபெரும் மக்கள் திரளில் சிலர் கஸ்தூர்பாவாகவும் சிலர் ராஜ்குமார் சுக்லாவாகவும் சிலர் கோரக் பிரசாத்தாகவும், சிலர் ஷேக் குலாபாகவும், சிலர் லோம்ராஜ் சிங்காகவும். சிலர் ஹரிவன்ஷ் ராயாகவும், சிலர் ஷீத்தல் ராயாகவும், சிலர் பின் முகமது முனீஸாகவும், சிலர் டாக்டர் ராஜேந்திர பாபுவாகவும், சிலர் தாத்ரிதர் பாபுவாகவும், சிலர் ராம் நவமி பாபுவாகவும், சிலர் ஜே.கே.கிருபாளானியாகவும் இருக்கிறார்கள்.

நூறாண்டுகளுக்கு முன் மகத்தான மக்களுக்கு சத்தியாகிரகம் புதிய திசையை காட்டியது போல் இன்றைய ஸ்வச்சாகிரக் நாட்டில் உள்ள லட்சோப லட்சம் மக்களுக்குப் புதிய திசையைக் காட்டுகிறது. சாம்பரானை நோக்கி என்ற முழக்கத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஸ்வச்சாகிரகிகள் இங்கே குழுமியுள்ளனர். நாட்டுக்கும், பீகார் மக்களின் விருப்பங்களுக்கும் ஏற்ப பணியாற்ற முன்வரும் உங்களின் ஆர்வத்திற்கு. உங்களின் ஆற்றலுக்கு, உங்களின் சக்திக்கு, உங்களின் விருப்பத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.

மேடைக்கு வரும் முன், நான் தூய்மை பற்றிய கண்காட்சி ஒன்றையும் பார்வையிட்டேன். இந்தக் கண்காட்சி புதிய தொழில்நுட்பங்கள், புதிய தொழில்கள் பற்றி விரிவாக விளக்கமளிக்கிறது. சம்பாரன் சத்தியாகிரக நூற்றாண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் நிறைவு நேரமாகவும் இது உள்ளது. எனினும் இந்த நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதைவிட மக்கள் இன்னும் கூடுதலாக தூய்மையுடன் இருக்க வலியுறுத்த வேண்டும்.

சகோதர சகோதரிகளே, கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் கடினமான மூன்று தருணங்களுக்கான பாதையை இதே பீகார் நாட்டுக்கு காட்டியிருக்கிறது. இந்த நாடு கொடுங்கோல் அடிமை ஆட்சியின் கீழ் இருந்த போது பீகார், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை தேசப்பிதா ஆக்கியது.

விடுதலை பெற்ற பின்னர் லட்சக்கணக்கான விவசாயிகள் நிலமற்றவர்களாக இருந்தபோது வினோபாஜி பூமிதான இயக்கத்தை தொடங்கினார். அடுத்து மூன்றாவதாக இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வந்தபோது, இதே பகுதியை சேர்ந்த பாபு ஜெயப்பிரகாஷ் அதனை எதிர்த்து ஜனநாயகத்தை காத்தார்.

பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை தங்களது தலைமைத் திறனை வெளிப்படுத்தி இருப்பது குறித்து நான் மிகவும் பெருமிதமடைகிறேன். பீகாரில் நிலவும் தூய்மை நிலையையும் மீறி மோடி இப்படி பேசுவது குறித்து சில மக்கள் கேள்வி எழுப்பக்கூடும் என்பதை நான் அறிவேன். இதற்கு பின்னணியில் காரணம் ஒன்று உள்ளது. கடந்த சில காலமாக நிதீஷ்குமார் மற்றும் சுசில் மோடி தலைமையில் பீகார் செய்துள்ள பணிகள் அனைவரது மன உறுதிக்கும் ஊக்கமளித்துள்ளது.

நண்பர்களே, 50 சதவீதத்திற்கும் குறைவாக தூய்மை உள்ள நாட்டின் ஒரே மாநிலமாக பீகார் மட்டும் இருந்தது.ஆனால் ஒருவார கால தூய்மை இயக்கத்திற்கு பின்னர் பீகார் இந்த தடையை தாண்டிவிட்டதாக நமது செயலர் திரு. பரமேஸ்வர் இன்று என்னிடம் கூறினார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பீகாரில் 8 லட்சத்து 50 ஆயிரம் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வேகம் மற்றும் முன்னேற்றம் சாதாரணமானதன்று. பீகார் இந்த உள்ளடக்கத்தை விரிவுபடுத்தி தேசிய சராசரிக்கு இணையாக திகழும் என்பதை இந்த்த் தரவு நிரூபிக்கிறது.

இந்த முழுமையான, சவால்விடும் முயற்சிக்காக, இந்தச் செயல்பாடு மற்றும் அதன் தலைமைக்காக பீகார் மக்கள், ஒவ்வொரு தூய்மைப்பணி வீரர் மற்றும் பீகார் மாநில அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

சிறிது நேரத்திற்கு சில தூய்மைப்பணி வீரர்களை கவுரவிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்தப் பணியில் முழுமனத்துடன் ஈடுபட்ட மகளிரின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை நான் கவனித்தேன். தூய்மையின் முக்கியத்துவத்தை நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மிக நன்றாக அறிந்துள்ளனர். ஒரு தனிநபராக இன்று எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற போதிலும் நிர்வாகக் கட்டுப்பாடுகளை மீறி இந்த விஷயம் குறித்து விவாதிக்க நான் விரும்புகிறேன்.

அரசுக்காக பணியாற்றும் அதிகாரிகள்  வெளியே தெரியாமலேயே போய்விடுகிறது. அவர்களது பெயர், அவர்கள் செய்த பணிகள் அங்கீகரிக்கப்படாமல் போய்விடுகிறது. அவர்கள் கவனத்திற்கு வருவதே இல்லை. எனினும் நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் சில விஷயங்கள் உள்ளன.

இன்று மத்திய அரசில் செயலராக உள்ள திரு. பரமேஸ்வர் ஜி அய்யர், அவர் இங்கு இருக்கிறாரா? மேடைக்கு கீழ் அமர்ந்திருப்பார்; அவர் தான் இந்த திட்டத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். ஐ.ஏ.எஸ். பணியை உதறிவிட்டு அமெரிக்காவுக்கு சென்று விட்டார். அமெரிக்காவில் அவர் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். நமது அரசு பதவியேற்ற பின்னர் நாம் ஒரு கோரிக்கை விடுத்தோம். ஏராளமானோருக்கு நமது கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர் தனது கவர்ச்சிகரமான வாழ்க்கையை விட்டுவிட்டு அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  பல ஆண்டுகள் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தும் அந்தப் பணியை அவர் விட்டு விட்டார். நீங்கள் அவரைத் தொலைக்காட்சியில் இப்போதுதான் பார்த்தீர்கள். அவர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் காண்பிக்கப்பட்டார். சிறிது நேரத்திற்கு முன் தொலைக்காட்சி அலைவரிசைகளின் கேமிராக்கள் அவரைப் படம் பிடித்தன. மீண்டும் ஒருமுறை உங்கள் கேமிராக்களை அவர் பக்கம் திருப்புங்கள். ஆம். இது அவர்தான். அவர் திரும்பி வந்த போது நான் அவரை அரசுப் பணியில் இணைத்துக் கொண்டு அவருக்கு இந்தப் பொறுப்பை அளித்தேன்.

ஒவ்வொரு இடமாக சென்று அவரே கழிவறைகளை சுத்தம் செய்கிறார். பரமேஸ்வர் ஜி போன்ற உடன் பணிபுரிவோர் இன்று என்னுடன் உள்ளனர். ஆயிரக்கணக்கான தூய்மைப் பணி வீரர்கள் நாட்டின் அனைத்து மூலைகளிலும் இருந்தும் வந்தால், காந்திஜியின் 150வது பிறந்தநாளை நாம் கொண்டாடும் போது காந்திஜியின் கனவு நனவாகும் என்ற எனது நம்பிக்கை வலுப்பெறும்.

முன்பெல்லாம் இறைவனுக்கு ஆயிரம் கரங்கள் இருப்பதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இறைவனுக்கு ஆயிரம் கரங்கள் இருந்தும் நாம் இதுபோன்ற விஷயங்களை நாம் கேட்டுக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால் ஆயிரக்கணக்கான கரங்கள் கொண்ட பிரதமரைப் பற்றி நாம் கேள்விப்பட்டதில்லை. எனது முன் ஆயிரக்கணக்கான தூய்மைப் பணி வீரர்கள் அமர்ந்திருக்க நமது நாட்டின் பிரதமருக்கும் ஆயிரம் கரங்கள் உள்ளன என நான் பணிவுடன் கூறிக் கொள்வேன்.

உங்கள் உறுதிப்பாடு, உங்கள் கடின உழைப்பு, உங்கள் ஆதரவு; பீகாரின் தெருக்களை சுத்த்ம் செய்வதற்காக தங்களது கிராமங்களை விட்டு வந்திருக்கும் இந்த தூய்மைப் பணி வீரர்கள் தங்கள் சொந்தப் பகுதிகளில் தூய்மைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். இவர்கள் காந்திஜியின் இயக்கத்திற்கு புதிய வேகம், புதிய சக்தி மற்றும் புதிய வாழ்க்கையை அளிக்கின்றனர். எனவே உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, தூய்மை இயக்கமாக இருக்கட்டும் அல்லது கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராக இருக்கட்டும் அல்லது, பொது மக்களுக்கு வசதியை அளிக்கும் வளர்ச்சியாக  இருக்கட்டும். நிதிஷ்குமார் மற்றும் அவரது குழுவுக்கு மத்திய அரசு தோளோடு தோள் கொடுத்து ஆதரவு அளித்து வருகிறது. பீகாரின் வளர்ச்சி, மாநில மக்களின் சமூக பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் மத்திய மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் யுக்திகள் ஒன்றை ஒன்று சார்ந்ததாகவே உள்ளன.

பீகாரின் வளர்ச்சிக்காக ரூ. 6000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் அல்லது அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்கு இந்த மேடையில் கிடைத்துள்ளது. தண்ணீர், ரயில்வே அல்லது சாலைகள் அல்லது பெட்ரோலியம் போன்ற பல்வேறு திட்டங்களாக இருக்கலாம். இது பீகார், குறிப்பாக சம்பாரன்னுக்கு முக்கியமானவை என நிரூபிக்கப்படும். இந்த திட்டங்கள் ஒருவகையில் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொடர்புடையவையாகும்.

சகோதர சகோதரிகளே, இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் மோத்தாரி ஏரி சீர்மைப்பும் ஒன்றாக உள்ளது. இந்த ஏரியின் பெயராலேயே இந்த மாவட்டம் உள்ளது என்பதுடன், இந்த ஏரி பீகார் வரலாற்றின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இதன் சீரமைப்பு பணிகள் இன்று தொடங்குகின்றன. சத்தியாகிரகத்தில் பங்கேற்பதற்காக காந்தி இங்கு வருகை தந்த போது இந்த ஏரியைப் பற்றி குறிப்பிட்டு, மாலை நேரங்களில் இந்த ஏரி மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியிருக்க்கிறார். இந்த ஏரி காரணமாகவே இந்த நகரம் அழகாகக் காட்சி அளிக்கிறது. ஆனால் காலப்போக்கில் மகாத்மா காந்தி அனுபவித்த இந்த மோத்தி ஏரி தனது அழகை இழந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த ஏரியைப் பாதுகாக்க இயன்ற பங்களிப்பை அளித்துள்ளனர் என்பதை நான் அறிவேன். இதற்கான விழிப்புணர்வு இயக்கம் சமூக வலைத் தளங்களில் இருந்து சாலைகள் வரை நடத்தப்பட்டுள்ளது. மக்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் கல்ந்து கொள்வதன் மூலம் இந்த ஏரி சீரமைக்கப்படுவதுடன், ஏரி பொழுதுபோக்கும் சுற்றுலா பயணிகளுக்காக உருவாக்கப்படும்.

சகோதர சகோதரிகளே,

தூய்மைப் பணி தண்ணீருடன் இணைந்தது ஆகும். பேட்டியா பகுதி சுத்தமான தண்ணீருக்காக அல்லல்படுவதைத் தடுக்க, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு அம்ருத் திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பயனடைவார்கள்.

வாழ்வாதாரமாகத் திகழும் கங்கைத் தாயை தூய்மைப்படுத்தும் மற்றொரு முயற்சியையும் நாம் மேற்கொண்டுள்ளோம். கங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை கங்கை ஆற்றை தூய்மைப்படுத்துவது என்ற உறுதியோடு அரசு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பீகார் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. பீகாரில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசுபட்ட கழிவு நீர் கலப்பதைத் தடுக்க ரூ.3,000 கோடிக்கும் மேற்பட்ட 11 திட்டங்களுக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு, குடியிருப்புப் பகுதிகளில் 1,100 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட உள்ளது. இதில் 4 திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நான் மொகாமா பகுதிக்கு வந்தபோது அடிக்கல் நாட்டப்பட்ட நான்கு திட்டங்களுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. எஞ்சிய திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும். கங்கை ஆற்றங்கரையில் உள்ள கிராமங்கள், முன்னுரிமை அடிப்படையில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கங்கை ஆறு பாயும் உத்தராகண்ட், உத்தரபிரதேஷ், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5  மாநிலங்களில் உள்ள ஆற்றங்கரையோர கிராமங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. கங்கை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்த கிராமங்களில் உற்பத்தியாகும் கழிவுகள் ஆற்றில் வீசப்படுவதைத் தடுக்க, இந்த கிராமங்களில் கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையோரப் பகுதிகள், விரைவில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக மாற்றப்படும் என நான் நம்புகிறேன்.

சில காலத்திற்கு முன்பாக, வாரணாசியில் “கழிவுத் திருவிழா” கொண்டாடப்பட்டது. அதே போன்று கங்கையாற்றின் கரையோரம் அமைந்துள்ள அனைத்து நகரங்களிலும் கழிவுத் திருவிழாவை கொண்டாடி, கழிவுகளை சொத்தாக மாற்றுவது எப்படி என்பதை மக்களுக்கு பயிற்றுவிக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். கழிவுகள் மூலம் எத்தகைய முக்கியமான பணி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

சகோதர சகோதரிகளே,

தூய்மையான எரிபொருளும் தூய்மைப் பணியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஏழைத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை நச்சுத்தன்மை மிக்க புகையிலிருந்து விடுவிக்கும் நோக்கில், உஜ்வாலா திட்டத்தைச் செயல்படுத்த அரசு முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 3.5 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பீகாரில் உள்ள ஏறக்குறைய 50 லட்சம் பெண்கள், 50 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

நண்பர்களே,

உஜ்வாலா திட்டத்தின் வெற்றி காரணமாகவும், தூய்மையான எரிபொருளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. மோத்திஹரி மற்றும் சாகோலியில் எரிவாயு நிரப்பும் ஆலைகள் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சாம்பரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை பெறுவதில் எந்த சிரமமும் ஏற்படாது. இந்த ஆலைகள் செயல்படத் தொடங்கும் போது, ஒரு நாளைக்கு ஏறத்தாழ 90,000 சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்படும்.

இது தவிர, பெட்ரோலிய மசகு எண்ணெய் முனையம் ஒன்றை மோத்திஹரியில் அமைக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த ஆலை செயல்படத் தொடங்கும் போது, சாம்பரான் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களின் பெட்ரோல் மற்றும் டீசல் தேவையை பூர்த்தி   செய்வதோடு மட்டுமின்றி, நேபாளத்திற்கான எரிபொருள் விநியோகத்தை சீரமைக்கவும் உதவும்.

சகோதர சகோதரிகளே,

இந்தியாவின் கிழக்குப் பகுதிகளை நாட்டின் வளர்ச்சிக்கான எந்திரமாக கருதுவது என்ற மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டத்தின் விரிவாக்கமாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உத்திரபிரதேசத்தின் கிழக்குப் பகுதி முதல் பீகார் வரையிலும், அங்கிருந்து மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா வரையிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தற்போது நமது அரசால் மேற்கொள்ளப்படுவது போன்ற பணிகள், இதற்கு முன்பு ஒரு போதும் மேற்கொள்ளப்பட்டதில்லை.

பீகார் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு எவ்வாறு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதற்கு நிதிஷ்குமாரும் ஒரு சாட்சியாக உள்ளார். புதிய திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தப் பகுதிகளில் இணைப்புகளை மேம்படுத்த நமது அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

21 ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப, நெடுஞ்சாலைகள், நீர்வழிச் சாலைகள், தகவல் தொழில்நுட்ப வழித்தடங்களை அமைக்கும் பணிகள் இந்தப் பகுதியில் மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று, ரூ.900 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அவுரங்காபாத்திலிருந்து சவுர்தா வரையிலான நான்கு வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இந்தத் திட்டம் பீகார் மற்றும் ஜார்கண்ட் மக்களுக்கு பயனளிக்கும்.

இதே போன்று சாம்பரான் பகுதிக்கான இரண்டு ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. முசாபர் நகரிலிருந்து சாகோலி மற்றும் சாகோலி முதல் வால்மீகி நகர் வரையிலான ரயில் பாதை இரட்டைப் பாதையாக மாற்றப்படும். இது சாம்பரான் பகுதி மக்களுக்கு பயனளிப்பதோடு மட்டுமின்றி, உத்திரபிரதேச மக்கள் நேபாளம் செல்வதற்கான பயணம் மற்றும் வர்த்தகத்தையும் எளிதாக்கும்.

நண்பர்களே,

சாம்பரான் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு ரயில் ஒன்றைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த ரயில் கத்காரிலிருந்து பழைய தில்லி வரை இயக்கப்படும். இந்த ரயிலுக்கு சாம்பரான் ஹம்ஃசபார் எக்ஸ்பிரஸ் என அரசு பெயரிட்டுள்ளது. இப்பகுதியிலிருந்து தில்லி சென்று வரும் மக்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடிய அதிநவீன வசதிகள் இந்த ரயிலில் செய்யப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

இன்று, மாதேபுராவில் முதற்கட்ட மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  இரண்டு காரணங்களால் இந்தத் தொழிற்சாலை மிகவும் முக்கியமானதாகும். ஒன்று, மேக் இன் இந்தியா திட்டத்திற்கு மிகச் சிறப்பான உதாரணம் இது. இரண்டாவதாக, இந்தப் பகுதியில் வேலை வாய்ப்புக்கான ஆதாரமாக இந்தத் திட்டம் உருவாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து இந்திய ரயில்வே இந்த திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளது. அதிக சக்தி வாய்ந்த என்ஜின்களை தயாரிக்கும் இந்த நவீனத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 12000 குதிரை சக்தித் திறன் கொண்ட என்ஜினை பச்சைக் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றேன்.

நண்பர்களே, உலகில் மிகச் சில நாடுகளே சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு இத்தகைய சக்தி வாய்ந்த என்ஜின்களைப் பயன்படுத்துகின்றன.  இந்த என்ஜின்கள் காரணமாக இந்தியாவில் சரக்கு ரயில்கள் சராசரி வேகம் இருமடங்காக அதிகரிக்கும்.

இந்த திட்டம் குறித்து மக்களுக்கு மிக விரிவாக விளக்க நான் விரும்புவதற்கு மேலும் ஒரு காரணம் உள்ளது.

சகோதர, சகோதரிகளே, 2007 – ம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒப்புதல் வழங்கப்பட்டு 8 ஆண்டுகளாக இந்தத் திட்டத்திற்கான கோப்புகள் நகராமல் ஒரே இடத்திலேயே தேங்கி இருந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தத் திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கியது. தற்போது திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் : நம் நாட்டின் ஏழை மக்களுக்கு தூய்மைக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான விஷயமாக இருப்பது சுகாதாரமாகும். மிகவும் ஏழைக்குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அந்தக் குடும்பத்துக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் கிடைக்கும். பணம் இல்லாத காரணத்தால் நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாத இடையூறுகளை இனி அந்தக் குடும்பம் எதிர் நோக்காது. இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்னும் இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

எனது அரசு பணியாற்றுவதற்கு சீரிய வழிமுறைகளை வகுத்து இடர்களை களையவும் தவறான வழிகாட்டுதலைத் தடுத்திடவும் கோப்புகளைத் தேக்கிடாமல் பணிகளை விரைந்து மக்களின் ஆதரவோடு அரசின் ஒவ்வொரு இயக்கத்தையும் செயல் முடிவையும் முழுமையாகச் செயல்படுத்தி வருகிறது.

ஆனால் இந்த மாற்றங்களை ஏற்க விரும்பாதவர்கள் பிரச்னைகளை, உருவாக்கி வருகிறார்கள் ஏழை மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. ஏழை மக்கள் வலுவடைந்தால், அவர்களிடம் பொய்களைக் கூறவும், தவறாக வழி நடத்தவும் முடியாதே என இவர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் சாலையிலிருந்து நாடாளுமன்றம் வரை எல்லா இடங்களிலும் அரசிற்கு இடையூறுகளை உருவாக்கி வருகின்றனர்.

நண்பர்களே, மக்களிடம் இணக்கமான நட்புறவை உருவாக்க முயலும் அரசு தற்போது உங்களுக்கு கிடைத்துள்ளது. மறுபக்கத்தில் சில எதிராளிகள் மக்களிடையே குழப்பத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களே, நிதிஷ் ஜி யின் பொறுமை மற்றும் சிறந்த நிர்வாகத்தை நான் சிறப்பாகப் பாராட்ட விரும்புகிறேன். பீகாரில் ஊழல் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு எதிராக அவர் நடத்திவரும் போராட்டம் எளிதானதல்ல. ஊழலுக்கு எதிராக அவர் மேற்கொண்டுள்ள தூய்மை இயக்கத்திற்கு மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது. சமூக மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவு அளிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, “அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்” என்பதைப் பின்பற்றி குறுகிய கால வரையறைக்குள் பணிகளைச் செய்து வருகிறது. முந்தைய அரசுகள், கால வரம்புக்குள் பணிகளை முடிக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் காந்தியடிகள் சத்தியாக் கிரஹம் தூய்மை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று எப்போதும் அறிவுறுத்தி வந்தார். காந்தியடிகள் எப்போதும் தம்முடன் ஒரு சிறிய பாக்கெட் கடிகாரத்தை வைத்திருப்பார். “நீங்கள் எப்போது ஒரு தானியத்தையோ அல்லது ஒரு சிறிய காகிதத்தையோ வீணாக்கவில்லையோ அப்போது நீங்கள் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க மாட்டீர்கள்” என்று அவர் அடிக்கடி கூறுவதுண்டு. இது நமது நேரம் அல்ல. இந்த நேரம் நாட்டுக்குச் சொந்தமானது. இதை நாட்டுக்கே பயன்படுத்த வேண்டும்.

காந்தியடிகளின் இந்தக் கருத்தின் அடிப்படையில் 125 கோடி இந்தியர்கள் தங்களது வாழ்க்கைக்கான பணிகளை ஒர் இயக்கம் போலச் செய்துவருகின்றனர். தூய்மையின்பால் அவர்கள் கொண்டுள்ள முனைப்பான ஆர்வம் காரணமாக 2014- ம் ஆண்டில் 40 சதவீதமாக இருந்த தூய்மை இயக்கம் தற்போது 80 சதவீதமாக விரிவடைந்துள்ளது. சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக ஏற்படாத தூய்மை குறித்த முன்னேற்றம் இந்த அரசு பதவியேற்ற பின்னர் ஏற்பட்டுள்ளது என்பதை இதன் பொருளாகும்.

நண்பர்களே, கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாட்டில் 350 – க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 3.5 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லை என்று அந்தகிராமங்களைச் சேர்ந்தவர்களே அறிவித்துள்ளனர். கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாட்டில் சுமார் 7 கோடிக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.  இது மக்கள் சக்தியால் விளைந்துள்ள பயனாகும். கடந்த ஏப்ரல் 4 – ம் தேதி முதல் ச்வச்சாக்கிரக தூய்மை இயக்க வாரம் கொண்டாடப்பட்ட போது பீஹார், உ.பி, ஒடிசா, ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சுமார் 26 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நான்கு மாநிலங்களில் தூய்மை இயக்கத்தை மிக விரைவாக விரிவாக்க முனைந்ததன் பலனாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, தூய்மை இந்தியா இயக்கம் நாட்டின்  கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைத்தது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். கழிவறைகள் கட்டப்பட்டதன் பயனாக பெண்கள் கண்ணியம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய மூன்று விஷயங்களையும் பெற்று வருகின்றனர். பீஹாரிலும்  இப்போது மக்கள் கழிவறைகளை மதிப்புமிக்க இடமாக கருதத் தொடங்கிவிட்டனர் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கழிவறைகள் கட்டுமானம் சமுதாயத்தில் காணப்பட்ட மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இது பொருளாதார சமுக அதிகாரமளித்தலுக்கு காரணமாகவும் மாறி உள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் ஓர் ஆய்வறிக்கையில் வீட்டில் கழிவறை  உள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ 50000 வரை சேமிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. அது இல்லாதபோது அந்தத் தொகை நோய்களுக்கு சிகிச்சை பெறவும் மருத்துவ மனைகளுக்குச் சென்று வரவும் செலவழிக்கப்பட்டு வந்தது. மேலும் வேலை இழப்பும் ஏற்பட்டது.

மற்றொரு சர்வதேச முகமை நடத்திய ஆய்வில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வாந்தி பேதி நோய் வெகுவாக குறைந்தது தெரியவந்துள்ளது. குழந்தைகள் மனரீதியிலும் உடல்ரீதியிலும் சரியான வளர்ச்சியைப் பெற்று வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. கழிவறைகள் கட்டப்பட்டதன் காரணமாக குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதும் அதனால் பள்ளிகளுக்குச் செல்லாமல் விடுப்பு எடுப்பதும் குறைந்துள்ளது. இந்தக் காரணத்தால் திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களில் பள்ளித் தேர்வு முடிவுகளில் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

நண்பர்களே,

தூய்மை இந்தியா இயக்கம் நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் சென்றடைந்து மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்திருப்பது, உலகில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்களின் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது. மனிதர்களின் பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கான இது போன்ற மக்கள் இயக்கம், 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை வேறு எந்த நாட்டிலும் மேற்கொள்ளப்படவில்லை என்று நான் கருதுகிறேன். இந்தியா மாறி வருவது நிச்சயம். மக்களின் பழக்கவழக்கம் மற்றும் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

எனினும், தற்போது இந்த காந்தி மைதானத்தில் திரண்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், நாட்டின் மிக இளைய குடிமகன் முதல் முதியோர் வரை, ஒவ்வொருவரும் உண்மையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சாலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வீட்டு வாசல் மற்றும் கடைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், சந்தைகள், சிறிய சந்துகள் மற்றும் தெருமுனைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்துவது பெரும் சவாலான காரியமாகும். ஒவ்வொரு தனி மனிதனும், அவரவர் வரையிலாவது தூய்மையை பராமரிக்க முயற்சி மேற்கொள்ளும் வரை தூய்மை இந்தியா திட்டம் நிறைவடையாது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் தூய்மையை கடைப்பிடிக்கும் வரை இந்தத் திட்டம் நிறைவடையாது. எனவே தான், தூய்மை இந்தியா திட்டத்தை 2019 ஆம் ஆண்டு வாக்கில் நிறைவேற்ற முடியும் என கூறி வருகிறோம். அதுவரை தூய்மையின் அவசியம் குறித்து நாம் வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் தான், அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பாபுஜிக்கு நாம் உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்த முடியும்.

நண்பர்களே,

இந்த சாம்பரான் பகுதியில், காந்திஜி, விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒவ்வொருவரையும் ஒரே வரிசையில் நிறுத்தினார். அதன் பிறகே சத்தியாகிரகம் வெற்றிப் பெற்றது. ஒரு தூய்மை பணியாளர் என்ற முறையில் நமது பங்களிப்பும் அது போன்று இருக்க வேண்டும். தூய்மைப் பணி தொடர்பான இந்தத் தகவல், நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு பகுதியையும் சென்றடையும் வரை நமது தொடர் முயற்சியாக அமைய வேண்டும்.

எனவே, இங்கு திரண்டுள்ள ஒவ்வொரு தூய்மைப் பணியாளரும், உங்களிடம் வழங்கப்பட்டுள்ள குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து அதிகபட்ச விளம்பரம் செய்ய வேண்டும். இது தவிர, தூய்மையின் அவசியத்தை அனைத்து மக்களும் உணரச் செய்யும் போதுதான் தூய்மை இந்தியா இயக்கம் வெற்றியடையும். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் ஒரு தூய்மைப் பணி முன்னோடியையாவது உருவாக்க அரசும் முயற்சி மேற்கொண்டுள்ளது. 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணி முன்னோடிகள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக தூய்மைப் பணியை மேற்கொள்ள செய்யும் வகையில் பணியாற்றி வருகின்றனர்.  மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இந்த இயக்கத்தை மாற்றும் வகையில் அவர்கள் பணியாற்றுவார்கள்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் மூலம், நாட்டில் உள்ள ஏழைகளுக்கு வீடு வழங்கும் பணி, துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கழிவறைகள் கட்டுவதில் காட்டும் வேகத்தைப் போன்று, ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டமும், பீகாரில் வேகமாக மேற்கொள்ளப்படும் என நான் நம்புகிறேன்.

நாம் அனைவரும் மேலும் ஒன்றை செய்ய வேண்டியுள்ளது: இன்று முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் 2 வரையிலான காலத்தில் வரும், அனைத்து பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் விழாக்கள் அல்லது பண்டிகைகளின் போது, தூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக, நாளை ஏப்ரல் 11-ந் தேதி, மிகப் பெரிய சமூக சீர்த்திருத்தவாதி ஜோதிபா பூலேயின் பிறந்தநாளாகும்; அதே போன்று பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாள் ஏப்ரல் 14 அன்று வருகிறது. இது போன்ற விசேஷ நாட்களில், அவர்களது நினைவை போற்றுவதோடு மட்டுமின்றி, தூய்மைப் பணியிலும் மக்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.

ஏப்ரல் 14 முதல், மத்திய அரசு கிராம சுயாட்சித் திட்டத்தை தொடங்க இருக்கிறது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த இயக்கத்தின் கீழ், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து அல்லது நகராட்சி கவுன்சில் அல்லது மாநகர கவுன்சில் போன்றவற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும், தத்தமது பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடமும் வலியுறுத்தி மக்களை வீடு வீடாக சென்று, அவர்களது சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

சகோதர சகோதரிகளே,

தேச நிர்மாணப் பணியில் உங்களது பங்களிப்பை வருங்கால சந்ததியினர் நினைவுகூரத்தக்க வகையில் அமைய வேண்டும். சுகாதாரமான, ஆரோக்கியமான, வளமான தேசத்தை உருவாக்க ஒவ்வொரு சத்தியாகிரகியும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பரான் சத்தியாகிரகம் நடைபெற்ற காலத்தில் நாம் இல்லாததால், அதில் பங்கேற்க இயலவில்லை. அந்த காலக்கட்டத்தில் நாம் பிறக்கக் கூட இல்லை. எனவே நம்மில் யாரும் அந்த இயக்கத்தில் பங்கேற்கவில்லை. எனினும் சாம்பரான் தூய்மைப் பணியை வெற்றிகரமாக நாம் இரவுபகல் பாராது பணியாற்றுவோம்.

இந்த இலக்கை அடைய மிகவும் பொறுமை தேவை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற லட்சியத்துடன் தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர் என்பதை நான் அறிவேன். அதற்காக நீங்கள் கடுமையாக உழைத்து வருகிறீர்கள். சாம்பரான் தூய்மைப் பணி இயக்கம், இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக மாறியிருப்பதோடு, சவால்களை உணர்ந்து அதனை எதிர் கொள்வதற்கான சக்தியையும், வெற்றியடையும் வரை அயராது போராடுவதற்கான வலிமையையும் அவர்களுக்கு அளித்துள்ளது. மக்களின் இந்த இயக்கம், எதிர்கால இந்தியாவுக்கான வழிகாட்டுதல்களையும் அளித்துள்ளது.

தூய்மையான, அழகான, வளமான புதிய இந்தியாவை படைப்பதில், தூய்மைப் பணி தொடர்பான நமது முயற்சிகள் புதிய அத்தியாயத்தை படைக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன்.  இந்த மாபெரும் விழாவில் பங்கேற்றுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2022 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2018 அக்டோபர் 2 முதல் 2019 அக்டோபர் 2 வரை காந்திஜியின் 150-வது பிறந்தநாள் நிறைவு விழாவையும் நாம் கொண்டாட இருக்கிறோம். புதிய இந்தியா என்ற கனவை நனவாக்க, நமது நாட்டை பலவீனமாக்கி வரும் சமூக தீமைகள் மற்றும் தீய சக்திகளை சமுதாயத்திலிருந்து அகற்ற வேண்டும். ஊழலற்ற, குப்பைகள் அற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். சாதீய, ஆதிக்க வர்க்க, தாழ்வு மனப்பான்மை மற்றும் தீண்டாமை உணர்வுகளிலிருந்து நாட்டை விடுவிப்பதோடு, இன மோதல்கள் மற்றும் மதவாதத்திலிருந்தும் நாட்டை விடுவிக்க வேண்டும்.

இது போன்ற உறுதியுடன் நாம் முன்னோக்கிச் சென்றால்தான், 2022 ஆம் ஆண்டில் நாம் சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்கு உண்மையான மரியாதை செலுத்த முடியும். 2018-19-ல் காந்திஜியின் 150-வது பிறந்தநாள் நிறைவின் போது அவருக்கு உண்மையான மரியாதை செலுத்துவோம். இது போன்ற உணர்வுகளுடன் தலைவணங்கி, நாட்டிற்காக சிறந்த சேவையாற்றும் இளைஞர்களை பாராட்டும் வேளையில், நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் மீண்டும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், மகாத்மா காந்தி நமக்காக ஏராளமானவற்றை செய்துள்ளார். அவர் கனவு கண்ட தூய்மையான இந்தியாவை உருவாக்க பாடுபட முன் வருமாறு தாழ்மையுடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பணி ஓர் அரசு நிகழ்ச்சி அல்ல. இது பிரதமருக்கோ அல்லது முதலமைச்சர்களுக்கோ அல்லது மத்திய-மாநில அரசுகளுக்கோ சொந்தமான நிகழ்ச்சி அல்ல. நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்கு சொந்தமானதாகும். நாட்டில் உள்ள ஏழை மக்களுக்குச் சொந்தமான இந்த நிகழ்ச்சி நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டி தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் கவுரவத்தை அளிக்கும் நிகழ்ச்சியாகும். எனவே தான் நாம் அனைவரும் முழு மனதோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளோம். இந்த உணர்வோடு, அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நான் வாழ்த்தி கவுரவிப்பதுடன் மிகுந்த மரியாதையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சொல்வதை நீங்கள் மீண்டும் ஒருமுறை சொல்ல வேண்டும்.

நான் மகாத்மா காந்தி என்று சொல்ல நீங்கள் இருமுறை நீடூழி வாழ்க நீடூழி வாழ்க என்று சொல்ல வேண்டும்.

மகாத்மா காந்தி; நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க

உங்களது முழு பலத்துடன் இதனை சொல்லுங்கள்

மகாத்மா காந்தி; நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க

மகாத்மா காந்தி; நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க

உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி