Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரேசில் அதிபரின் வருகையை ஒட்டி பிரதமர் விடுத்துள்ள செய்தி

பிரேசில் அதிபரின் வருகையை ஒட்டி பிரதமர் விடுத்துள்ள செய்தி


மேதகு அதிபர் மிச்சல் டெமெர் அவர்களே, இந்திய ஊடகவியலாளர்களே, நண்பர்களே!

பிரேசில் அதிபர் மேதகு மிச்சல் டெமெர் அவர்களை இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் பெருமையடைகிறேன். முதன்முறையாக வரும் அவரது பயணத்தில் போர்ச்சுகீசிய பாரம்பரியத்துடன் கூடிய பண்பாடு கொண்டுள்ள இந்தியாவின் பிரதேசமான கோவாவுக்குச் செல்வது இடம்பெற்றிருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நிலவியல் அடிப்படையில் இந்தியாவும் பிரேசில் நாடும் வேறாக இருந்தாலும், ஜனநாயகம், சட்டப்படியான ஆட்சிமுறை, மேம்பாட்டின் மீதான நாட்டம், அமைதி, வளம் ஆகிய பொதுவான விழுமியங்களில் இரு நாடுகளும் இயல்பான கூட்டாளிகளாகவே இருந்து வருகின்றன. அதிபர் டெமெர் மிகச்சிறந்த அரசியல் சட்ட வல்லுநராக இருப்பதால், இதைப் புரிந்துகொண்டு பாராட்டுகிறார். இரு நாடுகளின் ராஜீய உறவுகள் பத்தாண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், அவரது வருகை குறிப்பிடத் தக்கதாக அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உலகமே மாறிவிட்டது. இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் மேலும் வளர்ந்துள்ளன. எல்லா நிலைகளிலும் கருத்துப் பரிமாற்றத்தை நாம் அதிகரித்து வந்துள்ளோம்.

இருநாடுகளின் பொதுவான நிலைப்பாடுகள், முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஆதரவு கிடைக்கும் வகையில் உலகளாவிய நிலையினை மேம்படுத்துவதில் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

பிரேசில் நாட்டுக்கு, 2014 ஆம் ஆண்டு நான் பயணம் செய்ததை நினைவுகூர்கிறேன். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆசியாவைக் கடந்து நான் பயணம் செய்த முதல் நாடு பிரேசில் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தியா மீது பிரேசில் நாட்டவர் கொண்டுள்ள நட்பை நினைத்து மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேதகு அதிபர் அவர்களே, புதிய பொறுப்பை ஏற்றதை அடுத்து, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு வெளியே இரு தரப்பு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்காகத் தாங்கள் தேர்ந்தெடுத்த முதல் நாடு இந்தியாதான். உங்களது இந்தியப் பயணம் நமது இரு தரப்பு உறவுகள் மீது நாம் காட்டும் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இன்று காலையில் நாம் நடத்திய ஆக்கபூர்வமான விவாதங்களே இதற்குச் சான்று.

நண்பர்களே,

அதிபர் டெமெரும் நானும் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்தோம். மேலும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, எங்களது தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள உடன்பாடு கொண்டிருக்கிறோம். ராஜீய நல்லுறவு வலுப்படவேண்டும் என்ற பரஸ்பர விருப்பங்களின் அடிப்படையில், இவ்வாறு உடன்பட்டுள்ளோம்.

லத்தீன் அமெரிக்க நாடுகளின் முக்கிய பொருளாதார கூட்டாளிகளில் பிரேசில் உள்ளது. பரஸ்பர முதலீடுகள் குறித்த ஒப்பந்தத்தை இந்தியாவும் பிரேசிலும் இறுதி செய்துவிட்டது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். அதிகரித்து வரும் இரு தரப்பு வணிகம், முதலீடுகள் ஆகியவற்றுக்கு இது தேவையான வேகத்தை அளிக்கும்.

பிரேசிலில் உள்நாட்டு பொருளாதாரத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக அதிபர் டெமெர் அளிக்கும் முன்னுரிமைகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இது விஷயத்தில் இந்தியா மதிப்புமிக்க கூட்டாளியாக இருக்கும். பிரேசில் நாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்யும்படியும் நீண்டகால வணிக ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் அழைப்பு விடுக்கிறேன். இந்திய தொழிலதிபர்களிடமிருந்து கருத்துகளை அறிவதற்காக நானும் அதிபர் டெமெரும் இப்போதுதான் அவர்களுடன் பேசினோம். நடைமுறைக்கு உகந்த வணிக ஒத்துழைப்பை மேற்கொள்வது தொடர்பாக அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கை குறித்து நான் ஊக்கமடைகிறேன்.

நாங்கள் இதை முழுமையாக ஆதரிக்கிறோம்

இந்திய உற்பத்திப் பொருட்களுக்கும் இந்திய தொழில் நிறுவனங்களுக்கும் எளிதில் அணுகும் வசதியான பெரிய சந்தை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்றும், முதலீடு வாய்ப்புகளை ஏற்படுத்தவும் அதிபர் டெமேரின் உதவியை நான் கோரியிருக்கிறேன்.

இது தொடர்பாக அதிபர் டெமெரின் சாதகமான நிலைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பயணத்தை ஒட்டி, மருந்துகள் ஒழுங்குமுறை, வேளாண்மை ஆய்வு, இணையப் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் ஒத்துழைப்பில் புதிய வழிகளைக் காண்பதில் முன்னேற்றம் கண்டுள்ளோம். சர்வதேச கூட்டங்களில் எடுத்துக் கொள்ளப்படும் முக்கியமான விஷயங்களில் எங்களது ஒருங்கிணைப்பையும் தீவிரமாக்குவதற்கும், வலுப்படுத்துவதற்கும் அதிபர் டெமெரும் நானும் இசைந்துள்ளோம். எங்களது அணுகுமுறை, நிலைப்பாடு ஆகியவற்றில் பொதுவான அம்சங்கள் அதிகம் இருக்கின்றன.

ஐ.நா., ஜி-20, ஜி-4, உலக வர்த்தக அமைப்பு (WTO), வளரும் நாடுகளின் கூட்டமைப்பு (BRICS), இந்திய-பிரேசில், தெற்காசிய அமைப்பு (IBSA) உள்ளிட்ட முக்கியமான அமைப்புகளில் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

மேதகு அதிபர் அவர்களே,

பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு ஆதரவாக பிரேசில் இருப்பது குறித்து மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எவ்வித பாரபட்சமோ, வேறுபாடோ கருதாமல் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையைத் தீர்க்க உலகமே ஒன்று திரண்டு வரவேண்டும் என்று இரு தரப்பினரும் இணங்கியுள்ளோம். உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்த கருத்துள்ள மாநாட்டை ஐ.நா. மன்றத்தில் கூட்டி முடிவு செய்வதில் முக்கியக் கூட்டாளி என்ற வகையில் பிரேசிலுடன் தொடர்ந்து இணைந்து பயணியாற்றுவோம். அணுப்பொருள் வழங்குவோர் குழுமத்தில் உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பங்களைப் புரிந்துகொண்டதற்காக பிரேசில் அதிபருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேதகு அதிபரே, நண்பர்களே,

இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான கூட்டில் இரு தரப்பு உறவிலும் பல தரப்பு உறவிலும் சாதகமான அம்சங்களே நிரம்பியிருப்பதால், அதன் பலனைப் பெறுவதில் அக்கறையுடன் இருக்கிறோம். அதை அடைவதற்காகப் பணியாற்றுவதற்கு பிரேசில் அதிபர் டெமெரின் வருகை முக்கியமான நிகழ்வாக உதவுகிறது. அவர்களது போர்ச்சுகீசிய மொழியில் “A uniao faz a forca” என்று சொல்லலாம். அதாவது, “நமது ஒத்துழைப்பு நம்மை வலுப்படுத்துகிறது“ என்பது அதன் பொருளாகும்.

நன்றி.