Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரிக்ஸ் வர்த்தக மன்றத் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

பிரிக்ஸ் வர்த்தக மன்றத் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


மேன்மைதங்கிய,

பிரிக்ஸ் வர்த்தக சமூகத் தலைவர்கள்,

வணக்கம்!

தென்னாப்பிரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் மூலம் நமது திட்டத்தின் தொடக்கம் மேற்கொள்ளப்படுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

முதலில், குடியரசுத் தலைவர் திரு ரமபோசாவின் அழைப்பிற்கும், இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.

பிரிக்ஸ் வர்த்தக குழுமத்தின் 10-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில், பிரிக்ஸ் வர்த்தக குழுமம் நமது பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

2009-ம் ஆண்டு முதல் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றபோது, உலகம் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வந்தது.

அந்த நேரத்தில், பிரிக்ஸ் உலகப் பொருளாதாரத்தின் நம்பிக்கை ஒளியாக பார்க்கப்பட்டது.

தற்போதைய காலத்திலும், கொவிட் தொற்றுநோய், பதற்றங்கள் மற்றும் இடர்பாடுகளுக்கு மத்தியில், உலகம் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது.

இத்தகைய காலங்களில், பிரிக்ஸ் நாடுகள் மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பைக் கொண்டுள்ளன.

நண்பர்களே,

உலகப் பொருளாதாரத்தில் நெருக்கடி இருந்தபோதிலும், இந்தியா தற்போது உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது.

விரைவில், இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.

வரும் ஆண்டுகளில், இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏனென்றால், இடர்பாடுகள் மற்றும் சவால்களின் காலங்களை இந்தியா பொருளாதார சீர்திருத்தங்களுக்கான வாய்ப்பாக மாற்றியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், விரைவாக நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குவதில் நிலையான முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன.

இணக்க வரிச்சுமையை குறைத்துள்ளோம்.

நாங்கள் சிரமமான சூழ்நிலைகளில் எளிமையான முறைகளை பயன்படுத்துகிறோம்.

ஜி.எஸ்.டி., (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் திவால் சட்டம் ஆகியவை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

முன்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற துறைகள் இப்போது தனியார் துறைக்கு திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அரசு சேவை வழங்கல் மற்றும் நல்லாட்சி தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

 

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியா நிதி சேர்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இதன் மிகப் பெரிய பயன் எங்களுடைய கிராமப்புறப் பெண்களுக்கு கிடைத்துள்ளது.

இன்று, இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்கள் ஒரே சொடுக்கில் நேரடி பணப் பரிமாற்றங்களைப் பெறுகிறார்கள்.

இதுவரை 360 பில்லியன் டாலர் மதிப்பிலான பரிமாற்றங்கள் நடந்துள்ளன.

இது சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது, ஊழலைக் குறைத்துள்ளது மற்றும் இடைத்தரகர்களைக் குறைத்துள்ளது.

இந்தியாவில் ஒரு ஜிகாபைட் டேட்டா விலை மிகவும் மலிவு விலையில் உள்ளது.

இன்று, சாலையோர வியாபாரிகள் முதல் பெரும் வர்த்தக நிறுவனங்கள் வரை, பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயன்படுத்துகின்றனர்.

இன்று, உலகிலேயே அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளும் இந்த தளத்தில் இணைகின்றன.

பிரிக்ஸ் நாடுகளுடனும் இணைந்து செயல்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவின் உள்கட்டமைப்பில் செய்யப்படும் பெரிய அளவிலான முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி வருகின்றன.

இந்த ஆண்டு பட்ஜெட்டில், உள்கட்டமைப்பிற்காக சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளோம்.

இந்த முதலீட்டின் மூலம், எதிர்காலத்தின் புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறோம்.

 

ரயில், சாலை, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தில் மாற்றங்கள் விரைவாக நடந்து வருகின்றன.

இந்தியாவில் ஆண்டுக்கு பத்தாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 9 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

சரக்குப்போக்குவரத்து செலவுகள் குறைவது இந்தியாவின் உற்பத்தித் துறையை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக ஆக்குகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா உலகத் தலைமைத்துவத்தில் ஒன்றாகும்.

சூரிய சக்தி, காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா போன்ற துறைகளில் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இது இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பத்திற்கான கணிசமான சந்தையை உருவாக்கும் என்பது இயல்பானது.

இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் உள்ளன.

தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, நிதி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர்கள் போன்ற துறைகளில், “மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்” என்ற தொலைநோக்குப் பார்வையை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.

இந்த முயற்சிகள் அனைத்தும் சாமானிய மக்களின் வாழ்க்கையில் நேரடியா நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் வருமானம்
மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பம் முதல் விண்வெளி வரை, வங்கி முதல் சுகாதாரம் வரை, நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆண்களுடன் பெண்கள் உறுதுணையாக நின்று பங்களித்து வருகின்றனர்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாட்டை உருவாக்க இந்திய மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.

கொவிட் தொற்றுநோய், நெகிழ்வான மற்றும் உள்ளடக்கிய விநியோக சங்கிலிகளின் முக்கியத்துவத்தை எங்களுக்குக் கற்பித்துள்ளது.

இதற்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை முக்கியம்.

ஒருவருக்கொருவர் நம் பலங்களை இணைப்பதன் மூலம், முழு உலகின், குறிப்பாக உலகளாவிய தெற்கின் நல்வாழ்விற்கு நாம் கணிசமாக பங்களிக்க முடியும்.

மேன்மை தங்கிய தலைவர்களே,

பிரிக்ஸ் வர்த்தக சமூகத்தின் தலைவர்களின் பங்களிப்புகளுக்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சிறப்பான நிகழ்வை நடத்திய நண்பர் குடியரசுத் தலைவர் திரு ரமபோசாவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

***

ANU/AD/IR/AG