பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 ஜூலை 13 முதல் 15 வரை பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோனின் அழைப்பின் பேரில் 2023 ஜூலை 13 முதல் 14 வரை பிரதமர் பாரிஸ் நகரில் பயணம் மேற்கொள்கிறார். 2023 ஜூலை 14 அன்று நடைபெறவுள்ள பாஸ்டீல் தின அணிவகுப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதில் இந்திய முப்படைக் குழுவும் பங்கேற்கிறது.
இந்தப் பயணத்தின்போது பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரானுடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமரை கௌரவிக்கும் வகையில் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அரசு விருந்து மற்றும் தனிப்பட்ட விருந்து என இரண்டையும் வழங்கவுள்ளார்.
பிரான்ஸ் பிரதமர், பிரான்ஸ் ஆட்சிமன்றக் குழுத் தலைவர் மற்றும் பிரான்ஸ் தேசிய அவைத் தலைவர் ஆகியோரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திக்க உள்ளார். பிரான்ஸில் உள்ள இந்திய சமுதாயத்தினர், இந்திய மற்றும் பிரான்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரான்ஸ் பிரமுகர்களுடனும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனித்தனியாக கலந்துரையாடுகிறார்.
இந்தியா – பிரான்ஸ் இடையேயான உத்திசார் கூட்டுச் செயல்பாட்டின் 25 வது ஆண்டு நிறைவு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. பிரதமரின் இந்த பிரான்ஸ் பயணம் கலாச்சார, அறிவியல், கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற பல்வேறு அம்சங்களில் எதிர்காலத்திற்கான கூட்டுச் செயல்பாடுகளை வரையறுத்துச் செயல்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்.
பின்னர் ஜூலை 15-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி அபுதாபி செல்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான உத்திசார் கூட்டு செயல்பாடு சீராக வலுவடைந்து வருகிறது. எரிசக்தி, கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, நிதித் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண பிரதமரின் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும். ஐநா பருவநிலை மாநாட்டு அமைப்பின் (சிஓபி -28 – யு.என்.எஃப்.சிசி) தலைமைத்துவத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஜி – 20 தலைமைத்துவத்தில் இந்தியாவும் உள்ள நிலையில் உலகளாவிய பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கவும் பிரதமரின் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938882
***