Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களேமுதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களேதுணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய அமைச்சர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, பிரயாக்ராஜ் மேயர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரே, இதர சிறப்பு விருந்தினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.

பிரயாக்ராஜில் உள்ள இந்தப் புண்ணிய சங்கம பூமியை நான் பயபக்தியுடன் வணங்குகிறேன். மகா கும்பமேளாவுக்கு வந்திருக்கும் அனைத்து துறவிகள் மற்றும் முனிவர்களுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக மஹா கும்பமேளாவை வெற்றிகரமாகக் கொண்டாட இரவு பகலாக அயராது உழைத்து வரும் ஊழியர்கள், தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்களின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான உலகளாவிய நிகழ்வை நடத்துவது, ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்று சேவை செய்ய தயாராகி வருவது, 45 நாட்களுக்கு தொடர்ந்து ஒரு மகா யாகத்தை நடத்துவது, இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக ஒரு புதிய நகரத்தை உருவாக்குவது ஆகிய  இந்த முயற்சிகள் பிரயாக்ராஜின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகா கும்பமேளா நமது நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக அடையாளத்தை இணையற்ற உச்சங்களுக்கு உயர்த்தும். இந்த மஹா கும்பமேளாவை ஒரே வரியில் விவரிக்க வேண்டுமென்றால், அது உலகெங்கும் எதிரொலிக்கும் ஒற்றுமையின் மஹா யாகமாக இருக்கும் என்பதை நான் மிகுந்த நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி மகத்தான, வெற்றியடைய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பாரதம் புண்ணிய ஸ்தலங்கள் மற்றும் புனித யாத்திரைகள்  மேற்கொள்ளும் பூமி. இது கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, நர்மதா போன்ற எண்ணற்ற புனித நதிகளின் தாயகமாகும். இந்த நதிகளின் புனிதத்தன்மை, எண்ணற்ற புனித யாத்திரைத் தலங்களின் முக்கியத்துவம், அவற்றின் பிரம்மாண்டம், அவற்றின் சங்கமம், அவை ஒன்றிணைவது – இவை அனைத்தும் பிரயாகையின் சாராம்சத்தை உள்ளடக்கியுள்ளது. பிரயாகை மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் மட்டுமல்ல; இது இணையற்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமும் ஆகும். பிரயாகை பற்றி, சூரியன் மகர ராசியில் நுழையும் போது, அனைத்து தெய்வீக சக்திகளும், அனைத்து புனித யாத்திரை தலங்களும், அனைத்து முனிவர்களும், மகரிஷிகளும், ஞானிகளும் பிரயாகையில் குவிகிறார்கள் என்று கூறப்படுகிறது.  புராணங்களின் ஆன்மீகத் தாக்கம் கொண்ட இடம் இது. வேத வசனங்களில் போற்றப்பட்ட புண்ணிய பூமி பிரயாக்ராஜ்.

சகோதர சகோதரிகளே,

பிரயாகை ஒரு புனித நிலமாகும். இங்கு ஒவ்வொரு அடியும் ஒரு புனித தலத்தால் குறிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பாதையும் நல்லொழுக்கத்தின் இடத்திற்கு வழிவகுக்கிறது. திரிவேணி சங்கமத்தின் மகிமை, வேணி மாதவரின் மகிமை, சோமேஷ்வரின் ஆசீர்வாதம், பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்தின் புனிதம், நாகராஜ் வாசுகியின் சிறப்பு முக்கியத்துவம், ஆல் மரத்தின் அமரத்துவம், சேஷாவின் நித்திய கருணை ஆகியவற்றைக் கொண்டதாக பிரயாகை திகழ்கிறது .யாத்திரைகளின் ராஜா. பிரயாகை எனும்போது அது தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய வாழ்வின் நான்கு லட்சியங்களையும் அடையும் இடமாகிறது. பிரயாக்ராஜ் ஒரு புவியியல் இடம் மட்டுமல்ல; இது ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தின் சாம்ராஜ்யமும் ஆகும். இந்தப் புனித பூமிக்கு மீண்டும் மீண்டும் வருவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். கடந்த கும்பமேளாவின்போது சங்கமத்தில் நீராடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இன்று, இந்த கும்பமேளா தொடங்குவதற்கு முன்பாக, இந்தப் புனித சங்கமத்திற்கு வருகை தந்து அன்னை கங்கையின் ஆசீர்வாதத்தைப் பெறும் பாக்கியத்தை மீண்டும் ஒருமுறை நான் பெற்றுள்ளேன். இன்று, நான் சங்கம படித்துறையில் ஒரு சடங்கு குளியல் செய்து, ஹனுமான்ஜியைத் தரிசனம் செய்து, ஆலமரத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றேன். பக்தர்களின் வசதிக்காக, ஹனுமான் தாழ்வாரம் மற்றும் ஆலமரம் ஆகியவற்றுக்கான நடைபாதைகள் கட்டப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடைவிடாது தொடரும் நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகப் பயணத்திற்கு மகா கும்பமேளா ஒரு புனிதமான மற்றும் வாழும் சாட்சியமாக விளங்குகிறது. இது மதம், அறிவு, பக்தி மற்றும் கலையை ஒரு தெய்வீக சங்கமத்தில் ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாகும் .பிரயாகையில் உள்ள சங்கமத்தில் நீராடுவது என்பது எண்ணற்ற புனித யாத்திரைகளை மேற்கொண்டு அதனால் பெறும் புண்ணியத்துக்குப் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிரயாகையில் நீராடுபவர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். பல யுகங்கள் கடந்தும், மன்னர்கள் மற்றும் பேரரசர்களின் காலகட்டமாக இருந்தாலும் சரி, அல்லது பல நூற்றாண்டுகளாக இருந்த காலனித்துவ ஆட்சியின் போதும் சரி, கும்பமேளாவுடன் தொடர்புடைய நம்பிக்கை என்பது ஒருபோதும் குறைந்ததில்லை. காரணம், கும்பமேளா எந்த வெளி அதிகாரத்தாலும் ஆளப்படவில்லை; இது மனிதகுலத்தின் உள் நனவால் இயக்கப்படுகிறது. இந்த உணர்வு இயல்பாகவே விழித்தெழுந்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்களை சங்கமத்தின் கரைக்கு இழுக்கிறது. கிராமவாசிகள், நகரவாசிகள் ஒரே மாதிரியாக பிரயாக்ராஜுக்கு தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த கூட்டு நனவு ஒரு அரிதான மற்றும் சக்திவாய்ந்த நிகழ்வாகும். இங்கு, மகான்கள், முனிவர்கள், அறிஞர்கள் மற்றும் சாதாரண மக்கள் ஒன்றாக திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்கள். சாதி வேறுபாடுகள் கரைகின்றன. குறுங்குழுவாத மோதல்கள் மறைகின்றன. கோடிக் கணக்கானவர்கள் ஒரே நோக்கத்துடனும் பகிரப்பட்ட நம்பிக்கையுடனும் ஒன்றிணைகிறார்கள். இந்த மஹா கும்பமேளாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு சாதிகள் மற்றும் பாரம்பரியங்களைச் சேர்ந்த, பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட, கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள். ஆயினும் சங்கம நகரத்தை அடைந்தவுடன் அவர்கள் ஒன்றாகி விடுவார்கள். எனவேதான் மகா கும்பமேளா உண்மையிலேயே ஒற்றுமைக்கான மஹா யாகம் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இங்கு அனைத்து வகையான பாகுபாடுகளும் மறைந்து போகின்றன. சங்கமத்தில் நீராடும் ஒவ்வொரு இந்தியரும், “ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்” என்ற மகத்தான பார்வையைப் பெறுகிறார்கள்.

நண்பர்களே,

மகா கும்பமேளா பாரம்பரியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, தேசத்திற்கு வழிகாட்டுதலை வழங்கும் திறன் ஆகும். கும்பமேளாவின் போது, நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. துறவிகளிடையே நடைபெற்ற இந்த விவாதங்கள், உரையாடல்கள், விவாதங்கள் ஆகியவை தேசத்தின் சிந்தனைகளில் புதிய சக்தியை அளித்து, முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளை ஒளிரச் செய்தன. வரலாற்று ரீதியாக, துறவிகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் இதுபோன்ற கூட்டங்களின் போது நாடு தொடர்பான பல குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்துள்ளனர். நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகைக்கு முன்பு, கும்பமேளா போன்ற நிகழ்வுகள் பெரிய சமூக மாற்றங்களுக்கு அடித்தளமிட்டன. இங்கே, துறவிகளும் அறிஞர்களும் சமூகத்தின் இன்ப துன்பங்களைப் பற்றி விவாதிக்கவும், நிகழ்காலத்தைப் பிரதிபலிக்கவும், எதிர்காலத்தை கற்பனை செய்யவும் ஒன்றிணைவார்கள். இன்றும் கூட, கும்பமேளா போன்ற பிரம்மாண்டமான நிகழ்வுகளின் முக்கியத்துவம் மாறவில்லை. இந்த ஒன்றுகூடல்கள் சமூகத்திற்கு ஒரு நேர்மறையான செய்தியை தொடர்ந்து அனுப்புகின்றன, தேசிய சிந்தனையின் தொடர்ச்சியான நீரோட்டத்தை வளர்க்கின்றன. அத்தகைய நிகழ்வுகளின் பெயர்கள், அவற்றின் சேருமிடங்கள் மற்றும் அவற்றின் வழிகள் வேறுபட்டாலும், பயணிகள் ஒரே நோக்கத்தால் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

நண்பர்களே,

வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், பாரதத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், வளப்படுத்துவதிலும் எங்கள் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. நாடு முழுவதும், ராமாயண சுற்றுலா, ஸ்ரீ கிருஷ்ணா சுற்றுலா, புத்தமத சுற்றுலா மற்றும் தீர்த்தங்கர் சுற்றுலா போன்ற பல்வேறு சுற்றுலாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் முன்னர் கவனிக்கப்படாத வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட கவனத்தை கொண்டு வருகின்றன. ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம், பிரசாத் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் புனித தலங்களில் வசதிகளை விரிவுபடுத்தி வருகிறோம். அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுமானம் முழு நகரத்தையும் எவ்வாறு ஒரு அற்புதமான காட்சியாக மாற்றியுள்ளது என்பதை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம். அதேபோல், விஸ்வநாத் தாம் மற்றும் மஹாகல் மஹாலோக் ஆகியவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

கும்பமேளா போன்ற பிரம்மாண்டமான, தெய்வீக நிகழ்ச்சியின் வெற்றியை உறுதி செய்வதில் தூய்மை முக்கிய பங்கு வகிக்கிறது. மகா கும்பமேளாவுக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, நமாமி கங்கை திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நகரில் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மைக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கங்காதூத்கள், கங்கா பிரஹாரிகள் மற்றும் கங்கா மித்ராக்களை நியமித்தல் போன்ற முன்முயற்சிகள் தூய்மையை பராமரிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த முறை கும்பமேளாவின் தூய்மையை எனது 15,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களாக உள்ள சகோதர சகோதரிகள் நிர்வகிக்க உள்ளனர். கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளில் அயராது பங்களித்து வரும் இந்த அர்ப்பணிப்பு உணர்வுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு முன்கூட்டியே எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியின் போது கோடிக்கணக்கான பார்வையாளர்கள் அனுபவிக்கும் தூய்மை, ஆன்மீகம் ஆகியவை உங்கள் முயற்சிகளால் மட்டுமே சாத்தியமாகும். இந்த புனித சேவையில், இங்கு வரும் ஒவ்வொரு பக்தரின் நல்லொழுக்கத்திலும் நீங்கள் பங்கு பெறுவீர்கள். பகவான் கிருஷ்ணர் பிறர் பயன்படுத்திய தட்டுகளை எடுத்து கழுவியதன் மூலம் அனைத்து வேலைகளும் மதிப்பானவைதான் என்று எங்களுக்கு கற்பித்தது போல, உங்கள் பணியும் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை உயர்த்தும். நீங்கள் உங்கள் கடமைகளை விடியற்காலையில் தொடங்கி நள்ளிரவு வரை தொடர்கிறீர்கள். 2019 கும்பமேளாவின் போது, தூய்மை பரவலான பாராட்டைப் பெற்றது. பல தசாப்தங்களாக கும்பமேளா அல்லது கும்பமேளாவில் பங்கெடுத்துக் கொண்டவர்கள், முதன்முறையாக இத்தகைய தூய்மையையும், ஒழுங்கமைப்பையும் கண்டார்கள். இந்தக் காரணத்திற்காகத்தான் உங்கள் பாதங்களைக் கழுவுவதன் மூலம் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்தேன். இந்த செயலைச் செய்யும்போது நான் உணர்ந்த திருப்தியும் நிறைவும் என் வாழ்க்கையில் ஒரு நேசத்துக்குரிய மற்றும் மறக்க முடியாத அனுபவமாக உள்ளது.

 

நண்பர்களே,

கும்பமேளாவில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சம் உள்ளது: அந்த அம்சம் எதுவெனில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அது அளிக்கின்ற ஊக்கம். கும்பமேளாவிற்கு தயாராகும் வகையில் இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகள் எவ்வாறு வேகம் பெற்று வருகின்றன என்பதை நாம் ஏற்கனவே காண முடிகிறது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு சங்கமக் கரையில் ஒரு புதிய நகரம் உருவாகும்.  தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். இதுபோன்ற ஒரு பெரிய நிகழ்வை நிர்வகிக்க, பிரயாக்ராஜில்  பெரும் எண்ணிக்கையில் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். 6,000-க்கும் மேற்பட்ட படகோட்டிகள், ஆயிரக்கணக்கான கடைக்காரர்கள் மற்றும் சடங்குகள், பிரார்த்தனைகள் மற்றும் தியானத்திற்கு உதவுபவர்கள் என இவர்களின் பணி குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காணும். இதன் பொருள் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதாகும். விநியோகச் சங்கிலியைப் பராமரிக்க, வர்த்தகர்கள் மற்ற நகரங்களிலிருந்தும் பொருட்களை வாங்க வேண்டும்

. மேலும் பிரயாகராஜ் கும்பமேளாவின் தாக்கம் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்படும். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் ரயில், விமானம் மூலம் பயணிப்பதால், பொருளாதாரம் மேம்படும். எனவே, மகா கும்பமேளா சமூக ஒற்றுமையை வளர்ப்பது மட்டுமல்லாமல், மக்களுக்கு கணிசமான பொருளாதார அதிகாரத்தையும் கொண்டு வரும்.

நண்பர்களே,

முந்தைய நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மிகவும் மேம்பட்ட ஒரு சகாப்தத்தில் மகா கும்பமேளா 2025 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், இப்போது போல் தரவு மலிவாக கிடைத்தது இல்லை. இன்று, குறைந்த தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் கூட பயன்படுத்தக்கூடிய செயலிகளுடன் மொபைல் போன்கள் கிடைக்கின்றன. முன்பு, கும்பமேளாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சாட்போட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்பதைக் குறிக்கும் வகையில் கும்பமேளா சஹாயக் சாட்போட்டை நான் தொடங்கி வைத்தேன். இது 11 இந்திய மொழிகளில் தகவல்தொடர்புகள் மேற்கொள்ள உதவுகிறது. பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் இந்த இணைப்புடன் மேலும் பலர் இணைய வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன். உதாரணமாக, மகா கும்பமேளாவை மையமாகக் கொண்ட புகைப்படப் போட்டியை ஏற்பாடு செய்து, அதை ஒற்றுமையின் மகா யாகமாகக் காட்டலாம். இத்தகைய முயற்சிகள் இளைஞர்களைக் கவர்ந்து, நிகழ்வில் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்கும். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படும்போது, அவை எண்ணற்ற உணர்ச்சிகளால் நிரப்பப்படும்.

நண்பர்களே,

இன்று பாரதம் வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இந்த மஹா கும்பமேளாவிலிருந்து வெளிப்படும் ஆன்மிகம் மற்றும் கூட்டு சக்தி நமது தீர்மானத்தை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மஹா கும்பமேளா நீராடல் ஒரு வரலாற்று அனுபவமாக  மறக்க முடியாத அனுபவமாக இருக்கட்டும். கங்கை அன்னை, யமுனை அன்னை, சரஸ்வதி அன்னை ஆகியவற்றின் சங்கமம் மனிதகுலத்திற்கு நலனை அளிக்கட்டும் – இதுவே நமது கூட்டு விருப்பம். புனித நகரமான பிரயாக்ராஜுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்தில்  இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பாரத் மாதா கீ ஜே!

பாரத் மாதா கீ ஜே!

பாரத் மாதா கீ ஜே!

கங்கா மாதா கீ ஜே!

கங்கா மாதா கீ ஜே!

கங்கா மாதா கீ ஜே!

 

மிகவும் நன்றி!

***

(Release ID: 2084217)

TS/PKV/AG/KR