அலுவல் நிமித்தமாக அமெரிக்கா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். இரு தலைவர்களுக்கிடையிலும் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது இருதரப்பு சந்திப்பு இது. இதையொட்டி, சுதந்திரம், ஜனநாயகம், உலகளாவிய மனித உரிமை, சகிப்பு மற்றும் பன்முகத்தன்மை, குடிமக்களுக்கிடையில் சமவாய்ப்பு, சட்ட நிர்வாகம் ஆகிய அம்சங்கள் சார்ந்த கூட்டுசெயல்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் மீளாய்வு செய்தனர். மேலும் பொருளாதார வளர்ச்சி, வளம்குன்றா வளர்ச்சி, உலக அமைதியை ஊக்குவித்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு, எல்லாதரப்பையும் உள்ளடக்கிய மக்களாட்சி, உலகளாவிய மனித உரிமையை மதித்து நடத்தல், இருநாடுகளுக்கும் ஆர்வமுள்ள சர்வதேச பிரச்சினைகளில் ஆலோசனை கூறல் ஆகிய விஷயங்களில் இருநாடுகளும் ஒன்றுகொன்று துணைநிற்கும் எனவும் இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.
பிரதமர் மோடி செப்டம்பர் 2014ல் அமெரிக்கா சென்றிருந்தபோதும், அமெரிக்க அதிபர் ஒபாமா ஜனவரி 2015ல் இந்தியா வந்திருந்தபோதும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த செயல்திட்டங்களின்படி இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு தங்கள் பதவிக்காலத்தில் மேம்பட்டிருப்பதை இரு தலைவர்களும் வரவேற்றனர். மேலும் வியூகங்களைப் பொறுத்தவரை இருநாடுகளுக்கும் இருக்கும் வேறுபாடுகள் மெதுவாக மறைந்து வருவதை குறிப்பிட்டு, இருநாடுகளின் பாதுகாப்பு மற்றும் செழுமையில் ஒருவருக்கொருவர் அக்கறைகாட்ட வேண்டிய தேவையையும் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
உலகளாவிய பருவநிலை மற்றும் தூயசக்தி துறைகளில் அமெரிக்க-இந்திய நாடுகளின் தலைமையை ஊக்குவித்தல்
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க-இந்திய தொடர்புக் குழுவின் மூலம் இருநாட்டு அரசுகளும் நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அணு உலை விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் கூடுதல் இழப்பீடு வழங்குதல் குறித்த கருத்தரங்கில் இந்தியா தனது ஆதரவை உறுதியாக தெரிவித்ததன் மூலமும், அணு உலை மீதான நம்பகத்தன்மை குறித்து எழும் கேள்விகளை ஆக்கபூர்வமாக எதிர்கொண்டதன் மூலமும் இந்தியாவில் அணு உலைகள் அமைக்க இந்திய-அமெரிக்க நிறுவனங்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வும், உறுதியான அடித்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே பத்தாண்டுகளாக நிலவும் அணுசார் கூட்டு நடவடிக்கைகளின் உச்சமாக, இந்தியாவில் வெஸ்டிங்கவுஸ் நிறுவனம் தயாரிக்கும் ஆறு AP 1000 ரக அணு உலைகளை நிறுவுவதற்காக துவங்கியிருக்கும் ஆரம்பகட்ட பணிகளை இருதலைவர்களும் வரவேற்றனர். மேலும் இந்தியாவும் அமெரிக்க எற்றுமதி இறக்குமதி வங்கியும் இணைந்து இந்த திட்டத்தை முடிந்தவரை குறைந்த நிதியில் செய்து முடிக்கும் வேலைகளில் இறங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் முடிவடைந்தபின் இந்த வகை திட்டங்களில் இதுவே மிகப்பெரிதானதாக இருக்குமென்றும், இதன்மூலம் இந்திய-அமெரிக்க சமூக அணு உலை ஒப்பந்தத்தில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு, இந்தியாவில் அதிகரித்துவரும் சக்தி தேவைக்கு எரிபொருட்களை மட்டுமே நம்பியிருக்கவும் வேண்டியதில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொறியியல் பணிகளும், தளத்தை வடிவமைக்கும் பணிகளும் உடனே ஆரம்பிக்க இருப்பதாகவும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பணிகள் அனைத்தையும் ஜூன் 2017க்குள் முடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்க இருப்பதாகவும் இந்திய அணுசக்தி துறை நிறுவனமும், வெஸ்டிங்கவுஸ் நிறுவனமும் இணைந்து அறிவித்தன.
இந்தியாவும், அமெரிக்காவும் வானிலை மற்றும் தூயசக்தி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரே மாதிரியான கொள்கைகளை கொண்டிருக்கின்றன. மேலும், வானிலை மாற்றத்துக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து போராடும். இருநாடுகளின் தலைவர்களும் வானிலை மாற்றத்துக்கு எதிராக உலக நாடுகளின் நடவடிக்கைகளை துரிதப்படுத்த கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க பாரீஸ் ஒப்பந்தத்தில் வற்புறுத்தினார்கள். பிற நாடுகளோடு இணைந்து வானிலை மாற்றத்தால் உலகம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்துக்களை எதிர்கொள்ள பாரீஸ் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவதில் இருநாடுகளும் உறுதியாக உள்ளன. தனது வாக்குறுதியை மீண்டும் உறுதிபடுத்திய அமெரிக்கா, இந்த ஆண்டிற்குள் பாரீஸ் ஒப்பந்தத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றும் பொருட்டு, இந்தியாவும் பணிகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது. புவிவெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்களை குறைந்த அளவில் வெளிப்படுத்தும் திட்டங்களை 2020க்குள் கண்டுகொண்டு, அதன்பின் நீண்டகாலத்திற்கு அவ்வழிமுறைகளை பின்பற்ற தாங்கள் கொண்டிருக்கும் உறுதியை தலைவர்கள் நினைவுகூர்ந்தனர். மேலும் 2016ல் HFC மாற்றத்தை ஏற்படுத்தி, பல்வேறு நாடுகளிடம் இருந்து நன்கொடை பெறுவதன்மூலம் மாண்ட்ரியல் நெறிமுறையின் கீழ் வளரும் நாடுகளும் படிப்படியாக இந்த திட்டங்களை செயல்படுத்த உதவவும் இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. சர்வதேச விமானங்களின் மூலம் அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க சர்வதேச விண்வழிப்போக்குவரத்து அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் G20 தலைமையின் கீழ், அந்தந்த நாடுகளின் தேவைக்கு ஏற்ப கனரக வாகனங்களின் தரத்தையும், செயல்திறமையையும் உயர்த்தவும் இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
எரிசக்தி பாதுகாப்பு, தூயசக்தி மற்றும் வானிலை மாற்ற விஷயங்களில் ஒத்துழைப்பு தருவது குறித்தும், கேஸ் ஹைட்ரேட்ஸ் ஒத்துழைப்பு குறித்தும் கையெழுத்தாகியிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
வளர்ச்சித் திட்டங்களில் வனவுயிர் பாதுகாப்பும் அடங்கும் என்ற பிரதமர் மோடியின் அறைகூவலை ஏற்கும் வண்ணம் வனவுயிர் பாதுகாப்பு மற்றும் வனவுயிர் கடத்தலை தடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
தூயசக்திநிதிஉதவி
100GW சூரியசக்தியை உள்ளடக்கிய 175GW புதுப்பிக்கத்தக்க சக்தியை உற்பத்தி செய்யும் நிலையத்தை நிறுவும் இந்திய அரசின் லட்சிய திட்டத்துக்கு அமெரிக்க அரசு துணை நிற்கும். ISA எனப்படும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை வரவேற்பதோடு, சூரிய சக்தியை பலதளங்களில் உபயோகப்படுத்த இந்த அமைப்பு முக்கியப்பங்காற்ற இருக்கிறது என்பதையும் உணர்வதோடு, அதில் உறுப்பினராகவும் அமெரிக்கா ஆர்வமாக இருக்கிறது. மேலும் இந்த அமைப்பை வலுவாக்கும் வகையில் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ISA துவக்க விழாவில் சக்தி தேவைகளுக்காக ஆஃப் க்ரிட் சோலாரை உபயோகப்படுத்துவதில் இந்தியாவும், அமெரிக்காவும் கவனம் செலுத்த உள்ளன. மற்ற வளர்ந்த நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஆண்டொன்றுக்கு 100பில்லியன் டாலர்களை 2020க்குள் வளரும் நாடுகள் சூரியசக்தி நிலையங்களை நிறுவவும், அதுசார்ந்த பிற தேவைகளுக்காகவும் ஒதுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா அதன் தொழிநுட்ப வல்லமை, வளம் மற்றும் தனியார் துறையையும் மனதில்கொண்டு இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு ISA அமைப்பின் பிற உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழும். இன்று 20 மில்லியன் டாலர் அமெரிக்க-இந்திய தூயசக்தி நிதியை (USICEF) இருநாடுகளும் அறிமுகப்படுத்தியுள்ளன. இரண்டுநாடுகளும் சம அளவில் பங்காற்றப்போகும் இந்த நிதி 2020க்குள் படிப்படியாக 400 மில்லியன் டாலர் வரை உயர்ந்து ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முக்கியமான நிதி நிறுவனுங்களுடன் இணைந்து அமெரிக்கா செய்யப்போகும் முதலீடுகள் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க சக்தியின் மீதான மொத்த முதலீட்டை பெருக்க உதவும். 40 மில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க இந்திய கேடலிடிக் சோலார் நிதி திட்டம் புதுப்பிக்கத்தக்க சக்தி மீதான சிறிய முதலீடுகளுக்கு, குறிப்பாக கிராமப்புற முதலீடுகளுக்கும், கூரைமேல் கிடைக்கும் சூரியசக்தியை அளந்து அதன்படி USAID உடனான ஒப்பந்தத்தை தொடரவும் உதவும். இந்த உதவி காலப்போக்கில் 1 பில்லியன் டாலர் அளவில் உயரவும் வாய்ப்புண்டு.
ஐந்தாண்டுகளுக்குள் சூரியசக்தி சார்ந்த தங்களின் ஆராய்ச்சிகளையும், முன்னேற்றங்களையும் இரட்டிப்பாக்கும் நோக்கில், COP-21ன் போது பாரீசில் மிஷன் இன்னொவேஷன் என்ற திட்டத்தை இரு நாடுகளும் அறிமுகப்படுத்தின. மேலும் 30 மில்லியன் டாலர்கள் செலவுசெய்து ஸ்மார்ட் க்ரிட் மற்றும் ஸ்மார்ட் ஸ்டோரேஜ் மீது பொது-தனியார் நிறுவனங்கள் கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் மிஷன் இன்னொவேஷன் திட்டத்தின் இலக்கின் மீது தொடர்ந்து கவனமாக இருக்கப்போவதாக இரண்டு தலைவர்களும் தெரிவித்தார்கள்.
உலகளவில் அதிகப்படியான ஆயுதக் கையிருப்பை தடுத்தல்
வாஷிங்டனில் நடந்த அணு பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் மோடியின் ஆக்கபூர்வமான பங்களிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டினார். மேலும் தீவிரவாத நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் பயங்கர ஆயுதங்களை சமாளிப்பது குறித்த மாநாடு ஒன்றை 2018ல் இந்தியா நடத்தப்போவதையும் ஒபாமா வரவேற்றார். தீவிரவாதிகள் ரசாயன, உயிரியல், அணு மற்றும் கதிரியக்க ஆயுதங்களை பயன்படுத்துவதை தடுப்பதில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பயங்கர ஆயுதங்களின் அபரிமிதமான உற்பத்தியையும், பரவலையும் தடுப்பதில் இருநாடுகளுக்கும் இருக்கும் அக்கறையை இரு தலைவர்களும் நினைவுபடுத்தினார்கள். பின்னர் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டகத்தில் இந்தியா நுழையவேண்டியது அத்தியாவசியமானது என்றும் குறிப்பிடப்பட்டது. அதோடு, அணுசக்தி வழங்குவோர் குழுவில் (NSG) உறுப்பினர் ஆவதற்காக இந்தியா விண்ணப்பித்திருப்பதை வரவேற்ற ஒபாமா, உறுப்பினர் ஆகும் தகுதி இந்தியாவிற்கு உண்டு என்பதையும் உறுதிபட தெரிவித்தார். இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் NSG கூட்டத்தில் இந்தியாவின் விண்ணப்பத்தை ஆதரிக்குமாறு NSGயில் பங்கு வகிக்கும் நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார். ஆஸ்திரேலியா குழுமம் மற்றும் வாசென்னார் உடன்படிக்கையில் இந்தியா உறுப்பினர் ஆவதற்கான ஆதரவையும் ஒபாமா தெரிவித்தார்.
நிலம், கடல், வானம், இணைவெளி ஆகியவற்றை பாதுகாத்தல்
2015ல் ஏசியா-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி சார்ந்து உருவாக்கப்பட்ட அமெரிக்க-இந்திய கூட்டு திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்கு இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். வரவிருக்கும் காலங்களிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற இது வழிகாட்டியாக இருக்கும். ஆசிய பசிபிக் பகுதியிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஒன்றை ஒன்று முக்கியமான கூட்டாளியாக கருத வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
கடல்வெளி பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் துவக்க விழா கூட்டத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். “ஒயிட் ஷிப்பிங்” தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் வகையில் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. இதன்மூலம் இருநாடுகளுக்கும் கடல்வழி பாதுகாப்பு மற்றும் கடற்பகுதி விழிப்புணர்வின் மீது இருக்கும் அக்கறை உறுதிசெய்யப்படும்.
அமெரிக்கா-இந்தியா இடையில் கடல்வெளி பாதுகாப்பு விஷயத்தில் இருக்கும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் உறுதி செய்துகொண்டனர். கடல்வழி பயணம் சிக்கலின்றி தொடர வழிவகை செய்யும் அதே சமயம், அதிக எடை ஏற்றுவது, கடல் வளங்களை சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐநா கடல்சார் சட்டத்துக்கு மாறாக சுரண்டுவது ஆகியவற்றை தடுப்பதுடன், கடல் எல்லை பிரச்சினைகளை அமைதியாக தீர்க்கவும் முடிவுசெய்யப்பட்டது.
இருநாட்டு ராணுவங்களுக்கிடையில் கூட்டு சாகசங்கள், பயிற்சி மற்றும் மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம் (HA/DR) ஆகிவற்றிலான மேம்பட்ட ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர். நடைமுறையில் பயன்படத்தக்கவகையில் ராணுவம் தொடர்பாக இருதரப்பு ஒத்துழைப்பையும் கோரும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். அந்த வகையில் லாஜிஸ்டிக்ஸ் எக்சேஞ்ச் மெமோராண்டம் ஒப்பந்தத்தை (LEMOA) இருவரும் வரவேற்றனர்.
பாதுகாப்புத்துறையில் அமெரிக்கா-இந்தியா ஒத்துழைப்பு என்பது இருநாடுகளுக்கிடையிலான உறவை உறுதிப்படுத்துகிறது. மேலும், கீழ்க்கண்ட வகைகளில் எல்லாம் அமெரிக்கா தனது முக்கியமான ராணுவ கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியாவை அங்கீகரிக்கிறது.
தனது நெருக்கமான கூட்டாளிகளோடு அமெரிக்கா பகிர்ந்துகொள்ளும் தொழில்நுட்ப தகவல்களை இந்தியாவோடும் பகிர்ந்துகொள்ளும் வேலைகளில் அமெரிக்கா இறங்கும். இந்தியா தனது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்ற உறுதியின் பேரில் இருநாடுகளும் உபயோகிக்கத்தக்க தொழில்நுட்பங்களை எந்த உரிமமும் இல்லாமல் இந்தியா பெற முடியும்.
இந்தியாவின் ” மேக் இன் இந்தியா ” திட்டத்தை ஆதரிக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைத்து அவற்றை சர்வதேச சந்தையில் ஈடுபடுத்த அமெரிக்கா தனது தொழில் நுட்பங்களையும், சரக்குகளையும் ஏற்றுமதி செய்வதை தனது அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தொடரும்.
பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழில் முன்னெடுப்பின் (DTTI) கீழ் தொழில்நுட்பங்களை கூட்டாக உருவாக்கவும், மேம்படுத்தவும் இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளன. இந்தியாவின் ” மேக் இன் இந்தியா ” திட்டத்திற்கும் இது வலு சேர்க்கும். கடற்படை அமைப்புகள், காற்று அமைப்புகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் போன்ற ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களை தயாரிக்க புதிதாக DTTI அமைப்பதற்கான திட்டத்தையும் இருவரும் வரவேற்றனர். விமானந்தாங்கிக் கப்பல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல் பரிமாற்றம் குறித்த பிற்சேர்க்கை ஒன்றின் இறுதிவடிவத்தை இரு தலைவர்களும் வெளியிட்டனர்.
இந்தியாவில் நடைபெற்ற பாதுகாப்பு போர்க் கைதிகள் / நடவடிக்கைகளின் போது காணாமல் போனவர்கள் (POW/MIA) குறித்த கணக்கிடும் முகமை இயக்கத்திற்கு பிரதமர் மோடி அளித்த ஆதரவுக்கு ஒபாமா நன்றி தெரிவித்தார். அதோடு சேர்த்து இரண்டாம் உலகப்போரில் காணாமல் போன அமெரிக்க உறுப்பினர்களின் பூத உடல் மிச்சங்களை தேடி தாய்நாட்டு திருப்பி அனுப்பும் பணியும் நடைபெற்றது. எதிர்காலத்திலும் இதுபோன்ற (DPAA) இயக்கத்திற்கு இருநாடுகளின் ஒத்துழைப்பும் இருக்கும் என தலைவர்கள் தெரிவித்தார்கள்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகள் என்ற வகையில் இருநாடுகளுமே விண்வெளி ஆராய்ச்சி என்பது விரிவுபெற்றுக் கொண்டே இருக்க வேண்டிய விஷயம் என்பதை ஒப்புக்கொள்வதுடன், பூமி கண்காணிப்பு, செவ்வாய் கிரக ஆராய்ச்சி, விண்வெளி படிப்பு மற்றும் விண்வெளி பயணம் ஆகிவற்றிலும் இணைந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்தார்கள். இஸ்ரோ-நாசா கூட்டாக செயல்படும் ஹீலியோஃபிசிக்ஸ் பணியிடம் ஒன்றை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், செயற்கைக்கோள் வழியாக கிடைக்கும் பூமி கண்காணிப்பு தகவல்களை பரிமாறிக்கொள்வதன் பொருட்டும் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதையும் இருதலைவர்களும் வரவேற்றனர்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இணையவெளி பெரும்பங்கு ஆற்றுகிறது என்றும், பரந்த, பாதுகாப்பான, நம்பகத்தன்மைவாய்ந்த இணையவெளியை உருவாக்குவதே நோக்கம் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர். இணைய பாதுகாப்பை பொறுத்தவரை இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் என அறிவித்த தலைவர்கள், அமெரிக்கா-இந்தியா இணையவெளி உறவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் வரையறுப்பது என்ற முடிவையும் வரவேற்றார்கள். மேலும் இணையவெளி குற்றங்கள், அரசு மற்றும் அரசு சாராத ஆட்களால் நடத்தப்படும் தவறான இணைய செயல்பாடுகள், இணையபாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து வகையான வியாபாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஆகியவற்றில் இருநாடுகளுக்குமிடையில் நிலவும் இணையவெளி உறவை மேம்படுத்துவது குறித்தும் முடிவுசெய்யப்பட்டது. ICANN, IGF மற்றும் பிற அமைப்புகளின் மூலம் தொடர்ந்து இணைய கண்காணிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் இருதலைவர்களும் உறுதி தெரிவித்தார்கள். ஐநா வரையறை, அமைதிகாலத்தில் அரசின் நடத்தை விதிகள், நாடுகளுக்கிடையில் பரஸ்பர நம்பகத்தன்மையை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் போன்ற சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இணையவெளியில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
மேலும் முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகளை சேதப்படுத்தும் வகையிலோ, அவ்வசதிகளின் பொதுமக்கள் பயன்பாட்டை சீர்குலைக்கும் வகையிலோ ஆன இணையப் பணிகளில் எந்த நாடும் ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ கூடாது என்றும் தலைவர்கள் தெரிவித்தார்கள். மேலும், இணையவெளி குற்றங்களை கண்டறியும் குழுக்களுக்கு தடங்கல் விளைவிக்கும் வகையில் எந்த நாடும் செயல்படக்கூடாது என்றும், எல்லா நாடுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அதேபோல எந்த நாடும் தங்கள் நாட்டு வியாபார நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் இணையவெளியில் இருந்து வியாபார ரகசியங்கள், அறிவுசார் உடமைகள் போன்றவற்றை திருடும் வேலைகளில் ஈடுபடவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓரணியில் நிற்பது
பாரீஸ் தாக்குதலில் இருந்து பதன்கோட் தாக்குதல் வரை, பிரசல்ஸ்சில் இருந்து காபூல் வரை மனிதகுலம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் இருக்கிறது என்பதை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். இருதரப்பும் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளை இருமடங்காக உயர்த்துவது என்றும், தீவிரவாதத்தில் ஈடுபடும் மற்றும் அதை ஆதரிப்பவர்கள் எங்கிருந்தாலும் மற்ற நாடுகளின் உதவியை பெற்று அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தவும் உறுதிபூண்டனர்
ஜனவரி 2015 அமெரிக்கா-இந்தியா கூட்டறிக்கையில் உள்ளபடி 21ஆம் நூற்றாண்டின் மிகமுக்கியமான கூட்டுசெயல்பாடாக, தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கா-இந்தியாவின் ஒத்துழைப்பை உருவாக்குதல் குறித்து முடிவுசெய்யப்பட்டது. அதேபோல செப்டம்பர் 2015ல் வெளியான தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்த அமெரிக்கா-இந்தியா பிரகடனத்தின்படி தீவிரவாதத்திற்கு எதிரான இருநாடுகளின் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தவேண்டும் எனவும் முடிவுசெய்தனர்.
அல்கொய்தா, டயிஷ் / ஐ. எஸ். ஐ. எல், ஜய்ஸ்-இ முகமது, லக்ஷர்-இ-தொய்பா, டி-கம்பனி போன்ற தீவிரவாத அமைப்புகளின் கூட்டாளிகளுக்கு எதிராகவும், ஐநா அறிவித்துள்ள தீவிரவாதப் பகுதிகளிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது என்றும் தலைவர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி தீவிரவாதத்திற்கு எதிராக அடுத்து நடக்கவிருக்கும் அமெரிக்கா-இந்தியா சந்திப்பிற்குள் எந்த வகைகளில் எல்லாம் இருநாடுகளும் இணைந்து பணியாற்றலாம் என்பதை கண்டறியுமாறு தலைவர்கள் தங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
தீவிரவாதத்திற்கு எதிரான இருநாடுகளின் நடவடிக்கைகளில் மைல் கல்லாக, தீவிரவாதிகளை கண்டறிந்து அவர்களின் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதை இரு தலைவர்களும் வரவேற்றார்கள். மேலும் மும்பையில் 2008லும், பதன்கோட்டில் 2016ல் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தானுக்கு அழைப்புவிடுத்தார்கள்.
சர்வதேச தீவிரவாதத்தின் மீதான ஐநாவின் விரிவான மாநாட்டுக்கு தலைவர்கள் தங்கள் ஆதரவை உறுதி செய்தார்கள். இதன்மூலம் தீவிரவாதத்திற்கு எதிரான உலகளவிலான நடவடிக்கைகள் வலுப்பெறுவதுடன், எக்காரணத்தைக் கொண்டும் தீவிரவாதத்தை யாரும் நியாயப்படுத்த முடியாது என்பதும் உறுதிசெய்யப்படும்.
பொருளாதார மற்றும் வியாபார தொடர்புகளை வலுப்படுத்துதல்
அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் பொருளாதார உறவு வலுப்படுவதையும், விரிவடைவதையும் தலைவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த பொருளாதார உறவு பரஸ்பர நம்பகத்தன்மையுடனும், நிலையான வளர்ச்சியுடையதாகவும், தேவைகளை ஊக்கப்படுத்துவதாகவும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதாகவும், திறமைகளை பெருக்குவதாகவும், புதிய கண்டுபிடிப்புகளை கொணர்வதாகவும் இருக்க இருநாடுகளும் முழு ஆதரவு தரும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இருதரப்பு வியாபாரங்களை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தும் பொருட்டு சரக்கு மற்றும் சேவைகளை கொண்டுசேர்ப்பதில் எந்தெந்த வகைகளில் எல்லாம் தடைகளை தளர்த்தலாம் என ஆலோசிக்கப்பட்டது. மேலும் உலக சந்தையில் இன்னும் தீவிரமாக பங்குபெறுவதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்கி, இருநாடுகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவது குறித்தும் அலசப்பட்டது. இந்தியாவில் நடக்க இருக்கும் இரண்டாவது வியாபார மற்றும் வியூக பேச்சுவார்த்தையில் இதன்பொருட்டு எடுக்கப்படவேண்டிய முக்கியமான நடவடிக்கைகளை கண்டறிவது என்றும் முடிவு செய்யப்பட்டது. வர்த்தகக் கொள்கை மன்றத்தின் (TPF) கீழ் உள்ள வியாபார மற்றும் முதலீட்டு பிரச்சினைகள் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது என்றும் குறிப்பிடத்தக்க முடிவுகளை இந்த ஆண்டுக்குள் எட்டுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. மேலும் இந்தியாவின் திறன் நகர் திட்டத்தில் அமெரிக்க தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பையும் வரவேற்றனர்.
இருநாடுகளையும் சேர்ந்த 1.5 பில்லியன் மக்களுக்கிடையில் நிலவும் வலிமையான நட்புறவை இரு தலைவர்களும் பாராட்டினார்கள். மேலும் சுற்றுலா, வியாபாரம், கல்வி என பலவகைகளில் 1 மில்லியன் பேர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 2015ஆம் ஆண்டு பயணப்பட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ இதே எண்ணிகையில் அமெரிக்காவில் இருந்தும் மக்கள் இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார்கள். இருநாடுகளில் இருந்தும் தொழில்முறை வல்லுனர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் பரஸ்பரம் பயணம் செய்தவன் மூலம் மக்கள் தொடர்பு மேம்படும் என்பதால் அதை ஊக்குவிக்க இருதலைவர்களும் உறுதிபூண்டார்கள். மேலும் உலகளாவிய நுழைவுத் திட்டத்தை ஊக்குவிக்கும் விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். அது மட்டுமல்லாது அடுத்த மூன்று மாதங்களுக்குள் உலகளாவிய நுழைவுத் திட்டத்தில் இந்தியா நுழைவதற்குண்டான பணிகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2015 மற்றும் ஜூன் 2016 சந்திப்புகளில் அமெரிக்கா-இந்தியா கூட்டு ஒப்பந்தத்திற்கு தேவையான அனைத்து விஷயங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடந்துள்ளதை குறிப்பிட்ட தலைவர்கள், தொடர்ந்து இதேபோன்ற பேச்சுவார்த்தைளை இந்த ஆண்டின் இறுதியில் தொடரப்போவதாக தெரிவித்தார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் 2017 உலகளாவிய தொழில்முனைவோர் மாநாட்டை இந்தியா நடத்துவதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
உயர்மட்ட வேலைகளில் இருப்போரின் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளால் தெளிவான தீர்வுகளை எட்டுவதன் மூலம் இருநாடுகளிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இடையே ஒத்துழைப்பு பெருகும் என்றும் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
ஆசியா பசிஃபிக் பொருளாதார கூட்டமைப்பு மன்றத்தில் உறுப்பினராவதில் ஆசியாவின் முக்கியமான பொருளாதார சக்தியான இந்தியா காட்டிவரும் ஆர்வத்தை அமெரிக்கா வரவேற்றது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்
லேசர் இண்டெர்ஃபெரோமீட்டர் க்ராவிடேஷனல் வேவ் அப்சர்வேட்டரி (LIGO) இந்தியாவில் அமைப்பது குறித்த ஏற்பாட்டில் குறிப்பிட்டபடி அறிவியலின் அடிப்படை கொள்கைகளை ஆராய்வதில் இருநாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது என்றும், இந்திய-அமெரிக்க கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் இருநாடுகளின் அறிவியல் துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
செப்டம்பர் 2016ல் வாஷிங்டனில் நடக்க இருக்கும் பெருங்கடல் குறித்த மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பையும், இந்தியா-அமெரிக்கா இடையிலான முதல் பெருங்கடல்சார் பேச்சுவார்த்தையையும் பெரிதாக எதிர்நோக்குவதாக அமெரிக்கா தெரிவித்தது. இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் கடல்சார் அறிவியல், பெருங்கடல் சக்தி, கடல் உயிரினங்களை நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல், கடல் மாசுபடுவதை குறைத்தல், கடல்வளங்களை சரியாக உபயோகப்படுத்துதல் குறித்த விஷயங்களில் புரிதல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உலகளாவிய சுகாதார பாதுகாப்பு கொள்கைகளிலும், அவற்றை சரியான நேரத்திற்குள் நடைமுறைபடுத்துவதிலும் இரு தலைவர்களும் தங்கள் அக்கறையை வெளிப்படுத்தினார்கள். நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு துறைகளில் இந்தியாவின் பங்களிப்பை பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார். கூட்டு மதிப்பீடுகளை பகிர்வதன் மூலம் உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) இணைந்து செயல்படப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பன்மருந்து எதிர்ப்புசக்தி கொண்ட காசநோய் (MDR-TB) பெரும் ஆபத்தாக வளர்ந்து வருவதை இரு தலைவர்களும் குறிப்பிட்டார்கள். மேலும் காசநோய் தடுப்பில் இணைந்து செயல்படுவது என்றும், இருநாடுகளிலும் அதற்கென உள்ள நடைமுறைகளை பகிர்ந்துகொவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
தொற்றாத நோய்கள் வளர்ந்து வருவதையும், இவற்றை தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளை ஊக்குவிப்பது, சர்க்கரை கட்டுப்பாடு, உப்பு அளவைக் குறைத்தல், குழந்தைகளிடையே உடற்பயிற்சிகளை ஊக்குவித்தல், புகையிலை பழக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. சுகாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா உள்ளிட்ட பழங்கால வழக்கங்களையும், மருத்துவங்களையும் ஊக்கப்படுத்தவேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.
காசநோய், சிக்குன்குன்யா போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை கண்டறியும் மற்றும் மேம்படுத்தும் அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் விதத்தில் செயல்படும் அமெரிக்கா-இந்தியா நோய்தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவது அத்தியாவசியம் என இருதலைவர்களுமே வற்புறுத்தினார்கள்.
உலகத்தலைமை
இருநாடுகளும் இணைவதோடு மட்டுமல்லாது சர்வதேச சமூகத்துடனும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஐநாவின் வல்லமையை பெருக்கி உலகளவில் வளர்ந்துவரும் பாதுகாப்பு குறித்த சவால்களை எதிர்கொள்வது என முடிவுசெய்யப்பட்டது. செப்டம்பர் 2015ல் வரையறுக்கப்பட்டபடி, 2030ம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சியை அடைதல் என்ற குறிக்கோளில் இருக்கும் உலகளாவிய தன்மையை கண்டுகொண்டு, அவற்றை உள்நாட்டு, சர்வதேச விஷயங்களில் நடைமுறைபடுத்துவதன் மூலம் நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என இருதலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இரு தலைவர்களும் தங்கள் ஆதரவை உறுதி செய்தார்கள். உலக அமைதி மற்றும் பாதுகாப்பில் ஐநா பாதுகாப்பு சபையின் பங்கு அளப்பெரியது என்பதை குறிப்பிட்டதோடு, அரசுகளுக்கிடையிலான ஐநா பேச்சுவார்த்தைகளில் தேவையான மாற்றங்களை கொண்டுவர தொடர்ந்து முயற்சிசெய்வோம் என்றும் தலைவர்கள் தெரிவித்தார்கள்.
ஐநா அமைதிக்குழு மாநாட்டின் வெற்றியை வரவேற்ற தலைவர்கள், மூன்றாம் உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதில் ஐநாவின் பங்களிப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ஆப்பிரிக்க கூட்டுநாடுகளுக்கான முதல் ஐநா அமைதிக்குழு பயிற்சியை டெல்லியில் நடத்துவது என்றும், அதில் ஆப்ரிக்காவில் இருந்து பத்து நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்திய, அமெரிக்க உடன்படிக்கைகளை குறிப்பிடுகையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து பணிபுரிவதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தில் செழுமையையும், அமைதியையும் நிலைநாட்டுவதில் இருநாடுகளும் ஒரேவிதமான ஆர்வத்தை கொண்டிருப்பதை தலைவர்கள் சுட்டிக்காட்டினர். விவசாயம், சுகாதாரம், சக்தி, மகளிர் மேம்பாடு போன்ற விஷயங்களில் முத்தரப்பு ஒத்துழைப்பை வரவேற்பதாகவும் தலைவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ஆப்ரிக்காவில் மட்டுமல்லாது ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள நாடுகளின் வளர்ச்சியிலும் அமெரிக்கா-இந்தியா இணைந்து பணியாற்றும் என்றும் குறிப்பிட்டார்கள்.
மக்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்துதல்
இருநாடுகளிலும் மேலும் சில தூதரகங்களை திறப்பதில் இரண்டு தலைவர்களும் ஆர்வம் காட்டினார்கள். சியாட்டில் நகரில் இந்தியா ஒரு தூதரகத்தை திறப்பது என்றும், அமெரிக்காவின் தூதரகம் ஒன்று விரைவில் இந்தியாவில் திறக்கப்படும் என்றும்முடிவுசெய்யப்படது.
இந்தியாவும், அமெரிக்காவும் 2017ஆம் ஆண்டுக்கான பயணம் மற்றும் சுற்றுலா துறை கூட்டாளிகளாக செயல்படும் என்றும், இருநாட்டு மக்களுக்கும் விசா வழங்கும் நடைமுறைகள் எளிமைபடுத்தப்படும் என்றும் தலைவர்கள் தெரிவித்தார்கள்.
இருநாடுகளுக்கு இடையில் நிலவும் கல்வி மற்றும் கலாச்சார தொடர்புகளை குறிப்பிடும்போது, அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 29%, அதாவது 133,00ஆக 2014-2015ல் வளர்ச்சியடைந்துள்ளதை சுட்டிக்காட்டி, அதேபோல் இந்தியாவில் அமெரிக்க மாணவர்கள் படிக்கவும் வழிவகை செய்யப்படும் என குறிப்பிட்டார்கள். மேலும், மாறிவரும் வானிலை பிரச்சினைகளை எதிர்கொள்ள வானிலை விஞ்ஞானிகளை உருவாக்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபுல்பிரைட்-கலாம் வானிலை கல்வி உதவித்தொகை திட்டத்தில் இரண்டு நாடுகளும் ஆற்றிய பங்கை தலைவர்கள் வரவேற்றார்கள்.
இரண்டுநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கம் இருநாடுகளுக்கும் உண்டு என்பதை குறிப்பிட்டு, சட்டம், நாடுவிட்டுநாடு திருமணம் செய்வது, விவாகரத்து, குழந்தை காப்பு போன்ற விஷயங்களில் இருநாட்டு குடிமக்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் எதிர்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டது.
பிரதமர் மோடி இந்தியாவின் பழங்கால பொருட்களை அமெரிக்கா திருப்பியளித்ததை வரவேற்றார். மேலும் கலாச்சார பொருட்களின் கடத்தலை தடுப்பதிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் எனவும் தலைவர்கள்
அறிவித்தார்கள்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பிற்கும், சிறப்பான விருந்தோம்பலுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அத்தோடு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வசதிப்படி அவர் இந்தியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் வருகை தரலாம் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
Delighted to meet @POTUS again. We had very good discussions on India-USA ties. pic.twitter.com/dcxkWI5gnO
— Narendra Modi (@narendramodi) June 7, 2016
'The United States and India: Enduring Global Partners in the 21st Century'...the India-US Joint Statement. https://t.co/3BGlBXOUgo
— Narendra Modi (@narendramodi) June 7, 2016
The India-US Joint Statement covers important topics of India's relations with USA, including clean energy, defence, security & trade.
— Narendra Modi (@narendramodi) June 7, 2016
The Statement reaffirms the joint commitment of India & USA to stand together against terrorism & violent extremism.
— Narendra Modi (@narendramodi) June 7, 2016
We want to deepen cooperation in science, technology, health & boost people-to-people ties. This has been addressed in the Joint Statement.
— Narendra Modi (@narendramodi) June 7, 2016