பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 16, 2019 அன்று மகாராஷ்டிராவில் யவத்மால் மற்றும் துலே ஆகிய நகரங்களுக்கு வருகை தருகிறார். அம்மாநிலத்தின் பல்வேறு திட்டங்களை அவர் துவக்கி வைக்கிறார்.
யவத்மால்
பிரதமர், நான்டெடில் ஏகலவ்யா மாதிரி உறைவிடப்பள்ளியை பொத்தானை அழுத்தி தொடங்கி வைக்கிறார். 420 மாணவர்கள் பயிலும் திறன் கொண்ட இப்பள்ளியில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பழங்குடியின மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், அவர்களது சுயவளர்ச்சிக்கும், இப்பள்ளி வாய்ப்பளிக்கும்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, மின்னணு கிரஹப்பிரவேசத்தின் மூலம், அதற்கான திறவுகோலை பிரதமர் வழங்க உள்ளார்.
பிரதமர் அஜ்னி (நாக்பூர்) – புனே ரயில் போக்குவரத்தை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்துத் துவக்கி வைக்கிறார். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 3 அடுக்கு படுக்கை வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இதில் இடம் பெற்றுள்ளன. நாக்பூருக்கும் புனேவுக்கும் இடையே இந்த ரயில், இரவு நேரத்தில் இயக்கப்படுகிறது. மத்திய சாலை நிதித் திட்டத்தின் கீழ் சாலைகளுக்கான அடிக்கல் நாட்டுவதும், பொத்தானை அழுத்தித் தொடங்கி வைக்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பிரதமர் சான்றிதழ்களையும் காசோலைகளையும் வழங்குகிறார். மகாராஷ்டிர மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் மற்றும் வேளாண் அல்லாத வாழ்வாதார வாய்ப்புக்காக வீட்டுக்கு வீடு நேரில் வந்து நிதிச் சேவையை அளிக்கும் வகையில், சமூகப் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.
துலே
பிரதமர் பின்னர் மகாராஷ்டிராவில் உள்ள துலேவுக்கு வருகை தருகிறார். அங்கு அவர் பிரதமர் கிருஷி சின்ஜான் திட்டத்தின் கீழ், கீழ்நிலை பனாசாரா நடுத்தரத் திட்டத்தைத் துவக்கி வைக்கிறார். இந்தத் திட்டம் பிஎம் கேஎஸ்ஒய் 2016-17 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. துலே மாவட்டத்தில் 21 கிராமங்களில் 7585 எக்டர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்யும் வகையில், இந்தத் திட்டம் 109.31 எம் சி யு எம் தண்ணீரை இருப்பு வைத்திருக்கும் திறன் கொண்டதாகும்.
பிரதமர், சுல்வாடே ஜம்பால் காணொலி உயர் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டம் தபி நதியில் மழைக்காலத்தில் 124 நாட்களில் 9.24 டி எம் சி வெள்ள நீரை வெளியேற்றும் திறன் கொண்டதாகும். துலே மாவட்டத்தில் சுமார் 100 கிராமங்களில் 33,367 எக்டர் நிலப்பகுதியில் நீர்ப்பாசன வசதி செய்ய இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர், அம்ருத்தின் கீழ் துலே நகர குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பை இத்திட்டம் உறுதி செய்யும்.
துலே – நர்தனா ரயில், மற்றும் ஜல்கான் – மன்மாட் 3-வது ரயில்பாதை ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர், புசாவல் – பந்த்ரா கண்டேஷ் விரைவு ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்த இரவுநேர ரயில் போக்குவரத்து சேவை மும்பை, மற்றும் புசாவலுக்கு ஆகியவற்றுக்கு இடையே நேரடி இணைப்பை ஏற்படுத்தும். வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்த ரயில் இயக்கப்படும்.
ஜல்கான் – உதானா இரட்டை ரயில்பாதை மற்றும் மின்சார ரயில் திட்டத்தை அவர் துவக்கி வைக்கிறார். ரயில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் திறன் இந்த சேவை மூலம் அதிகரிக்கும். நந்தூர்பார், வயாரா, தரண்கான் மற்றும் அப்பிரிவில் உள்ள இதர இடங்களின் மேம்பாட்டுக்கு இந்த ரயில் சேவைத் திட்டம் உந்துசக்தியாக அமையும்.
—–