பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு நாளை, (பிப்ரவரி 19, 2019-ல்) பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.
வாரணாசியில் முதன்முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல் தொடர் வண்டியை பிரதமர் கொடியசைத்து துவக்கிவைப்பார். பிறகு அவர் தொடர்வண்டிக் கூடத்தை ஆய்வு செய்த பின், கண்காட்சியைப் பார்வையிடுவார்.
டீசல் தொடர்வண்டிக் கூடம் இரண்டு டபுள்யு.டி.ஜி 3 ஏ டீசல் தொடர்வண்டியை 10,000 ஹெச்.பி திறன் கொண்ட இரு மின்னணு டபுள்யு.ஏ.ஜி.சி 3 ஆக மாற்றியமைத்துள்ளது. “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” முன்முயற்சியான இந்த மாற்றம், ஒட்டுமொத்த உலகுக்கும் இந்திய ஆய்வு மற்றும் ஆராய்ச்சித் துறையின் புதிய கண்டுபிடிப்பாகும். மாற்றியமைக்கப்பட்ட இந்த தொடர் வண்டிகள் குறைந்த பசுமை எரிவாயுவை வெளியிடுவதுடன் இந்திய ரயில்வேக்கு சிறந்த இழுபொறியையும் வழங்குகிறது.
சிர்கோவெர்தனாபூரில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜென்மஸ்தன் கோயிலில் குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பிறகு அவர் ஸ்ரீ குரு ரவிதாஸ் திருவுருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்துவார். பின்பு அவர் மக்களிடையே உரையாற்றுவார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையத்தை பிரதமர் துவக்கி வைப்பார். உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார், உத்ராகண்ட் மற்றும் நேபாள் போன்ற அண்டை நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையில் புற்றுநோய் சிகிச்சை வழங்கப்படும்.
லெஹர்தாராவின் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையையும் பிரதமர் துவக்கி வைப்பார். இந்த இரு புற்றுநோய் மருத்துவமனைகள் திறக்கப்படுவதன் மூலம், புற்றுநோய் தொடர்பான பிரச்சினைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் மையமாக வாரணாசி திகழும்.
துல்லியமான தொழில்நுட்பம் கொண்ட முதல் பாபாடிரான்-ஐ பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பண்டிட் மதன்மோகன் மாளவியாவின் சிலையையும் வாரணாசி மலையின் சுவர் ஓவியங்களையும் அவர் திறந்து வைப்பார். பிறகு அவர் அந்த பல்கலைக் கழகத்தில் பிரதமர் மக்கள் ஆரோக்கியத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுவார்.
பிறகு அவர் வாரணாசியில் உள்ள ஆரே கிராமத்தில் வாரணாசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சுகாதாரம் மற்றும் பிற துறைகளை நோக்கமாக கொண்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைப்பார். பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு பிரதமர் சான்றிதழ்களை வழங்குவார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் உபகரணங்களையும், கருவிகளையும் அவர் வழங்குவார். பிறகு அவர் மக்களிடையே உரையாற்றுவார்.
***************