பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு ஆப்கானிஸ்தானின் உயரிய விருதான அமீர் அமானுல்லா கான் விருது வழங்கப்பட்டது. நேற்று நடந்த ஆப்கான்-இந்தியா நட்பு அணை திறப்பு விழாவிற்குபின் ஆப்கானிஸ்தான் அதிபர் திரு. அஷ்ரப் கனி பிரதமர் மோடிக்கு இவ்விருதினை வழங்கினார்.
இது குறித்து பிரதமர் தனது டுவிட்டரில், “அமீர் அமானுல்லா கான் விருது வழங்கியதற்காக ஆப்கானிஸ்தான் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கும் மற்ற வெளிநாட்டவர்களுக்கு ஆப்கான் அரசு அளிக்கும் மிக உயர்ந்த விருது இது. இந்த விருதின் பின்புறம் “நிஷான்-இ தாவ்லதி கசி அமீர் அமானுல்லா கான்” அல்லது “காசி அமீர் அமானுல்லா கான் மாநில ஆணை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பின்னணி:
ஆப்கானிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருது அமீர் அமானுல்லா கான் விருது. ஆப்கானிஸ்தானின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர் அமானுல்லா கானின் (கசி) பெயரில் இந்த விருது அளிக்கப்பட்டது. அவர் 1919-1929 வரை அவர் ஆப்கானிஸ்தானை ஆண்டார்.
மன்னர் அமானுல்லா உருவாக்கிய ஆப்கானிஸ்தானின் நவீன அரசியலமைப்புச் சட்டம், சம உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலினருக்கும் பொதுவான காஸ்மோபாலிட்டன் பள்ளிகளை உருவாக்கி, நாட்டினை நவீனப்படுத்தி ஐரோப்பா மற்றும் ஆசியாவுடனான ஆப்கானிஸ்தான் வர்த்தகத்தை அதிகரிக்க வழிவகுத்துள்ளார். ஆப்கானிஸ்தானின் சுதந்திரம் நவீனத்துவம் ஆகியவற்றிற்கான மன்னர் அமானுல்லாவின் கொள்கைகள் இன்றளவும் பொருந்தக்கூடியவை.
மன்னர் அமானுல்லா இந்தியாவுடன் வலுவான உறவினை ஏற்படுத்தினார். 1929-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவரது அன்பான உறவு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவினை மேலும் வலுப்படுத்தியது.
ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆப்கான்-இந்தியா நட்பு அணை துவக்கவிழாவிற்கு வருகை புரிந்த பிரதமர் மோடிக்கு அமீர் அமானுல்லா கான் விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற வெகுசில வெளிநாட்டவர்களில் இந்த விருதினை பெரும் முதல் இந்திய குடிமகன் பிரதமர் மோடி. இந்தியா-ஆப்கான் உறவினை வலுப்படுத்த பிரதமர் மேற்கொண்ட முயற்சிகளுக்கான சான்றுதான் இந்த விருது.
இந்த விருதினை 2006-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் அரசு வழங்கி வருகிறது. இதற்கு முன் இவ்விருது பெற்றவர்களின் பட்டியல்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், கசாக் அதிபர் நூர் சுல்தான் நாசர்பாயேவ், துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன், நேட்டோ தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ், முன்னாள் ஆப்கன் அதிபர் ஆன்மிக தலைவர் சிப்கத்துல்லா முஜாதேடி மற்றும் ஆப்கன் தலைமை நீதிபதி அப்துல் சலாம் அசிமி
My deepest gratitude to the Government of Afghanistan for conferring the Amir Amanullah Khan Award. pic.twitter.com/EfzeXIBdK1
— Narendra Modi (@narendramodi) June 4, 2016