பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் மேன்மைமிகு உர்சுலா வான் டெர் லெயெனிடம் தொலைபேசி வழியே உரையாடினார். இரு தலைவர்களும் கொவிட்-19 உயிர்கொல்லி நோயால் உலகெங்கிலும் உண்டாகியுள்ள நிலைமை குறித்து பேசினர்.
அப்போது பிரதமர், ஐரோப்பிய யூனியனில் கொவிட்-19 நோயினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். இந்த உயிர்கொல்லி நோயை எதிர்த்துப் போராடுவதற்கு, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அப்போது பிரதமர் விளக்கினார்.
பிரதமர் தலைமையில் எடுக்கப்பட்ட விரைவு நடவடிக்கைகள், நோய் இந்தியாவில் வேகமாக பரவுவதை தடுத்ததில் முக்கிய பங்கு வகித்ததாக திருமதி உர்சுலா வான் டெர் லெயென் குறிப்பிட்டார். ஐரோப்பிய குடிமக்களுக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருமதி உர்சுலா வான் டெர் லெயென், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்றும் தெரிவித்தார்.
ஜி-20 கட்டமைப்புக்குள் மேற்கொள்ள வேண்டிய ஒத்துழைப்பை குறித்தும், இது தொடர்பாக விரைவில் நடக்கவிருக்கும் காணொலி ஆலோசனை குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.
*****