Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடியை ரஷ்யக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ் சந்தித்தார்


ரெய்சினா பேச்சுவார்தைதையில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ரஷ்யக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ் இன்று (15.01.2020) பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

ரஷ்யக்கூட்டமைப்பின் அதிபர் திரு விளாடிமிர் புடினின் வாழ்த்துக்களை வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், பிரதமருக்குத் தெரிவித்தார். இந்த வாழ்த்துக்களை அன்புடன் ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்தப் புத்தாண்டில் ரஷ்ய மக்களின் அமைதிக்கும் வளத்திற்கும் தமது இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

2020 ஜனவரி 13 அன்று தொலைபேசி மூலம் அதிபர் புடினுடன் விரிவான உரையாடல் நடத்தியதைக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த ஆண்டு இருநாடுகளுக்கு இடையே தனித்துவமான பெருமைமிக்க ராணுவ ஒத்துழைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றியும் கூறினார்.

2020 மே மாதத்தில், வெற்றி தினத்தின் 75-வது ஆண்டு விழாவிலும், 2020 ஜூலை மாதத்தில் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடுகளிலும் பங்கேற்க, பிரதமரின் ரஷ்ய வருகையை அதிபர் புடின் எதிர்நோக்கியிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்தார். இந்த ஆண்டு பல்வேறு நிகழ்வுகளில் சந்திக்க அதிபர் புடினை வரவேற்ற பிரதமர், இந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் நடைபெற உள்ள வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டிற்கு வரவேற்க அதிபர் புடினை தாம் எதிர்நோக்கியிருப்பதாகவும் கூறினார்.

2019-ல் இருநாடுகளுக்கு இடையே பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு பயன்கள் கிடைத்திருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். ரஷ்யக் கூட்டமைப்பிற்கும் இந்தியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஏற்பட்ட 20-வது ஆண்டாகவும் விளங்குகின்ற 2020, ‘இந்த முடிவுகளின் அமலாக்க ஆண்டாக இருக்க வேண்டும்’ என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் பிராந்திய நிலையிலான முக்கிய விஷயங்களில் ரஷ்யாவின் நிலை குறித்து வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், பிரதமரிடம் விவரித்தார்.

—–