Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு. நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் திரு.டொனால்டு டிரம்ப்-புடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (19.08.2019) அமெரிக்க அதிபர் திரு.டொனால்டு டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். முப்பது நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பல்வேறு இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை, இரு தலைவர்களுக்கு இடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக, சுமூகமாகவும், நல்லிணக்கத்துடனும் இருந்தது.

இந்த ஆண்டு ஜூன் இறுதியில், ஒசாகாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் இடையே தாங்கள் இருவரும் சந்தித்துப் பேசியதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

ஒசாகாவில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்திய வர்த்தகத்துறை அமைச்சரும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியும் விரைவில் சந்தித்து, பரஸ்பரம் பலன் அளிக்கக்கூடிய வகையில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

பிராந்திய நிலைமையைப் பொறுத்தவரை, இந்தப் பிராந்தியத்தில் உள்ள சில தலைவர்கள் இந்தியாவுக்கு எதிரான வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசிவருவது, அமைதிக்கு உகந்ததல்ல என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும், பயங்கரவாதம் மற்றும் வன்முறையற்ற சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்தும் அவர், இந்த பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தினார்.

இந்தப் பாதையைப் பின்பற்றி, வறுமை, எழுத்தறிவின்மை மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் யாருடனும் இந்தியா ஒத்துழைக்கும் என்ற நிலைப்பாட்டையும் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் ஆவதை நினைவுகூர்ந்த பிரதமர், ஒன்றுபட்ட பாதுகாப்பான, ஜனநாயக ரீதியான மற்றும் உண்மையான சுதந்திரமுள்ள ஆப்கானிஸ்தானை உருவாக்குவதென்ற இந்தியாவின் நீண்டகால மற்றும் நிகரற்ற ஆதரவையும் உறுதிப்படுத்தினார்.

தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொள்ள ஒத்துழைத்து வரும் அதிபர் டிரம்ப்புக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.