மேதகு பிரதமர் சார்லஸ் மைக்கேல் அவர்களே, சீமாட்டிகளே, சீமான்களே,
நீங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு நன்றி,
பெல்ஜியத்துக்கு கடந்தவாரம் துயரமான வாரம். கடந்த எட்டு நாட்களாக பெல்ஜியம் மக்கள் அனுபவிக்கும் துன்பத் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். கடந்த வாரத்தில் பிரசல்சில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எண்ணற்ற முறை பயங்கரவாத வன்முறைக்கு ஆளானவர்கள் என்ற முறையில் உங்களின் துன்பத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். பிரதமர் அவர்களே, இந்த நெருக்கடியான கட்டத்தில் இந்தியா முழுவதும் பெல்ஜியம் மக்களுக்கு ஆதரவாக அணிதிரண்டு நிற்கிறது. எவ்வளவோ பணிகளுக்கிடையிலும் இந்த நிகழ்ச்சிக்காக நேரம் ஒதுக்கி வந்தமைக்கு எனது நன்றிகள். நமது பொதுவான சவால்களை சந்திக்கும் விதத்தில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம், குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தப் பேச்சு, தண்டனை பெற்றவர்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தப் பேச்சு முதலியவற்றில் நாம் துரிதமாக முடிவு காண இயலும்.
நண்பர்களே,
நம் இரு நாடுகளும் வரலாற்றில் நீண்டகாலமாக நட்புறவு கொண்டவை. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து வந்த ஒரு லட்சத்து 30,000 வீரர்கள் முதல் உலகப் போரில் பெல்ஜியம் மண்ணில் உங்கள் வீரர்களுடன் தோளோடு தோள் நின்று போராடினார்கள். 9,000 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள். இந்தியா – பெல்ஜியம் தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆனதை அடுத்த ஆண்டில் கொண்டாட இருக்கிறோம். நமது நட்புறவில் மைல்கல்லாக விளங்கும் இந்த விழாவைக் கொண்டாடும்போது பெல்ஜியம் மன்னர் மாண்புமிகு பிலிப் அவர்களை வரவேற்கிறோம். நம்மிரு நாடுகளிடையே கூட்டு நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் இதைக் கொண்டாட உள்ளோம். இன்று பிரதமர் சார்ல்ஸ் மைக்கேல் அவர்களுடன் நான் நடத்திய பேச்சுக்களில் நம் உறவுபற்றி முழுமையாக விவாதித்து இருக்கிறோம். பரஸ்பர வெளியுறவுக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்துவது இந்த உறவை மேம்படுத்த உதவும்
இந்த உலகில் பொருளாதாரத்தில் பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. எங்களது பரவலான பொருளாதார அடிப்படைகள் சிறப்பானவை. 7 சதவீத வளர்ச்சி வீதத்துடன் உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியுள்ள நாடுகளில் ஒன்றாக நாங்கள் எழுந்து நிற்கிறோம். இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் பெல்ஜியத்தின் திறனும் இணையும் போது இரு நாடுகளுக்கும் சிறந்த வாய்ப்புகளை திறந்துவிட முடியும். பெல்ஜியம் தொழில் நிறுவனங்களில் தலைமை நிர்வாக அலுவலர்களுடனும் இந்தியாவிலிருந்து வந்துள்ள தொழில் நிபுணர்களுடனும் நானும் பெல்ஜியம் பிரதமரும் இதற்கு முன்னர் ஆக்கபூர்வமான ஆலோசனை நடத்தினோம். இந்தியா மிகுந்த வேட்கையுடன் தொடங்கியுள்ள டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டங்களில் பெல்ஜிய அரசும் நிறுவனங்களும் தாமாகவே முன் வந்து பங்கு கொள்ள வேண்டும் என்று நான் அழைப்புவிடுக்கிறேன். பெல்ஜியம் தொழில் அதிபர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதன் மூலம் உற்பத்தி செலவைக் குறைத்து உலகம் முழுவதும் தங்களின் பொருட்களை விற்பனை செய்ய இயலும். கட்டமைப்பை, குறிப்பாக ரயில்வே மற்றும் துறைமுகங்களை நவீன மயமாக்குதல், 100 -க்கும் மே்பட்ட நவீன நகரங்களை உருவாக்குதல் ஆகிய இந்தியாவின் லட்சியத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பெல்ஜியம் நிறுவனங்களுக்கு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த கூட்டு முயற்சி புதிய உச்சத்தை நோக்கி நமது வர்த்தகத்தையும் தொழிலையும் உயர்த்த முடியும். இந்தியாவின் பொருளாதார சூழ்நிலைகள் அரசியல் வாக்குறுதிகள் ஆகியவற்றை நேரில் காண்பதற்கு இந்தியா வருமாறு பெல்ஜியம் பிரதமர் மைக்கேலை நான் அழைத்துள்ளேன். வைரங்கள் மட்டுமே நமது உறவு ஒத்துழைப்பை ஒளியேற்றும் என்பதில்லை. பருவநிலை மாற்றம் இன்று மனிதகுலம் சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக எழுந்து நிற்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஒத்துழைப்பை அதிகரிப்பது என்று நானும் உங்கள் பிரதமரும் முடிவு செய்துள்ளோம். கழிவுப் பொருட்களிலிருந்தும் சிறிய காற்றாலைகள் மூலமும் எரிசக்தி தயாரிப்பு, கதிரியக்கத்தை வெளியிடாத கட்டடங்கள் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த துறைகளில் பெல்ஜியத்தின் ஒத்துழைப்பை வரவேற்கிறோம். பிரதமர் மைக்கேலும் நானும் இந்தியாவின் மிகப்பெரிய ஒளித் தொலைநோக்கியை இப்போதுதான் துவக்கி வைத்தோம். நம் இரு நாடுகளும் பங்காளிகளாக இருப்பதன் மூலம் எவ்வளவு சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு நமது ஒத்துழைப்பின் மூலம் உருவான இந்த தயாரிப்பு உதாரணம். தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம், ஒலி- ஒளி, தயாரிப்பு, சுற்றுலா, உயிரி தொழில்நுட்பம், கப்பல் கட்டுதல் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றிலும் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் முன்னேற்றம் காண்கிறோம்.
நண்பர்களே,
இன்னும் சில மணி நேரத்தில் 13 -வது ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஐரோப்பிய யூனியன் தலைவர்களைச் சந்திக்க இருக்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரை ஐரோப்பிய யூனியன் என்பது எங்களின் நெருக்கமான கூட்டாளி. வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் ஒத்துழைப்பது குறித்து எங்கள் விவாதத்தில் முக்கிய இடம் பெறும். இந்தியாவுக்கும் பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் குறித்து ஏற்படும் ஆக்கபூர்வமான முன்னேற்றமும் கண்ணோட்டமும் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சியின் பயன்களை பெறும். பிரதமர் சார்ல்ஸ் மைக்கேல் அவர்கள் இங்கு வந்தமைக்கும் அவர்களின் உபசரிப்புக்கும் மீண்டும் எனது நன்றிகள். அவரது இந்திய வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
Combination of Belgian capacities & India's economic growth can create wonderful opportunities & benefit the world. https://t.co/s9lDufn1Eh
— Narendra Modi (@narendramodi) March 30, 2016