Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை காணொலி மூலம் வழங்கினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை காணொலி மூலம் வழங்கினார்


 

10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 230-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 50,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (18.01.2025) வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து பயனாளிகளுக்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொத்து அட்டைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வாமித்வா திட்டம் தொடங்கப்பட்டது என்று பிரதமர் குறிப்பிட்டார். வெவ்வேறு மாநிலங்கள் சொத்து உரிமைச் சான்றிதழ்களை கரோனி, அதிகார் அபிலேக், சொத்து அட்டை, மல்மட்டா பத்ராக், ஆவாசியா பூமி பட்டா போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு ஸ்வாமித்வா அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று திரு மோடி கூறினார். இன்றைய நிகழ்ச்சியில், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த அட்டைகளைப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ், கிராமங்களில் சுமார் 2.25 கோடி மக்கள் தற்போது தங்கள் சொத்துகளுக்கான சட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து பயனாளிகளுக்கும் தமது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, சுகாதார நெருக்கடிகள், தொற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை 21-ம் நூற்றாண்டு முன்வைக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், உலகம் எதிர்கொள்ளும் மற்றொரு குறிப்பிடத்தக்க சவால் சொத்துரிமை பிரச்சினை, சட்டப்பூர்வ சொத்து ஆவணங்கள் இல்லாதது என்று குறிப்பிட்டார். பல்வேறு நாடுகளில் உள்ள பலரிடம் தங்கள் சொத்துக்களுக்கான முறையான சட்ட ஆவணங்கள் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வை பிரதமர் மேற்கோள் காட்டினார். வறுமையைக் குறைப்பதற்கு மக்களுக்கு சொத்துரிமை தேவை என்பதை ஐநா வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார். சொத்துரிமை சவால்கள் குறித்து புத்தகம் எழுதிய புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவரை குறிப்பிட்ட பிரதமர், கிராமவாசிகளுக்குச் சொந்தமான சிறிய அளவிலான சொத்துக்கள் பெரும்பாலும் உயிரற்ற மூலதனம் என்று கூறினார். இதன் பொருள் சொத்தை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது எனவும் மேலும் அது குடும்பத்தின் வருமானத்தை அதிகரிக்க உதவாது என்றும் அவர் கூறினார். சொத்துரிமை என்ற உலகளாவிய சவாலுக்கு இந்தியா விதிவிலக்கல்ல என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தபோதிலும், கிராம மக்களிடம் பெரும்பாலும் சட்ட ஆவணங்கள் இல்லை எனவும் இது தகராறுகளுக்கு வழிவகுத்தது என்றும் சக்திவாய்ந்த நபர்களால் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு கூட வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். சட்ட ஆவணங்கள் இல்லாமல், வங்கிகளும் அத்தகைய சொத்துக்களிலிருந்து விலகி உள்ளன என்று அவர் கூறினார். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முந்தைய அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஸ்வாமித்வா திட்டம் மூலம் சொத்து ஆவணங்களை உருவாக்க 2014-ல் அரசு முடிவு செய்ததாக அவர் கூறினார். எந்தவொரு உணர்வுபூர்வமான அரசும் தனது கிராம மக்களை துயரத்தில் விட்டுச் செல்ல முடியாது என்று பிரதமர் வலியுறுத்தினார். ஸ்வாமித்வா திட்டம் பற்றி விரிவாகக் கூறிய அவர், ட்ரோன்களைப் பயன்படுத்தி கிராமங்களில் உள்ள வீடுகள், நிலங்களை வரைபடமாக்குவது, கிராமவாசிகளுக்கு குடியிருப்பு சொத்துக்களுக்கான சட்ட ஆவணங்களை வழங்குவது ஆகியவை இதில் அடங்கும் என்றார். இந்தத் திட்டத்தின் பலன்கள் இப்போது கண்கூடாகத் தெரிகின்றன என்றும் அவர் கூறினார். ஸ்வாமித்வா திட்டத்தின் பயனாளிகளுடன் தாம் நடத்திய முந்தைய உரையாடலை குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டம் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதை அவர்கள் எடுத்துரைத்ததாகக் கூறினார். தற்போது அவர்கள் தங்கள் சொத்துக்களுக்கு வங்கிகளிடமிருந்து நிதியுதவி பெறுவதாகவும், அவர்களின் திருப்தியும், மகிழ்ச்சியும் தெளிவாகத் தெரிகின்றன என்றும் அவர் கூறினார். இதை ஒரு பெரிய ஆசீர்வாதமாகக் கருதுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன எனவும் அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்புகள் முடிக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சட்ட ஆவணங்களைப் பெற்ற பிறகு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொத்துக்களின் அடிப்படையில் வங்கிகளில் கடன் பெற்று, தங்கள் கிராமங்களில் சிறு தொழில்களைத் தொடங்கியுள்ளனர் என அவர் தெரிவித்தார். இந்த பயனாளிகளில் பலர் சிறு, நடுத்தர விவசாய குடும்பத்தினர் என்றும், அவர்களுக்கு இந்தச் சொத்து அட்டைகள் பொருளாதாரப் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க உத்தரவாதமாக மாறியுள்ளன என்றும் அவர் கூறினார். சொத்துகள் தொடர்பான நீண்டகால தகராறுகளால் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். சட்ட சான்றிதழுடன், அவர்கள் இப்போது இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவார்கள் என்று அவர் கூறினார். அனைத்து கிராமங்களிலும் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டால், 100 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளை அது ஏற்படுத்தும் என்று ஒரு மதிப்பீட்டை அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான மூலதனம் சேர்க்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

கிராம சுயாட்சியை நடைமுறைப்படுத்த எங்கள் அரசு தீவிரமாக உழைத்து வருகிறதுஎன்று கூறிய திரு நரேநரதிர மோடி, ஸ்வாமித்வா திட்டம் கிராம வளர்ச்சித் திட்டமிடலையும் செயல்பாட்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்தார். தெளிவான வரைபடங்கள், மக்கள் தொகை கொண்ட பகுதிகள் பற்றிய அறிவுடன், வளர்ச்சிப் பணிகள் திட்டமிடல் துல்லியமாக இருக்கும் எனவுமர, மோசமான திட்டமிடலால் ஏற்படும் விரயங்கள், தடைகளை அது நீக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பஞ்சாயத்து நிலங்கள், மேய்ச்சல் பகுதிகள் ஆகியவற்றை அடையாளம் காண்பது போன்ற நில உரிமை தொடர்பான தகராறுகளை சொத்துரிமை தீர்த்து வைக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், அதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்கப்படும் என்றார். சொத்து அட்டைகள் கிராமங்களில் பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் எனவும் தீ, வெள்ளம் நிலச்சரிவு போன்ற சம்பவங்களின் போது இழப்பீடு கோருவதை எளிதாக்கும் என்றும் அவர் கூறினார்.

நிலத் தகராறுகள் விவசாயிகளிடையே அதிகம் உள்ளது என்றும், நில ஆவணங்களைப் பெறுவது சவாலானது என்றும், இதற்கு அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருப்பதாகவும், அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், இந்த பிரச்சினைகளைக் குறைக்க, நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன என்று கூறினார். ஸ்வாமித்வாபுஆதார் ஆகியவை கிராம வளர்ச்சிக்கான அடிப்படை அமைப்புகள் என்று அவர் எடுத்துரைத்தார். புஆதார் நிலத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது என்றும், சுமார் 23 கோடி புஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இது நில மனைகளை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது என அவர் தெரிவித்தார். கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில், உத்தேசமாக 98 சதவீத நிலப் பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். மேலும் பெரும்பாலான நில வரைபடங்கள் இப்போது டிஜிட்டல் முறையில் கிடைக்கின்றன என்று திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.

இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் வசிக்கிறது என்ற மகாத்மா காந்தியின் நம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர், இந்த தொலைநோக்குப் பார்வை உண்மையான திட்ட அமலாக்கத்தின் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் 2.5 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரத்தைப் பெற்றுள்ளன எனவும் அவற்றில் பெரும்பாலானவை கிராமங்களில் உள்ளதாகவும் அவர் கூறினார். 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிப்பறை வசதியைப் பெற்றுள்ளன என்றும், உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் மூலம் 10 கோடி பெண்கள் எரிவாயு இணைப்புகளைப் பெற்றுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் கிராமங்களில் வசிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 12 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் குழாய் நீரைப் பெற்றுள்ளதாகவும், 50 கோடிக்கும் அதிகமான மக்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். பெரும்பாலும் கிராமங்களில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக, லட்சக்கணக்கான கிராமவாசிகள், குறிப்பாக தலித், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியின குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததாகவும், தற்போது இந்த குடும்பங்கள்தான் இந்த வசதிகளின் முதன்மை பயனாளிகள் என்றும் அவர் கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் கிராமங்களில் சாலைகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட முன்னெப்போதும் இல்லாத முயற்சிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், 2000-ம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாய் அரசு பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தை தொடங்கியதிலிருந்து, சுமார் 8.25 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றில் பாதி கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தொலைதூர எல்லைப்புற கிராமங்களில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான  துடிப்பான கிராமங்கள் திட்டம் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். கிராமங்களில் இணைய வசதி ஏற்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, 2014-ம் ஆண்டுக்கு முன்பு 100-க்கும் குறைவான பஞ்சாயத்துகளில் அகண்ட அலைவரிசை கண்ணாடி இழை இணைப்புகள் இருந்தன என்றும், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகள் அகண்ட அலைவரிசை இணைய இணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். அந்த காலகட்டத்தில் கிராமங்களில் உள்ள பொதுச் சேவை மையங்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் இப்போது 5 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். முன்பு நகரங்களில் மட்டுமே காணப்பட்ட நவீன வசதிகளை இப்போது கிராமங்களுக்கும் சென்றுள்ளதை இந்தப் புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இது வசதிகளை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், கிராமங்களில் பொருளாதார வலிமையையும் உயர்த்தியுள்ளது என்று அவர் கூறினார்.

கிராமங்களுக்கும் விவசாயிகளுக்குமான குறிப்பிடத்தக்க முடிவுகளுடன் 2025-ம் ஆண்டு தொடங்கியுள்ளது என்று கூறிய பிரதமர், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்வதை சுட்டிக்காட்டினார். இதன் கீழ் விவசாயிகள் சுமார் 2.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீடுகளைப் பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார். டிஏபி உரம் தொடர்பான மற்றொரு முடிவையும் அவர் குறிப்பிட்டார். அதன் விலை உலக அளவில் உயர்ந்துள்ளபோதும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் வழங்குவதற்காக சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் இது 2014-க்கு முந்தைய பத்து ஆண்டுகளில் செலவிடப்பட்ட தொகையை விட இரு மடங்காகும் என்றும் அவர் கூறினார். பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின் கீழ், சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இது விவசாயிகள் நலனில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றார்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு பெரிய திட்டத்திலும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மையமாக இருக்கிறது எனவும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கை அரசு அங்கீகரித்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். வங்கித் தோழி (பேங்க் சகி), பீமா சகி போன்ற முன்முயற்சிகள் கிராமங்களில் பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் கீழ் 1.25 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாகி உள்ளனர் என்றும் அவர் கூறினார். ஸ்வாமித்வா திட்டம் பெண்களின் சொத்து உரிமைகளை வலுப்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, சொத்து அட்டைகளில் கணவரின் பெயருடன் மனைவியின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்றார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். ஸ்வாமித்வா திட்டம், ட்ரோன்கள் மூலம் பெண்கள் சொத்துரிமையைப் பெற உதவுகின்றன என்ற நேர்மறையான தற்செயல் நிகழ்வை அவர் எடுத்துரைத்தார். ஸ்வாமித்வா திட்டத்தில் வரைபடப் பணிகள் ஆளில்லா விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும், நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ், கிராமப் பெண்கள் ட்ரோன் பைலட்டுகளாக மாறி, விவசாயத்திற்கு உதவுவதோடு கூடுதல் வருமானத்தையும் ஈட்டுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஸ்வாமித்வா திட்டம் கிராமவாசிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது என்றும், இந்தியாவில் கிராமப்புற வாழ்க்கையை மாற்றியமைக்கும் திறன் கொண்டது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கிராமங்களும், ஏழைகளும் வலிமையடையும் போது, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணம் சுமூகமாக இருக்கும் என்று அவர் கூறினார். கிராமங்கள், ஏழைகளின் நலனுக்காக கடந்த பத்து ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வர உதவியுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்ஸ்வாமித்வா போன்ற திட்டங்கள் கிராமங்களை வலுவான வளர்ச்சி மையங்களாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் துணை நிலை ஆளுநர்கள், ஒடிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் முதலமைச்சர்கள், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், மீன்வளம், கால்நடை பராமரிப்பு பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்ட பல பிரமுகர்கள் காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னணி

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு இன்று (2025 ஜனவரி 18) பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் வழங்கினார்.

அண்மைக்கால ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்குஉரிமைகளின் பதிவுவழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் ஸ்வமித்வா திட்டம் பிரதமரால் தொடங்கப்பட்டது.

சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெற்று அதன் மூலம் நிதிநிறுவனக் கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைப்பதற்கும், கிராமப்புறங்களில் சொத்துகளையும் சொத்து வரியையும் சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும் கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது.

3.17 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. இது இலக்கு கிராமங்களில் 92 சதவீதமாகும். இதுவரை, 1.53 லட்சம் கிராமங்களுக்கு, 2.25 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், திரிபுரா, கோவா, உத்தராகண்ட், ஹரியானா ஆகியவற்றில் இந்தத் திட்டம் முழு வளர்ச்சியை எட்டியுள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், பல யூனியன் பிரதேசங்களிலும் ட்ரோன் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது.

***

PLM/KV