Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்


 

புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின்  கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப்  பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பார்வையை அளித்து, அதற்கான அடையாளத்தை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நபார்டு மற்றும் அதன் கூட்டுறவு அமைப்புகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

கிராமங்களில் பிறந்து வளர்ந்த நாம் அனைவரும் கிராமங்களின் திறனை அறிவோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். கிராமத்தின் உணர்வு கிராமங்களில் வசிப்பவர்களிடமும் உள்ளது என்று அவர் கூறினார். கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு கிராமத்தின் உண்மையான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பது தெரியும் என்று அவர் மேலும் கூறினார். எளிமையான சூழல் கொண்ட ஒரு சிறிய நகரத்தில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தது தனது அதிர்ஷ்டம் என்று திரு மோடி கூறினார். பின்னர் நகரத்தை விட்டு வெளியேறியபோது கிராமப்புறங்களில் நேரத்தை செலவிட்டதாக அவர் கூறினார். “நான் சிரமங்களை அனுபவித்தேன், கிராமத்தின் சாத்தியக்கூறுகளையும் நான் அறிவேன்” என்று பிரதமர் கூறினார். கிராம மக்கள் கடின உழைப்பாளிகளாக இருந்தாலும், மூலதனம் இல்லாததால் அவர்கள் சரியான வாய்ப்புகளை இழக்கிறார்கள் என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே கவனித்து வருவதாக அவர் கூறினார். கிராம மக்கள் பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட பலங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கான தேடலில் அவர்கள் அவற்றை இழக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். இயற்கை பேரழிவுகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சந்தை வாய்ப்புகள் இல்லாமை போன்ற பல்வேறு சவால்கள் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இவை அனைத்தையும் பார்த்த பிறகு,  தனது மனதில் உறுதியாக இருந்ததாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க ஊக்கமளித்ததாகவும் அவர் கூறினார். கிராமப்புறங்களில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் கிராமங்களில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகள் மற்றும் அனுபவங்களால் உத்வேகம் பெற்றவை என்று அவர் மேலும் கூறினார். 2014-ம் ஆண்டு முதல் தான் தொடர்ந்து கிராமப்புற இந்தியாவின் சேவையில் ஈடுபட்டு வருவதாக திரு மோடி கூறினார். “கிராமப்புற இந்திய மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எனது அரசின் முன்னுரிமை” என்று பிரதமர் கூறினார். அதிகாரம் பெற்ற கிராமப்புற இந்தியாவை உறுதி செய்வது, கிராமவாசிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குவது, இடப்பெயர்வைக் குறைப்பது, கிராம மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வது ஆகியவை அவர்களின் தொலைநோக்குப் பார்வை என்றும் அவர் கூறினார். எனவே, ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை வழங்கப்பட்டதையும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உறுதியான வீடுகள் வழங்கப்பட்டதையும், ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் உறுதி செய்யப்பட்டதையும் திரு மோடி பட்டியலிட்டார்.

“இன்று, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களில் மக்களுக்கு சுகாதார வசதிகள் வழங்கப்படுகின்றன” என்று பிரதமர் கூறினார். தொலை மருத்துவம், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் உதவியுடன், கிராமங்களுக்கு சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார். இ-சஞ்சீவினி மூலம் கிராமப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலை மருத்துவம் மூலம் பயனடைந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், இந்தியாவின் கிராமங்கள் எவ்வாறு சமாளிக்கும் என்று உலகமே வியப்படைந்தது என்று திரு மோடி குறிப்பிட்டார். எவ்வாறாயினும், ஒவ்வொரு கிராமத்திலும் கடைசி நபருக்கும் தடுப்பூசிகள் சென்றடைவதை அரசு உறுதி செய்தது என்று அவர் மேலும் கூறினார்.

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கிராமப்புற சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் கருத்தில் கொள்ளும் வகையில் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். கடந்த 10 ஆண்டுகளில், கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசு சிறப்புக் கொள்கைகளை வகுத்து முடிவுகளை எடுத்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், டிஏபி-க்கான மானியத்தை தொடரவும் முடிவு செய்ததாகவும் திரு மோடி குறிப்பிட்டார். அரசின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் முடிவுகள் கிராமப்புற இந்தியாவில் புதிய சக்தியை அளிக்கின்றன என்று அவர் வலியுறுத்தினார். கிராமங்களுக்குள்ளேயே கிராமவாசிகளுக்கு அதிகபட்ச பொருளாதார உதவிகளை வழங்கி, அவர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வேண்டும் என்ற இலக்கை பிரதமர் சுட்டிக் காட்டினார். பிரதமரின் கிசான் வெகுமதி நிதி மூலம் விவசாயிகள் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயக் கடன்களின் அளவு 3.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, தற்போது கால்நடை மற்றும் மீன் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இது தவிர, நாட்டில் 9,000-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் நிதியுதவி பெறுகின்றன என்றும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் பல பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு தொடர்ந்து அதிகரித்துள்ளது என்பதை அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

ஸ்வமித்வா திட்டம் போன்ற இயக்கங்கள் தொடங்கப்பட்டதை திரு மோடி எடுத்துரைத்தார். இதன் மூலம் கிராம மக்கள் சொத்து ஆவணங்களைப் பெறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், எம்.எஸ்.எம்.இ.க்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு கொள்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். கடன் இணைப்பு உத்தரவாதத் திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன என்றும், அதன் பலன்களை ஒரு கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அனுபவித்து வருவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார். இன்று முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப்  இந்தியா போன்ற திட்டங்களிலிருந்து கிராமப்புற இளைஞர்கள் ஆதரவைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புற நிலப்பரப்பை மாற்றியமைப்பதில் கூட்டுறவு அமைப்புகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதமர் சுட்டிக் காட்டினார். கூட்டுறவு மூலம் முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் இந்தியா செல்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த நோக்கத்திற்காக, 2021-ல் கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டது. சுமார் 70,000 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) கணினிமயமாக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளின் விளைபொருட்களுக்கு நல்ல மதிப்பு கிடைப்பதை உறுதி செய்து அதன் மூலம் ஊரகப் பொருளாதாரம் வலுப்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

விவசாயம் தவிர, கொல்லர், தச்சு வேலை, மண்பாண்டம் செய்தல் போன்ற பல்வேறு பாரம்பரிய கலைகள் மற்றும் திறன்கள் நமது கிராமங்களில் பரவலாக உள்ளன என்று திரு மோடி வலியுறுத்தினார். இந்தத் தொழில்கள் கிராமப்புற மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன, ஆனால் முன்னர் புறக்கணிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார். லட்சக்கணக்கான விஸ்வகர்மா கைவினைஞர்கள் முன்னேற வாய்ப்பளிக்கும் வகையில், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், குறைந்த செலவில் உதவிகளை வழங்கவும் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

“நோக்கங்கள் உன்னதமாக இருக்கும்போது, முடிவுகள் திருப்திகரமாக இருக்கும்” என்று திரு மோடி கூறினார். கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பின் பலன்களை நாடு தற்போது அனுபவித்து வருவதாகவும் அவர் கூறினார். பல முக்கிய உண்மைகளை வெளிப்படுத்திய சமீபத்திய பெரிய அளவிலான கணக்கெடுப்பை மேற்கோள் காட்டிய திரு மோடி, 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கிராமப்புற இந்தியாவில் நுகர்வு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும், மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களுக்கு அதிகம் செலவிடுகிறார்கள்  என்றும் குறிப்பிட்டார். முன்னதாக, கிராமவாசிகள் தங்கள் வருமானத்தில் 50% க்கும் அதிகமாக உணவுக்காக செலவிட வேண்டியிருந்தது, ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, கிராமப்புறங்களில் உணவுக்கான செலவு 50% க்கும் குறைவாக குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதன் பொருள் மக்கள்  இப்போது மற்ற  தேவைகளுக்கு செலவிடுகிறார்கள், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறார்கள் என்று அவர் விளக்கினார்.

நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையிலான நுகர்வு இடைவெளி குறைந்துள்ளது என்ற ஆய்வின் மற்றொரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், முன்பு நகர்ப்புற தனிநபர்கள் கிராமங்களில் செலவழிப்பதை விட அதிகமாக செலவிட முடியும் என்று நம்பப்பட்டது, ஆனால் தொடர்ச்சியான முயற்சிகள் இந்த ஏற்றத்தாழ்வை குறைத்துள்ளன என்று குறிப்பிட்டார். கிராமப்புற இந்தியாவின் எண்ணற்ற வெற்றிக் கதைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சாதனைகள் முந்தைய அரசுகளின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க முடியும் என்று குறிப்பிட்ட பிரதமர், ஆனால் சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களாக, லட்சக்கணக்கான கிராமங்கள் அடிப்படைத் தேவைகளை இழந்திருந்தன என்று குறிப்பிட்டார். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களில் பெரும்பான்மையானவர்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள் என்றும்,அவர்கள்  முந்தைய அரசுகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது கிராமங்களிலிருந்து இடம்பெயர்வதற்கும், வறுமை அதிகரிப்பதற்கும், கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுத்தது. எல்லைப்புற கிராமங்கள்தான் நாட்டின் கடைசி கிராமங்கள் என்ற முந்தைய கருத்தை உதாரணமாக சுட்டிக்காட்டிய திரு மோடி, தமது அரசு அவற்றுக்கு முதல் கிராமங்கள் என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளதாகவும், அவற்றின் வளர்ச்சிக்காக துடிப்புமிக்க கிராமங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறினார். எல்லையோர கிராமங்களின் வளர்ச்சி அங்கு வசிப்பவர்களின் வருமானத்தை அதிகரித்து வருவதை அவர் எடுத்துரைத்தார். முன்பு புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு இப்போது தமது அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார். பழங்குடியினர் பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், பல ஆண்டுகளாக வளர்ச்சி மறுக்கப்பட்ட பிராந்தியங்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் பிரதமரின்  ஜன் மன் திட்டம் தொடங்கப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில், முந்தைய அரசுகளின் பல தவறுகளை தமது அரசு சரிசெய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கிராமப்புற வளர்ச்சியின் மூலம் தேசிய வளர்ச்சி என்ற மந்திரத்துடன் அரசு முன்னேறி வருவதாக அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சிகளின் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் திரு மோடி எடுத்துரைத்தார். இந்தியாவில் 2012-ல் சுமார் 26 சதவீதமாக இருந்த கிராமப்புற வறுமை 2024-ல் 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்துள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் நடத்திய ஆய்வை அவர் சுட்டிக்காட்டினார். வறுமையை ஒழிக்க பல தசாப்தங்களாக சிலர் கோஷங்களை எழுப்பி வந்தாலும், இப்போது நாட்டில் வறுமை உண்மையில் குறைந்து வருவதை நாடு காண்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஊரகப் பொருளாதாரத்தில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும், இந்தப் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான அரசின் முயற்சிகளையும் வலியுறுத்திய திரு மோடி, பெண்கள் கிராமப்புற வாழ்க்கையை வங்கி சகிகள் மற்றும் பீமா சகிகள் என்று மறுவரையறை செய்து வருவதாகவும், சுய உதவிக் குழுக்கள் மூலம் புதிய புரட்சியை அவர்கள் வழிநடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். கிராமங்களில் உள்ள 1.15 கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக  மாறியுள்ளதாகவும், 3 கோடி பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக  மாற்றுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தலித், வஞ்சிக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்காகவும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஊரக உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவனம் செலுத்தப்படுவதை  சுட்டிக் காட்டிய பிரதமர், பெரும்பாலான கிராமங்கள் தற்போது நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் ரயில்வே ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றார். பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். “டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடிப்படையில் கிராமங்கள் 21 ஆம் நூற்றாண்டின் நவீன கிராமங்களாக மாறி வருகின்றன” என்று பிரதமர் கூறினார். 94% கிராமப்புற குடும்பங்களுக்கு தற்போது தொலைபேசி அல்லது மொபைல் போன் மற்றும் வங்கி சேவைகள் கிடைத்துள்ளன என்றும், யுபிஐ போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் கிராமங்களில் கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 2014-க்கு முன்பு 1 லட்சத்திற்கும் குறைவாக இருந்த பொதுச் சேவை மையங்களின் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும், இதன் மூலம் பல  அரசு சேவைகள் இணையதளம் மூலம் வழங்கப்படுகின்றன என்றும் திரு மோடி குறிப்பிட்டார். இந்த உள்கட்டமைப்பு கிராம வளர்ச்சியை விரைவுபடுத்துகிறது, வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் நாட்டின் முன்னேற்றத்துடன் கிராமங்களை ஒருங்கிணைக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

சுய உதவிக் குழுக்கள் முதல் விவசாயிகள் கடன் அட்டைகள் வரை பல்வேறு முன்முயற்சிகளின் வெற்றிக்கு நபார்டின் மூத்த நிர்வாகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஒப்புக் கொண்ட திரு மோடி, நாட்டின் இலக்குகளை நிறைவேற்றுவதில் நபார்டு வங்கி தொடர்ந்து முக்கிய பங்காற்றும் என்று வலியுறுத்தினார். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் வலிமையையும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வதில் அவற்றின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். மேலும் பல உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி அந்த திசையில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பால் உற்பத்தி தற்போது விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை அளித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். அமுல் போன்ற மேலும் 5-6 கூட்டுறவு சங்கங்களை நாடு தழுவிய அளவில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாடு இயற்கை விவசாயத்தை இயக்க முறையில் முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த முயற்சியில் அதிக விவசாயிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய குறு மற்றும் சிறு தொழில்களுடன் சுய உதவிக் குழுக்களை இணைப்பதன் முக்கியத்துவத்தை திரு மோடி எடுத்துரைத்தார். இந்தத் தயாரிப்புகளுக்கு சரியான பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்துதலின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஜி.ஐ தயாரிப்புகளின் தரம், பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கிராமப்புற வருமானத்தை மலிவான விலையில் மாற்ற பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், நீர்ப்பாசனத்தை குறைந்த செலவில் கிடைக்கச் செய்வது, நுண் பாசனத்தை ஊக்குவிப்பது, அதிக ஊரக தொழில்களை உருவாக்குவது, ஊரகப் பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயத்தின் பலன்களை அதிகப்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தத் திசையில் காலவரையறைக்குட்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தங்கள் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அமிர்த நீர்நிலைகளை ஒட்டுமொத்த கிராமமும் கூட்டாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார். தற்போது நடைபெற்று வரும் ‘தாயின் பெயரால் ஒருமரம் ‘ பிரச்சாரத்தை குறிப்பிட்ட அவர், இந்த முயற்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு கிராமவாசியும் அதிக மரங்களை நட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கிராம அடையாளத்தில் நல்லிணக்கம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார். சாதியின் பெயரால் சமூகத்தில் நஞ்சைப் பரப்பவும், சமூக கட்டமைப்பை பலவீனப்படுத்தவும் சிலர் முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்த சதிகளை முறியடித்து, கிராமத்தின் பகிரப்பட்ட கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கிராமங்களுக்கு அதிகாரம் அளிக்க தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தீர்மானங்கள் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமங்களின் வளர்ச்சி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து, தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி ஆகியோர் பிரமுகர்களுடன் கலந்து கொண்டனர்.

பின்னணி

கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோர் உணர்வு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், கிராமப்புற பாரத் மஹோத்சவ் 2025 ஜனவரி 4 முதல் 9 வரை ‘ வளர்ச்சியடைந்த பாரதம்  2047’ க்கான ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குதல்’ மற்றும் குறிக்கோளுடன் நடைபெறும். மஹோத்சவம்  கிராமப்புற இந்தியாவின் தொழில்முனைவோர் உணர்வு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு விவாதங்கள், பயிலரங்குகள் மற்றும் மாஸ்டர் வகுப்புகள் மூலம், மஹோத்சவம் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தற்சார்பு பொருளாதாரங்களை உருவாக்குதல் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்குள் புதுமையை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் சிறப்பு கவனம் செலுத்தி, கிராமப்புற மக்களிடையே பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிதி பாதுகாப்பை ஊக்குவித்தல், நிதி உள்ளடக்கம் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஆதரிப்பதன் மூலம் இதன் நோக்கங்கள் அடங்கும்.

தொழில்முனைவு மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்; அரசு அதிகாரிகள், சிந்தனையாளர்கள், கிராமப்புற தொழில்முனைவோர், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களை ஒன்றிணைத்து  கூட்டு கிராமப்புற மாற்றத்திற்கான பாதையை உருவாக்குதல்; கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில்நுட்பம் மற்றும் புதுமையான நடைமுறைகளைப் பயன்படுத்துவது குறித்த விவாதங்களை ஊக்குவித்தல்; துடிப்பான நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை இந்த மகோத்சவத்தின் குறிப்பிடத்தக்க நோக்கங்களாக இருக்கும்.

***

PKV/KV