Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தாய்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

பிரதமர் தாய்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்


மேன்மைமிக்க பிரதமர் ஷினவத்ரா அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

சவாதி க்ராப்!

எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காகப் பிரதமர் ஷினவத்ராவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்ச் 28 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.

நண்பர்களே,

இந்தியா, தாய்லாந்துக்கு இடையேயான பழமையான உறவுகள் நமது ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீக உறவுகளில் வேரூன்றி உள்ளன. பௌத்த மதத்தின் பரவல் நமது மக்களை ஒன்றிணைத்துள்ளது.

அயுத்தயாவிலிருந்து நாளந்தாவுக்கு அறிஞர்களின் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. ராமாயணத்தின் கதை தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகளின் தாக்கம் தற்போதும் நமது மொழிகள் மற்றும் பாரம்பரியங்களில் எதிரொலிக்கிறது.

எனது பயணத்தின் ஒரு பகுதியாக 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமாயணசுவரோவியங்களை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டதற்காக தாய்லாந்து அரசுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

பிரதமர் ஷினவத்ரா எனக்கு திரி- பிடகத்தைப் பரிசளித்தார். புத்தரின் பூமியான இந்தியாவின் சார்பாக நான் அதை இருகரம் கூப்பி ஏற்றுக் கொள்கிறேன். கடந்த ஆண்டு, புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டன. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மரியாதை செலுத்தும் வாய்ப்பைப் பெற்றிருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குஜராத் மாநிலம் ஆரவல்லியில் 1960-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட புனித நினைவுச் சின்னங்கள் தாய்லாந்துக்கு கண்காட்சிக்கு அனுப்பப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த ஆண்டு பாரதத்தின் மஹாகும்பமேளாவிலும் நமது பழைய தொடர்பு காணப்பட்டது. தாய்லாந்து உட்பட வெளிநாடுகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட பௌத்த மத பக்தர்கள் இந்த ஆன்மீக மற்றும் கலாச்சார கூடுகையில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை வெளிப்படுத்தியது.

நண்பர்களே,

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கைமற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வையில் தாய்லாந்து சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது, நமது உறவுகளை ராஜீய கூட்டாண்மையாக வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். மேலும், எங்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே ஒரு உத்திசார் பேச்சுவார்த்தையைநிறுவுவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு உதவுவதற்காக தாய்லாந்து அரசு அளித்த ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றி தெரிவித்தோம். ஆள்கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகியவற்றை எதிர்த்துப் போராட நமது முகமைகள் நெருக்கமாக ஒத்துழைக்க நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.

தாய்லாந்து மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையே சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

வளர்ந்து வரும் பரஸ்பர வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக பரிமாற்றங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு தொழில்நுட்பம், மின்னணு வாகனங்கள், ரோபோட்டிக்ஸ், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். நேரடி தொடர்பை  மேம்படுத்துவதுடன், ஃபின்டெக் இணைப்பை அதிகரிக்கவும் இரு நாடுகளும் செயல்படும்.

மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் நோக்கில், தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச இ-விசா வசதிகளை இந்தியா வழங்கத் தொடங்கியுள்ளது.

நண்பர்களே,

ஆசியான் இந்தியாவின் விரிவான உத்திசார் கூட்டாளியாக உள்ளது. மேலும் இந்தப் பிராந்தியத்தில், அண்டை கடல்சார் நாடுகள் என்ற முறையில், பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றில் நாங்கள் பகிர்ந்து கொண்ட நலன்கள் உள்ளன.

ஆசியான் ஒற்றுமை மற்றும் ஆசியான் மையத்தன்மையை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், இரு நாடுகளும் சுதந்திரமான, வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை ஆதரிக்கின்றன.

நாங்கள் வளர்ச்சியை நம்புகிறோம், விரிவாக்கவாதத்தை அல்ல. இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள்முன்முயற்சியின் தூணாக திகழும் கடல்சார் சூழலியல்இணைத் தலைமை தாங்கும் தாய்லாந்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

நண்பர்களே,

நாளை நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்க நான் ஆர்வமாக உள்ளேன். தாய்லாந்தின் தலைமையின் கீழ், இந்த அமைப்பு பிராந்திய ஒத்துழைப்பை நோக்கி புதிய வேகத்தை பெற்றுள்ளது. இந்த சாதனைக்காக பிரதமர் மற்றும் அவரது குழுவினரை நாங்கள் பாராட்டுகிறோம்.

மேன்மைமிக்க அதிபர் அவர்களே,

உங்களது அன்பான வரவேற்பு மற்றும் மரியாதைக்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திரி-பிடகப் பரிசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோப் குன் காப்!

***

(Release ID: 2118345)
TS/IR/RR/SG/DL