பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது இல்லத்தில் குறைக்கடத்தி நிர்வாகிகளின் வட்டமேஜை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இந்த சந்திப்பின் போது, அவர்களின் யோசனைகள், வர்த்தகத்தை வடிவமைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று பிரதமர் கூறினார். வரும் காலம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், குறைக்கடத்தி என்பது டிஜிட்டல் யுகத்தின் அடிப்படையாகும் என்றும், நமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட குறைக்கடத்தி தொழில்துறை அடித்தளமாக இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறினார்.
ஜனநாயகமும், தொழில்நுட்பமும் இணைந்து மனித குலத்தின் நலனை உறுதி செய்ய முடியும் என்று வலியுறுத்திய பிரதமர், குறைக்கடத்தி துறையில் உலகளாவிய பொறுப்பை அங்கீகரித்து, இந்தியா இந்தப் பாதையில் முன்னேறி வருகிறது என்றார்.
சமூக, டிஜிட்டல் மற்றும் நேரடி உள்கட்டமைப்பை உருவாக்குதல், உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல், இணக்க சுமையைக் குறைத்தல் மற்றும் உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட வளர்ச்சியின் தூண்கள் குறித்து பிரதமர் பேசினார். பன்முகப்படுத்தப்பட்ட குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியில் நம்பகமான கூட்டாளியாக மாறுவதற்கான திறனை இந்தியா கொண்டுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்தியாவின் திறமைகள் குறித்துப் பேசிய பிரதமர், தொழில்துறையில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திறன் மேம்பாட்டில் அரசு செலுத்தி வரும் அதீத கவனத்தையும் குறிப்பிட்டார். உலகளவில் போட்டியிடக்கூடிய தயாரிப்புகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு இந்தியா ஒரு சிறந்த சந்தை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கணிக்கக்கூடிய மற்றும் நிலையான கொள்கைகளை இந்திய அரசு பின்பற்றும் என்று தலைவர்களிடம் பிரதமர் உறுதியளித்தார். மேக் இன் இந்தியா மற்றும் மேக் ஃபார் தி வேர்ல்ட் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு கட்டத்திலும் தொழில்துறைக்கு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053551
BR/KR
***
Chaired the Semiconductor Executives’ Roundtable at 7, LKM. Discussed a wide range of subjects relating to the semiconductors sector. I spoke about how this sector can further the development trajectory of our planet. Also highlighted the reforms taking place in India, making our…
— Narendra Modi (@narendramodi) September 10, 2024