Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் தனது ஜப்பான் பயணத்தின்போது ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை (நவம்பர் 11, 2016)

பிரதமர் தனது ஜப்பான் பயணத்தின்போது ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை (நவம்பர் 11, 2016)


மாட்சிமை பொருந்திய பிரதமர் ஆபே அவர்களே,

நண்பர்களே,

மினா-சமா, கொம்பன் வா!

ஜப்பானிய மொழியில் ஜென் புத்தமத பழமொழி ஒன்று “இச்சிகோ இச்சி” எனக் கூறுகிறது. நமது சந்திப்பு ஒவ்வொன்றுமே தனித்துவமானது; அதன் ஒவ்வொரு தருணத்தையும் நாம் போற்ற வேண்டும் என்பதே அதன் பொருளாகும்.

ஜப்பான் நாட்டிற்கு நான் பல முறை வந்திருக்கிறேன். பிரதமர் என்ற முறையில் இது எனது இரண்டாவது பயணம் ஆகும். என் பயணங்கள் ஒவ்வொன்றுமே தனித்தன்மை கொண்டதாக, சிறப்பானதாக, பாடம் புகட்டுவதாக, மிக ஆழமான வகையில் பயனளிப்பதாகவே இருந்துள்ளது.
மாட்சிமை பொருந்திய ஆபே அவர்களை நான் ஜப்பானிலும், இந்தியாவிலும், உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சந்தித்திருக்கிறேன். அதைப்போன்றே கடந்த சில வருடங்களாக ஜப்பான் நாட்டின் அரசியல், வர்த்தகத் துறைகளைச் சேர்ந்த தலைவர்களை இந்தியாவில் வரவேற்றுப் பேசியிருக்கிறேன்.

இவ்வாறு அடிக்கடி ஏற்பட்டு வரும் நமது சந்திப்பு என்பது நம் இருநாடுகளுக்கிடையேயான உறவுகளின் வேகத்தையும், வீச்சையும் ஆழத்தையும் தெரிவிப்பதாக அமைகிறது. நமது ராணுவ ரீதியான, உலகளாவிய கூட்டணியின் முழுத்திறமையை சிறப்பான வகையில் வெளிக்கொண்டுவருவது என்ற நமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் இந்த சந்திப்புகள் வெளிப்படுத்துகின்றன.

நண்பர்களே! இன்று நடைபெற்ற சந்திப்பில் கடந்த உச்சி மாநாட்டிற்குப் பிறகு நம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். பல்வேறு துறைகளிலும் நமது ஒத்துழைப்பு முன்னேறியுள்ளது என்பதை நாங்கள் இருவருமே தெளிவாக உணர்ந்தோம்.

ஆழமான பொருளாதார தொடர்புகள், வர்த்தக வளர்ச்சி, உற்பத்தி, மூலதனம் ஆகியவற்றில் உறவுகள், தூய்மையான எரிசக்தி மீதான கவனம், நம்மிரு நாடுகளின் குடிமக்களுக்கான பாதுகாப்பு, கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு ஆகியவையே நமது முக்கியமான முன்னுரிமைகளாக அமைகின்றன.

இன்று கையெழுத்தான அணுசக்தியை அமைதியான வழிகளுக்கு பயன்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் தூய்மையான எரிசக்திக்கான கூட்டணியை உருவாக்குவதில் நாங்கள் இறங்கியுள்ளதை அறிவிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அமைகிறது.
இந்தத் துறையில் நம் இரு நாடுகளின் ஒத்துழைப்பு என்பது பருவநிலை மாற்றம் என்ற சவாலை எதிர்கொள்வதற்கும் உதவி செய்யும். அதிலும் குறிப்பாக, இத்தகையதொரு ஒப்பந்தத்தை ஜப்பானுடன் செய்து கொண்டதன் சிறப்பான முக்கியத்துவத்தையும் நான் இங்கு வலியுறுத்த விழைகிறேன்.

இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உதவியதற்காக பிரதமர் ஆபே அவர்களுக்கும், ஜப்பானிய அரசுக்கும், அதன் நாடாளுமன்றத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,

இந்தியாவும் அதன் பொருளாதாரமும் பல்வேறு மாறுதல்களைச் சந்தித்து வருகின்றன. உற்பத்தி, மூலதனம், 21ஆம் நூற்றாண்டின் அறிவுசார் தொழில்கள் ஆகிய துறைகளில் மிகப்பெரும் மையங்களில் ஒன்றாக இந்தியா மாறவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
இந்த நோக்கத்தை நோக்கிய எங்கள் பயணத்தில், ஜப்பான் நாட்டை எமது இயற்கையான கூட்டாளியாகவே நாங்கள் கருதுகிறோம். மூலதனமோ, தொழில்நுட்பமோ அல்லது மனித வளமோ, நமது சாதகமான அம்சங்கள் எதுவாக இருப்பினும் அவற்றை நமது பரஸ்பர நலனுக்குச் செயல்படும் வகையில் இணைத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்றே நாங்கள் நம்புகிறோம்.

குறிப்பிட்ட திட்டங்களைப் பொறுத்தவரையில், மும்பை-அகமதாபாத் நகரங்களுக்கு இடையேயான அதிவேக ரயில் திட்டத்தினை வலுவாக முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். நிதித்துறையில் ஒத்துழைப்புக்காக இறங்கியுள்ளதும், அதுகுறித்த ஒப்பந்தமும் கட்டமைப்பு வளர்ச்சிக்கான பெரும் ஆதாரங்களை எட்டுவதற்கு உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பயிற்சி, திறன்மேம்பாடு ஆகியவை குறித்த எங்களது பேச்சுவார்த்தைகள் புதிய நிலையை எட்டியுள்ளன. நம் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார கூட்டணியில் அது மிக முக்கியமான அம்சமாக அமைகிறது. விண்வெளி அறிவியல், கடல்சார், புவிசார் அறிவியல், நெசவு, விளையாட்டு, விவசாயம், கடிதம் சார்ந்த வங்கிமுறை ஆகிய துறைகளிலும் புதிய கூட்டணிகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

நண்பர்களே,

ராணுவரீதியான நமது கூட்டணி என்பது நம் இரு நாட்டு சமூகங்களின் நலன், பாதுகாப்பு குறித்தது மட்டுமேயல்ல; அது இப்பகுதியில் அமைதி, நிலைத்தன்மை, சமநிலை ஆகியவற்றைக் கொண்டுவருவதாகவும் அமையும். ஆசிய-பசிஃபிக் பகுதியில் உருவாகிவரும் வாய்ப்புகள், சவால்கள் ஆகியவற்றை உயிரோட்டத்துடன் எதிர்கொள்வதாகவும் அது அமைகிறது.
உள்வாங்கிய கண்ணோட்டத்தைக் கொண்ட நாடுகள் என்ற வகையில் இந்தோ-பசிஃபிக் பகுதியின் பரஸ்பர தொடர்புடைய இப்பகுதியில் இணைப்பு, கட்டமைப்பு, திறன் உருவாக்கம் ஆகியவற்றை வளர்த்தெடுக்க நெருக்கமான வகையில் ஒத்துழைப்பது என்றும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.

இந்தோ-பசிஃபிக் பகுதியின் விரிவான கடல்பகுதியில் நமது ராணுவ நலன்கள் ஒன்றிணைகின்றன என்பதை வெற்றிகரமாக நடைபெற்ற மலபார் கடற்படை கூட்டு ஒத்திகை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

ஜனநாயகபூர்வமான நாடுகள் என்ற வகையில் வெளிப்படைத் தன்மை, வெளிப்படையான போக்கு, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நாம் ஆதரிக்கிறோம். பயங்கரவாதத்தை, குறிப்பாக நாடுகளின் எல்லை கடந்து வரும் பயங்கரவாத அபாயத்தை எதிர்த்துப் போராடுவது என்ற நமது உறுதிப்பாட்டிலும் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

நண்பர்களே,

நம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்பது இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகள், ஆழமான கலாச்சார ரீதியான உறவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானதாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் ஆபே அவர்களின் இந்திய விஜயத்தின்போது இந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் நான் உறுதியளித்திருந்தேன்.

இதன் விளைவாக, கடந்த 2016 மார்ச் மாதத்திலிருந்து ‘வந்திறங்கும் நேரத்திலேயே விசாவை வழங்குவது’ என்ற முறையை ஜப்பானிய நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தியுள்ளோம். இதற்கு மேலும் ஒருபடி சென்று, தகுதியுள்ள ஜப்பானிய வர்த்தகத் துறையினருக்கு நீண்ட கால முறையில் 10 ஆண்டுகால விசா வசதியையும் விரிவுபடுத்தியுள்ளோம்.

நண்பர்களே,

பகுதியளவிலும், சர்வதேச அளவிலும் இந்தியாவும் ஜப்பானும் ஒன்றையொன்று கலந்தாலோசித்து, நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்களுக்காகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நமது நியாயமான இடத்தைப் பெறுவதற்கான முயற்சியிலும் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம்
அணுசக்திக்கான மூலப்பொருட்களை வழங்குபவர்களுக்கான குழுவில் இந்தியா ஓர் உறுப்பினராக இணைவதற்கு ஆதரவு தெரிவித்தமைக்காக பிரதமர் ஆபே அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் விழைகிறேன்.

மாட்சிமை பொருந்திய ஆபே அவர்களே,

நமது கூட்டணியின் எதிர்காலம் செறிவானதாக, செயலூக்கம் மிக்கதாக உள்ளது என்பதை நாம் இருவருமே அங்கீகரித்துள்ளோம். நாம் இருவரும் இணைந்து, நமக்காகவும், இந்தப் பகுதிக்காகவும் செய்யக் கூடிய செயல்கள் எவ்வித வரம்பும் அளவும் இன்றி எல்லையற்றதாகவே உள்ளன.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உங்களின் வலுவான, திறமையான தலைமையே ஆகும். உங்களின் கூட்டாளியாகவும் நண்பராகவும் இருப்பதென்பது உண்மையிலேயே மிகப்பெரும் மரியாதைக்குரிய ஒன்றே ஆகும். இந்த உச்சிமாநாட்டின் மூலம் நாம் அடைந்துள்ள மிகவும் மதிக்கத்தக்க விளைவுகளுக்காகவும், உங்கள் மிகத் தாராளமான, வரவேற்பிற்கும் விருந்தோம்பலுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் விழைகிறேன்.
அனதா நோ ஓ மொடெனாஷி ஓ அரிகடோ கொசாய்மஷிடா!

(உங்கள் கனிவான விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி!)

நன்றி, மிக்க நன்றி.

******