பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் ஏழைகள் அன்ன திட்டத்தை மேலும் நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பொருளாதார மீட்பு நடவடிக்கையின் பகுதியாக, 2020 ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை இது நீட்டிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் , தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம்,2013-இன் கீழ் 2020 ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு மாதத்துக்கு ஒரு கிலோ வீதம் இலவசமாக முழு கொண்டைக்கடலை வழங்கப்படும். இதற்காக 9.7 லட்சம் மெட்ரிக் டன் விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6,849.24 கோடியாகும்.
இத்திட்டத்தின் கீழ், 19.4 கோடி குடும்பங்கள் பயனடையும். நீட்டிக்கப்பட்ட சலுகைத் திட்டத்துக்கான செலவு முழுவதையும் மத்திய அரசு ஏற்கும். நாட்டில் யாரும், குறிப்பாக எந்த ஏழைக் குடும்பமும், அடுத்த ஐந்து மாதங்களுக்கு உணவு தானியங்கள் இல்லாமல் பாதிக்கப்படக்கூடாது என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப இந்த நீட்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஐந்து மாத காலத்துக்கு, மேற்குறிப்பிட்ட பிரிவினருக்குப் போதுமான புரதம் கிடைக்கும் வகையில் முழுகொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தத் தொகுப்புக்கான பருப்பு வகைகள் ,2015-16-இல் உருவாக்கப்பட்ட வலுவான கையிருப்பில் இருந்து வழங்கப்படுகிறது. பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன திட்டத்தின் நீட்டிப்புக் காலத்துக்கு வழங்குவதற்கு போதுமான பருப்பு வகைகள் மத்திய அரசின் கையிருப்பில் உள்ளன.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், ( ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரை) 4.63 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் 18.2 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன.