தனது பணியின் நிறைவு நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தனக்கு எழுதிய கடிதத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். அது குறித்து திரு. பிரணாப் முகர்ஜி, “பிரதமர் அனுப்பிய கடிதம் எனது இதயத்தைத் தொட்டுவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ளவை வருமாறு:
புது தில்லி
24, ஜூலை 2017
அன்புள்ள பிரணாப் அவர்களே,
உங்களது புகழ்மிக்க வாழ்க்கைப் பயணத்தின் புதிய பகுதியைத் தாங்கள் தொடங்கும்போது, உங்களது உயர்ந்த போற்றுதலுக்குரிய உணர்வைப் பகிர்ந்து கொள்ளாமலும் நாட்டுக்காக நீங்கள் செலுத்திய மகத்தான பங்களிப்புக்கு, குறிப்பாகக் குடியரசுத் தலைவராகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆற்றிய பணிகளுக்கு நன்றி கூறாமலும் என்னால் இருக்க இயலாது. உங்களது எளிமை, உயர்ந்த கோட்பாடுகள், உன்னதமான சீரிய தலைமை ஆகியவற்றால் எங்களை மிகவும் ஈர்த்திருக்கிறீர்கள்.
புது தில்லிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளி ஆளாகத்தான் வந்தேன். என் முன்னால் இருந்த பணி மிகப் பெரிதாகவும் சவால் மிக்கதாகவும் இருந்தது. அந்தக் காலக் கட்டங்களில் எனக்குத் தந்தையைப் போலவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தீர்கள். உங்களது அறிவு, வழிகாட்டுதல், தனிப்பட்ட இதமான குணம் எனக்கு நம்பிக்கையையும் வலிமையையும் ஊட்டின.
நீங்கள் ஓர் அறிவுக் களஞ்சியமாக இருக்கிறீர்கள் என்பது எல்லோரும் அறிந்தது. கொள்கை, கோட்பாடு முதல் அரசியல் வரையில், பொருளாதாரம் முதல் வெளியுறவுக் கொள்கை வரையில், பாதுகாப்பு விவகாரங்கள் முதல் நாட்டுக்கும் உலகுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை உள்பட எல்லாவற்றிலும் நீங்கள் கொண்டிருந்த நுட்பமான அறிவைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். உங்களது அறிவாற்றலும், தீரமும் எனக்கும் எனது அரசாங்கத்துக்கும் இடைவிடாமல் துணை புரிந்து வந்தன.
நீங்கள் எப்போதுமே என்னிடம் இதமாகவும் அன்பாகவும், அக்கறையுடனும் நடந்து வந்திருக்கிறீர்கள். நாள் முழுவதும் பல கூட்டங்களிலும், பிரசாரப் பயணங்களிலும் பங்கேற்று முடிந்த பின் நீங்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, “உடல்நலத்தைக் கவனித்துக் கொள்கிறீர்கள் என்று கருதுகிறேன்” என்று விசாரிப்பது மட்டுமே புதிய சக்தியை எனக்குள் ஊட்டுவதற்குப் போதும்.
திரு. பிரணாப் அவர்களே,
நமது அரசியல் பயணங்கள் வேறுபட்ட அரசியல் கட்சிகளில் வெவ்வேறு விதமான வடிவம் பெற்றவை. நமது கொள்கைகள் சில சமயங்களில் மாறுபட்டவை. நமது அனுபவங்களும் வேறுபட்டவை. எனது நிர்வாக அனுபவம் எனது மாநிலத்தில் கிடைத்தது. ஆனால், நீங்கள் நம் நாட்டு தேசிய ஆட்சியமைப்பு, அரசியல் ஆகியவற்றின் பரந்துபட்ட நிலையைப் பல ஆண்டுகளாகப் பார்த்திருக்கிறீர்கள். மேலும், நாம் இருவரும் இணைந்து செயல்பட இயலும் என்பதற்கு உங்களது அறிவாற்றல், நுட்பமான அறிவு ஆகியவற்றின் வலிமையே காரணம்.
உங்களது அரசியல் பயணத்தின் போதும், நீங்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் எல்லாவற்றையும் விட நாட்டின் நலத்திலேயே கவனம் செலுத்தினீர்கள். இந்திய இளைஞர்களின் திறமை புதிய சிந்தனைகளை அங்கீகரிக்கும் விதத்தில் புதுமையாக்கத்திற்கும் புதிய திட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையைத் திறந்து வைத்தீர்கள்.
அரசியல் என்பது தன்னலமின்றி சமுதாயத்திற்குப் பங்களிப்பதுதான் என்று கருதி வந்த தலைவர்களைக் கொண்ட தலைமுறையைச் சார்ந்தவர் நீங்கள். இந்திய மக்களின் உந்துசக்திக்கு மிகச் சிறந்த ஆதாரமாக நீங்கள் திகழ்ந்தீர்கள். மிக எளிமையான மக்கள் தொண்டராகவும், தன்னிகரற்ற தலைவராகவும் விளங்கிய குடியரசுத் தலைவராக உங்களை இந்தியா எப்போதும் போற்றிப் பெருமைப்படும்.
உங்களது பெருமை மிகுந்த பாரம்பரியம் எங்களுக்கு வழிகாட்டியாகத் தொடரும். நீண்ட காலமாக, ஒப்பற்ற பொதுவாழ்க்கையில் நீங்கள் உருவாக்கிய எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஜனநாயகப் பார்வையிலிருந்து எங்களுக்கு வலிமையைப் பெற்றுக் கொள்வோம். புதிய வாழ்க்கையின் புதிய கட்டத்தில் நுழையும் உங்களது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் அளித்த ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும், வழிகாட்டுதலுக்கும், உந்துதலுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியில் என்னைப் பற்றி அன்பான வார்த்தைகளில் குறிப்பிட்டதற்கு மிகுந்த நன்றி.
குடியரசுத் தலைவர் அவர்களே, உங்களது பிரதமர் என்ற முறையில் உங்களுடன் பணியாற்றியது மிகப் பெரிய கவுரவம்.
ஜெய் ஹிந்த்!
தங்கள் உண்மையுள்ள,
(நரேந்திர மோடி)
திரு பிரணாப் முகர்ஜி,
இந்தியக் குடியரசுத் தலைவர்
Pranab Da, I will always cherish working with you. @CitiznMukherjee https://t.co/VHOTXzHtlM
— Narendra Modi (@narendramodi) August 3, 2017