ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 30 பேர் கொண்ட குழுவினர், புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினர்.
இந்திய ராணுவம் வழக்கமாக ஏற்பாடு செய்துவரும் நல்லெண்ண நடவடிக்கைத் திட்டத்தின் ஒரு அங்கமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த மாணவிகள் தற்போது சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மாணவிகளுடன் கல்வி – குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது; தூய்மை இந்தியா, மாணவிகளின் கனவுகள் மற்றும் விருப்பங்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் கலந்துரையாடினார்.
நேரடி கலந்துரையாடலின்போது, மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த பிரதமர், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், தூய்மை இந்தியா இயக்கம் மூலம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு கிடைக்கும் பல்வேறு பலன்கள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். ஒருமுக சிந்தனையை மேம்படுத்துவதில் யோகாவின் பலன்கள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்கள், குடிமை சேவை பணிகளில் அதிக அளவில் தங்களை சேர்த்துக் கொள்வதையும், விளையாட்டுத் துறையில் அதிக திறனை வெளிப்படுத்துவதையும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகளும், இளைஞர்களும் அதிக அளவில் பங்களிப்பை வழங்க முடியும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.
***