Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் பிரதமர் சந்திப்பு


செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் நாட்டின் பிரதமர் டாக்டர். ரால்ஃப் எவரார்டு கோன்சால்வேஸ் இன்று (10.09.2019) பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தியாவிற்கு வருகை தரும் செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் நாட்டின் முதலாவது பிரதமரான கோன்சால்வேஸ், புதுதில்லியில் நேற்று நடைபெற்ற, பாலைவனமாதலை எதிர்கொள்வதற்கான உயர்மட்ட அளவிலான ஐ.நா. மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் நாட்டிலும், கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இந்தியா மீது மிகுந்த நன்மதிப்பு வைத்திருப்பதாக பிரதமர் கோன்சால்வேஸ் தெரிவித்தார். வளர்ச்சிப் பணிகளில் இந்தப் பிராந்தியத்திற்கும், இந்தியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்து பாராட்டு தெரிவித்த அவர், இயற்கை பேரழிவு காலங்களில் இந்தியா உரிய நேரத்தில் உதவுவதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சர்வதேச அரங்குகள் உட்பட இரு நாடுகள் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு நிலவி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக தேர்வு பெற்ற “முதலாவது மிகச் சிறிய நாடு” என்ற வரலாற்று சாதனை படைத்துள்ள செயின்ட் வின்சென்ட் மற்றும் க்ரனடைன்ஸ் நாட்டிற்கு பாராட்டு தெரிவித்தார்.

திறன் மேம்பாடு, பயிற்சி, கல்வி, நிதி, கலாச்சாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

******