Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருக்கு அமெரிக்க அதிபர் அளித்த விருந்து: அணுஆயுத கடத்தல்காரர்கள், தீவிரவாதிகளுடன் அரசுகள் உடந்தையாக இருப்பதே மிகப்பெரிய அபாயம் – மோடி

பிரதமருக்கு அமெரிக்க அதிபர் அளித்த விருந்து: அணுஆயுத கடத்தல்காரர்கள், தீவிரவாதிகளுடன் அரசுகள் உடந்தையாக இருப்பதே மிகப்பெரிய அபாயம் – மோடி


அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமா அளித்த விருந்தின்போது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அணு ஆயுதப் பாதுகாப்பில் உள்ள அபாயங்கள் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அணு ஆயுத பாதுகாப்பு குறித்து உலகின் கவனத்தை ஈர்த்ததற்காக அமெரிக்க அதிபருக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்த பிரதமர், இதன் மூலம் அவர் உலகத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் மிகப்பெரும் சேவை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சமீபத்தில் பிரசல்ஸ் நகரில் நிகழ்ந்த தீவிரவாதிகளின் தாக்குதலை சுட்டிக் காட்டிய பிரதமர், தீவிரவாதத்திடமிருந்து அணுஆயுதத்தினை பாதுகாப்பது எத்தகைய உடனடிக் கடமை என்பதையும், அதில் அடங்கியுள்ள அபாயத்தையும் பிரசல்ஸ் சம்பவம் நமக்கு எச்சரிக்கையாக விடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இன்றைய தீவிரவாதத்தின் மூன்று அம்சங்களின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். முதலாவது இன்றைய தீவிரவாதம் தனது செயல்களத்தில் மிக மோசமான வன்முறையை அரங்கேற்றி வருகிறது.

இரண்டாவதாக, நாம் இப்போது குகையில் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு நபரை தேடுவதில்லை; மாறாக, ஒரு கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொண்டு செயல்படுகின்ற, நகரத்தில் உள்ள தீவிரவாதியை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். மூன்றாவதாக, அணு ஆயுத கடத்தல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளுடன் அரசுகள் கூட்டாகச் செயல்படுவதென்பதே மேலும் அதீதமான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பயங்கரவாதமானது வலுப்பெற்றுள்ளதோடு, தீவிரவாதிகள் 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இதற்கான நமது பதில் நடவடிக்கைகள் பெரும்பாலும் கடந்த காலத்தைச் சார்ந்ததாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இன்று தீவிரவாதமானது உலகளாவிய அளவில் ஒரு வலைப்பின்னலைக் கொண்டதாக இருக்கும்போது, இந்த அபாயத்தை எதிர்த்து நாம் நாடு வாரியாகவே செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாதத்தின் வீச்சும் அதற்குத் தேவையான பொருட்களை வழங்கும் ஏற்பாடுகளும் உலகளாவிய அளவில் உள்ள நிலையில், உலக நாடுகளின் அரசுகளிடையே உண்மையான ஒத்துழைப்பு என்பது அந்த அளவிற்கு செயல்திறன் உடையதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

தீவிரவாத செயல்களைத் தடுக்காமல், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்காமல், அணுஆயுத தீவிரவாதத்திற்கு எதிராக எவ்வித தற்காப்பு நடவடிக்கையையும் நம்மால் ஏற்படுத்த முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தீவிரவாதம் என்பது யாரோ மற்றொருவருடைய பிரச்சனை என்றும், ‘அவருடைய’ தீவிரவாதி ‘என்னுடைய’ தீவிரவாதி அல்ல என்ற கண்ணோட்டத்தையும் அனைவருமே கைவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் முன்னுரிமை மிக்கதொரு விஷயமாக அணுஆயுத பாதுகாப்பு என்பது தொடர்ந்து நீடிக்கிறது என்று சுட்டிக் காட்டிய பிரதமர், அனைத்து நாடுகளும் தங்களது சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதில் முழுமையாக கட்டுப்பட வேண்டும் என்றும் கூறினார்.

******