Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்   


     விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் மற்றொரு பெரும் முயற்சியாக, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (12.09.2019) தொடங்கி வைத்தார்.

    

     60 வயதை அடையும்போது மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்குவதன் மூலம், 5 கோடி சிறு, குறு விவசாயிகளின் வாழைக்கையைப் பாதுகாக்கும் திட்டமாக இது இருக்கும்.

 

       வணிகர்கள் மற்றும் சுயவேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 

 

சிறு வணிகர்கள் மற்றும் சுயவேலைவாய்ப்பு பெற்றவர்கள் 60 வயதை அடையும்போது  குறைந்தபட்சம் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைப்பதை இத்திட்டம் உறுதி செய்கிறது.

 

சுமார் 3 கோடி சிறு வணிகர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

 

வலிமையான அரசு அமைந்தால் உங்களது விருப்பங்களை நிறைவேற்றும் என்ற தேர்தல் வாக்குறுதி செயல்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

 

“புதிய அரசு அமைந்த பிறகு ஒவ்வொரு விவசாய குடும்பமும் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் பலனை பெறுவார்கள் என நான் கூறியிருந்தேன்.  இன்று (12.09.2019), நாட்டில் உள்ள ஆறரை கோடி விவசாய குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில், ரூ.21,000 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது.   ஜார்கண்டில் வசிக்கும் சுமார் 8 லட்சம் விவசாய குடும்பங்களின் கணக்கிலும் ரூ.250 கோடி செலுத்தப்பட்டுள்ளது.”

 

“வளர்ச்சிப் பணிகள்தான் எங்களது முன்னுரிமையாக மட்டுமின்றி, உறுதிப்பாடாகவும் இருக்கும். ஒவ்வொரு இந்தியருக்கும் சமூகப்  பாதுகாப்புக் கவசத்தை வழங்க எங்களது அரசு முயற்சித்து வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

 

“அரசின் தயவு யாருக்கு தேவையோ, அவர்களுக்கு நெருங்கிய கூட்டாளியாக அரசு இருக்கும்.  நாட்டில் உள்ள கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதே போன்ற ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.”

 

“32 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷ்ரம்யோகி மான்தன்  திட்டத்தில் இணைந்துள்ளனர். பிரதமரின் ஜீவன் ஜோதி யோஜனா (ஆயுள் காப்பீடு) மற்றும் பிரதமரின் சுரக்ஷா பீம யோஜனா விபத்துக் காப்பீடு திட்டங்களில் 22 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இணைந்துள்ளனர். இவர்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் ஜார்கண்டைச் சேர்ந்தவர்கள்.”

 

அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் விதமாக,  நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்  462 ஏகலைவா மாதிரி பள்ளிகளை  பிரதமர் இன்று (12.09.2019) தொடங்கி வைத்தார். இந்தப் பள்ளிகள், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களுக்கு உயர்தொடக்கக் கல்வி, இடைநிலை மற்றும் மேல்நிலை கல்விகளை வழங்குவதில் கவனம் செலுத்தும்.

 

“இந்த ஏகலைவா பள்ளிகள், பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் அமைப்பாக மட்டுமின்றி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுடன், உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் இடமாகவும் திகழும்.  இந்தப் பள்ளிகளில் பயிலும், ஒவ்வொரு பழங்குடியின குழந்தைக்கும், அரசு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்யும்.”

 

சாஹிப்கஞ்சில் பல்வகைப் போக்குவரத்து முனையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

 

“இன்று சாஹிப்கஞ்ச் பல்வகை முனையத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது மற்றொரு திட்டம் என்பது மட்டுமின்றி,  இந்த வட்டாரத்தில் உள்ள ஒட்டுமொத்தப் பகுதிக்கும்  புதிய வகை போக்குவரத்து வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த நீர்வழி, ஜார்கண்ட் மாநிலத்தை ஒட்டுமொத்த நாட்டுடன் மட்டுமின்றி, வெளிநாடுகளுடனும் இணைக்கிறது. இந்த முனையத்திலிருந்து, பழங்குடியின சகோதர சகோதரிகள் மற்றும் விவசாயிகள், தங்களது விளைபொருட்களை  நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள சந்தைக்கும் எடுத்துச் செல்வது மிகவும் எளிதாகி உள்ளது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவையின் புதிய கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

 

“இந்த மாநிலம் உருவாக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் கழித்து, ஜனநாயகத்தின் கோவில் தற்போது ஜார்கண்டில் திறக்கப்பட்டுள்ளது. புனிதமான இந்தக் கட்டடத்திலிருந்துதான்  ஜார்கண்ட் மக்களின் வருங்காலத்தைப் பொற்காலமாக்குவதற்கான அடித்தளமிடப்படுவதுடன், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் கனவுகளும் நனவாக உள்ளது.”    புதிய தலைமைச் செயலக கட்டடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 

ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறும் நாட்டு மக்களை பிரதமர் அறிவுறுத்தினார்.

 

தூய்மையே சேவை  திட்டம் 11, செப்டம்பர் 2019 அன்று தொடங்கிவைக்கப்பட்டதை  சுட்டிக்காட்டிய  பிரதமர்,  “நேற்று முதல், நாடு முழுவதும் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது என்றார்.   இந்தத் திட்டத்தின் கீழ், அக்டோபர் 2, முதல் வீடுகள், பள்ளிகள், அலுவலகங்களிலிருந்து  ஒரு முறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க இருப்பதாகக் கூறினார்.  காந்தியடிகளின்  150-வது பிறந்தநாளான வருகிற அக்டோபர் 2-ம் தேதி அன்று, பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.”