பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஜல்பைகுரிக்கு பயணம் மேற்கொண்டார். தேசிய நெடுஞ்சாலை – 31 டியின் ஃபலகட்டா – சல்சலாபரி பகுதியை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் அங்கு புதிய உயர் நீதிமன்றக் கிளையை தொடங்கிவைத்தார்.
41.7 கி.மீ. நீளம் கொண்ட ஃபலகட்டா – சல்சலாபரி பாதை கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் செயல்படுத்தப்பட்ட இப்பாதை வடகிழக்கு பகுதிக்கான முக்கிய இணைப்பாகும். இத்திட்டம் கட்டுமானம்-செயலாக்கம்-பரிமாற்றம் என்ற முறையில் இரண்டரை ஆண்டுகளில் முடிவடையும். இந்தத் திட்டம் மூலம் சல்சலாபரி மற்றும் அளிந்துவாரில் இருந்து சிலிகுரி வரையிலான தூரம் சுமார் 50 கி.மீ குறையும்.
ஜல்பைகுரியில் அமைக்கப்பட்டுள்ள கல்கத்தாவின் உயர் நீதிமன்றத்தின் கிளை வடக்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங், கலிம்பாங், ஜல்பைகுரி மற்றும் கூச் பெஹாரில் உள்ள மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்யும். இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் 600 கி.மீ தூரம் பயணம் செய்து கல்கத்தா நீதிமன்றத்தை அனுகுவதற்கு பதிலாக 100 கி.மீ தூரத்திற்கும் குறைவாக பயணித்து கிளை நீதிமன்றத்தை அணுகி நீதி பெறலாம்.
***