Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் முதியோர் வந்தன திட்டத்தின் (பி.எம்.வி.வி.ஒய்.) கீழ், மூத்த குடிமக்கள் முதலீட்டு வரம்பை ரூ.7.5 லட்சத்திலிருந்து, ரூ.15 லட்சம் என இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமரின் முதியோர் வந்தனத் திட்டம், பி.எம்.வி.வி.ஒய்.-ன் கீழ் முதலீட்டு வரம்பை ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தவும், சந்தா செலுத்தும் கால வரம்பை 2018 மே 4 ஆம் தேதி முதல் 2020 மார்ச் 31 ஆம் தேதி வரை விரிவாக்கவும் பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அனைவரையும் உள்ளடக்கிய நிதி நிலைமை மற்றும் சமூக பாதுகாப்பில் அரசின் உறுதிப்பாட்டின் ஒரு அம்சமாக இந்த நடவடிக்கையை அமைச்சரவை மேற்கொண்டது. 

மூத்த குடிமக்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், முதலீட்டு வரம்பு தற்போதுள்ள குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் என்ற அளவை மூத்த குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சமாக உயர்த்துவதன் மூலம் மாற்றியமைக்கப்பட்ட பி.எம்.வி.வி.ஒய். குடிமக்களுக்கு பெரிய அளவிலான சமூக பாதுகாப்பை வழங்குகிறது.  இதன்மூலம் மூத்த குடிமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெற வாய்ப்பு ஏற்படுகிறது.

2018 மார்ச் நிலவரப்படி, பி.எம்.வி.வி.ஒய். திட்டத்தின்கீழ், 2.23 லட்சம் மூத்த குடிமக்கள் பயனடைந்து வருகின்றனர்.  முன்னதாக, செயல்படுத்தப்பட்ட வரிஷ்த ஓய்வூதிய காப்பீட்டுத் திட்டம் 2014-ன் படி, 3.11 லட்சம் மூத்த குடிமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

பின்னணி

பி.எம்.வி.வி.ஒய். திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன்மூலம் 60 வயதுக்கு மேற்பட்டோர் வயது முதிர்ந்த காலத்தில் சமூக பாதுகாப்பு பெறவும் உறுதியற்ற சந்தை நிலவரத்தில் தங்கள் வருவாய் குறைந்து விடுவதற்கு எதிரான நடவடிக்கையை உறுதி செய்யவும் வாய்ப்பு ஏற்படுகிறது.  உறுதியளிக்கப்பட்ட ஆண்டுக்கு 8 சதவீத வட்டி என்ற வருமானத்தை 10 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் உறுதி செய்கிறது.  வட்டித் தொகையை மாதம் / 3 மாதங்கள் / 6 மாதங்கள் / ஒரு ஆண்டு ஆகிய காலங்களின் இறுதியில் பெறுவதற்கும் இதில் வசதி செய்து தரப்பட்டது.  இத்திட்டத்தின் அமலாக்கத்தினால் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு கிடைக்கும் வருமானத்திற்கும் உறுதியளிக்கப்பட்ட ஆண்டுக்கு 8 சதவீத வட்டி வழங்குவதற்கும் வித்தியாசம் ஏதும் ஏற்படும் போது அதனை ஆண்டு அடிப்படையில் மத்திய அரசு மானியம் மூலம் சரி செய்யும்.