பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார்.
விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிய பிரதமர், அவர்களுடன் இயல்பாக கலந்துரையாடினார். குழந்தைகள் மேற்கொண்ட சாதனைகளின் காரணமாக அவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டனர். இசை, கலாச்சாரம், சூரிய மின்சக்தி, பேட்மிண்டன், செஸ் போன்ற விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
குழந்தைகள் பிரதமரிடம் பல கேள்விகளையும் கேட்டனர். அவற்றில் ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, அனைத்து வகையான இசையிலும் தனக்கு உள்ள ஆர்வம் குறித்தும், அது தியானத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் பிரதமர் குழந்தைகளிடம் தெரிவித்தார். பிரதமரின் சூர்யோதயா திட்டம் நேற்று தொடங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, தாம் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது சூரிய சக்தியைப் பயன்படுத்த எடுத்த நடவடிக்கைகளை அவர்களிடம் நினைவு கூர்ந்த பிரதமர், இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பது குறித்தும் குழந்தைகளிடம் பேசினார். இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுடன் விவாதித்த பிரதமர், துணிவு தினம் குறித்தும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பாரம்பரியத்தை அரசு எவ்வாறு மதிக்கிறது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
கலை மற்றும் கலாச்சாரம், துணிவு, கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் தனித்துவமான சாதனைகளைப் படைத்த குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, நாடு முழுவதிலும் இருந்து, பல்வேறு பிரிவுகளின்கீழ், 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 9 மாணவர்கள், 10 சிறுமிகள் உள்ளிட்ட 19 பேர் பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது-2024-க்கு தேர்வு செய்யப்பட்டனர்.
***
(Release ID: 1998877)
ANU/SM/BS/RS/KRS