Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்

பிரதமரின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்

பிரதமரின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்


நாட்டின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று புதுதில்லியில் செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டுமக்கள் முன்னிலையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் சிறப்பம்சங்கள் கீழே தரப்படுகிறது ;

1. சிறப்பு வாய்ந்த இந் நன்னாளில் இந்தியாவிலுள்ள 125 கோடி இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளில் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை நமது நாடு எட்டுவதற்கு இது நமக்கு ஊக்கம் அளிக்குமாக.

2. நாம் விடுதலை பெறுவதற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், பண்டிட் நேரு மற்றும் எண்ணற்ற தியாகிகளை நாம் இன்று நினைவு கூருகிறோம்.

3. இந்தியா பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் அவற்றுக்குத் தீர்வுகளைக் கண்டறியும் திறனும் அதற்கு உள்ளது.

4. நான் இன்று வேலையை விட வேலை செய்யும் கலாச்சாரத்தைப் பற்றியே பேச விரும்புகிறேன்.

5. இதற்கு முன்பு குற்றச்சாட்டுகளால் சூழப்பட்ட அரசாங்கங்கள் இருந்தன. ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. இப்போது அது எதிர்பார்ப்புகள் சூழ உள்ளது.

6. நமது விடுதலையை வளமையான நாடாக மாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. தியாகம், ஒழுங்குமுறை, தீர்மானகரமான உறுதி ஆகியவை இன்றி நம்மால் இதைச் செய்ய முடியாது.

7. நான் இன்று உங்களிடையே கொள்கையைப் பற்றியல்ல; நமது தொலைநோக்கைப் பற்றியே பேசப் போகிறேன். வேலையின் வேகத்தைப் பற்றியல்ல; முன்னேற்றத்தின் உண்மையான அனுபவத்தைப் பற்றித்தான் பேசப்போகிறேன்.

8. வளமையான நாடு என்பது சாதாரண மனிதர்களின் முன்னேற்றத்தைக் குறிப்பதாகும். அதாவது சாதாரண மனிதர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் உணர்ந்த ஒரு அரசு என்பதே இதன் பொருள். பொறுப்பும் பொறுப்புணர்வும் தான் இத்தகைய வளமான நாட்டிற்கான ஆணிவேர்களாகும்.

9. வருமான வரி அதிகாரிகளைக் கண்டு மக்கள், குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள், பயப்படும் நிலையை மாற்றவே நாம் விரும்புகிறோம்.

10. நாட்டில் இரண்டு கோடி மக்கள் பாஸ்போர்ட்டிற்காக மனுச் செய்திருக்கின்றனர். இப்போது ஏழை மக்களும் கூட ஓரிரு வாரத்திற்குள் பாஸ்போர்ட் பெறுகிறார்கள்.

11. கடந்த காலத்தில் இந்த நாட்டில் முதலீடு செய்ய விரும்புகின்ற எந்தவொரு தொழில் முனைவரும் தங்களது தொழிலை பதிவு செய்வதற்கே ஆறு மாதம் செலவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த அரசில் இதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியதன் விளைவாக, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இத்தகைய 900 பதிவுகள் செய்யப்பட்டன.

12. ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கான 9,000 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

13. கடந்த 70 ஆண்டுகளில் மக்களின் எதிர்பார்ப்புகள் மாறியுள்ளன. கொள்கை அறிவிப்புகள், பட்ஜெட் ஆகியவற்றை அவர்கள் நம்புவதில்லை. களத்தில் நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை நாம் அவர்களுக்குக் காட்டவேண்டியிருக்கிறது.

14. இதற்கு முன்பு, கிராமப்புற சாலைகள் ஒரு நாளைக்கு 70 முதல் 75 கி.மீ. மட்டுமே போடப்பட்டு வந்தன. இப்போது நாளொன்றுக்கு 100 கி.மீ. வரை உருவாக்கப்படுகின்றன.

15. ஒரே நாடு, ஒரே மின்கடத்தி, ஒரே விலை- இதற்கான வேலையை நாம் இறுதிப் படுத்தியுள்ளோம்.

16. மறுசுழற்சியிலான மின்சாரம்- இதுதான் நாம் கவனம் செலுத்த வேண்டிய பகுதியாகும்

17. சூரிய ஒளியிலான மின் உற்பத்தியில் நாம் 116 சதவீத வளர்ச்சியை எட்டியிருக்கிறோம். இது இதுவரை கண்டிராத வளர்ச்சி.

18. கடந்த காலத்தில் ஓராண்டிற்கு 30,000 முதல் 35,000 கி.மீ. தூரத்திற்கே மின் கடத்தி கம்பிகள் போடப்பட்டன. இப்போது குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 50,000 கி.மீ. தூரத்திற்கு மின் கடத்திக் கம்பிகள் போடப்படுகின்றன.

19. கடந்த 60 ஆண்டு காலத்தில் 14 கோடி மக்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயுக்கான இணைப்பு கிடைத்தது. கடந்த 60 வார காலத்தில் மட்டுமே 4 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.

20. சந்தேகத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். அவ்வாறு செய்ய முடிந்தால், அது நமக்கு ஊக்கம் தருகிறது. நிறுவனம் சார்ந்த கடன் முறைக்குள் 21 கோடி பேரை கொண்டு வருவது முடியாத ஒன்று என்றே மக்கள் நினைத்தார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வந்தது.

21. மின்சார வசதி பெறாத 18,000 கிராமங்களில் 10,000 கிராமங்கள் மின்வசதி பெற்றுள்ளன. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தினை அவர்கள் இப்போது பார்த்துக் கொண்டிருப்பதாக என்னிடம் கூறினார்கள்.

22. தில்லியிலிருந்து 3 மணி நேர பயண தூரத்தில் உள்ளதுதான் ஹத்ராஸ் என்ற கிராமம். இந்த கிராமம் மின்சாரம் பெறுவதற்கு 70 ஆண்டுகள் ஆனது.

23. ஒரு பல்ப் ரூ. 50 என்ற விலையில் எல். இ. டி. பல்புகளை அரசு வழங்கி வருகிறது.

24. ஈரான், ஆஃப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் சபஹார் துறைமுகத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளன. அதாவது இயலாத ஒன்று முடியும் என்பதை எவர் ஒருவராலும் இப்போது காண முடியும்.

25. பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் போக நாங்கள் அனுமதிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி நிலவியது. பருப்பு உற்பத்தி கவலை தருவதாக இருந்தது. இவை அனைத்திற்கும் மத்தியிலும் நிலைமையை சமாளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இதற்கு முந்தைய அரசுகளை ஒப்பிடும்போது, சாதாரண மனிதனின் உணவு பெற முடியாத நிலையை நானும் எனது அரசும் அனுமதிக்கவில்லை.

26. குரு கோவிந்த் சிங்ஜியின் 350வது பிறந்த நாளை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அவர் சொன்னது என் நினைவுக்கு வருகிறது; ‘அடுத்தவர்களுக்கு உதவி செய்யாத கைகள் எப்படி புனிதமானதாக இருக்க முடியும்?” நமது விவசாயிகள் அத்தகைய வேலையைத்தான் செய்து வருகின்றனர். தொடர்ச்சியான வறட்சி நிலவிய போதும் நாம் முன்பு விதைத்ததை விட ஒன்றரை மடங்கு பருப்பினை கூடுதலாக அவர்கள் விதைத்துள்ளனர்.

27. நமது விஞ்ஞானிகள் அதிக மகசூல் தரும் 131 வகையான விதைகளை உருவாக்கியுள்ளனர். எனவே நம்மால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். நான் அவர்களை பாராட்டுகிறேன். உரத்திற்கான தட்டுப்பாடு என்பது கடந்த காலத்தின் துயரமான கனவாக மாறி விட்டது. பற்றாக்குறை என்பது இப்போது வரலாறாக மாறி விட்டது.

28. அரசின் கருவூலத்தை காலி செய்வதே கடந்த கால அரசுகளின் வழக்கமாக இருந்தது. இத்தகைய முயற்சியிலிருந்து விலகி இருக்கவே நான் முயற்சி செய்து வந்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில், அரசைப் பற்றி உலகம் என்ன நினைக்கிறது என்பதை விட நமது நாட்டின் தோற்றம் உலகத்தின் முன்னால் எப்படி உள்ளது என்பதே முக்கியமாகும்.

29. அரசு என்பது தொடர்ச்சிதான். இதற்கு முந்தைய அரசுகளால் சிறந்த பணிகள் செய்யப்பட்டிருந்தால், அதற்குத் தலைவணங்கி அதை நாங்கள் தொடர்வோம். பிரகதி முறையில் திறனாய்வுக் கூட்டங்களை நான் நடத்தினேன். இதற்கு முந்தைய அரசால் துவங்கப்பட்ட இது போன்ற 118 திட்டங்கள் செயல்படாமல் நின்றதை நாங்கள் இப்போது கவனித்துள்ளோம். ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 270 திட்டங்கள் தடைபட்டு நிற்கின்றன. இது மிகவும் மோசமான கவனக்குறைவாகும். அவற்றை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

30. கொள்கையில் தெளிவு இருந்தால், நோக்கத்தில் தெளிவு இருந்தால், எடுக்கப்படும் முடிவுகளில் எவ்வித தடுமாற்றமும் இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் உத்தரப் பிரதேசத்திற்கு வரும்போது கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை பற்றி பேசுவதே பொதுவான கதையாக இருந்து வருகிறது. இப்போது அதில் 95 சதவீத தொகை கொடுக்கப்பட்டு விட்டது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 50 லட்சம் குடும்பங்கள் புகையில்லா சமையலறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன.

31. நாம் உலகத் தரத்திற்கு நாம் உயர்ந்தால்தான் உலகத்திற்கு பொருத்தமான ஒரு நாடாக, உலகப் பொருளாதாரத்திற்கு தலைமை தாங்கத் தகுதியான ஒரு நாடாக இருக்க முடியாது. வர்த்தகம் செய்வதற்கான வசதிகளுக்காக நாம் செய்துள்ள ஏற்பாடுகளைப் தரமதிப்பு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

31. எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்க வேண்டும்; எவரையும் அவமதிக்கக் கூடாது என்று ராமானுஜர் சொல்வது வழக்கம். இதையே தான் அம்பேத்கரும், காந்தியும் கூடச் சொன்னார்கள். இந்த பாரபட்சத்தை சமூகம் பின்பற்றினால், அது சமூகத்தை பிளவுபடுத்தி விடும். இந்த பாரபட்சம் ஆழமாக வேரூன்றி இருந்தால், அதை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதியும், நமது உணர்வும் அதிகமாக இருக்க வேண்டும். வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே போதுமானதல்ல. சமூக சமநிலை அதை விட முக்கியமானதாகும். இத்தகைய சமூக இழிவுகளை எதிர்த்து ஒன்றிணைந்து போராட வேண்டும்.

33. ஜி. எஸ். டி. நமது பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும். அதை நிறைவேற்ற உதவிய அனைத்து கட்சிகளும் பாராட்டப்பட வேண்டியவை ஆகும்.

34. இந்த அரசு விஷயங்களை ஒத்திப்போடுவதில்லை. ஒரு பதவிநிலை ஒரு ஓய்வூதியம் என்ற எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்தினோம். அது நாங்கள் கூறியிருந்த மற்றொரு வாக்குறுதியாகும்.

35. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது மகத்தான பலமாகும். அடுத்தவர்களை மதிப்பது என்பது நமது கலாச்சார பாரம்பரியமாகும். ஒன்றிணைவு என்பதுதான் நமது நாகரீகம் தொடர்ந்து நீடித்ததற்கான காரணமாகும்.

36. வன்முறைக்கு நம் நாட்டில் இடமில்லை. பயங்கரவாதம், மாவோயிசம் ஆகியவற்றை இந்த நாடு எவ்வகையிலும் பொறுத்துக் கொள்ளாது.

37. மனித மதிப்பீடுகளை நம்புகின்றவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். மனிதாபிமானத்தை மதிப்பிட வேண்டுமெனில், அப்பாவிக் குழந்தைகள் பெஷாவரில் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவில் ஒவ்வொரு பள்ளியும் அழுதது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. நமது மனித மதிப்பின் பிரதிபலிப்பு இதுதான். அதே நேரத்தில் மறுபுறத்தில் பயங்கரவாதம் பற்றி பெருமைபட பேசப்படுகிறது.

38. நமது அண்டை நாடுகளுக்கு நான் சொல்வது இதுதான். வறுமையை எதிர்த்து போராடுவோம். நமது சொந்த மக்களை எதிர்த்து போராடுவதன் மூலம் நம்மையே நாம் அழித்துக் கொள்கிறோம். நாம் ஒன்றாக வறுமையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே வளம் பெற முடியும்.

39. கடந்த சில நாட்களாக, பாகிஸ்தான் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீர், பலுச்சிஸ்தான், கில்கிட் பகுதிகளில் உள்ள மக்கள் எனக்கு நன்றி தெரிவித்தார்கள். இது 125 கோடி மக்களுக்கான மரியாதை. பாகிஸ்தான் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீர், பலுச்சிஸ்தான், கில்கிட் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

40. சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை 20 சதவீதம் உயர்த்துவது என நாங்கள் முடிவு செய்தோம்.

41. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரையில் மருத்துவ செலவினை அரசு ஏற்றுக் கொள்ளும்.

42. சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றிப் பேசும்போது, வேறு பலரையும் விட ஒரு சிலரே குறிப்பிடப்படுகிறார்கள். வீரத்துடன் போராடிய நமது ஆதிவாசி சகோகரர்கள் பற்றி பெரும்பாலும் பேசப்படுவதே இல்லை. பிர்ஸா முண்டாவைப் பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் வேறு பலரைப் பற்றி ஒரு சிலருக்கே தெரியும். அடுத்த சில நாட்களில் இத்தகைய ஆதிவாசி சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய வரலாற்றைப் பதிவு செய்து அவர்கள் இருந்த பகுதிகளில் அருங்காட்சியகத்தில் வைப்பதே நமது நோக்கமாகும்.

43. ஒரே சமூகம் – ஒரே இயக்கம் ஒரே இலக்கு

44. பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய் ஹிந்த்