Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் கத்தார் விஜயத்தையொட்டி, இந்தியா கத்தார் கூட்டு அறிக்கை

பிரதமரின் கத்தார் விஜயத்தையொட்டி, இந்தியா கத்தார் கூட்டு அறிக்கை

பிரதமரின் கத்தார் விஜயத்தையொட்டி, இந்தியா கத்தார் கூட்டு அறிக்கை


1. கத்தார் நாட்டின் அதிபர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் அழைப்பின் பேரில் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் 4-5 ஜுன் மாதம் கத்தார் நாட்டுக்கு அலுவல் ரீதியான பயணம் மேற்கொண்டார்.

2. மேதகு கத்தார் நாட்டு அதிபர் அவர்கள் பிரதமர் திரு மோடி அவர்களை 5 ஜூன் அன்று அமிரி திவானில் வரவேற்றார். இரு தரப்புக்கும் பொதுவாக உள்ள இரு நாட்டு விவகாரங்கள், பிராந்திய விவகாரங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதங்கள் மிகவும் சுமூகமான சூழலில் மேற்கொள்ளப்பட்டது.

3. பிரதமரின் கத்தார் வருகையின்போது, கத்தார் நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மேதகு ஷேக் அப்துல்லா பின் நாசர் பின் காலிஃபா அல் தானி அவர்களையும் பிரதமர் சந்தித்தார்.

4. விவாதங்களின்போது, இரு தரப்பும், இந்தியா மற்றும் கத்தார் நாடுகளுக்கிடையே உள்ள வரலாற்று ரீதியான தொடர்பையும், இரு நாட்டு மக்களிடையே உள்ள காலத்தை கடந்த நட்புணர்வையும் குறிப்பிட்டனர்.

5. உயர்நிலை குழுக்களின் மூலமாக இரு நாடுகளுக்குமிடையே உள்ள பரஸ்பர உறவு குறித்து திருப்தி தெரிவிக்கப்பட்டது. திரு மோடி அவர்களின் வருகையையொட்டி, இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து திருப்தி தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் புதிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே உள்ள நட்புணர்வை மேலும் வளர்த்தெடுக்கும் என்று குறிப்பிடப்பட்டது.

6. இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்புத் துறை, மனித வளம் போன்றவற்றில் உள்ள ஒத்துழைப்பை இரு நாடுகளின் கூட்டு நடவடிக்கை குழு அடிக்கடி சந்திப்பதன் மூலம் செழுமைப்படுத்தலாம் என்று இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர். இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சரவைக் குழு அமைத்து, பிராந்திய விவகாரங்கள், இரு தரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.

7. இரு தரப்புக்கும் இடையே உள்ள நட்புணர்வை குறிப்பிட்ட தலைவர்கள், இந்த உறவை மேலும் வளப்படுத்த தொடர்ந்து செயல்பட ஒப்புக் கொண்டனர். இரு தரப்பிலும் அரசியல் ரீதியாகவும், பாதுகாப்புத் துறை தொடர்பாகவும், வணிக ரீதியான உறவுகளையும் மேம்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்திலும், உலக அளவிலும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த, 21ம் நூற்றாண்டில் இரு

நாடுகளுக்கிடையே சிறந்த உறவை பேணுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

9. நவம்பர் 2008ல் கையெழுத்தான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்து பேசிய தலைவர்கள், இரு நாடுகளிடையே இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் கடற்படை, வான்படை மற்றும் தரைப்படைகள் இணைந்து பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்றும், கடல் எல்லை பாதுகாப்பு குறித்து பயிற்சி செய்ய வேண்டும் என்றும் ஒப்புக் கொண்டனர். இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிப்பில் கத்தார் நாடு ஆர்வம் காட்டியது.

9. இந்தியாவில் பிப்ரவரி மற்றும் மார்ச் 2016ல் நடந்த பாதுகாப்புத் துறை கண்காட்சியில் கத்தார் நாடு பங்கேற்றதையும், கத்தார் நாட்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை தந்ததையும், இந்தியா பாராட்டியது. இந்தியாவின் உயர்நிலை பங்கேற்புக்காகவும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படையின் ஏவுகணையை மார்ச் 2016ல் நடந்த இந்தியாவின் உயர்நிலை பங்கேற்புக்காகவும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படையின் ஏவுகணையை மார்ச் 2016ல் நடந்த DIMDEX கண்காட்சியில் பார்வையிட்டதற்காகவும், இந்திய கடற்படை அதிகாரிகளின் வருகைக்காகவும், கத்தார் நாடு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது. கத்தார் நாட்டின் ராணுவப் படைகள் மற்றும் கடற்பாதுகாப்பு படைகளுக்கு இந்தியா பயிற்சி அளிக்க முன்வந்தது குறித்து கத்தார் நாடு நன்றி தெரிவித்தது.

10. வளைகுடா பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி ஆகியவற்றின் பாதுகாப்பை அதிகரிப்பது இரு நாடுகளுக்கும் முக்கியமானது என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

11. சர்வதேச சமூகத்தையும், பல்வேறு நாடுகள் மற்றும் மக்களையும் அச்சுறுத்தும் சர்வதேச தீவிரவாதத்துக்கு இரு நாட்டுத தலைவர்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். சர்வதேச மற்றும் பிராந்திய அளவில் வளரும் தீவிரவாதம் பாதுகாப்பான சூழலுக்கும், வளர்ச்சிக்கும் எதிராக இருப்பதாக இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர்.

12. எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வன்முறை, வகுப்புவாதம் மற்றும் தீவிரவாதம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். தீவிரவாதம் எந்த மதத்துடனும், எந்த நாகரீகத்துடனும் எந்த குழுவுடனும் இணைந்து இயங்கக் கூடாது என்று தலைவர்கள் குறிப்பிட்டனர்.

13. தீவிரவாதத்துக்கு ஆதரவு தரும் அனைத்து தரப்பின் மீதும் நடவடிக்கை எடுத்து தனிமைப்படுத்த வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர்.

14. தீவிரவாதத்தை எதிர்க்க முழுமையான நடவடிக்கை வேண்டும் என்பதை இரு தரப்பும் ஒப்புக் கொண்டது. தீவிரவாதத்துக்கு ஆள் சேர்ப்பது, தீவிரவாதத்துக்கு நிதியளிப்பது, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதத்தில் பங்கெடுப்பது, தீவிரவாதக் கட்டமைப்பை சிதைப்பது, இணையதளம் மூலமாக தீவிரவாதத்துக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.

15. இணையத்தை தீவிரவாதத்துக்கு பயன்படுத்துவதை தடுப்பது, , வகுப்புவாதம் மற்றும் சமூக அமைதியை கெடுப்பது ஆகியவற்றுக்காக இரு தரப்பும் இணைந்து இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த வழிமுறைகள் ஆராயப்பட்டன. இரு நாடுகளையும் சேர்ந்த மத அறிஞர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இரு நாடுகளும் இணைந்து அமைதியை வலியுறுத்தும் சகிப்புத்தன்மையை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

16. ஏற்கனவே இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் துறையில் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பை பாராட்டிய இரு நாட்டுத் தலைவர்கள், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, உளவுத் தகவல் பரிமாற்றம், சிறந்த தொழில்நுட்பத்தை வளர்ப்பது, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை தடுப்பது, ஆகியவற்றில் மேலும் கூட்டுறவை மேம்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான பணப்பரிமாற்றத்தை தடுக்க இரு தரப்பும் ஒத்துழைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்றம், மற்றும் தீவிரவாதத்துக்கு நிதியளிப்பது ஆகியவை குறித்து உளவுத் தகவல் பரிமாற்றத்துக்காக இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்றனர்.

17. தீவிரவாதத்தை எதிர்க்க சர்வதேச அளவில் உறுதியான நடவடிக்கை தேவை என்பதை இரு நாட்டுத தலைவர்களும் வலியுறுத்தினர். இரு நாடுகளிலும் உள்ள அமைப்புகளின் உறவை வலுப்படுத்துவதன் மூலம் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்ப்பது என்று இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்

18. இரு நாடுகளிடையே உள்ள வர்த்தக உறவு, சிறந்த இணைப்பாக அமைந்துள்ளது என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டது. வர்த்தகத்தில் இரு நாடுகளின் உறவு செழிப்பாக இருப்பதை குறிப்பிட்ட இரு தரப்பும், வர்த்தகத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இந்த உறவை வளப்படுத்த வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டது. இரு நாடுகளிலும் நடக்கும் வர்த்தக கண்காட்சியில் இரு நாடுகளும் பங்கேற்பது என்றும், வணிகத்தை மேம்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் கத்தார் நிறுவனங்களும், கத்தாரில் இந்திய நிறுவனங்களும் செயல்படுவதை வரவேற்ற தலைவர்கள், இந்த உறவை மேலும் செழுமைப்படுத்த ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளிடையே சுற்றுலா மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்காக தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவாக விசா வழங்க நடவடிக்கை எடுப்பது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

19. உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2022ம் ஆண்டில் கத்தாரில் நடைபெற உள்ளதையொட்டி அதற்கான உட்கட்டமைப்புப் பணிகளில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பதை வரவேற்ற கத்தார் தரப்பு, கத்தார் நாட்டின் விஷன் 2030 என்ற வளர்ச்சித் திட்டத்திலும் இந்திய நிறுவனங்கள் பங்கேற்றதையும் வரவேற்றது.

20. தொழில் தொடங்க ஏதுவான சூழல் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, ரயில்வே, பாதுகாப்புத் துறை மற்றும் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான விதிகள் தளர்த்தப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார். உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புடன் கூடிய 100 நவீன நகரங்கள், 50 நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள், 500 நகரங்களுக்கு நவீன கழிவு மேலாண்மை, அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய சுகாதாரம், 2019க்குள் அனைவருக்கும் சுத்தமான கழிப்பிட வசதி, 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வேலை ஆகிய திட்டங்கள் இந்தியாவில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், இத்திட்டங்களில் கத்தார் நாடும் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

21. இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் திரு மோடி அவர்களின் திட்டங்களை பாராட்டிய மேதகு கத்தார் நாட்டு அதிபர் அவர்கள், இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த கத்தார் நாட்டு அதிபர், பிரதமர் மோடி அவர்களின் “புதுத் தொழில இந்தியா” “மேக் இன் இந்தியா” “நவீன நகரங்கள்” மற்றும் தூய்மை இந்தியா ஆகிய திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

22. இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அதன் தாக்கத்தையும், கத்தார் நாட்டின் முதலீடு செய்யும் சக்தியையும் விவாதித்த இரு தரப்பு, இந்தியாவில் முதலீடு செய்ய பல்வேறு வழிமுறைகளை ஆராய்ந்தது. மேலும் இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது குறித்தும் இந்திய உட்கட்டமைப்பில் முதலீடு செய்வது குறித்தும் ஆராயப்பட்டது.

23. இரு நாடுகளிலும் உட்கட்டமைப்பு தொடர்பான தொழில்களில் பங்கேற்பது என்று இரு நாடுகளும் முடிவெடுத்தன. கத்தார் நாட்டின் கத்தார் முதலீட்டு ஆணையம் மற்றும் இந்தியாவின் தேசிய உட்கட்டமைப்பு முதலீட்டு நிதியம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து ஆராயப்பட்டது. இந்த இரு அமைப்புகளிடையே கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

24. முதலீடுகள் தொடர்பாக இரு நாடுகளும் உரிய நேரத்தில் தகவல் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. கத்தார் முதலீட்டு ஆணையம் மற்றும் இந்தியாவின் பொது மற்றும் தனியார் துறை அதிகாரிகளோடு சந்திப்புகளை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

25. எரிசக்தித் துறையில் இரு நாடுகளிடைய உள்ள ஒத்துழைப்பு குறித்து திருப்தி தெரிவித்த இரு தரப்பும் இந்தியாவுக்கு அதிகமான அளவில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய வாயுவை வழங்கும் நாடாக கத்தார் அமைந்துள்ளதற்கு திருப்தி தெரிவித்தனர். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு கத்தார் அளிக்கும் உதவி குறித்து இந்தியா திருப்தி தெரிவித்தது.

26. எரிசக்தித் துறையில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது என்று இரு தரப்பும் முடிவெடுத்தன. குறிப்பாக மனிதவள மேம்பாடு, பயிற்சி, மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் இந்தியா மற்றும் இதர நாடுகளோடு கூட்டு நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

27. இந்திய எரிசக்தி நிறுவனங்கள் கத்தார் நாட்டில் புதிய எண்ணை துரப்பணப் பணிகளில் ஈடுபடுவது, தற்போது உள்ள எண்ணை வயல்களில் செயல்படுவது, குறிப்பாக கத்தார் பெட்ரோலியம் நிறுவனத்தோடு இணைந்து செயல்படுவது போன்ற நடவடிக்கைகளில் இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக இந்திய தரப்பு தெரிவித்தது.

28. இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் கண்டுபிடிப்பு மற்றும் லைசென்ஸ் கொள்கை மற்றும் சிறிய எண்ணை வயல்கள் கொள்கைகளின் கீழ், கத்தார் நாடு, இந்தியாவில் பங்கேற்க வேண்டும் என்று இந்தியா கத்தார் நாட்டுக்கு அழைப்பு விடுத்தது.

29. இந்தியாவில் எரிசக்தி சேமிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தின் இரண்டாவது பகுதியில் கத்தார் நாடு பங்கேற்க வேண்டம் என்று இந்தியா அழைப்பு விடுத்தது.

30. சேவைத் துறை, வங்கி சேவை, காப்பீட்டு சேவை, பங்கு மார்க்கெட் உள்ளிட்டவற்றில் இரு தரப்பும் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் பங்கு வர்த்தக கண்காணிப்பு ஆணையம் மற்றும் கத்தார் நாட்டில் அதற்கு இணையான அமைப்புடன் சேர்ந்து ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.

31. இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ளதையும், மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதையும் அங்கீகரித்த தலைவர்கள், இரு நாடுகளுக்கிடையே சுகாதாரம் தொடர்பாகவும் மருந்துகள், மருத்துவக் கல்வி, மருத்துவர்களை பரிமாறிக் கொள்ளுதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர். சுகாதாரத் துறை தொடர்பாக இந்தியா மற்றும் கத்தார் நாடுகளுக்கிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

32. சர்வதேச சூரிய ஒளி மின்திட்டத்துக்கான கூட்டமைப்பை உருவாக்கிய பிரதமர் திரு மோடி அவர்களுக்கு கத்தார் தரப்பு பாராட்டுக்களை தெரிவித்தது. உலகளாவிய அளவில் இந்த சூரிய ஒளி கூட்டமைப்புக்கான முக்கியத்துவத்தை இரு நாட்டுத் தலைவர்களும் அங்கீகரித்தனர்.

33. சர்வதேச யோகா தினத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பை குறிப்பிட்ட இரு நாட்டுத் தலைவர்களும், இந்த வரவேற்பு உலக சமுதாயம் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ முன் வந்ததற்கான அடையாளம் என்று குறிப்பிட்டனர். 21 ஜுன் 2015 அன்று சர்வதேச யோகா தினத்துக்கு கத்தார் நாடு தபால் தலை வெளியிட்டு ஆதரவு தெரிவித்ததற்கு பிரதமர் திரு மோடி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

34. இந்தியா மற்றும் கத்தார் நாடுகளிடையே கலாச்சார பரிவர்த்தனைகள் எப்படி இரு நாடுகளையும் இணைத்துள்ளன என்று இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர். இரு தரப்பும் கலாச்சார மற்றும் விளையாட்டுப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது என்றும், திரைப்படத் துறையிலும் ஒத்துழைப்பு மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. கத்தார் நாட்டின் அருங்காட்சியகங்கள் 2019ம் ஆண்டை இந்திய கத்தார் கலாச்சார ஆண்டாக அறிவித்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியா மற்றும் கத்தார் நாடுகளுக்கிடையே, சுங்க விவகாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு நலன், சுற்றுலாத் துறை, ஆகியவை குறித்து கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

35. இந்தியா மற்றும் கத்தார் மக்களிடையே உள்ள நேரடி தொடர்பு இந்திய கத்தார் நாடுகளின் உறவில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட இரு நாட்டுத் தலைவர்களும் இந்த உறவை மேம்படுத்த உறுதி கொண்டனர். மேதகு எமிர் அவர்கள், கத்தார் நாட்டின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்டார். கத்தார் நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதாக உள்ளது என்று கத்தார் தரப்பு தெரிவித்தது. இந்தியர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள கத்தார் நாட்டுத் தலைமைக்கு பிரதமர் திரு மோடி அவர்கள் நன்றி தெரிவித்தார். திறன் வளர்ப்பு மற்றும் தகுதிகளின் அங்கீகாரம் குறித்து இரு நாடுகளிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

36. மேற்காசியா, வளைகுடா பகுதி மற்றும் தெற்காசியப் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். சிரியா, ஈராக், லிபியா மற்றும் ஏமன் நாடுகளில் உள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கவலை தெரிவித்தனர். இந்த சிக்கல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

37. ஐக்கிய நாடுகள் அவையின் சீர்திருத்தத்தை வலியுறுத்திய இரு நாட்டுத் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் அவை, சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலை மேலும் வலுவாக்கும் வகையில் சீர்திருத்தம் மேற்கொள்ளவேண்டும் என்பதையும், அதன் உறுப்பினர் அந்தஸ்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

38. கத்தார் நாட்டில் தனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு மேதகு அதிபர் எமிர் அவர்களுக்கு பிரதமர் திரு மோடி அவர்கள் நன்றி தெரிவித்தார். மேதகு கத்தார் அதிபர் அவர்களை இந்தியாவுக்கு இரு தரப்புக்கும் வசதியான ஒரு நேரத்தில் வருகை தருமாறு பிரதமர் திரு மோடி அவர்கள் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை கத்தார் அதிபர் ஏற்றுக் கொண்டார்.

***