பிரதமரின் இங்கிலாந்து பயணத்தின் போது (2018 ஏப்ரல் 18) வெளியிடப்பட்ட இங்கிலாந்து-இந்தியா கூட்டறிக்கை
18 Apr, 2018
இங்கிலாந்து பிரதமர் திருமதி தெரசா மே அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்தில் 2018 ஏப்ரல் 18 ஆம் தேதி அந்நாட்டின் அரசு விருந்தினராக பயணம் மேற்கொண்டார். இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுகளை நடத்தினார்கள். மண்டல மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் தளத்தகை கூட்டாண்மை மற்றும் வளர்ந்து வரும் ஒருங்கமைவு குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தினர். 2018 ஏப்ரல் 19, 20 தேதிகளில் லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் திரு மோடி பங்கேற்கிறார்.
நம்மிடையேயான தளத்தகைக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் இயற்கையான அவா, உலகின் மிகப்பழமையான மற்றும் பெரிய ஜனநாயகங்கள் என்ற முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நெறிகள், பொதுவான சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிடம் உள்ளது. நாம் காமன்வெல்த்தின் உறுதியான உறுப்பினர்கள். நாம் உலக நெடுநோக்கையும், விதிகள் அடிப்படையிலான சர்வதேச அமைப்பின் மீதான உறுதிப்பாட்டையும் கொண்டவர்கள். இந்த அமைப்பை படைபலம், மற்றும் வற்புறுத்தல் காரணமாக சீர்குலைக்க முயலும் ஒருதலைப்பட்சமான செயல்களை இருநாடுகளும் வலுவாக எதிர்க்கின்றன. இருநாடுகளுக்கும் இடையே நிலவும் எண்ணில் அடங்கா தனிநபர் மற்றும் தொழில்முறை உறவுகளில் அமைந்துள்ள வாழும் பாலத்தை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம்.
பகிர்ந்து கொள்ளப்பட்ட மற்றும் உலக சவால்களை எதிர்கொள்ள காமன்வெல்த் உறுப்பு நாடுகள், காமன்வெல்த் செயலகம் மற்றும் இதர நட்பு அமைப்புகளுடன் சேர்ந்து உழைக்க இங்கிலாந்தும், இந்தியாவும் உறுதி பூண்டுள்ளன. காமன்வெல்த்துக்கு புத்துணர்ச்சி ஊட்டுதல், குறிப்பாக சிறிய, வலிமையற்ற அரசுகள் நிலைத்திருப்பதை உறுதி செய்வதில் நாம் உறுதியுடன் உள்ளோம். காமன்வெல்த் மக்கள் தொகையில் 60 சதவீதம் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் நாம் உறுதியுடன் உள்ளோம். இந்த சவால்களை எதிர்கொள்ள காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டம் முக்கியமான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இந்த உச்சிமாநாட்டின் அதிகாரப்பூர்வ முதல் நெறியான “பொதுவான எதிர்காலத்தை நோக்கி” என்ற கொள்கையின் கீழ், இணைந்து இதற்காக பாடுபடுவோம். குறிப்பாக இங்கிலாந்தும், இந்தியாவும் மேலும் நிலைத்த, வளமான, பாதுகாப்பான, நியாயமான எதிர்காலத்தை அனைத்து காமன்வெல்த் குடிமக்களுக்கும் உருவாக்குவதில் கீழ்க்கண்ட நடவடிக்கை எடுத்து உதவ உறுதியுடன் உள்ளது:
பிளாஸ்டிக் மூலமான மாசுபாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க ஒருங்கிணைந்த உலக செயல்திட்டத்தை காமன்வெல்த்-ம் உலக சுற்றுச்சூழல் தினம் 2018-ன் ஏற்பாட்டாளர் என்ற வகையில் இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி ஏற்றல்.
கணினி பாதுகாப்புத் திறனை மேம்படுத்த காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு உதவும் செயல்முறை ஆதரவை வழங்குதல்.
உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக வசதி உடன்பாட்டை அமல்படுத்த காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு உதவுதல். காமன்வெல்த் சிறு நாடுகள் அலுவலகத்துக்கு கூடுதல் ஆதரவு வழங்குதல்
தொழில்நுட்ப கூட்டாண்மை
நமது கூட்டு நெடுநோக்குக்கும், நமது வளத்துக்கும் இன்றும் நமது சந்ததியினருக்கும் இந்தியா-இங்கிலாந்து தொழில்நுட்ப கூட்டாண்மை மத்தியமாக விளங்குகிறது. தொழில்நுட்பப் புரட்சியில் நமது நாடுகள் முன்னணியில் உள்ளன. நமது உலக தரமான புதுமைப்படைப்பு தொகுப்புகளிடையே அறிவு, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, புதுமை படைப்பு, கூட்டாண்மை உருவாக்கம் ஆகியவற்றை நாம் பகிர்ந்து கொள்வோம். உயர் மதிப்பு வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், உற்பத்தித் திறன் பெருக்கம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாடு, பகிர்ந்து கொள்ளப்பட்ட சவால்களை கையாள்தல் ஆகியவற்றில் நமது தொழில்நுட்ப வலுவை நாம் பயன்படுத்துவோம்.
உலக சவால்களை எதிர்கொள்ள எதிர்கால தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், செயற்கை அறிவுத்திறத்தை பயன்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரம், மருத்துவ தொழில்நுட்பம், கணினி பாதுகாப்பு, தூய்மையான வளர்ச்சியை மேம்படுத்துதல், அதிநவீன நகரமயமாக்கல், எதிர்கால இடம் பெயர்வு ஆகியவற்றில் இருதரப்பும் ஒத்துழைப்பு நல்குவோம். அதேசமயம் எதிர்கால திறன்கள் மற்றும் நமது இளைஞர்களின் திறன்கள் ஆகியவற்றையும் மேம்படுத்துவோம்.
நம்மிடையே வளர்ந்து வரும் இருதரப்பு தொழில்நுட்ப கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இங்கிலாந்து – இந்தியா தொழில்நுட்ப மையத்தை இந்தியாவில் நிறுவுவதற்கு இங்கிலாந்து எடுத்துள்ள முயற்சிகளை இந்திய அரசு வரவேற்கிறது. இந்த தொழில்நுட்ப மையம் உயர் தொழில்நுட்ப கம்பெனிகளை ஒருங்கிணைத்து முதலீடு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கி, மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கான புதிய மேடையை அமைக்கும். மேலும், எதிர்கால இடம்பெயர்வு உள்ளிட்ட உயர் கொள்கை ஒத்துழைப்புகள், உயர்நிலை உற்பத்தி மற்றும் மருத்துவ செயற்கை அறிவு ஆகியவற்றை இந்தியாவின் மாற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ், வழங்குவதற்கும் உதவும். இங்கிலாந்து மண்டலத்திற்கும், இந்திய மாநில நிலை தொழில்நுட்ப தொகுப்புகளுக்கும் இடையே புதிய கூட்டாண்மையை நாம் உருவாக்குவோம். இதன்மூலம் கூட்டு புதுமைப்படைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வோம். இரு அரசுகளின் ஆதரவுடன் இந்தியா – இங்கிலாந்து நுட்ப முதன்மை நிர்வாக அதிகாரிகள் கூட்டமைப்பை உருவாக்குவது பற்றி அறிவித்திருக்கிறோம். திறன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கவனத்தில் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை டெக் யூகே மற்றும் நாஸ்காம் இடையே கையெழுத்திட்டுள்ளோம். இந்த ஒப்பந்தத்தில் தொழிற்சாலைகள் தலைமையிலான பயிற்சிப் பணித் திட்டம் அடங்கியிருக்கும். இந்தியாவில் ஃபின்டெக் எனப்படும் நிதி தொழில்நுட்பம் மற்றும் விரிவான தொழில்முனைவுத் திறனை மேம்படுத்துவதற்கான புதிய யூகே ஃபின்டெக் ராக்கெட்ஷிப் என்ற விருதுகளை தொடங்கியுள்ளோம்.
அறிவியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் உலக சவால்களை எதிர்கொள்ள தலைசிறந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து திறன்களை இருதரப்பினரும் காட்சிப்படுத்தியுள்ளோம். இங்கிலாந்துதான், சர்வதேச ஆராய்ச்சி மற்றும் புதுமைப்படைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கூட்டாளியாகும். இங்கிலாந்து-இந்தியா, நியூட்டன் – பாபா திட்டம், கூட்டு ஆராய்ச்சி மற்றும் புதுமைப்படைப்பு விருதுகளை 2021 வாக்கில் 400 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளாக உயர்த்தும். சுகாதாரத்துறையில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவை பாதுகாப்பான, ஆரோக்கியமான இடங்களாக மாற்றுவதற்கு கூட்டுப் பணிக்குழு உறவுகளை வலுப்படுத்துவோம். இதற்கென செயற்கை அறிவு திட்டங்களையும், டிஜிட்டல் மருத்துவ தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவோம்.
வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி
புதிய வர்த்தக ஏற்பாடுகளை மேம்படுத்த துடிப்புள்ள புதிய இந்தியா – இங்கிலாந்து வர்த்தக கூட்டாண்மையை வடிவமைக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இங்கிலாந்து தனது சுயேச்சையான வர்த்தகக் கொள்கைக்கும், இருதிசைகளிலும் முதலீட்டுக்கு வசதி செய்து தந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட வலு அம்சங்கள் அடிப்படையில் ஒத்துழைப்பை தீவிரமாக்குவதிலும் பொறுப்புகளை ஏற்றுள்ளது. சமீபத்தில் நிறைவடைந்த இங்கிலாந்து – இந்தியா கூட்டு வர்த்தக ஆய்வின் பரிந்துரைகள் அடிப்படையில் நாம் இணைந்து பணியாற்றி வர்த்தக தடைகளைக் குறைத்து இருநாடுகளிலும் வர்த்தகம் புரிதலை எளிதாக்குவோம். இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிறகு இருதரப்பு வர்த்தக உறவுகளை இது மேலும் வலுவாக்க உதவும். இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதை அடுத்து, ஐரோப்பிய யூனியன் – இந்தியா ஒப்பந்தங்கள் அமலாக்க காலத்தில் எமது தொடர்ந்த இங்கிலாந்துக்கான ஆதரவுக்கு உறுதியளிக்கிறோம். இந்த காலக்கட்டத்திற்குப் பிறகும், சம்பந்தப்பட்ட ஐரோப்பிய யூனியன் – இந்தியா உடன்பாடுகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உருவாக்குவோம்.
விதிகள் அடிப்படையிலான பன்முக வர்த்தக அமைப்பு, வரியற்ற, நியாயமான, சிறந்த வர்த்தகத்தை அடைந்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் முக்கியப் பங்கினை இருதலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். நிலைத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு இவற்றின் அவசியத்தையும் இவர்கள் ஏற்றுக்கொண்டனர். உலக வர்த்தக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து உழைப்பதில் தங்களது உறுதிப்பாட்டை இவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள். வர்த்தகம் குறித்த கூட்டுப் பணிக்குழுவின் கீழ், பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த நடவடிக்கைகள் உலக விதிகள் அடிப்படையிலான அமைப்பின் உறுதிப்பாட்டுக்கும் அதில் உலக வர்த்தக அமைப்பின் பங்கிற்கும் ஆதரவு அளிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இங்கிலாந்தின் முதலீடுதான் ஜி-20 முதலீடுகளில் மிகப்பெரியது ஆகும். அதேபோல இங்கிலாந்தில் உள்ள இந்தியாவின் முதலீட்டுத் திட்டங்கள் 4-வது மிகப்பெரியதாகும். நமது பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்த புதிய முதலீடு குறித்த பேச்சு வார்த்தைகளை விரைவில் தொடங்குவோம். இந்தப் பேச்சுவார்த்தை நமது முன்னுரிமைகளையும், எதிர்கால வாய்ப்புகளில் ஒத்துழைப்பையும் மறு ஆய்வு செய்வதாக அமையும்.
இந்திய வர்த்தகத்துக்கு கூடுதல் ஆதரவு வழங்க இங்கிலாந்து செய்துள்ள முடிவை இந்தியா வரவேற்கிறது. இங்கிலாந்தில் இந்தியா முதலீடுகளுக்கென பரஸ்பர விரைவு வழி அமைப்பை உருவாக்கும் வகையில் இங்கிலாந்தின் இந்த ஆதரவு அமைந்திருக்கும். நெறிமுறைப்படுத்தும் சூழ்நிலையை மேம்படுத்துவதில் தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டம் உதவும். வர்த்தக நாட்டம் கொண்டோருக்கான ஆதரவு திட்டங்களை இருதரப்பும் ஆதரிக்கும். இவற்றில் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் வளப் பகிர்வை அடைய உதவும் திட்டங்களும் இன்றைய இங்கிலாந்து – இந்தியா முதன்மை நிர்வாக அதிகாரிகள் அமைப்பின் உத்தேசத் திட்டங்களும் அடங்கியிருக்கும்.
உலக நிதி மற்றும் முதலீட்டில் லண்டன் நகரம் ஆற்றிய முக்கியப் பங்கினை இருதரப்பினரும் வரவேற்றனர். லண்டன் பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் வழங்கப்பட்ட ரூபாய் ஆதிக்கம் அதிகமுள்ள “மசாலாப் பத்திரங்களின்” உலக மதிப்பில் 75 சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்கு பசுமைப் பத்திரங்களாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய முதலீடு மற்றும் அடிப்படை வசதி நிதியத்தின்கீழ், இந்திய அரசு இங்கிலாந்து அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பசுமை வளர்ச்சி பங்கு நிதியம் இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறைக்கு போதுமான நிதியை வழங்கும். இருதரப்பினரும் உறுதியளித்துள்ள 120 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் என்ற உறுதியளிப்புடன் இந்த பசுமை வளர்ச்சி பங்கு நிதியம், நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து 500 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் முதலீட்டை உருவாக்கும். இதனையடுத்து, 2022 – ல் 175 கிகாவாட் புதுப்பிக்கக்கூடிய மின்சக்தித் திறனை அடையும் இந்திய இலக்கு விரைவுபடுத்தப்படும். மேலும் தொடர்புடைய தூய்மை போக்குவரத்து தண்ணீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கும் முதலீடு செய்ய உதவும். எரிசக்தி அடிப்படைவசதி கொள்கை ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்பை எதிர்நோக்கியுள்ள நாம், நவீன நகரமயமாக்கலிலும் சேர்ந்து உழைக்க ஒப்புக்கொண்டுள்ளோம்.
நமது இரு நாடுகளுக்கும் இடையேயான ஃபின்டெக் பேச்சுவார்த்தை உருவாக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம். புதிய கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு உடன்பாடும் இதில் அடங்கும். தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டம் மூலம் நமது நிதிச்சேவைகள் ஒத்துழைப்பு உத்வேகம் பெறும். கம்பெனி கலைப்பு, ஓய்வூதியங்கள், காப்பீடு ஆகியவற்றில் சந்தை மேம்பாட்டுக்கும் இது உதவும். நிதியமைச்சர்கள் 10-வது முறையாக இந்தப் பேச்சுவார்த்தையை இந்த ஆண்டின் பின்பகுதியில் தொடரும் போது மேலும் ஒத்துழைப்புக்கான பகுதிகள் கண்டறியப்படும்.
இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில் இணைப்புகளின் முக்கியத்துவத்தை இந்தியாவும், இங்கிலாந்தும் ஏற்றுக் கொண்டுள்ளன. இணைப்புத் திட்டங்கள், நல்ல ஆளுகை, சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். சமூக மற்றும் சுற்றுச்சூழல் தரங்கள், நிதி பொறுப்பேற்கும் கொள்கைகள், பொறுப்பேற்கும் கடன் நிதிவசதி நடைமுறைகள் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். சர்வதேச கடப்பாடுகளை மதிக்கும் வகையிலும், தரங்கள், சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து காணக்கூடிய பயன்களை அளிக்க வல்லதாகவும் இவை அமையவேண்டும்.
பொறுப்புமிக்க சர்வதேச தலைமை
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரை முன்னெடுத்துச் செல்வதென்ற உறுதிமொழியை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர். பருவநிலை மாற்றத்தை சமாளித்து, பாதுகாப்பான, கட்டுப்படியாகக்கூடிய விலையில் நீண்டகாலத்திற்கு எரிசக்தி விநியோகிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பதை ஒப்புக்கொண்ட இருதரப்பும், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அறிவுத்திறன் பரிமாற்றம், திறன் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் திட்ட தயாரிப்பு போன்றவற்றின் மூலம் வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினத்தை குறைத்து, தூய்மையான எரிசக்தி விநியோகத் திட்டங்களில் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொண்டன.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியை ஏற்படுத்த இந்தியா மேற்கொண்ட முன்முயற்சிகளை இங்கிலாந்து வரவேற்றுள்ளது. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இருநாட்டு அரசுகளின் ஆதரவுடன் சர்வதேச சூரியசக்தி கூட்டணியும் லண்டன் பங்குச் சந்தையும் இணைந்து நடத்திய நிகழ்ச்சி வெற்றியடைந்ததையும் இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர். இந்தக் கூட்டணியில் இங்கிலாந்து இணைந்ததை வரவேற்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, சூரியசக்தி திட்டங்களுக்கு நிதியுதவி செய்வது, அடுத்த தலைமுறை சூரிய சக்தி தொழில்நுட்பங்களை உருவாக்குதல் போன்றவற்றில் இங்கிலாந்துக்கும் சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கும் இடையிலான உத்தேச ஒத்துழைப்பை பிரதிபலிப்பதுடன், சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் நோக்கங்கள் நிறைவேற ஆதரவளிப்பதில் இங்கிலாந்தின் சூரியசக்தி தொழில் துறையினரின் நிபுணத்துவத்தை பிரதிபலிப்பதாகவும் அமைந்தது. ஒரு நிதி அமைப்பு என்ற முறையில் லண்டன் பங்குச்சந்தை, சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இடம் பெற்றுள்ள நாடுகளின் சூரியசக்தி திட்டங்களுக்காக 2030ம் ஆண்டுக்குள் 1000 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டுவது என்ற சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் நோக்கங்களை நிறைவேற்றுவதையும் எடுத்துரைப்பதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடுகள் என்ற முறையில், ஒப்புக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள், உலக அமைதி மற்றும் நிலைப்பாட்டை உறுதிசெய்ய தேவையான விதிமுறைகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கு அமைப்புக்கு ஆதரவளிப்பது என்ற நோக்கத்திற்கு உறுதுணையாக இருப்பவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவது என்ற விருப்பமும் பரிமாறிக்கொள்ளப்பட்டது. நிச்சயமற்ற உலகில், இங்கிலாந்தும் இந்தியாவும் இணைந்து செயல்படுவது நன்மைக்கு வழிவகுக்கும். சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கான அனுபவம் மற்றும் அறிவையும் நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத்துறையின் இங்கிலாந்தின் புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து 10 மில்லியன் பவுண்ட் ஆராய்ச்சி திட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளன. இத்திட்டம் புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மேற்கொள்ள உதவும். இங்கிலாந்தின் உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத்துறை, ”விவசாயிகள் மண்டல” முன்முயற்சிக்கு வழிவகுப்பதுடன், உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள சிறு, குறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு, உயிரியல் ஆராய்ச்சி மற்றும் புள்ளி விவரங்களை பயன்படுத்தி நவீன வேளாண்மையை உருவாக்குவதற்கான திறந்தவெளி புள்ளிவிவர அமைப்பாகவும் திகழும். இந்திய உயிரி தொழில்நுட்பத்துறை இங்கிலாந்தின் இயற்கைச் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து செயல்பட்டு, நீடித்த பூமிக்கான முன்முயற்சியை உருவாக்கவும், மனித குல மேம்பாட்டிற்கான நீடித்த மற்றும் புத்தெழுச்சிக்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்.
2030ம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழித்து, வளர்ச்சியை விரைவுபடுத்த, உலகளாவிய மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும். அதிகரிக்கப்பட்ட நிதி, புதிய சந்தைகள், வர்த்தகம், முதலீடு, இணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு போன்றவற்றின் பலன்களை உறுதி செய்வதுடன், பெரும்பாலான நாடுகள் மற்றும் ஏழைகள், மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வளமான எதிர்காலத்திற்கும் இது உதவும்.
பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு
நமது நட்புறவுக்கு ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தி, புதிய ராணுவ மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்க 2015ம் ஆண்டு நாம் உறுதியேற்றுக்கொண்டோம். நாம் சந்திக்கும் அச்சுறுத்தலின் தன்மை தொடர்ந்து மாறுபட்டு வருவதால், பதிலடி கொடுப்பதில் நாம் புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும். இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை வடிவமைத்து உருவாக்குவதுடன், புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்குவதுடன், நமது பாதுகாப்பு மற்றும் ராணுவப்படைகள், தொழில்நுட்பம், கருவிகள் மற்றும் திறமைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பான, வெளிப்படையான, உள்ளார்ந்த மற்றும் வளமான இந்தோ பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது, இந்தியா, இங்கிலாந்து மற்றும் சர்வதேச சமுதாயத்தின் நலன்களுக்கு உகந்தது. கடற்கொள்ளை, கடல்சார் சுதந்திரத்தை பாதுகாத்தல், மற்றும் எளிதில் அணுகுவதற்கும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள கடல்சார் பகுதிகளின் மேம்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இங்கிலாந்தும் இந்தியாவும் இணைந்து பாடுபடும்.
சர்வதேச பாதுகாப்பை மேம்படுத்தவும் இணையவெளி நிலைப்பாட்டையும் கட்டமைப்பு ரீதியாக உருவாக்க, நமது ஒத்துழைப்புகளை மேலும் அதிகரிக்க நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். ஒவ்வொரு நாட்டின் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதி மற்றும் பாதுகாப்பான இணையவெளிக்கான சர்வதேச சட்டங்களை அங்கீகரிப்பதாக இது அமையும்.
பயங்கரவாத எதிர்ப்பு
இந்தியாவிலும் இங்கிலாந்திலும் நிகழும் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த சம்பவங்கள் உட்பட, பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வன்மையாக கண்டிப்பதென்ற உறுதியை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இதுதவிர பயங்கரவாதத்தை எந்தக்காரணத்திற்காகவும் நியாயப்படுத்தக்கூடாது என இரு தலைவர்களும் உறுதி பூண்டதுடன், பயங்கரவாதத்தை எந்தவொரு மதம், இனம், நாட்டுடன் தொடர்புபடுத்தக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள், மத ரீதியாக பிரச்சாரம் மேற்கொள்ளவோ, ஆட்களை தேர்வு செய்வதற்கோ, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கோ வாய்ப்பளித்து விடக்கூடாது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். எனவே அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பயங்கரவாத தொடர்புகளையும், அவர்களுக்கான நிதியுதவி மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிக்கவும் ஒப்புக் கொண்டனர்.
நம் நாட்டு மக்களை பாதுகாக்க, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷே முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஹக்கானி அமைப்பு, அல் கைதா, ஐஎஸ்ஐஎஸ் (தாயேஷ்) போன்ற சர்வதேச அளவிலான பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான மற்றும் வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படும் மதவாத மற்றும் பயங்கரவாத செயல்களை முறியடிக்கவும் ஒப்புக் கொண்டனர்.
நரம்புகளை தாக்கக்கூடிய ரசாயன ஆயுத தாக்குதல்கள் நடத்தப்படும் வேளையில், ஆயுதக்குறைப்பு மற்றும் அணு ஆயுத பரவல்தடுப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான விருப்பத்தை பகிர்ந்து கொண்டனர். சிரியா அரபுக் குடியரசில் ரசாயன ஆயுதங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக வரும் செய்திகள் குறித்தும் இருவரும் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், யாருக்கு எதிராகவும், எத்தகைய சூழ்நிலையிலும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்கள், ரசாயன ஆயுதங்கள் தொடர்பான உடன்படிக்கைகளை வலுவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்தவும் உறுதி தெரிவித்தனர். இதுபற்றி அவசர விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, ரசாயன ஆயுதங்கள் பயன்பாட்டிற்கு எதிரான அனைத்து விசாரணைகளையும், சர்வதேச உடன்படிக்கைகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கல்வி மற்றும் மக்களிடையேயான தொடர்பு
இருநாடுகளுக்கும் வளத்திற்கும், ஊக்கமளிக்கும் வகையில் திறன் மற்றும் தகுதியை மேம்படுத்துவதற்கான துறைகளில், இங்கிலாந்தில் கல்வி பெறுவதையும் பணியாற்றுவதையும் இந்தியா வரவேற்கிறது.
2017ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து கலாச்சார ஆண்டாக வெற்றிகரமாக கொண்டாடப்பட்டதற்கும் இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். சுமார் ஓராண்டுகாலம் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தின்போது, இருநாடுகளிலும் நடத்தப்பட்ட கலை, கலாச்சார மற்றும் இலக்கிய பாரம்பரிய அடிப்படையிலான நிகழ்ச்சிகள் மூலம், முன்னெப்போதும் இல்லாத வகையில் கலாச்சாரப் பரிமாற்றத்தை காண முடிந்தது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஆழமான கலாச்சார உறவுகளுக்கு இந்தக் கொண்டாட்டமே தகுந்த உதாரணம் ஆகும்.
இந்தியாவில் பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை வரவேற்ற இரு தலைவர்களும், இந்தக் கவுன்சில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டங்களை வழங்குவதோடு மட்டுமின்றி கலாச்சார பரிமாற்றங்களுக்கும் இந்தக் கவுன்சில் சிறப்பாக பணியாற்றுவதாகவும் தெரிவித்தனர்.
இந்தியா – இங்கிலாந்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறையினர் மேலும் நெருங்கிய ஒத்துழைப்புகளையும் பரிமாற்றங்களையும் மேற்கொள்வதற்கு, இருநாட்டு மக்களிடையே இந்தக் கவுன்சில் பாலமாக திகழ்வதாகவும் ஒப்புக் கொண்டனர். வாழும் பாலமாக திகழும் இந்தக் கவுன்சிலுக்கு தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அளிக்கவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
முடிவுரை
வரும் ஆண்டுகளில் நமது சிறப்பு வாய்ந்த நட்புறவு மேம்படுவதைக் காண, பல நூற்றாண்டுகளுக்கு நமது தளத்தகை கூட்டாண்மையை தொடர்ந்து கடைபிடிக்க உறுதிபூண்டுள்ளோம். நமது வர்த்தக, கலாச்சார மற்றும் சிந்தனைத் திறன்மிக்க தலைவர்களிடையே, லட்சக்கணக்கான கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்துவதை ஊக்குவிப்பதுடன், இந்தியாவும் இங்கிலாந்தும், குடும்பம் முதல் நிதிவரையிலும், வர்த்தகம் முதல் பாலிவுட் வரையிலும், விளையாட்டு முதல் அறிவியல் வரை என இந்தியா-பிரிட்டிஷ் இடையே கல்வி, பயணம் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன.
இங்கிலாந்தில் தமக்கும் தம்முடன் வருகை தந்த தூதுக்குழுவினருக்கும் மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக இங்கிலாந்து அரசுக்கும் அந்நாட்டு பிரதமர் தெரஸா மே-க்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் இந்தியாவுக்கு வருவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.