Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்


பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தைத் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாரணாசிக்கான ரூ. 5,200 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார். உத்தரப் பிரதேச ஆளுநர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் டாக்டர். மன்ஷூக் மண்டாவியா, டாக்டர். மஹேந்திர நாத் பாண்டே, இணை அமைச்சர்கள், மக்களின் பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி நாடு மிகப் பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது என்று கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் கூறினார். ”பாபா விஸ்வநாத் ஆசியுடன், அன்னை கங்கையின் நிலையான புகழுடன், காசி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அனைவருக்கும் கட்டணமில்லா தடுப்பூசி இயக்கம் வெற்றிகரமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது” என்று பிரதமர் கூறினார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் மிக நீண்ட காலத்திற்கு சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு போதிய கவனம் பெறவில்லை, இதனால் குடிமக்கள் முறையான சிகிச்சைக்கு அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தனர். இது நிலமை மோசமாகவும் நிதிச்சுமைக்கும் வழி வகுத்தது என்று பிரதமர் குற்றம் சாட்டினார். இதன் காரணமாக மருத்துவ சிகிச்சை குறித்து நடுத்தர வகுப்பினர் மற்றும் ஏழை மக்களின் இதயங்களில் தொடர்ச்சியான கவலை நிலைகொண்டது. நீண்ட காலத்திற்கு நாட்டின் அரசுகளில் நீடித்திருந்தவர்கள் நாட்டின் சுகாதார கவனிப்பு முறையின் அனைத்து நிலை வளர்ச்சிக்கு பதிலாக வசதிகளின் சீரழிவுக்கு இட்டுச்சென்றனர்.

இந்தக் குறைபாடுகளைக் களைவது பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் கூறினார். அடுத்த 4-5 ஆண்டுகளில் கிராமத்திலிருந்து ஒன்றியத்திற்கும், மாவட்டத்திற்கும், பிராந்தியத்திற்கும் தேசிய நிலைக்கும் முக்கியமான சுகாதார கவனிப்பு வலைப்பின்னலை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். புதிய இயக்கத்தின் கீழ் அரசால் மேற்கொள்ளப் பட்டிருக்கும் முன்முயற்சிகளை விவரித்த பிரதமர், நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள பல வகையான இடைவெளிகளைப் போக்குவதற்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கம் 3 முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்றார். முதலாவது அம்சம் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு விரிவான வசதிகளை உருவாக்குவது தொடர்பானது. இதன்படி நோய்களை முன்கூட்டியே கண்டறியும் வசதிகளுடன் கிராமங்களிலும் நகரங்களிலும் சுகாதார மற்றும் உடல் ஆரோக்கிய மையங்கள் திறக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் கட்டணமின்றி மருத்துவ ஆலோசணை, கட்டணமின்றி பரிசோதனைகள், விலை இல்லாமல் மருந்து போன்ற வசதிகள் கிடைக்கும். கடுமையான உடல் நோய்க்கு 600 மாவட்டங்களில்  புதிய தீவிர சிகிச்சை தொடர்பாக 35,000 படுக்கைகள் அதிகரிக்கப்படும், பரிந்துரை வசதிகள் 125 மாவட்ங்களில் அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் இரண்டாவது அம்சம், நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனை வலைப்பின்னல் தொடர்புடையதாகும் என்று பிரதமர் கூறினார். இந்த இயக்கத்தின் கீழ் நோய்களைக் கண்டறியவும் கண்காணிப்பதற்கும் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதி உருவாக்கப்படும். நாட்டின் 730 மாவட்டங்கள் ஒருங்கிணைந்த பொது சுகாதார பரிசோதனைக் கூடங்களைப் பெற்றிருக்கும். 3 ஆயிரம் ஒன்றியங்கள் ஒன்றிய பொது சுகாதார அலகுகளைக் கொண்டிருக்கும். இவைத் தவிர நோய்க் கட்டுப்பாட்டுக்கான 5 மண்டல தேசிய மையங்கள், 20 பெருநகர அலகுகள், 15 உயிர்ப் பாதுகாப்பு நிலையிலான பரிசோதனைக் கூடங்கள் இந்த வலைப்பின்னலை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

மூன்றாவது அம்சம், பெருந்தொற்றுகள் பற்றி ஆய்வு செய்யும் தற்போதுள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யப்படுவதாகும் என்று பிரதமர் கூறினார். தற்போது செயல்படும் 80 வைரஸ் நோய் கண்டறிதல் மற்றும் ஆய்வுக்கூடங்கள் வலுப்படுத்தப்படும், உயிர்ப் பாதுகாப்பு நிலையிலான 15 பரிசோதனைக் கூடங்கள் செயல்பாட்டுக்கு வரும், வைரஸ் தொடர்பான ஆய்வுக்கு 4 புதிய தேசிய கல்விக் கழகங்களும், உள்ளூர் முதல் உலகம் வரையிலான பல துறை ஒத்துழைப்புக்கும் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் தொடர்பான சுகாதார ஆய்வுக்கு தேசிய கல்விக் கழகமும் அமைக்கப்பட உள்ளது. இந்த வலைப்பின்னலில் தெற்காசியாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய ஆராய்ச்சி அமைப்பும் வலுப்படுத்தப்படும். ”பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கத்தின் மூலம் சிகிச்சை முதல் முக்கியமான ஆராய்ச்சி வரையிலான சேவைகளுக்கு ஒட்டு மொத்த சூழல் நாட்டின் அனைத்து இடங்களிலும் உருவாக்கப்படும் என்பது இதன் பொருளாகும்” என்று பிரதமர் கூறினார்.

இந்த நடவடிக்கைகளின் வேலைவாய்ப்பு அம்சங்களைப் பிரதமர் எடுத்துரைத்தார். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடிப்படைக் கட்டமைப்பு இயக்கம் ஆரோக்கியத்துடன் தற்சார்பு இந்தியாவின் அம்சமாகவும் இருக்கிறது என்று பிரதமர் கூறினார். “ஒட்டுமொத்த சுகாதார கவனிப்பை அடையும் முயற்சியின் ஒரு பகுதியாக இது இருக்கிறது. இதன் பொருள், அனைவருக்கும் கட்டுப்படியான செலவில், எளிதாக சுகாதார கவனிப்பு கிடைப்பதாகும்”. சுகாதாரத்துடன் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது ஒட்டு மொத்த சுகாதார கவனிப்பு என்று திரு மோடி கூறினார். தூய்மை இந்தியா இயக்கம், ஜல்ஜீவன் இயக்கம், உஜ்வாலா, ஊட்டச்சத்து திட்டம், இந்திர தனுஷ் இயக்கம் போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை நோயிலிருந்து காப்பாற்றியுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இரண்டு கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் மூலம் சுகாதாரம் சார்ந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

ஏழைகள், அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்டோர், பின்தங்கியோர், நடுத்தர வகுப்பினரின் வலிகளைப் புரிந்து கொண்டதாக இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசுகள் இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். “நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த நாங்கள் அல்லும் பகலும் பாடுபடுகிறோம்” என்று பிரதர் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளின் வேகம், இந்த மாநிலத்தில் மருத்துவ இடங்கள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார். இடங்கள் அதிகரிப்பதன் காரணமாக ஏழைப் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என்ற கனவும் நிறைவேறும் என்று அவர் மேலும் கூறினார். புனிதமான காசி நகரின் கடந்த கால அவல நிலை பற்றி பேசிய பிரதமர் இந்த நகரின் அடிப்படை, வசதிகளின் மோசமான நிலையால் பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்டார்கள். இப்போது நிலைமை மாறியுள்ளது. காசி அப்படியே இருக்கிறது. மனம் அப்படியே இருக்கிறது. ஆனால் உடலை மேம்படுத்துவதற்கு மெய்யான முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. “கடந்த பல பத்தாண்டுகளாக செய்யப்படாத பணி கடந்த 7 ஆண்டுகளில் வாரணாசியில் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். உலக அளவிலான சிறந்த நிறுவனமாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் முன்னேற்றம் கண்டிருப்பது கடந்த சில ஆண்டுகளில் காசியின் முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும். “தற்போது தொழில்நுட்பத்திலிருந்து சுகாதாரம் வரை முன் எப்போதும் இல்லாத வகையிலான வசதிகள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து இளம் நண்பர்கள் இங்கே கல்வி பயில வருகின்றனர்” என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வாரணாசியில் கடந்த ஐந்தாண்டுகளில் காதி மற்றும் குடிசைத் தொழில் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி 60 சதவீதம், விற்பனை வளர்ச்சி 90 சதவீதம் என்பதைப் பாராட்டிய பிரதமர் “உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு” என்ற நாட்டு மக்களின் உணர்வையும் பாராட்டினார். உள்ளூர் பொருட்கள் என்பதற்கு அகல் விளக்குகள் போன்ற ஒரு சில பொருட்கள் என்று அர்த்தமாகாது. கிராமபுற மக்களின் கடின உழைப்பு காரணமாக உருவாகும் எந்தப் பொருளையும் குறிப்பதாகும் என்றும் விழாக் காலங்களில் இத்தகைய பொருட்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஊக்கப்படுத்தி ஆதரவளிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

***