பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் பிரதான சுரங்கம் மற்றும் ஐந்து சுரங்கப்பாதைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி 19-ந் தேதி காலை 10.30 மணியளவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கூட்டத்தினரிடையே அவர் உரையாற்றுகிறார். ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத்திட்டம் பிரகதி மைதான மறு மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டம் ரூ. 920 கோடி செலவில் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பிரகதி மைதானத்தில் உருவாக்கப்பட்டு வரும் புதிய உலகத் தரம் வாய்ந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தை எந்தவித இடையூறுமின்றி சுமூகமாக அணுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பிரகதி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கண்காட்சியாளர்கள் மற்றும்பார்வையாளர்கள் எளிதாக பங்கேற்க முடியும்.
பிரகதி மைதானத்திற்கு அப்பால் தடையில்லாத வாகன போக்குவரத்தை இந்த திட்டம் உறுதி செய்வதுடன், பயணிகளின் நேரத்தையும், செலவையும் பெருமளவில் சேமிக்க உதவும். நகர்ப்புற உள்கட்டமைப்பை மாற்றியமைப்பதன் மூலம் மக்கள் எளிதாக வாழ்வதை உறுதிசெய்வது அரசின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு
பகுதியாகும்.
பிரதான சுரங்கப்பாதை சுற்றுவட்டப்பாதையை பழமையான புரானா கிலா சாலையின் வழியாக இந்தியா கேட்டை பிரகதி மைதானத்துடன் இணைக்கிறது. ஆறு வழித்தடமாக பிரிக்கப்பட்ட சுரங்கப்பாதையானது பிரகதி மைதானத்தின் பெரிய அடித்தள வாகன நிறுத்துமிடத்திற்கான அணுகுதல் உட்பட பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தின் இருபுறமும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பிரதான சுரங்கப்பாதை சாலைக்கு கீழே இரண்டு குறுக்கு சுரங்கங்கள் கட்டப்பட்டுள்ளது, இந்தத் திட்டத்தின் தனித்துவமான அம்சமாகும்.
சிறப்பான தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம் மற்றும் தானியங்கி வடிகால், டிஜிட்டல் முறையில் கட்டுப்படுத்தப்படும் சிசிடிவி கேமராக்கள், சுரங்கப்பாதைக்குள் பொது அறிவிப்பு அமைப்பு போன்ற போக்குவரத்தை சீராக இயக்குவதற்கான அதிநவீன உலகளாவிய தரநிலை வசதிகளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை, கடுமையான போக்குவரத்து நெரிசலால் திணறி வரும் பைரோன் மார்க்கிற்கு மாற்றுப் பாதையாகச் செயல்படும். இதன் மூலம் பைரோன் மார்க்கின்
போக்குவரத்து நெரிசலில் பாதிக்கும் மேல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கப்பாதையுடன், மதுரா சாலையில் நான்கு, பைரோன் மார்க்கில் ஒன்று மற்றும் உள்வட்டச்சாலையில் ஒன்று என ஆறு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
***************