Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மைதானத்தில் 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவதற்கு நிலம் விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

உலகத் தரத்திற்கு பிரகதி மைதானத்தை மறுசீரமைக்கும் ஐ.டி.பி.ஓ.-வின் பெரும் திட்டம்

சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்

பிரகதி மைதானத்தில் 3.7 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குத்தகை அடிப்படையில் மாற்றித் தர ஐ.டி.பி.ஓ.-வுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

நவீன வசதிகளுடன் 5 நட்சத்திர ஓட்டலைக் கட்டுவதற்கும், நடத்துவதற்கும் ஐ.டி.டி.சி., ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவற்றால் இந்த நோக்கத்திற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது

ஓட்டல் வசதி ஐ.இ.சி.சி. திட்டத்திற்கு மதிப்பினைக் கூட்டுவதாக இருக்கும். மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான உலக மையமாகவும் இந்தியாவை மேம்படுத்தும்

‘இந்தியாவில் உற்பத்தி’, ‘திறன் இந்தியா’, ‘முதலீடு இந்தியா’ போன்ற பல்வேறு முக்கியமான முன்முயற்சிகளைக் கொண்ட சிறப்புமிக்க சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சிக்கு ஊக்கமளிக்கும்

ஐ.இ.சி.சி. திட்டத்தின் அமலாக்கம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு 2020-21-ல் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது

 

பிரகதி மைதானத்தில் 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக 3.7 ஏக்கர் நிலத்தை ரூ.611 கோடி என்ற தொகைக்கு 99 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குத்தகை அடிப்படையில் மாற்றித் தர இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ஐ.டி.பி.ஓ.)-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டலைக் கட்டுவதற்கும், நடத்துவதற்கும் இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (ஐ.டி.டி.சி.), இந்திய ரயில்வே உணவக மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) ஆகியவற்றால் இந்த நோக்கத்திற்கான சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.

சர்வதேச பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மைய (ஐ.இ.சி.சி.) திட்டத்தின் அமலாக்கம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு 2020-21-ல் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரகதி மைதான ஓட்டல் திட்டத்தை விரைந்து முடிப்பதை உறுதி செய்ய பொருத்தமான கட்டுமானம் மற்றும் மூன்றாம் தரப்பு செயல்படுத்துனரை தெரிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை சிறப்புக் குழு மேற்கொள்ளும். நிர்ணயிக்கப்பட்ட குத்தகை அடிப்படையில் ஓட்டலை (நேரடியாக அல்லது தொழில் முறையான அமைப்பு மூலம்) கட்டுதல், நடத்துதல், நிர்வகித்தல் ஆகியவற்றுக்கு இவர்கள் வெளிப்படையான போட்டித்தன்மைக் கொண்ட ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படுவதும் இதில் அடங்கும்.

      இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை மிகச் சிறந்த தரம் மற்றும் சேவையுடன் புரட்சிக்கரமானதாக்கும் அரசின் தொலைநோக்குப் பார்வையோடு பிரகதி மைதானத்தை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் பெரும் திட்டத்தை ஐ.டி.பி.ஓ. செயல்படுத்துகிறது. உலகம் முழுவதும் ஓட்டல் வசதி என்பது கூட்டங்கள், முன்முயற்சி செயல்கள், மாநாடுகள், கண்காட்சிகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்தப் பகுதியாக உள்ளது.

      உலக அளவிலான கூட்டங்கள், முன்முயற்சி செயல்கள், மாநாடுகள், கண்காட்சிகள் போன்றவை வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான உலக மையமாகவும் இந்தியாவை மேம்படுத்தும். ஓட்டல் வசதி ஐ.இ.சி.சி. திட்டத்திற்கு மதிப்பினைக் கூட்டுவதாகவும் இந்தியத் தொழில் வர்த்தகத்திற்குப் பயனுடையதாகவும் இருக்கும்.

      மேலும் பிரகதி மைதானத்தில் செய்யப்படும் இந்த மாற்றம் ஆண்டுதோறும் சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள், சிறு வர்த்தகர்களுக்கும் பயன்தரும். அதிகரிக்கப்படும் நவீன வசதிகள், பங்கேற்கின்ற வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குப் பெரும் பயனாக இருக்கும். வர்த்தகக் கண்காட்சிக்கு வருகை தருவோர் எண்ணிக்கை அதிகரிப்பதையும் இது உறுதி செய்யும். தங்களின் வர்த்தகப் பகுதிகளை விரிவுபடுத்தவும், இந்திய சரக்குகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தவும் ஊக்கமளிக்கும் இடமாகவும் இது இருக்கும்.

 

*******