Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடினார்


உயிர்ப்பான நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் செயலாக்கத்திற்கான தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பன்மாதிரி தளமான பிரகதி மூலம் நடைபெற்ற 31 ஆவது கலந்துரையாடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

இதற்கு முந்தைய பிரகதி கூட்டங்களில் ரூ.12.15 லட்சம் கோடி முதலீட்டுக்கான மொத்தம் 265 திட்டங்கள், 17 துறைகளைச் சார்ந்த 47 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இன்றைய பிரகதி கூட்டத்தில் ரூ.61,000 கோடி மதிப்பிலான 16 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான 9 திட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தேசிய விவசாயச் சந்தை, பின்தங்கிய மாவட்டங்களின் திட்டம் போன்றவையும், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய குடிமக்களின் குறைபாடுகள் ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன.

விருப்பங்களைப் பூர்த்தி செய்தல்

பின்தங்கிய மாவட்டங்கள் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமருக்கு, 49 செயல்பாட்டு குறியீடுகள் பற்றி விளக்கப்பட்டது. ஊட்டச்சத்து நிலை போன்ற மெதுவாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் கூட பெருமளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது பற்றி குறிப்பிடப்பட்டது.

இதை ஒரு தேசிய சேவை நடவடிக்கை என்று குறிப்பிட்ட பிரதமர், பழங்குடியின சிறார்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது முக்கியம் என வலியுறுத்தினார். பின்தங்கிய மாவட்டங்களை தேசிய சராசரி அளவுக்கு கொண்டு வர காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த மாவட்டங்களில் இளம் அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விவசாயம் மற்றும் சார்பு நடவடிக்கைகள்

தேசிய விவசாய சந்தையில் முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு விளக்கி கூறப்பட்டது. இந்த சந்தை சிறந்த விலை கிடைக்கும் வகையில் உதவுகிறது. மின்னணு பட்டுவாடாக்கள் தற்போது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன. ஜம்மு கஷ்மீரில் இரண்டு ஒருங்கிணைந்த மின்னணு மண்டிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், விவசாய அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து புதிய ஸ்டார்ட் அப் மாதிரி மின்னணு அடிப்படையிலான போக்குவரத்து முறையை செயல்படுத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார். இதன்மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு, ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு கொண்டு செல்ல எளிய வழி பிறக்கும். இதைச் சுமுகமாக செயல்படுத்த பொதுவான ஒருங்கிணைந்த தளத்தை அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து ஏற்படுத்தி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

பயிர்க் கழிவுகளை எரிப்பது தொடர்பான விஷயத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து, இந்த எரிப்பு சம்பவங்கள் மீண்டும் நடைறொமல் தடுக்க உரிய கருவிகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உள்கட்டமைப்புத் தொடர்பை ஏற்படுத்துதல்

கத்ரா-பனிஹல் ரயில் பாதை உட்பட கட்டமைப்பு தொடர்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.

ஐஸ்வால்- துய்பாங் நெடுஞ்சாலைத் திட்டத்தின் மேம்பாடு மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தின் பல்வேறு திட்டங்களை அகலப்படுத்துதல் ஆகியவையும் விவாதிக்கப்பட்டன. தில்லி-மீரட் இடையே விரைவுப் பாதையின் பாதுகாப்பான வழித் தொடர்புகளை வேகமாக அளித்து 2020 ஆம் ஆண்டு மே மாதவாக்கில் திட்டத்தை முடிக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.

நீண்டகாலமாக தாமதமாகியுள்ள திட்டங்களை அந்தந்த மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்தார். இத்தகைய திட்டங்களின் முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை அவ்வப்போது தமது அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

எரிசக்தித் தேவையை நிறைவு செய்தல்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விஷயத்தில், தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா, இமாச்சலப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சிறந்து விளங்கும் 8 மாநிலங்களுக்கு இடையிலான விநியோகப்பாதையை உருவாக்குவது குறித்தும் பிரதமர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள், புதிய திட்டங்களை தொடங்குவதில் எதிர்நோக்கும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் குறித்து அவர் விசாரித்து அறிந்தார்.

வேமகிரிக்கு அப்பால் மின்சாரத்தை கொண்டு செல்லும் நடைமுறையை வலுப்படுத்தும் திட்டத்தை உரிய காலத்திற்குள் முடித்து முன்னேற்றத்தை செயல் வடிவில் காட்டிய கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளைப் பிரதமர் பாராட்டினார்.