Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலம் பிரதமரின் கலந்துரையாடல்


 

புதிய ஆட்சியில் முதலாவது பிரகதி கூட்டத்தில் 2022-க்குள் “அனைவருக்கும் வீடு” என்ற உறுதிப்பாட்டை பிரதமர் வலுவாக வலியுறுத்தினார்

ஆயுஷ்மான் பாரத், சுகம்யா பாரத் ஆகிய சிறப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்துப் பிரதமர் ஆய்வு செய்தார்

தண்ணீர் சேகரிப்பில், குறிப்பாக தற்போதைய பருவமழைக் காலத்தில், அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்

 

தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான, பல்வகை செயல்பாட்டு நிர்வாகம் மற்றும் உரிய காலத்தில் அமலாக்கத்திற்கான பலமுனை அமைப்பான பிரகதி மூலம் இன்று நடைபெற்ற 30-வது கலந்துரையாடலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

மத்திய அரசு புதிதாக அமைந்தபின் நடைபெற்ற முதலாவது பிரகதி கூட்டமாகவும் இது இருந்தது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற 29-வது பிரகதி கூட்டத்தில் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு கொண்ட 257 திட்டங்கள் ஆய்வுக்கு வந்தன. இவற்றில் 47 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன. 17 துறைகள் சார்ந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு விஷயங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

இன்றைய கூட்டத்தில், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் தொடர்பான குறைதீர்ப்பு விஷயத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். 2022-க்குள் எந்தவொரு குடும்பமும் வீடு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அரசு தீர்மானித்திருப்பதை கோடிட்டுக் காட்டிய அவர், இந்த நோக்கத்தை நிறைவேற்ற அதிகாரிகள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும் என்றும், இதற்குத் தடையாக உள்ள அனைத்தையும் நீக்க வேண்டும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து, நிதிச் சேவைகள் துறை தொடர்பான பொதுமக்கள் குறைதீர்ப்பு விஷயங்களையும் பிரதமர் ஆய்வு செய்தார்.

ஆயுஷ்மான் பாரத் செயல்பாடு பற்றி விரிவாகப் பிரதமர் ஆய்வு செய்தார். சுமார் 35 லட்சம் பயனாளிகள் மருத்துவமனை அனுமதியைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்தில் இதுவரை 16,000-த்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் இணைந்திருப்பதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. சிறந்த நடைமுறைகளை உருவாக்க உதவி செய்ய முடிகின்ற, இந்தத் திட்டத்தை மேலும் மேம்படுத்துகின்ற மாநிலங்களோடு உரையாடுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, முன்னேற்றம் விரும்பும் மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் பயன்கள் மற்றும் ஆக்கபூர்வமான தாக்கம் குறித்து ஆய்வு செய்யுமாறு அவர் கூறினார். இந்தத் திட்டத்தில் அரிதாக நடக்கும் மோசடி மற்றும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிய விரும்புவதாகவும் அவர் கூறினார்.

சுகம்யா பாரத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகள் இல்லாமல் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டுவதற்கான நடைமுறையை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு பொதுமக்களின் மகத்தான ஈடுபாட்டிற்கும், உணர்வுபூர்வமான தீர்வுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஜல் சக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், தண்ணீர் சேகரிப்பில், குறிப்பாக தற்போதைய பருவமழை காலத்தில் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார்.

ரயில்வே மற்றும் சாலைத் துறைகளில் எட்டு முக்கிய அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றி பிரதமர் ஆய்வு செய்தார். இந்தத் திட்டங்கள் பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ஒடிசா, இமாச்சலப்பிரதேசம், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் பரவலாக உள்ளவை.