முனைப்பான ஆளுகை மற்றும் உரிய காலத்திலான அமலாக்கம் ஆகியவற்றுக்கான தகவல் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முறை மேடையான பிரகதி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது 17 – வது கலந்துரையாடலுக்கு தலைமை ஏற்றார்.
தொலைத் தொடர்புத் துறை சார்ந்த குறைகள் தீர்ப்பு மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை பிரதமர் ஆய்வு செய்தார். சேவைகளின் தரக்குறைவு, தொடர்புகளின் தரக்குறைவு, கம்பிகளின் வழியான இணைப்புகள் செயல்படாத நிலை ஆகியவை தொடர்பாக அநேக குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் விளக்கினார். நிலைமையை மாற்றி அமைத்து முன்னேற்றம் அடையச் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் திறம்பட்ட செயல்பாட்டை மேம்படுத்துமாறும் அனைத்து நிலைகளிலும் பொறுப்பேற்கும் நிலைமையை மேம்படுத்துமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார். 2015 ஏப்ரலில் தாம் மேற்கொண்ட ஆய்வினை நினைவு கூர்ந்த பிரதமர், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கிடைக்க கூடிய தற்போது உள்ள தொழில்நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
பிரதமர் நகர்ப்புற வீட்டுவசதி திட்ட முன்னேற்றத்தை ஆய்வு செய்த பிரதமர் 2022 – க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி அளிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இந்த இலக்கை எட்டும் வகையில் மாநில அரசுகள் அணுகுமுறைகளையும் காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டங்களையும் கண்காணிப்பு அமைப்புகளையும்ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். நடைபெறும் பணிகளின் வேகத்தையும், தரத்தையும் உயர்த்த அதிநவீனத் தொழில்நுட்ப உள்ளீடுகளைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
வர்த்தகம் புரிதலில் எளிமை தொடர்பான நிலவரத்தை தொடர்ந்து ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு செயலாளர்களையும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். உலக வங்கியின் வர்த்தகம் புரிதலில் எளிமை என்ற அறிக்கை பற்றி குறிப்பிட்டு இந்த அறிக்கையில் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் அடிப்படையில் வளர்ச்சியை மதிப்பிடுமாறு அவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் வளர்ச்சியை வாரந்தோறும் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ரயில்வே, சாலை, துறைமுகம், மின்சாரம், இயற்கை வாயுத் துறைகளின் முக்கியமான அடிப்படைவசதி திட்டங்களைப் பிரதமர் ஆய்வு செய்தார். தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, அரியானா, பீகார், மேற்கு வங்காளம், மேகாலயா போன்ற பல மாநிலங்களில் மேலே குறித்த துறைகளில் முன்னேற்றத்தைப் பிரதமர் ஆய்வு செய்தார். திட்டங்களை உரிய காலக்கெடுவில் நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் இதனால் மதிப்பீட்டுச் செலவினம் உயர்வதை தவிர்க்கலாம் என்றும் திட்டத் தொடக்கத்தில் எதிர்பார்த்த திட்டப் பலன்கள் முழுமையாக மக்களைச் சென்றடையும் என்றும் பிரதமர் கூறினார். பிர்னிஹாட்-ஷில்லாங் ரயில் பாதை திட்டம், ஜோக்பானி – பிராட் நகர் (நேபாளம்) ரயில்வே பாதைத் திட்டம், சூரத் – தாஹிசார் நெடுஞ்சாலை, குருகிராம் – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை, சென்னை மற்றும் எண்ணூர்த் துறைமுக இணைப்புத் திட்டம், கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் உலர்துறைக் கட்டுமானம், கிழக்கு கடற்கரை முதல் மேற்கு கடற்கரை வரையிலான மல்லாவரம் – போபால் – பில்வாடா – விஜயாபூர் இயற்கை எரிவாயுக் குழாய்த்திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.