பிரதமர் திரு நரேந்திர மோடி 29 பிப்ரவரி 2024 அன்று மாலை 4 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்தமத்தியப் பிரதேசம்’ நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, மத்தியப் பிரதேசம் முழுவதும் ரூ.17,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நீர்ப்பாசனம், மின்சாரம், சாலை, ரயில், நீர் வழங்கல், நிலக்கரி, தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் இணையதள (சைபர்) தாலுகா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் ரூ.5,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்களில் மேல் நர்மதா திட்டம், ராகவ்பூர் பல்நோக்குத் திட்டம், பாசானியா பல்நோக்குத் திட்டம் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்கள் திண்டோரி, அனுப்பூர் மற்றும் மாண்ட்லா மாவட்டங்களில் 75,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்குவதுடன், இப்பகுதியில் மின்சார விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும். மாநிலத்தில் ரூ.800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான இரண்டு நுண்ணீர் பாசனத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த நுண்ணீர் பாசன திட்டங்கள் பெதுல் மற்றும் கந்த்வா மாவட்டங்களில் 26,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தின் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்யும்.
ரூ.2200 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட மூன்று ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டங்கள் ரயில் இணைப்பை மேம்படுத்தி, அப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்.
மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்காக, மத்தியப் பிரதேசம் முழுவதும் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு தொழில் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
மத்தியப் பிரதேசத்தில் மின்சாரத் துறையை வலுப்படுத்தும் வகையில், பன்னா, ரைசன், சிந்த்வாரா மற்றும் நர்மதாபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ள ஆறு துணை மின் நிலையங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ரூ.880 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும், மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோக அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துவதற்கான பிற திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு, சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்க்கையை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு பெரும் ஊக்கம் அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை இந்தத் திட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
————
(Release ID: 2009498)
ANU/PKV/PLM/RS/KRS