Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரிசில் இந்திய சமூகத்தினர் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பாரிசில் இந்திய சமூகத்தினர் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


பாரத் மாதா கி ஜே, பாரத் மாதா கி ஜே,

நமஸ்கார்,போஞ்சூர்

வணக்கம், சத் ஸ்ரீ அகல்,

கெம் சோ!

இந்தக் காட்சியைக்காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உற்சாகம் முன்னெப்போதும் இல்லாதது; இந்த எல்லையற்ற அன்பு வெள்ளம் இதயத்தைத்தொடுகிறது. இந்த விருந்தோம்பல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டிலிருந்து நான் வெகு தொலைவில் இருக்கும்போது, ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறுவதைக் கேட்கும்போது அல்லது ‘நமஸ்கார்’ என்று யாராவது சொல்லும்போது, நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். இந்தியர்களாகிய நாம் எங்கு சென்றாலும், அங்கே ஒரு சிறிய இந்தியாவை உருவாக்கிவிடுகிறோம். இன்று இங்கு திரண்டிருப்பவர்களில் பலர் பதினொன்று அல்லது பன்னிரெண்டு மணி நேரம் பயணம் செய்து இங்கு வந்திருப்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் இது எவ்வளவு பெரிய அன்பாக இருக்க முடியும்!

இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், தங்கள் செல்பேசிகளில் நேரடி ஒளிபரப்பைக் காண்பது எவருக்கும் கடினமான காரியம் அல்ல என்பதை நாம் அறிவோம். இருப்பினும், அதையும் மீறி, இவ்வளவு தூரத்திலிருந்து பலர் தங்கள் நேரத்தை ஒதுக்கி வந்திருப்பதால், உங்கள் அனைவரையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது பெரும் பேறாகும். இங்கு வந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இதற்கு முன்பும் பலமுறை நான் ஃபிரான்ஸ் வந்துள்ளேன். எனினும், இம்முறை எனது ஃபிரான்ஸ் பயணம் இன்னும் சிறப்பானது. நாளை ஃபிரான்சின் தேசிய தினம். ஃபிரான்ஸ் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் என்னை அழைத்ததற்காக பிரான்ஸ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

உலகம் இன்று ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் பலம் மற்றும் பங்களிப்பு வேகமாக மாறிவருகிறது. தற்போது ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் ஒரு நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் 200க்கும் அதிகமான கூட்டங்கள் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்த ஜி-20 குழுவும் இந்தியாவின் திறனைப் பார்த்து வியப்படைந்துள்ளது. பருவநிலை மாற்றம், உலகளாவிய விநியோகத் தொடர்கள், பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு சவாலையும் கையாள்வதில் இந்தியாவின் அனுபவமும் முயற்சிகளும் உலகிற்கு நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

21ஆம் நூற்றாண்டு உலகம் தொழில்நுட்பம் மற்றும் திறமையின் அடிப்படையில் முன்னேறும். இந்தியா- ஃபிரான்ஸ் இடையேயான கூட்டாண்மை இதற்கு வலுவான அடித்தளமாக அமைகிறது. நமது விண்வெளித் திட்டம் இதற்குச் சான்றாகும். தும்பா சவுண்டிங் ராக்கெட் நிலையத்தை நிறுவுவது பற்றிய விவாதம் வந்தபோது, பிரான்ஸ்தான் உதவி செய்ய முன்வந்தது. அதன்பிறகு, இரு நாடுகளும் விண்வெளித் துறையில் நீண்ட பயணத்தைத் தொடங்கியுள்ளன. இன்று, நாங்கள் ஒருவர் மற்றவரின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறோம், நான் இப்போது உங்களிடம் பேசும்போது, சந்திரயான்-3 ஏவுவதற்கான ரிவர்ஸ் கவுன்ட்டவுனின் எதிரொலி இந்தியாவில் கேட்கும் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இன்னும் சில மணி நேரத்தில் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க ஏவுதல் நடைபெற உள்ளது.

நண்பர்களே,

இன்னும் சில மணிநேரங்களில், அல்லது அதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள்கூட ஆகலாம், மாபெரும் இந்தியத் துறவி திருவள்ளுவரின் சிலை நிறுவுதல் இங்குள்ள செர்ஜி மாகாணத்தில் நடைபெறவுள்ளது. மேலும் துறவி திருவள்ளுவர் அவர்கள், ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்று கூறியுள்ளார்.

தமிழ் பேசும் நண்பர்களுக்கு இது புரிந்திருக்கும், மற்றவர்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். இதன் பொருள் ஆழமானது, துறவி திருவள்ளுவர் அவர்கள் இந்த ஞானத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமக்கு வழங்கியுள்ளார். தன் குழந்தையைப் பலரும் அறிஞர் என்று புகழ்வதைக் கேட்கும்போது, குழந்தை பிறந்த நாளைக்கூட விஞ்சும் மகிழ்ச்சியை ஒரு தாய் பெறுவாள். அதாவது, ஒரு குழந்தை பிறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியைவிட ஒரு குழந்தையின் வெற்றியில் அதிக மகிழ்ச்சி இருக்கிறது. இது தாய்மார்களுக்காகச் சொல்லப்படுகிறது. எனவே, நீங்கள் வெளிநாட்டுகளில் அங்கீகாரம் பெறும்போது, உலகம் உங்களைப் போற்றும்போது, அன்னை பாரதியும் (இந்தியத் தாயும்) அதே மகிழ்ச்சியை அடைகிறாள். அன்னை பாரதியை, அந்நிய மண்ணிலும் இதயத்தில் வைத்திருப்பவன் என்ற முறையில், அன்னை பாரதியின் ஒவ்வொரு குழந்தையையும் இந்தியாவின் தூதர்களாகக் கருதுகிறேன்.

இந்தியர்கள் எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர்களின் இதயம் இந்தியாவுக்காக துடிக்கிறது. நான் விண்வெளியைப் பற்றி பேசும்போது, நீங்கள் “சந்திரயான், சந்திரயான், சந்திரயான்!” என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினீர்கள். அதாவது, நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் இதயம் சந்திரயானில் (இந்திய சந்திரப் பயணம்) ஈடுபட்டுள்ளது.

நண்பர்களே,

நமது முழுத் திறன், நமது அனுபவங்கள், நமது தொடர்புகள் மற்றும் நமது உறவுகளுடன் ஃபிரான்ஸ் குடிமக்களை இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க வகையில் இணைக்க நாம் தீர்மானிப்போம். நீங்கள் வரும்போது, அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவாருங்கள். இந்தியாவைக் கண்டறிய அவர்களை ஊக்குவிப்போம். நமது மக்களிடையேயான தொடர்பு அதிகரிக்கும்போது, அது சுற்றுலாவை வளர்ப்பது மட்டுமல்ல. அதிலிருந்து, பரிச்சயத்தின் வலிமை உருவாகி, பல தலைமுறைகளுக்கு விலைமதிப்பற்ற பாரம்பரியமாக மாறும். நண்பர்களே, இந்த முயற்சியில் நீங்கள் ஒருபோதும் பின்தங்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கிறீர்கள், உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு மிக மிக நன்றி.

என்னோடு சேர்ந்து கூறுங்கள் பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

நன்றி!