நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தித் தொழில்துறை கண்காட்சியான பாரத் வாகனத் தொழில்துறை சர்வதேச கண்காட்சி 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க பிஜேபி–யைத் தேர்ந்தெடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 800 கண்காட்சியாளர்கள், 2.5 லட்சம் பார்வையாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சி தலைநகரில் மேலும் இரண்டு இடங்களில் நடைபெறுவதாக அவர் கூறினார். அடுத்த 5 நாட்களில் ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகையில் பல புதிய வாகனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். போக்குவரத்துத் துறையில் எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை இது எடுத்துக் காட்டுவதாகக் கூறினார். இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் வாகன உற்பத்தித் தொழில் சிறந்த நிலையில், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாராக உள்ளது என்று கூறிய அவர், இக்கண்காட்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்திய வாகன உற்பத்தித் துறையின் இந்தப் பிரம்மாண்டமான கண்காட்சியில் திரு ரத்தன் டாடா, திரு ஒசாமு சுசூகி ஆகியோரை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்திய வாகன உற்பத்தித் துறையின் வளர்ச்சியிலும், நடுத்தரக் குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றுவதிலும் இந்த இரண்டு தொழில்துறை பிரபலங்களின் பங்களிப்பு மகத்தானது என்று அவர் குறிப்பிட்டார். அவர்களின் பாரம்பரியம் இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன உற்பத்தித் துறைக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களின் விருப்பங்கள், இளைஞர்களின் ஆற்றல் ஆகியவற்றால் உந்தப்பட்டு, நாட்டின் வாகன உற்பத்தித் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றத்தை சந்தித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டில் இந்திய வாகன உற்பத்தித் துறை சுமார் 12 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம், உலகிற்கான உற்பத்தி என்ற தாரக மந்திரங்களின் அடிப்படையில் இத்துறையின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக அவர் மேலும் கூறினார். நாட்டில் ஆண்டுதோறும் விற்பனை செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். ஒரே ஆண்டில் 2.5 கோடி கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது, நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கார்களின் தேவையை நிரூபிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வாகன உற்பத்தித் துறையின் எதிர்காலம், நாட்டின் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை இந்த வளர்ச்சி எடுத்துக் காட்டுவதை பிரதமர் கூறினார்.
இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும், மூன்றாவது பெரிய பயணிகளுக்கான வாகன சந்தையாகவும் திகழ்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். உலகளவில் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா அடியெடுத்து வைக்கும்போது, நாட்டின் வாகன சந்தை முன்னெப்போதும் இல்லாத வகையில், மாற்றத்தையும் விரிவாக்கத்தையும் பெறும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். நாட்டில் அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கை, விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கத்தினர், விரைவான நகரமயமாக்கல், நவீன உள்கட்டமைப்பு மேம்பாடு, குறைந்த செலவில் வாகனங்கள் கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்தியாவின் எதிர்கால சந்தைப் பயன்பாடுகளை உணர்த்துவதாக உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். இத்தகைய காரணிகள் இந்தியாவில் வாகன உற்பத்தித் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
மோட்டார் வாகன உற்பத்தித் தொழிலின் வளர்ச்சிக்கான தேவை, விருப்பங்களின் அவசியத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தியா இந்த இரண்டையும் தன்னகத்தே கொண்டுள்ளதாகக் கூறினார். உலகின் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று திரு நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார். இந்த இளையோர் எண்ணிக்கையானது தேவைகளை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் கூறினார். கூடுதலாக, நாட்டில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் மிகப் பெரிய வாடிக்கையாளர் தளமாக அமைந்து உள்ளனர் என்று அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில், 25 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு, ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளதால், அவர்கள் வாகனங்களை , வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டின் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் போது வாகன உற்பத்தித் துறையும் அதற்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தி, இத்துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று அவர் கூறினார்.
ஒரு காலத்தில் நல்ல, அகலமான சாலைகள் இல்லாதது இந்தியாவில் வாகனங்கள் வாங்க மக்கள் முன்வராததற்கு ஒரு காரணியாக இருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போது இந்த நிலைமை மாறி வருவதாகக் கூறினார். பயணத்தை எளிமையாக்குதல் என்பதே இப்போது இந்தியாவின் முதன்மை முன்னுரிமை என்று அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக ரூ.11 லட்சம் கோடிக்கும் கூடுதலாக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறிய பிரதமர், நாடு முழுவதும் பல்வேறு நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பிரதமரின் விரைவுசக்தி தேசியப் பெருந்திட்டம் பல்வகை போக்குவரத்து இணைப்பை விரைவுபடுத்தியுள்ளது என்றும் சரக்குப் போக்குவரத்துக்கான செலவுகளைக் குறைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கை, உலகளவில் மிகவும் போட்டித்தன்மை கொண்டதாகவும் சரக்கு போக்குவரத்துக்கான செலவுகளைக் குறைக்கும் நாடாகவும் இந்தியாவை உருவாக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த முயற்சிகள் வாகன உற்பத்தித் துறைக்கு ஏராளமான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், நாட்டில் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், புதிய தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக திரு நரேந்திர மோடி கூறினார். ஃபாஸ்டேக் நடைமுறை நாட்டில் உள்ள வாகன ஓட்டுநர்களின் அனுபவத்தை மிகவும் எளிதாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தடையற்ற பயணத்திற்கான முயற்சிகளை தேசிய பொது வாகனப் பயண அட்டை வலுப்படுத்தியுள்ளதாக பிரதமர் கூறினார். இந்த நடைமுறையுடன் இணைக்கப்பட்ட வாகனங்கள், தானியங்கி முறையில் இயங்கும் வசதி ஆகியவற்றின் காரணமாக இந்தியா தற்போது நவீன பயண வசதி கொண்ட நாடாக வளர்ச்சியடைந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவின் வாகன உற்பத்தித் துறையின் வளர்ச்சியில் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை திட்டங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற பிரச்சாரத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்தள்ளது என்று குறிப்பிட்டார். இது ரூ.2.25 லட்சம் கோடிக்கும் அதிகமான வாகன விற்பனைக்கு உதவியுள்ளது என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் வாகன உற்பத்தித் துறையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். வாகன உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம், பிற துறைகளிலும் பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருவதாக அவர் தெரிவித்தார். வாகன உற்பத்தித் துறை வளர்ச்சியடையும் போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சரக்குப் போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நிலையிலும் வாகன உற்பத்தித் துறைக்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு மோடி, கடந்த பத்தாண்டுகளில் இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு, அதிநவீன தொழில்நுட்பம், உலகளாவிய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு போன்றவற்றில் புதிய வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் இத்துறையில் 36 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் கூடுதலான அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் வாகன உற்பத்திக்கான சூழலை உருவாக்குவதில் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
பொதுவான, இணைக்கப்பட்ட, வசதியான, நெரிசலற்ற, மின்னேற்றம் செய்யப்பட்ட, தூய்மையான, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீர்வுகளைக் கொண்ட தொலைநோக்குப் பார்வையை நினைவு கூர்ந்த பிரதமர், பசுமை எரிசக்திப் பயன்பாடு மீது கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். புதைபடிம எரிபொருட்களுக்கான இறக்குமதி செலவைக் குறைத்து, பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் வகையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். பசுமை தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள், உயிரி எரிபொருள் ஆகியவற்றின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார். தேசிய மின்சார பயன்பாட்டு இயக்கம், பசுமை ஹைட்ரஜன் இயக்கம் போன்ற முன்முயற்சிகள் இந்த தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை சுட்டிக்காட்டிய திரு மோடி, கடந்த பத்தாண்டுகளில் மின்சார வாகனங்களின் விற்பனை 640 மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறினார். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆண்டுதோறும் 2,600 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 2024-ம் ஆண்டில் 16.80 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்போது ஒரு நாளில் விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். வரும் பத்தாண்டுகளின் முடிவில் நாட்டின் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், இத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள், அரசின் கொள்கை முடிவுகள், நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உதவும் என்று கூறிய பிரதமர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஃபேம்-2 திட்டம், 8,000 கோடி ரூபாய்க்கும் கூடுதலான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். 5,000-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் உட்பட 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களை மானிய விலையில் வாங்க உதவிடும் வகையிலும் மின்னேற்றம் செய்வதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். மத்திய அரசு வழங்கிய 1,200-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் தில்லியில் இயக்கப்பட்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், மின்சார – அவசர ஊர்திகள், மின்சார –டிரக்குகள் உட்பட சுமார் 28 லட்சம் மின்சார வாகனங்களை கொள்முதல் செய்தவற்கு பிரதமரின் மின்சார வாகன கொள்முதல் திட்டம் 3-வது முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சுமார் 14,000 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், பல்வேறு வாகனங்களுக்காக நாடு முழுவதும் 70,000-க்கும் மேற்பட்ட அதிவேக மின்னேற்றம் செய்யுங்கள் மையங்கள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள சிறு நகரங்களில் சுமார் 38,000 மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு ஏதுவாக மூன்றாவது முறையாக பிரதமரின் மின்சார பேருந்து போக்குவரத்துச் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். மின்சார வாகன உற்பத்திக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்தியாவில் மின்சார வாகன கார் உற்பத்தியில் ஆர்வமுள்ள உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வழிவகைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள் தரமான மின்சார வாகன உற்பத்திக்கான சூழல் அமைப்பை விரிவுபடுத்துவதுடன், அவற்றின் மதிப்புச் சங்கிலியை உருவாக்கவும் உதவிடும் என்று அவர் தெரிவித்தார்.
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை சமாளிக்க சூரிய மின்உற்பத்தி, மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் போது, பசுமை எதிர்காலத்திற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். மின்சார வாகனங்கள், சூரிய மின்உற்பத்தி ஆகிய இரண்டிலும் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். பிரதமரின் சூரிய மின்சார வீடுகள் மூலம் இலவச மின்சாரம் என்ற திட்டமானது மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்திக்கான தகடுகளை அமைப்பதற்கான இயக்கமாகச் செயல்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். மின் உற்பத்தித் துறையில் மின்கலன்கள் மற்றும் மின்சார சேமிப்பு அமைப்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், மேம்படுத்தப்பட்ட ரசாயன செல் அடிப்படையிலான மின்கலன்கள் மூலம் மின்சார சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.18,000 கோடி உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக கூறினார். இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சரியான தருணம் இது என்று குறிப்பிட்ட திரு மோடி எரிசக்தி சேமிப்புத் துறையில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குமாறு நாட்டின் இளைஞர்களை கேட்டுக் கொண்டார். இந்தியாவில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மின்கலங்கள், சேமிப்பு அமைப்புகளை உருவாக்கும் புதிய கண்டுபிடிப்புகளில் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இந்தத் துறையில் ஏற்கனவே கணிசமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார். ஆனால் இதனை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் தெளிவான நோக்கம், உறுதிப்பாடு ஆகியவை புதிய கொள்கைகளை உருவாக்குதல், சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்கான கொள்கைகளை உற்பத்தியாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நிறுவனங்கள் தங்கள் பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது நாட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு உதவும் என்று பிரதமர் கூறினார்.
வாகன உற்பத்தித் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். வாகன உற்பத்தித் துறையில் சிறப்பான எதிர்காலத்தை விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளரும் முதலீடு செய்வதற்கு இந்தியா உகந்த இடமாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். “இந்தியாவில் உற்பத்தி செய்வோம், உலகிற்காக உற்பத்தி செய்வோம்” என்ற தாரக மந்திரத்துடன் தொடர்ந்து முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டு தனது உரையைப் பிரதமர் நிறைவு செய்தார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் திரு மனோகர் லால், மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சர் திரு எச் டி குமாரசாமி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னணி:
இந்திய வாகன உற்பத்தித் துறையின் சர்வதேச கண்காட்சி 2025 ஜனவரி 17-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது. புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமி, பெருநகர நொய்டாவில் உள்ள இந்திய வர்த்தக கண்காட்சி மையம் ஆகிய இடங்களில் 9-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் 20-க்கும் மேற்பட்ட மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. மேலும், தொழில்துறை மற்றும் பிராந்திய நிலைகளுக்கு இடையே ஒத்துழைப்பை செயல்படுத்தும் வகையில் வாகன உற்பத்தித் துறையில் கொள்கைகள், முன்முயற்சிகளை காட்சிப்படுத்துவதற்கான மாநில அரசுகளின் அமர்வுகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்.
இந்திய வாகன உற்பத்தித் துறையின் சர்வதேச கண்காட்சி 2025 என்பது வாகன உற்பத்திக்கான அனைத்து செயல்பாடுகளையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சி உலக அளவில் பல்வேறு சிறப்பு வாய்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. கண்காட்சியாளர்கள், பார்வையாளர்களாக உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளனர். தொழில்துறை உதவியுடனும் அரசின் ஆதரவுடனும் இந்தியப் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு குழுமத்தால் இக்கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
——
TS/SV/KPG/KV/DL
Speaking at the Bharat Mobility Global Expo 2025. Driven by the aspirations of the people, India's automobile sector is witnessing an unprecedented transformation. @bharat_mobility
— Narendra Modi (@narendramodi) January 17, 2025
https://t.co/w6LYEJy2gX
The journey of Viksit Bharat is set to be one of unprecedented transformation and exponential growth in the mobility sector. pic.twitter.com/Z1T5KR5nUJ
— PMO India (@PMOIndia) January 17, 2025
Ease of travel is a top priority for India today. pic.twitter.com/0jHBkIdNjA
— PMO India (@PMOIndia) January 17, 2025
The strength of the Make in India initiative fuels the growth prospects of the country's auto industry. pic.twitter.com/T1aVhDO1nM
— PMO India (@PMOIndia) January 17, 2025
Seven Cs of India's mobility solution. pic.twitter.com/QYtxCEKR4v
— PMO India (@PMOIndia) January 17, 2025
Today, India is focusing on the development of Green Technology, EVs, Hydrogen Fuel and Biofuels. pic.twitter.com/yWmey6vjlk
— PMO India (@PMOIndia) January 17, 2025
India stands as an outstanding destination for every investor looking to shape their future in the mobility sector. pic.twitter.com/V57UcW0Oem
— PMO India (@PMOIndia) January 17, 2025
Inaugurated the Bharat Mobility Global Expo 2025 earlier today. Was particularly glad to witness the cutting-edge innovations and advancements in the mobility sector. pic.twitter.com/IVZsUXifNT
— Narendra Modi (@narendramodi) January 17, 2025
India's automobile industry is thriving, reflecting the rising aspirations of people. pic.twitter.com/IxEFaeck8D
— Narendra Modi (@narendramodi) January 17, 2025
Our focus is on creating seamless travel experiences and unlocking new opportunities for the auto industry. pic.twitter.com/XctAhjHZR1
— Narendra Modi (@narendramodi) January 17, 2025
The @makeinindia initiative, supported by PLI schemes, is driving growth in the automotive industry. pic.twitter.com/3MbYHmpECV
— Narendra Modi (@narendramodi) January 17, 2025