எனது அமைச்சரவை சகாக்கள் திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு பபித்ர மார்கரிட்டா அவர்களே பல்வேறு நாடுகளின் மதிப்புமிகு துதர்களே, தூதரக மூத்த அதிகாரிகளே, மத்திய மாநில அரசு அதிகாரிகளே, ஆடை அலங்காரம் மற்றும் ஜவுளி உலகின் புகழ்பெற்ற ஆளுமைகளே, தொழில்முனைவோர்களே, மாணவர்களே, எனதருமை நெசவாளர்களே, கைவினைக் கலைஞர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!
பாரத் மண்டபத்தில் இன்று இரண்டாவது பாரத் டெக்ஸ் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வு நமது வளமான பாரம்பரியங்களைக் கொண்டாடுவது மட்டுமின்றி, வளர்ச்சியடைந்த இந்தியாவின் சாத்தியங்களையும் வெளிப்படுத்துகிறது. நாம் விதைத்த விதை, இப்போது வேகமாக வேகமாக வளர்ந்து ஆலமரம் போல் பரவியிருப்பது நாட்டிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. பாரத் டெக்ஸ் என்பது உலகளாவிய ஜவுளித்துறையின் முன்னணி நிகழ்வாகும். இந்த முறை இதில் 12 இணைக்குழுக்கள் பங்கேற்றுள்ளன. மேலும், உபகரணங்கள், ஆயத்த ஆடைகள், எந்திரங்கள், ரசாயனங்கள், வண்ணச்சாயங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாரத் டெக்ஸ் என்பது கொள்கை வகுப்போருக்கு ஈடுபாடு, ஒத்துழைப்பு, கூட்டாண்மை ஆகியவற்றின் சக்திவாய்ந்த தளமாக உருவாகியுள்ளது.
நண்பர்களே,
இன்றைய பாரத் டெக்ஸ் வர்த்தகக் கண்காட்சியில் 120-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றுள்ளன. இதன் பொருள், ஒவ்வொரு தொழில்முனைவோரும் இந்த நாடுகளிலிருந்து தங்களுக்கு வேண்டியதைப் பெறுகிறார்கள் என்பதாகும். இவர்கள், உள்ளூர் நிலையிலிருந்து உலக நிலை வரை தங்களின் வணிக வாய்ப்பை விரிவுபடுத்தவுள்ளனனர். இந்த நிகழ்வு முதலீடு, ஏற்றுமதி மற்றும் ஜவுளித்துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை வழங்குகிறது.
நண்பர்களே,
கடந்த ஆண்டு நான் உரையாற்றும் போது, பண்ணை, நூலிழை, நெய்யப்பட்ட துணி, ஆடை வடிவமைப்பு, வெளிநாடு என்ற அடிப்படையில் ஜவுளித்துறைக்கான ஐந்து அம்சங்களை எடுத்துரைத்தேன். இந்தக் கண்ணோட்டத்தை இயக்கமாக முன்னெடுத்து சென்றதால், விவசாயிகள், நெசவாளர்கள், வடிவைமைப்பாளர்கள், வர்த்தகர்கள் வளர்ச்சியின் புதிய பாதைகளை கண்டறிந்துள்ளனர். கடந்த ஓராண்டில் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 7% அதிகரித்துள்ளது. இதற்கு நீங்கள் கைதட்டப் போகிறீர்களா? இப்போது வேண்டாம். கைதட்டலை சேமித்து வையுங்கள். ஏனென்றால் அடுத்த ஆண்டு இது 17 சதவீதமாக அதிகரிக்கும் போது கைதட்டலாம். எங்களின் ஜவுளி ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் இந்தியா உலகின் 6-வது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. 2030-க்குள் இதனை ரூ. 9 லட்சம் கோடியாக உயர்த்துவது எங்களின் இலக்காகும். நான் 2030 என்று குறிப்பிட்டாலும், அதற்கும் முன்பாகவே இந்த இலக்கை அடைந்துவிடலாம் என்பதற்கு உங்களின் உற்சாகமே சாட்சியாக இருக்கிறது.
நண்பர்களே,
இந்தியாவின் ஜவுளித்துறை சவால்களுக்கு தீர்வுகாணவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இதற்காகத் தொலைநோக்கு திட்டங்களையும் நீண்டகால உத்திகளையும் செயல்படுத்த உள்ளோம். எங்களின் முயற்சிகளை இந்த ஆண்டு பட்ஜெட்டில் நீங்கள் காண முடியும். எந்தவொரு துறையும் தொழில்திறன் மிக்க தொழிலாளர்களால் மட்டுமே முன்னேற முடியும். அதேபோல், ஜவுளித் துறையிலும் தொழில்திறன் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக வலுவான திறன் தொகுப்பை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நண்பர்களே,
புதிய தொழில்நுட்ப ஜவுளி ஸ்டார்ட்-அப்களை தொடங்கவும் புதுமையான சிந்தனைகளை வளர்க்கவும், இளம் தொழில்முனைவோரை நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் துறைக்கு புதுவகையான கருவிகளை உருவாக்குவதற்கு ஐஐடி போன்ற நிறுவனங்களுடன் நமது ஜவுளித் துறையானது ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் யோசனை தெரிவிக்கிறேன். தற்போது, பாரம்பரியம் மற்றும் புதிய கண்டுபிடிப்பின் கலவை முன் எப்போதையும் விட இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாரம்பரியமான நமது ஆயத்த ஆடைகள் இந்திய இளைஞர்களை ஈர்ப்பதாக மட்டுமின்றி உலகளாவிய இளைஞர்களையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு என்பது புதிய ஆடை ஆலங்கார போக்குகளையும், புது வகையான பாணிகளையும் உருவாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
நண்பர்களே,
நமது காதியும், தொன்மையான ஜவுளி வகைகளும், இயற்கையான வண்ணச் சாயங்களும், நீடித்த உறுதிபாட்டைக் காட்டுகின்றன. நவீன தொழில்நுட்ப ஆதரவுடன் இந்தியாவின் பாரம்பரிய தொழில்நுட்பங்கள் கைவினை கலைஞர்களுக்கும், நெசவாளர்களுக்கும், ஜவுளித்துறையுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான பெண்களுக்கும் நேரடியாகப் பயனளிக்கின்றன.
நண்பர்களே,
ஜவுளி ஆடைகள் தயாரிப்புக்குப் பிறகு உருவாகும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு சவாலாக உள்ளன. 2030 வாக்கில் இதன் அளவு 148 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜவுளிக் கழிவில் கால்பகுதிக்கும் குறைவாகவே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இருப்பினும், இந்தச் சவாலை ஜவுளித்துறை வாய்ப்பாக மாற்ற முடியும். உதாரணமாக கம்பளங்கள், தரை விரிப்புகள் ஆகியன ஜவுளிக் கழிவுகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவில் பழைய, கிழிந்து போன துணிகளைக் கொண்டு கைக்குட்டைகள், படுக்கை விரிப்புகள் தயாரிக்கிறார்கள். இந்தப் பழமையான நடைமுறைகளில் புதுமையைப் புகுத்தி அவற்றை உலகளாவிய சந்தைக்கு கொண்டு வர முடியும்.
நண்பர்களே,
பாரத் டெக்ஸ் போன்ற நிகழ்வுகள் உலகளாவிய ஜவுளித்துறையின் ஆற்றல் மையமாக இந்தியாவை மாற்றுகின்றன. ஒவ்வொரு ஆண்டு கடக்கும் போதும் இந்த நிகழ்வு வெற்றிகரமாகப் புதிய சாதனைகளைப் படைக்கும் என்றும், உச்சங்களை அடையும் என்றும் நான் நம்புகிறேன். இந்த நிகழ்வை வெற்றிகரமாக்குவதில் ஈடுபட்டு உள்ள அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி
***
(Release ID: 2103874)
TS/SMB/RJ/KR
Earlier today, attended #BharatTex2025, which showcases India’s textile diversity. I talked about the strong potential of the textiles sector and highlighted our Government’s efforts to support the sector. pic.twitter.com/ah0ANZMCN1
— Narendra Modi (@narendramodi) February 16, 2025