புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பாரத் டெக்ஸ் 2025-க்கு அனைவரையும் வரவேற்றார், இன்று பாரத் டெக்ஸின் 2-வது பதிப்பை பாரத் மண்டபம் காண்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி நமது பாரம்பரியம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வாய்ப்புகள் குறித்த ஒரு பார்வையை அளிக்கிறது எனவும் இது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்றும் அவர் கூறினார். “பாரத் டெக்ஸ் தற்போது ஒரு மெகா உலகளாவிய ஜவுளி நிகழ்வாக மாறி வருகிறது” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மதிப்புச் சங்கிலியுடன் தொடர்புடைய பன்னிரண்டு பிரிவுகளும் இந்த முறை நிகழ்வின் ஒரு பகுதியாக உள்ளன என்று அவர் கூறினார். உதிரிப்பாகங்கள், ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், சாயங்களின் கண்காட்சிகளும் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்துறை தலைவர்களின் ஈடுபாடு, ஒத்துழைப்புக்கான வலுவான தளமாக பாரத் டெக்ஸ் மாறி வருவதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
“இந்த பாரத் டெக்ஸில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன” என்று திரு நரேந்திர மோடி கூறினார். இது உள்ளூர் முதல் உலகளாவிய நிலை வரை தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது என்று அவர் கூறினார். புதிய சந்தைகளைத் தேடும் தொழில்முனைவோர் பல்வேறு உலகளாவிய சந்தைகளின் கலாச்சார தேவைகளைப் பற்றிய நல்ல வெளிப்பாட்டைப் பெறுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். நிகழ்ச்சியில் கண்காட்சியைப் பார்வையிட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், தான் பல அரங்குகளைப் பார்வையிட்டதாகவும், தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு பாரத் டெக்ஸில் இணைந்த பல பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் எடுத்துரைத்தார். பெரிய அளவில் புதிய வாங்குபவர்களைப் பெற்று தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர் என்று பிரதமர் கூறினார். இந்த மாநாடு முதலீடுகள், ஏற்றுமதி, ஜவுளித் துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றை கணிசமாக உயர்த்தியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜவுளித் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோரின் தேவைகளை வங்கித் துறை பூர்த்தி செய்து, அவர்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் திரு நரேந்திர மோடி கூறினார்.
“பாரத் டெக்ஸ் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை நமது பாரம்பரிய ஆடைகள் மூலம் வெளிப்படுத்துகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார். கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கு முதல் தெற்கு வரை, இந்தியா பரந்த அளவிலான பாரம்பரிய உடைகளைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். ராஜஸ்தான், குஜராத்தில் இருந்து லக்னோய் சிக்கன்காரி, பந்தானி, குஜராத்தில் இருந்து படோலா, வாரணாசியில் பனாரசி பட்டு, தெற்கில் காஞ்சிபுரம் பட்டு, ஜம்மு காஷ்மீரில் பஷ்மினா போன்ற பல்வேறு வகையான ஆடைகளை அவர் எடுத்துரைத்தார். நமது ஜவுளித் தொழிலின் பன்முகத்தன்மை, தனித்தன்மையை ஊக்குவித்து, அதன் வளர்ச்சியை இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஊக்குவிப்பதாக பிரதமர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜவுளித் தொழிலுக்கான பண்ணை, இழை, துணி, ஃபேஷன், வெளிநாட்டு ஏற்றுமதி ஆகிய ஐந்து காரணிகள் குறித்து விவாதித்ததை சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, இந்த தொலைநோக்கு பார்வை இந்தியாவின் இயக்கமாக மாறி, விவசாயிகள், நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், வர்த்தகர்களுக்கு புதிய வளர்ச்சி வழிகளை திறக்கிறது என்று குறிப்பிட்டார். இந்தியா கடந்த ஆண்டு ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 7% அதிகரிப்பைக் கண்டது எனவும் இப்போது உலகின் ஆறாவது பெரிய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளராக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகவும், இதை 2030-ம் ஆண்டுக்குள் ரூ.9 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகள், கொள்கைகளின் விளைவாக ஜவுளித் துறையில் வெற்றி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த பத்தாண்டுகளில் ஜவுளித் துறையில் அந்நிய முதலீடு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றார். “ஜவுளித் தொழில் நாட்டின் மிகப்பெரிய வேலை வாய்ப்புகளை வழங்கும் ஒன்றாகும் எனவும் இந்தியாவின் உற்பத்தித் துறையில் 11% பங்களிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தி இயக்கத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் துறையில் முதலீடுகளும், வளர்ச்சியும் கோடிக்கணக்கான ஜவுளித் தொழிலாளர்களுக்கு பயனளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், கொள்கைகளும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். நம்பகமான பருத்தி விநியோகத்தை உறுதி செய்யவும், இந்திய பருத்தியை உலகளவில் போட்டியிடச் செய்யவும், மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தவும், பருத்தி உற்பத்தித் திறனுக்கான இயக்கம் அறிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். தொழில்நுட்ப ஜவுளி, உள்நாட்டு கார்பன் இழை, அதன் தயாரிப்புகளை ஊக்குவித்தல் போன்ற புதிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். உயர்தர கார்பன் ஃபைபர் உற்பத்தியை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஜவுளித் துறைக்கு தேவையான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வகைப்பாடு அளவுகோல்கள் விரிவுபடுத்தப்பட்டதையும், கடன் கிடைப்பதை அதிகரித்ததையும் அவர் எடுத்துரைத்தார். குரு சிறு நடுத்தர நிறுவனங்களின் 80% பங்களிப்புடன் ஜவுளித் துறை இந்த நடவடிக்கைகளால் பெரிதும் பயனடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
எந்த ஒரு துறையாக இருந்தாலும் அது திறமையான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும்போது சிறந்து விளங்குகிறது என அவர் தெரிவித்தார். ஜவுளித் தொழிலில் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். திறன் தொகுப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், திறன் மேம்பாட்டுக்கான தேசிய சிறப்பு மையங்களின் பங்கை எடுத்துரைத்தார். மதிப்புச் சங்கிலிக்கு தேவையான திறன்களை வளர்ப்பதில் சமர்த் திட்டம் உதவுகிறது என்றும் குறிப்பிட்டார். தொழில்நுட்ப யுகத்தில் கைத்தறி கைவினைத்திறனின் நம்பகத்தன்மையை பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். கைத்தறி கைவினைஞர்களின் திறன்கள், வாய்ப்புகளை மேம்படுத்தி, அவர்களின் தயாரிப்புகள் உலக சந்தைகளை அடைவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டுகளில், கைத்தறி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், 2400க்கும் மேற்பட்ட பெரிய சந்தைப்படுத்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கைத்தறிப் பொருட்களின் இணையதள சந்தைப்படுத்தலை ஊக்குவிப்பதற்காக இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். கைத்தறி பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதன் குறிப்பிடத்தக்க நன்மைகளை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு பாரத் டெக்ஸ் நிகழ்ச்சியின் போது, ஜவுளித் துறைக்கு இளைஞர்களிடமிருந்து புதுமையான நீடித்த தீர்வுகளை வரவேற்கும் வகையில் ஜவுளி ஸ்டார்ட் அப் கிராண்ட் சேலஞ்ச் தொடங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த சவாலில் நாடு முழுவதிலுமிருந்து இளம் பங்கேற்பாளர்கள் தீவிரமாக பங்கேற்றதாகவும், வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவளிக்க விரும்பும் புத்தொழில் நிறுவனங்களும் அழைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். நாட்டில் புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்த விழாவிற்கு சென்னை ஐஐடி, அடல் புதுமை இயக்கம், பல்வேறு முக்கிய தனியார் ஜவுளி அமைப்புகளின் ஆதரவை அவர் பாராட்டினார். புதிய தொழில்நுட்ப-ஜவுளி புத்தொழில்களை முன்னெடுத்துச் செல்லவும், புதிய சிந்தனைகளை உருவாக்கவும் இளைஞர்களை திரு நரேந்திர மோடி ஊக்குவித்தார். ஜவுளித் தொழில்துறை, ஐஐடி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து புதிய கருவிகளை உருவாக்கலாம் என்று அவர் கூறினார். புதிய தலைமுறையினர் நவீன நவநாகரிக போக்குகளுடன் பாரம்பரிய ஆடைகளையும் அணிவது அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, புதிய தலைமுறையினரை உலகளவில் ஈர்க்க பாரம்பரியத்தை புதுமையுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய ஆடைகளால் ஈர்க்கப்பட்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். புதிய போக்குகளைக் கண்டறிவதிலும், புதிய பாணிகளை உருவாக்குவதிலும் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பங்களிப்பு குறித்தும் பிரதமர் உரையாற்றினார். பாரம்பரிய காதி ஊக்குவிக்கப்படும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஃபேஷன் போக்குகளும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். தாம் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, போர்பந்தரில் காதிப் பொருட்களின் பேஷன் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். நமது சுதந்திரப் போராட்டத்தின் போது ‘தேசத்திற்காக கதர்’ என்று இருந்தது என கூறிய திரு நரேந்திர மோடி, இப்போது அது ‘ஃபேஷனுக்காக கதர்’ என்று இருக்க வேண்டும் என்று கூறினார்.
உலகின் நவநாகரிக தலைநகரம் என்று அழைக்கப்படும் பாரிஸுக்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணம், அங்கு பல்வேறு விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு உருவாக்கப்பட்டதைத் தெரிவித்த திரு நரேந்திர மோடி, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் குறித்த தலைப்புகளில் விவாதங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், நீடித்த வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும், இது நவநாகரிக உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார். “சுற்றுச்சூழலுக்கான ஆடைகள், அதிகாரமளித்தல் என்ற தொலைநோக்கு பார்வையை உலகம் பின்பற்றி வருகிறது எனவும் இந்த விஷயத்தில் இந்தியா வழிநடத்த முடியும்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கதர், பழங்குடியின ஜவுளிகள், இயற்கை சாயங்களின் பயன்பாடு போன்ற உதாரணங்களை மேற்கோள் காட்டி, நிலைத்தன்மை எப்போதும் இந்திய ஜவுளி பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பாரம்பரிய நீடித்த தொழில்நுட்பங்கள் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார். இது கைவினைஞர்கள், நெசவாளர்கள், ஜவுளித் தொழில்துறையுடன் தொடர்புடைய கோடிக் கணக்கான பெண்களுக்கு பயனளிக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
ஜவுளித் தொழிலில் வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், கழிவுகள் உருவாவதைக் குறைக்கவும் வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். 2030-ம் ஆண்டில், ஃபேஷன் கழிவுகள் 148 மில்லியன் டன்களை எட்டக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். ஜவுளி கழிவுகளில் கால் பங்கிற்கும் குறைவாகவே இன்று மறுசுழற்சி செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார். ஜவுளி மறுசுழற்சியில் நாட்டின் பன்முக பாரம்பரிய திறன்களை மேம்படுத்தி, இதை ஒரு வாய்ப்பாக மாற்ற முடியும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மகாராஷ்டிராவில் பழைய அல்லது மீதமுள்ள துணிகளிலிருந்து பாய்கள், விரிப்புகள், உறைகள், கிழிந்த ஆடைகளிலிருந்து தயாரிக்கப்படும் மெல்லிய மெத்தைகள் போன்ற உதாரணங்களை அவர் சுட்டிக்காட்டினார். இந்த பாரம்பரிய கலைகளில் புதுமைகள் உலகளாவிய சந்தை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். நவி மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் வீடு வீடாக ஜவுளி கழிவுகளை சேகரிப்பதற்கான முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார். இந்த முயற்சிகளில் சேரவும், வாய்ப்புகளை ஆராயவும், உலக சந்தையில் முன்னணியில் செல்ல ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்கவும் புத்தொழில் நிறுவனங்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்தியாவின் ஜவுளி மறுசுழற்சி சந்தை அடுத்த சில ஆண்டுகளில் 400 மில்லியன் டாலரை எட்டும் என்றும், உலகளாவிய மறுசுழற்சி ஜவுளி சந்தை 7.5 பில்லியன் டாலரை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார். சரியான திசையில், இந்தியா இந்த சந்தையில் ஒரு பெரிய பங்கை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்தியா வளத்தின் உச்சத்தில் இருந்தபோது, அந்த வளத்தில் ஜவுளித் தொழில் குறிப்பிடத்தக்க பங்காற்றியது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி இந்தியா முன்னேறும்போது, ஜவுளித் துறை மீண்டும் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று அவர் கூறினார். பாரத் டெக்ஸ் போன்ற நிகழ்வுகள் இந்தத் துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வெற்றியின் புதிய சாதனைகளைப் படைத்து ஒவ்வொரு ஆண்டும் புதிய உயரங்களை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி:
2025 பிப்ரவரி 14 முதல் 17 வரை பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஒரு மெகா உலகளாவிய நிகழ்வான பாரத் டெக்ஸ் 2025 தனித்துவமானது. ஏனெனில் இது மூலப்பொருட்கள் முதல் உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட பொருட்கள் வரை முழு ஜவுளி மதிப்புச் சங்கிலியையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருகிறது.
பாரத் டெக்ஸ் தளம் என்பது ஜவுளித் துறையின் மிகப்பெரிய, மிகவும் விரிவான நிகழ்வாகும். இது இரண்டு இடங்களில் பரவி முழு ஜவுளி சுற்றுச்சூழல் அமைப்பையும் காட்சிப்படுத்துகிறது. இது 70- க்கும் மேற்பட்ட மாநாட்டு அமர்வுகள், வட்டமேசைகள், குழு விவாதங்கள், மாஸ்டர் வகுப்புகள் ஆகியவற்றைக் கொண்ட உலகளாவிய மாநாட்டையும் கொண்டிருக்கிறது. இதில் சிறப்பு கண்டுபிடிப்புகள், புத்தொழில் அரங்குகள் இடம்பெறும் கண்காட்சியும் அடங்கும்.
பாரத் டெக்ஸ் 2025 கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளை ஈர்க்கும் நிகழ்வாக உள்ளது. 5000-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6000 சர்வதேச வாங்குபவர்கள் உட்பட பல்வேறு பார்வையாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு , சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழு , ஈரோடெக்ஸ், ஜவுளி பரிமாற்றம், அமெரிக்க ஃபேஷன் தொழில் சங்கம் உள்ளிட்ட உலகெங்கிலும் இருந்து 25-க்கும் மேற்பட்ட முன்னணி உலகளாவிய ஜவுளி அமைப்புகள், சங்கங்களும் இதில் பங்கேற்றுள்ளன.
***
PLM/KV
Earlier today, attended #BharatTex2025, which showcases India’s textile diversity. I talked about the strong potential of the textiles sector and highlighted our Government’s efforts to support the sector. pic.twitter.com/ah0ANZMCN1
— Narendra Modi (@narendramodi) February 16, 2025