1) இரண்டு புனித மசூதிகளின் காப்பாளரும், மேன்மை தங்கிய அரசருமான ராஜா சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் அவர்கள் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு விடுத்த அழைப்பின் பேரில், பிரதமர் ஏப்ரல் 2-3 2016 ஆகிய நாட்களில் சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்தார்.
2) இரண்டு புனித மசூதிகளின் காப்பாளர் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று, அரசவையில் வரவேற்றார். இரு நாடுகளுக்கிடையேயான நெருங்கிய உறவின் அடிப்படையில் இரு தலைவர்களும் உரையாடினர். மேன்மை தங்கிய இளவரசர் மற்றும் துணை அதிபர் மற்றும் உள்துறை அமைச்சர் முகம்மது பின் நைப் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத், மேன்மை தங்கிய இளவரசர் மற்றும் துணை இளவரசர் மேன்மை தங்கிய இரண்டாம் துணை அதிபர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆகியோரை பிரதமர் சந்தித்தார். சவுதி அரசின் வெளியுறவுத் துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் சவுதி ஆராம்கோவின் தலைவர் ஆகியோரையும் பிரதமர் சந்தித்தார்.
3) இரு புனித மசூதிகளின் காப்பாளர் ராஜா சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களும் பிரதமர் மோடி அவர்களும், இரு தரப்பு உறவு, பிராந்திய உறவு மற்றும் இதர விஷயங்கள் குறித்து பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நீண்ட நெடிய வரலாறு, இரு நாடுகளுக்கிடையே நீண்ட நாட்களாக நிலவும் நட்பு, இரு நாடுகளிடையே உள்ள நீண்ட ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவு ஆகியவற்றை இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர். இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை இரு தரப்பின் நலன்களை புரிந்து கொள்ளவும், வளைகுடா பிராந்தியம் மற்றும் இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்தும், இரு நாடுகளின் வளர்ச்சிக்காக ஒரு அமைதியான சூழலை நிலை நிறுத்துவது குறித்தும் பேசப்பட்டது.
4) இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தும் வகையிலான அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, மனிதவளம் மற்றும் இரு தரப்பு மக்களிடையே உள்ள நெருக்கமான உறவு ஆகியவை இரு தரப்பு உறவுகளை எவ்வாறு மேம்படுத்தியுள்ளது என இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர். 2006ம் ஆண்டின் டெல்லி பிரகடனம் மற்றும் 2010ம் ஆண்டின் ரியாத் பிரகடனம் ஆகியவை இரு நாட்டு உறவுகளை பெருமளவில் மேம்படுத்தியுள்ளதாக இரு நாட்டுத் தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
5) இரு நாட்டின் பரஸ்பர நலன்களை பாதுகாக்கும் வகையிலும், இரு நாட்டு மக்களின் நலன்களை காப்பாற்றும் வகையிலும், இப்பிராந்தியத்திலும், உலகெங்கிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்பதையும், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் தலைவர்கள் வலியுறுத்தினர்.
6) சவுதியின் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் துணை அதிபர் மேன்மை தங்கிய சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் அஸாத் அவர்களின் பிப்ரவரி 2014 இந்திய விஜயத்தின்போது இந்தியா மற்றும் சவுதி இடையே கையெழுத்தான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாட்டு உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். இரு நாடுகளும் இணைந்து நடத்தும் ராணுவ ஒத்திகைகள், ராணுவ நிபுணர்கள் விஜயங்கள், இரு நாடுகளுக்கும் பரஸ்பர கப்பல் மற்றும் விமான விஜயங்கள், ராணுவ தளவாடங்கள் பரிமாற்றம் ஆகியவை மேம்படுத்த வேண்டும் என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பிரதமர் மோடி அவர்களின் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறைக்கான கூட்டுக் குழுவின் கூட்டம் ரியாத்தில் நடைபெற வேண்டும் என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்றனர்.
7) இரு நாடுகளின் பாதுகாப்புக்கு முக்கியமான கடற்பகுதி பாதுகாப்புக்காக வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்த ஒத்துழைப்பது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இயற்கை பேரழிவுகளின்போது, இரு நாடுகளும் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
8) எந்த நோக்கத்துக்காக செய்யப்பட்டாலும், யார் செய்தாலும் தீவிரவாதம் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்.
9) உலகையே அச்சுறுத்தும் தீவிரவாதம் அனைத்து நாடுகளையும் அனைத்து சமூகங்களுக்கும் ஆபத்தாக உள்ளது என்று குறிப்பிட்ட தலைவர்கள், தீவிரவாதத்தை ஏதாவது ஒரு மதத்தோடு இணைத்துப் பேசப்படுவதை நிராகரித்தனர். மற்ற நாடுகளை நோக்கி ஏவப்படும் தீவிரவாதத்தை அனைத்து நாடுகளும் நிரகாரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய தலைவர்கள், சில நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுக்கான கட்டமைப்பை அகற்ற வேண்டும் என்றும், தீவிரவாதிகளுக்கு நிதி உதவியோ அல்லது வேறு உதவியோ செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினர்.
10) தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் அமைப்பின் கீழும் செயல்பட வேண்டும் என்றும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். தீவிரவாதத்தின் சவாலை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியாவால் கொண்டு வரப்பட்ட சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டமைப்பில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சவுதியின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர், அவர்களின் சர்வதேச நடவடிக்கைகளையும் பாராட்டினார். தீவிரவாதத்துக்கு எதிரான ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பை உருவாக்கும் சவுதியின் முயற்சிகள் பிரதமருக்கு விளக்கப்பட்டன.
11) தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு, உளவுத் தகவல்கள் பரிமாற்றம், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுத்தல், போதைப் பொருள் கடத்தலை தடுத்தல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம், தீவிரவாதத்துக்கு நிதியளித்தல் போன்ற விவகாரங்களில் ஒத்துழைப்பு நல்குவது தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்பு அளித்தனர். சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க இரு நாடுகளும் சேர்ந்து பணியாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
12) இணையதளங்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவது, சமூக நல்லிணக்கத்தை சிதைப்பதற்காக பயன்படுத்துவது போன்ற இணையதள நடவடிக்கைகளை தடுக்கவும், இணைய பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒரு தரப்பும் ஒத்துழைப்பு மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டது. மதத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் நோக்கங்களுக்காக தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தல், போன்றவற்றில் ஈடுபடும் நாடுகள் மற்றும் குழுக்களை எதிர்க்கவும் தடுக்கவும், அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இரு நாடுகளைச் சேர்ந்த மத போதகர்கள், ஞானிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவதையும், அறிவுஜீவிகள் கலந்துரையாடுவதையும் ஊக்கப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
13) இரு நாடுகளுக்கிடையே தொடர்ச்சியான சந்திப்புகளும் தகவல் பரிமாற்றங்களும் நடப்பது அவசியம் என்பதை ஒப்புக் கொண்ட இரு நாட்டுத் தலைவர்களும், இது வரை நடந்த பரஸ்பர கூட்டங்களுக்கு வரவேற்பு அளித்தனர். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அளவில் நடைபெறும் இரு நாட்டு கூட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
14) முதலீடு, வணிகம், எரிசக்தி, பாதுகாப்புத் துறை மற்றும் மனிதவளத் துறை ஆகியவற்றில் இரு நாடுகளிடையே இருந்து வரும் நெருக்கமான உறவுக்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இவ்வாறு நடைபெறும் கூட்டங்களில் புதிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட ஆலோசனைகள் நல்ல பலன் அளித்திருப்பதாகவும், வருங்காலங்களில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான முடிவுகள், விரைந்து செயல்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
15) புதுதில்லியில் 2015ல் நடந்த இரு நாடுகளின் 11வது கூட்டுக் கூட்டம் மற்றும் டிசம்பர் 2015ல் ரியாத்தில் நடந்த ஆய்வுக் கூட்டம் ஆகியவற்றின் ஆரோக்கியமான முடிவுகளை வரவேற்றனர். சவுதி – இந்தியா கூட்டுக் குழு எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை தொடர்ந்து செயல்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
16) இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே முன்னேறி வரும் பொருளாதார ஒத்துழைப்பு மேலும் தொடர வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இரு நாடுகளின் நிதி மற்றும் வர்த்தக அமைச்சர்கள், பரஸ்பர முதலீடுகளும் வணிகமும் மேலும் பெருக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
17) கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வரும் இரு நாட்டு வணிகத்தை வரவேற்ற தலைவர்கள், 2014-15ம் ஆண்டில் நடைபெற்ற 39 பில்லியன் டாலர் வணிகம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வணிக உறவுகள் குறித்து திருப்தி தெரிவித்த தலைவர்கள், எண்ணை அல்லாத வணிகங்களையும் மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
18) இந்திய மற்றும் சவுதி நிறுவனங்கள் இரு நாடுகளிலும் செயல்பட்டு வருவது குறித்து திருப்தி தெரிவித்த தலைவர்கள் இரு நாடுகளிலும் கண்காட்சிகள் தொழில் கூட்டங்கள் நடத்தி வணிகத்தை மேலும் வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். புது தில்லியில் டிசம்பர் 2015ல் தொடங்கப்பட்ட சவுதி – இந்தியா வணிக அமைப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தலைவர்கள் இந்த அமைப்பு வர்த்தகத்தை அதிகரிக்க பெருமளவில் உதவியாக இருந்தது என்று கூறினர்.
19) நவம்பர் 2015ல், ஜெட்டா நகரில், ராஜா அப்துல்லா பொருளாதார நகரத்தில் இந்தியாவின் 4வது ஜிசிசி தொழில்துறை சம்மேளனக் கூட்டம் நடைபெற்றதற்கு இரு தரப்பும் திருப்தி தெரிவித்தது. இந்தியா மற்றும் பல்வேறு இந்திய நிறுவனங்கள் ரியாத் மற்றும் ஜெட்டாவில் நடந்த அந்நிகழ்வில் பங்கேற்றதற்கு சவுதி தரப்பு மகிழ்ச்சி தெரிவித்தது.
20) இரு புனித மசூதிகளின் காப்பாளர் அசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் இந்தியப் பொருளாதாரத்தின் அபிரிமிதமான வளர்ச்சிக்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, அதற்கு காரணமான பிரதமர் திரு மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு பாராட்டு தெரிவித்தார். பிரதமர் மோடி அவர்களின், ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி மற்றும் க்ளீன் இந்தியா ஆகிய திட்டங்கள் இந்தியப் பொருளாதாரத்தை பல மடங்கு முன்னேற்ற வல்லது என்று தெரிவித்தார்.
21) இந்தியாவில் மேற்கொண்டு வரப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து விளக்கிய இந்திய தரப்பு, தற்போது உள்ள பல்வேறு விதிகள் மற்றும் சட்டதிட்டங்கள், பொருளாதார முதலீட்டுக்கு ஏற்றவாறு தளர்த்தப்பட்டு வருகின்றன என்றும், பாதுகாப்புத் துறை, ரயில்வே, காப்பீட்டுத் துறை போன்றவற்றில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு ஏற்றவாறு விதிகள் மாற்றப்பட்டுள்ளன என்று விளக்கியது. இந்தியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்குமாறு சவுதி நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். சவுதியின் சவுதி ஆராம்கோ, சாய்பிக் மற்றும் இதர சவுதி நிறுவனங்கள், இந்தியாவின் உட்கட்டமைப்புத் துறை மற்றும் இதர துறைகளிலும், இந்தியாவின் தொழில் பூங்காக்களிலும், நவீன நகரம் திட்டத்திலும், டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று வரவேற்றார்.
22) இந்திய உட்கட்டமைப்புத் துறையில், குறிப்பாக ரயில்வே, சாலைப் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் முதலீடு செய்ய சவுதி தரப்பு விருப்பம் தெரிவித்தது. சவுதி அரசின் பல்வேறு முன்முயற்சிகளின் அடிப்படையில், சவுதியில் முதலீடு செய்ய வருமாறு, இந்தியாவுக்கு சவுதி அரசு அழைப்பு விடுத்தது.
23) சவுதி அரசின் முதலீட்டு ஆணையம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகிய இரு அமைப்புகளும் தனியார் முதலீடு தொடர்பாக கையெழுத்திட்ட ஒப்பந்தம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
24) எரிசக்தி பாதுகாப்பு என்பது இரு நாட்டு உறவுகளில் முக்கியமான கூறு என்பதை ஒப்புக் கொண்ட இரு நாட்டுத் தலைவர்கள், இந்தியாவுக்கு அதிகமாக எண்ணை வழங்கும் நாடாக சவுதி உள்ளது என்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
25) எண்ணை வாங்குவது என்று உள்ள உறவை, ஒரு முதலீட்டுக்கான உறவாக மாற்ற வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட இரு நாட்டுத் தலைவர்கள், இந்தியா மற்றும் சவுதி இணைந்து, பெட்ரோகெமிக்கல் வளாகங்கள், எண்ணை துரப்பணப் பணியில் கூட்டு முயற்சி, மற்றும் மூன்றாம் நாடுகளில் எண்ணை துரப்பணப் பணி ஆகியவற்றில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினர். எரிசக்தித் துறையில் மனிதவளத்தை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து பயிற்சி மற்றும் கூட்டுறவில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்தனர். இந்திய சவுதி அமைச்சர்கள் அளவிலான எரிசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் அடிக்கடி ஈடுபட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
26) இரு நாடுகளின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிடையே கூட்டுறவு ஏற்பட வேண்டும் என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
27) புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, சூரிய ஒளி மின்சக்தி, தகவல் தொழில்நுட்பம், விண்வெளித் துறை, நிலையான வளர்ச்சி, விவசாயம், பாலைவன சூழல், நகர்ப்புர வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் நுண்ணுயிரியல் துறை ஆகியவற்றில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்றும், உணவுப் பாதுகாப்புத் துறையிலும் ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்றும் இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்.
28) சர்வதேச சூரிய ஒளி கூட்டணியை முன்னெடுத்த இந்திய பிரதமருக்கு சவுதித் தரப்பு பாராட்டு தெரிவித்தது. உலகெங்கும் சூரிய ஒளி மின்சக்தி தொழில்நுட்பம் வளர அக்கூட்டணி உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
29) இரு நாட்டு மக்களிடையே உருவாகியுள்ள உறவையும், சவுதியில் உள்ள இந்திய வம்சாவளியினர் இந்த முன்னேற்றத்துக்கு ஆற்றியுள்ள பங்கையும் இரு நாட்டுத் தலைவர்களும் பாராட்டினர். பொதுப் பிரிவில் தொழிலாளர்களை எடுப்பது தொடர்பாக இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். தூதரகம் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்கு, இந்திய சவுதி கூட்டுக் குழுவின் கீழ், ஒரு குழுவை ஏற்படுத்தி சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
30) இந்தியாவிலிருந்து ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்த சவுதி அரசாங்கத்துக்கு பிரதமர் திரு மோடி அவர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
31) இந்தியா மற்றும் சவுதி இடையே வரலாற்று ரீதியான உறவு இருந்தது. இரு நாடுகளிடையே பொருட்கள், உள்ளிட்ட பரிமாற்றம் இருந்தது என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டனர். இந்த புராதன உறவு, வருங்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திக்க உதவும் என்றனர். மனிதாபிமானம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான அணுகுமுறை, வேற்றுமைக்கு பதிலாக சர்வதேச உறவுகளில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டனர்.
32) இரு நாட்டுத் தலைவர்களும், மேற்காசியா, மத்திய கிழக்குப் பிரதேசம், தெற்காசியா ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சிக்கல்கள் குறித்து விவாதித்தனர். இரு நாடுகளின் நலன் சார்ந்த பிராந்திய சிக்கல்கள் குறித்தும் விவாதித்தனர். ஏமன் மற்றும் சிரியா சிக்கல்கள் குறித்து ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அவை எடுத்துள்ள தீர்மானங்கள் (2216, 2254 மற்றும் 2268) செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். லிபியா மற்றும் ஈராக்கில் உள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து கவலை தெரிவித்தனர். அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமாக இச்சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
33) பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்கையில், அருகாமை நாடுகளோடு நல்ல உறவைப் பேணுதல், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல், பரஸ்பரம் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை மதித்தல், எல்லைகளை மதித்தல் மற்றும் சிக்கல்களை தீர்க்க பேச்சுவார்த்தையை கையாளுதல் ஆகியவை குறித்து வலியுறத்தப்பட்டது.
34) அரபு அமைதித் திட்டத்தின் அடிப்படையில் பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகள் அவர்களுக்கு பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச முயற்சிகள் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய இரு நாட்டுத் தலைவர்கள், கிழக்கு ஜெருசலேத்தை தலைநகராகக் கொண்டு அவர்கள் ஒரு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதற்கும் ஆதரவு தெரிவித்தனர்.
35) சர்வதேச சிக்கல்களை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் அவையின் பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுகள் எட்டக் கூடிய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவை விரிவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
36) இரு நாடுகளின் நலன்களை மேம்படுத்தவும், இரு நாட்டு மக்களின் நலன்களை பாதுகாக்கவும், இரு நாடுகளிடையே உறவை பலப்படுத்தவும், பிரதமர் மோடி அவர்களின் சவுதி விஜயம் உதவியாக இருந்தது என்பதை இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்.
37) பிரதமர் திரு மோடி அவர்கள், மேன்மை தங்கிய அரசரின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார். மேன்மை தங்கிய அரசரை, இரு நாட்டுக்கும் ஏற்ற ஒரு நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறு, விடுத்த அழைப்பை அரசர் ஏற்றுக் கொண்டார்.