பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டுமுயற்சி நிறுவனங்களை (JV) துவங்குவதற்கு கடைபிடிக்கவேண்டியவை என பிரத்யேக நெறிமுறைகள் உள்ளன. அந்த நெறிமுறைகளை நீக்குவதற்கு பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிப்ரவரி 2012ல் நடைமுறைக்கு வந்த இந்த விதிகளை இனி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டியதில்லை. பொது நிறுவனத் துறையும் (DPE), நிதி அமைச்சகமும் (MoF) அவ்வப்போது வெளியிடும் நெறிமுறைகள் அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவங்களுக்கும் (CPSEs) பொருந்தும். இனி அந்த நெறிமுறைகளின்படியே பாதுகாப்பு பொதுத்துறை நிறுவங்கள் (பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள்) தங்கள் கூட்டுமுயற்சி நிறுவனங்களை (JV) துவங்கினால் போதுமானது. பிரத்யேகமான நெறிமுறைகளை கடைபிடிக்கத் தேவையில்லை. இந்த மாற்றத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சுயசார்போடு இயங்க வேண்டும் என்ற குறிக்கோள் நிறைவேறும்.
கூட்டுமுயற்சி நிறுவனங்கள் (JV) அமைப்பதற்கு என பிரத்யேகமாக இருந்த நெறிமுறைகளை நீக்கியதன்மூலம் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தனியார்துறை நிறுவனங்களோடு சமதளத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் புதிய JVக்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் சுயசார்பு பெருகும் விதத்தில் அமைத்துக் கொள்ளவும் இந்த மாற்றம் உதவும். அதோடு பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் JVக்களை அமைக்கும்போது சுய மேலாண்மையோடு இயங்கவும், அதன்மூலம் தேசிய பாதுகாப்பில் சிறப்பான முன்னேற்றங்களை பெறவும் முடியும்.
மசகோன் டாக்ஸ் நிறுவனம், கோவா கப்பல் கட்டுமான நிறுவனம், கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியியல் நிறுவனம், இந்துஸ்தான் கப்பல்கட்டுமான நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம், பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மற்றும் மிஷ்ரா டத்து நிகாம் நிறுவனம் என ஒன்பது DPSU நிறுவனங்களும் இந்த முடிவின் மூலம் பயன்பெறும்.
பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு JVக்களை அமைத்துக்கொள்வதில் இருந்த தனி நெறிமுறைகளை செயல்படுத்தும்போது எழுந்த நடைமுறை சிக்கல்களின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் பெருகிவரும் தனியார் துறையினரின் பங்களிப்பு, பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றை எல்லாம் மனதில் வைத்தே JV துவங்குவதற்கு தனி நெறிமுறைகள் இனி தேவை இல்லை என்ற முடிவுக்கு பாதுகாப்பு தயாரிப்புத் துறை வந்தது. மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் சூழலில், தனித்தனியாக பல நெறிமுறைகளை வைத்திருப்பது தெளிவின்மையையும், முரண்பாடுகளையும் வளர்க்கும்.
பின்னணி:
வடிவமைப்பு, மேம்பாடு உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் பாதுகாப்புத் தயாரிப்பு துறை சுயசார்பை அடையும் பொருட்டு ஜனவரி 2011ல் வெளியிடப்பட்ட பாதுகாப்புத் தயாரிப்பு கொள்கை, அதன் இலக்குகளை அடைய JV உள்ளிட்ட அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் செயல்படுத்தவேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன் தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும் DPE நெறிமுறைகளோடு, பாதுகாப்புத்துறையின் பிரத்யேக தேவைகளை பூர்த்தி செய்யும் அதே சமயம் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் JVக்களை துவங்குவதற்கென்று தனி நெறிமுறைகள் தேவை என்ற கருத்து எழுந்தது. அதன்படி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் JVக்கள் துவங்குவதற்கென்று உருவாக்கப்பட்ட தனி நெறிமுறைகளுக்கு பிப்ரவரி 9, 2012ல் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு, பிப்ரவரி 17, 2012ல் அறிவிக்கப்பட்டது. தனியார் துறைகளின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையிலும், நடப்பு காலத்தில் பாதுகாப்பு கொள்முதல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மனதில் வைத்தும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் JVக்கள் துவங்குவதற்கு இருந்த பிரத்யேக நெறிமுறைகள் மறுபரீசிலனை செய்யப்பட்டு நீக்கப்பட்டுள்ளது.